Friday, 17 July 2020

ப்ரித்தா என்கிற குந்தி...

அவளது பெயர் ப்ரித்தா. யாதவ குலத்தின் வம்சமும் சூரசேனா என்ற ஊரின் அரசனின் மகளும் ஆவார். வரலாற்றில் முக்கிய இடம் வகித்தவர். இந்தியாவின் புராண நூலாக கருதப்படும் மஹாபாரதக் கதையினை அறிந்தவர்களுக்கு இவர் மிகவும் பரிச்சையமானவர். இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு.

ப்ரித்தாவின் இன்னொரு பெயர் குந்தி தேவி. ஹஸ்தினாபுரத்தின் அரசன் பாண்டுவின் மனைவி மற்றும் வாஸுதேவரின் தங்கை.கர்ணன், தருமன்,பீமன்,அர்ஜூனனின் தாய் இப்படி மஹாபாரதக் கதையின் முக்கிய அம்சமாக விளங்கிடும் குந்தி தேவியைப் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்.

சுரசேனாவிற்கு பிறந்திருந்தாலும் குந்தி தேவி இளவயதிலேயே உறவினரான குந்திபோஜாவுக்கு தத்து கொடுக்கப்பட்டார். இவர் குந்தி அரசாங்கத்தின் மகாராஜா. தத்து கொடுக்கப்பட்ட பிறகே ப்ரித்தா என்ற பெயரை குந்தி தேவி என்று மாற்றப்பட்டது. தனக்கு குழந்தை இல்லாத குறையை தீர்க்க குந்தி தேவியை தன்னுடன் வைத்து வளர்த்து அந்த ஏக்கத்தை தீர்த்துக் கொண்டார்.

பருவ வயதை எட்டியதும். துர்வாச முனிவருக்கு சேவை செய்ய அனுப்பி வைக்கப்படுகிறாள் குந்தி. அங்கே துர்வாச முனிவருக்கு சேவை செய்து சில காலம் வாழ்கிறார். அவரது சேவையில் மகிழ்ந்த முனிவர், குந்தியை பாராட்டும் விதமாக மந்திரம் ஒன்றை கற்றுக் கொடுக்கிறார். யாரை மனதில் நினைத்து இந்த மந்திரம் சொன்னாலும் உனக்கு அவர் சாயலில் மகன் பிறப்பான் என்று சொல்லிச் செல்கிறார்.

குந்திக்கு விளையாட்டு புத்தி, முனிவர் அங்கிருந்து நகர்ந்ததும் எப்படி குழந்தை பிறக்கும், ஒரு மந்திரம் சொன்னால் என்று சிரித்துக் கொண்டே யோசிக்கிறார். வெயில் சுட்டெரிக்க இயல்புக்கு திரும்பியவருக்கு திடீரென்று ஒரு எண்ணம், வானத்தில் மேலே நின்று கொண்டிருந்த சூரியனைப் பார்த்து முனிவர் சொல்லிக் கொடுத்த மந்திரத்தை உச்சரிக்கத் துவங்கிவிட்டார். என்ன ஆச்சரியம். அழகான ஆண் குழந்தை கிடைத்துவிட்டது.

இப்போது தான் குந்திக்கு தான் செய்த காரியத்தின் வீரியம் புரிகிறது. திருமணத்திற்கு முன்னால் பிறந்த இந்த குழந்தையை என்ன செய்ய? அப்பா மற்றும் பிறர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள். மந்திரம் சொன்னால் குழந்தை பிறக்கும் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? பயங்கொண்ட குந்தி, அந்த குழந்தையை அழகிய வேலைப்பாடுடைய கூடையில் வைத்து, ஆற்றில் மிதக்கவிடுகிறார். அதனை கொல்ல மனமில்லாமல் கண்காணாத இடத்திற்குச் சென்றுவிடட்டும் என்று அனுப்பிவிடுகிறார்.

இந்த குழந்தை தான் கர்ணன். ஆற்றில் மிதந்து வந்த கூடையை அதிரதா என்பவன் பார்க்கிறான். கூடையில் வந்த குழந்தையை கண்ட அவன், அதிர்சியுடன் எடுத்து தன் குழந்தையைப் போலவே வளர்க்க ஆரம்பிக்கிறான். கர்ணன் வளர்ந்ததும் துரியோதனனின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்கிறான்.

குந்திபோஜா தன்னுடைய மகளான குந்திக்கு சுயம்வரம் நடத்துகிறார். அதில் குந்தி தேவி பாண்டுவை தன் இணையாக தேர்ந்தெடுக்கிறார். அதன்பிறகு மாத்ரா மற்றும் மார்டி என இரண்டு பேரை பாண்டு திருமணம் செய்து கொள்கிறார்.

ஒரு முறை காட்டில் வேட்டைக்குச் சென்ற போது, எதிர்பாராத விதமாக மனைவியுடன் புணர்தலில் ஈடுப்பட்டிருந்த கிண்டாமா என்ற ரிஷியைத் தாக்குகிறது. இதில் ரிஷி இறந்து விடுகிறார். இறக்கும் நிலையில் மனைவியுடன் உறவு கொண்டால் உனக்கு மரணம் நிகழும் என்று சாபமிட்டு இறந்துவிடுகிறார் அந்த ரிஷி. இதனால் வருந்திய பாண்டு மேற்கொண்டு தனக்கு வாரிசு கிடைக்காது. இதனால் இந்த அந்தஸ்த்தும், பொறுப்பும் வேண்டாம் என்று சொல்லி நாட்டை விட்டே வெளியேறுகிறார். உடன் குந்தியும் மாத்ரியும் இணைந்து கொள்கிறார்கள்.

பெரும் மனக்கவலையுடன் இருந்த பாண்டு கிண்டாமா என்ற ரிஷி தனக்கு கொடுத்த சாபத்தை மனைவிகளுடன் பகிர்ந்து கொள்கிறா. தனக்கு வாரிசு இல்லை என்று கணவரின் கவலையை போக்க எண்ணிய குந்தி தேவி, துர்வாச முனிவர் தனக்கு பகிர்ந்த மந்திரத்தைப் பற்றி விவரிக்கிறார். உடன் மகிழ்ந்த பாண்டு, வாரிசை பெறும்படி கேட்கிறார். உடன் எமதர்மனை நினைத்து யுதிஸ்டிரரையும், வாயுவை நினைத்து பீமனையும் இந்திரனை நினைத்து அர்ஜுனையும் பெற்றெடுக்கிறாள்.

தனக்கு கற்பிக்கப்பட்ட மந்திரத்தை மார்டியுடன் பகிர அவரும் நகுலன் சகாதேவன் என இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்கிறார். ஒரு கட்டத்தில் கிண்டாமாவின் சாபத்தை மறந்து பாண்டு மார்டியுடன் உறவு கொள்கிறார். உடன் பாண்டு மரணிக்க உடன் மார்டியும் சதியில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறார். இப்போது ஐந்து குழந்தைகளையும் வளர்க்க வேண்டிய பொறுப்பு குந்தி தேவி கையில்…..

பாண்டவர்கள் வளர்ந்து ஹஸ்தினாபுரத்திற்கு திரும்ப, இப்போது, யார் அரசர் என்ற போட்டி ஏற்பட்டது. ஒரு பக்கம் துரியோதனனும் இன்னொரு பக்கம் யுதிஸ்டிரரும் அடுத்த அரசர் பதவிக்கு போட்டியிட்டார்கள். திருதுராஸ்டிரர் யுதிஸ்டிரரை அரசனாக பதவியேற்கும் படி அழைக்க துரியோதனன் கோபம் கொள்கிறான். இங்கிருந்து மகாபாரத கதை சூடு பிடிக்கிறது….. இதன் பிறகே தன் மாமா சகுனியுடன் இணைந்து காயை நகர்த்த துவங்குகிறான் துரியோதனன்.

மஹாபாரதத்தின் இறுதி யுத்தமான குருசேத்ரா போரில் தன்னால் கைவிடப்பட்ட குழந்தையான கர்ணனை சந்திக்கிறார் குந்தி தேவி. ஆனால் கர்ணன் கௌரவர்களுக்கு ஆதரவாகவும், பாண்டவர்களுக்கு எதிராகவும் களத்தில் நிற்கிறார். உன்னை பெற்றெடுத்த தாய் நான் தான் என்று கூறி, பாண்டவர்கள் பக்கம் வந்து விடுமாறு கர்ணனை அழைக்கிறார் குந்தி.

ஆனால் கர்ணன் வர மறுக்கிறார். என்ன தான் பெற்றெடுத்த தாயாக இருந்தாலும் என்னை வேண்டாமென்று ஆற்றில் விட்டுவிட்டீர்கள் என்னை எடுத்து வளர்த்தவர்களுக்கு துணையாகவே நான் நிற்க விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டார் கர்ணன். உங்களைப் போல என்னை இவர்கள் வேண்டாமென்று நினைத்து ஆற்றில் விடவில்லை அதனால் மன்னித்துவிடுங்கள் என்கிறார்.
தன்னுடைய தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்ட குந்தி, தான் பெற்றெடுத்த பிள்ளைகளே எதிரெதிர் பக்கமாக நின்று போரிடுகிறார்களே என்று வருந்தினாள். தாயின் வருத்தத்தைக் கண்டு நெகிழ்ந்த கர்ணன் ஒரு சத்தியம் செய்கிறார். அதன் படி தான் பாண்டவர்கள் அத்தனை பேருடனும் போரிட மாட்டேன். அர்ஜூனன் தான் என் இலக்கு என்கிறார்.

போர் முடியும் போது உனக்கு ஐந்து மகன்கள் இருப்பார்கள். ஐவரில் அர்ஜூனன் அல்லது கர்ணன் யாராவது ஒருவர் இறப்பர் என்று சொல்கிறான். குந்தி ஏற்றுக்கொள்கிறாள். உச்சக்கட்டத்தில் குருச்சேத்திர போர் நடந்து கொண்டிருக்க அர்ஜுனனின் வில் தாக்கி கர்ணன் உயிரிழக்கிறார். பாண்டவர்கள் போரில் ஜெயிக்க ஹஸ்தினாபுரத்தின் அரசனாக யுதிஸ்டிரர் பதவி ஏற்கிறார்.

தன்னுடைய நூறு மகன்களையும் குருச்சேத்திர போரில் பறிகொடுத்துவிட்டிருந்த திருதுராஸ்டிரர் நாட்டை விட்டுத் துறந்து காட்டில் சென்று தவ வாழ்க்கை மேற்கொள்ள விரும்புகிறார். இவருடன் மனைவி காந்தாரியும் செல்ல, பாண்டவர்களின் தாயான குந்தி தேவியும் வருவதாக சம்மதம் தெரிவிக்கிறார். அங்கே சில வருடங்கள் தவ வாழ்க்கை மேற்கொண்டவர்கள், திடீரென்று ஏற்பட்ட காட்டுத்தீயினால் உயிரைத் துறக்கிறார்கள்.



No comments:

Post a Comment