Saturday, 22 August 2020

குறள் 780

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து

(அதிகாரம்:படைச்செருக்கு குறள் எண்:780)

பொழிப்பு (மு வரதராசன்): தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.

மணக்குடவர் உரை: தம்மை ஆண்டவரது கண் நீர்மல்குமாறு சாக வல்லாராயின் அச்சாக்காடு எல்லாரானும் வேண்டிக் கொள்ளும் தகுதி யுடைத்து.
இஃது ஆண்டவனுக்குக் கேடுவரின், படவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: புரந்தார்கண் நீர் மல்கச் சாகிற்பின் - தமக்குச் செய்த நன்றிகளை நினைந்து ஆண்ட அரசர் கண்கள் நீர்மல்கும் வகை போரிடைச் சாவப் பெறின்; சாக்காடு இரந்துகோள்தக்கது உடைத்து - அச்சாக்காடு இரந்தாயினும் கொள்ளுந் தகுதியை உடைத்து.
(மல்குதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில், இடத்தின் மேல் நின்றது. கிளை அழ இல்லிடை நோயால் விளியார் பழவினைப் பயனே யெய்தலின், அடுத்த வினையால் துறக்கமெய்தும் சாதலை 'இரந்துகோள் தக்கது உடைத்து' என்றார். இவை நான்கு பாட்டானும் உயிர் ஓம்பாமை கூறப்பட்டது.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: நாட்டைக் காக்கும் அரசர்கள் அழுது கண்ணீர் விடும்படியாக உயிர் விடப் பெற்றால் அப்படிப்பட்ட மரணம் பிறரைக் கெஞ்சிக்கேட்டாயினும் அடையத் தகுந்தது.

No comments:

Post a Comment