Saturday, 31 October 2020

எண்டார்பின், செரோடோனின், டோபமைன் மற்றும் ஆக்ஸிடோசின் இந்த நான்கும்தான் நம் உடலினுள்ளேயே இருக்கும் ‘மகிழ்ச்சி’ ஹார்மோன்கள்

எண்டார்பின், செரோடோனின், டோபமைன் மற்றும் ஆக்ஸிடோசின் இந்த நான்கும்தான் நம் உடலினுள்ளேயே இருக்கும் ‘மகிழ்ச்சி’ ஹார்மோன்கள். இவற்றை ஆக்டிவ் மோடில் வைத்துக் கொண்டால், எப்போதும் மனதையும், உடலையும் மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ளலாம். சரி... இந்த ஹார்மோன்கள் உடல் ரீதியாக என்னென்ன வேலைகளைச் செய்கின்றன?

எண்டோர்பின்

எண்டார்பின்கள்(Endorphins) உடலின் வலியை கட்டுப்படுத்துபவை. இயற்கையாகவே உடலில் வலி நிவாரணிகளாக செயல்பட்டுக் கொண்டிருப்பவை. காட்டுவாசியாக ஆரம்பத்தில் மனிதன் இருந்தபோது நம் முன்னோர்கள் மிருகங்களிடமிருந்து தப்பிக்க ஓடும்போது எண்டார்பின்கள் உடலில் தானாகவே உற்பத்தியாகின்றன. இன்றோ, நாம் உடற்பயிற்சி செய்யும்போது மட்டுமே காற்றோட்ட மண்டலங்களில் எண்டார்பின்களை உற்பத்தி செய்யும் நிலையில் இருக்கிறோம்.

வலி தரும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும், எண்டார்பின் உற்பத்தி காரணமாக பயிற்சிக்குப்பின் ஃப்ஷ்ஷாக உணர்கிறோம்.எப்படி எண்டார்பின் உற்பத்தியை அதிகரிக்கலாம்?

கடுமையான உடற்பயிற்சிகளை செய்யும்போது, நம் உடலின் இயல்பான வலி நிவாரணிகளான எண்டார்பின்களை தூண்டுவதன் மூலம் நாட்பட்ட வலியை சமாளிக்க உதவுகிறது. எண்டார்பின்கள் வலியைப் போக்குவதில்லை. மாறாக வலி தெரியாமல் செய்கிறது அவ்வளவே. அடுத்து காரமான உணவை சாப்பிடும்போது, நாக்கிலுள்ள ரிசப்டார்கள், வலியை ஒத்த சமிக்ஞைகளை நமது மூளைக்கு அனுப்பி எண்டார்பின் உற்பத்தியை தூண்டுகிறது.

செரோடோனின்

செரோடோனின்(Serotonin) பற்றாக்குறையால் எரிச்சல், மன அழுத்தம் ஏற்படலாம். செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலம் நல்ல மன நிலையை பெற முடியும்.

எப்படி செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கலாம்?

நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். நமக்கு நடக்கும் கெடுதல்களை மீண்டும் மீண்டும் நினைத்து வருந்துவதை விடுத்து, கடந்த காலங்களில் நடந்த நல்ல நிகழ்வுகளை அசைபோடுவது அல்லது நிகழ்காலத்தில் கிடைக்கும் மகிழ்ச்சித் தருணங்களுக்கு நன்றி செலுத்துவது போன்ற நேர்மறையான எண்ணங்கள் நம் மூளையில் செரோட்டோனின் உற்பத்தியை அதிகரிக்கும்.

வெட்டவெளியில் தோலில் சூரிய ஒளி படுமாறு நிற்பதால், உடலுக்கு கிடைக்கும் ‘டி’ வைட்டமின் செரோட்டோனின் உற்பத்தியை அதிகரிக்க உதவி புரியும் என்கிறது அறிவியல். இதனால்தான் மனம் சோர்வாக இருக்கும்போது வெளியில் சென்றால் நம் மனநிலையில் மாற்றம் ஏற்படுவதை உணர முடியும்.

கடுமையான பயிற்சிகள் எப்படி எண்டார்பின் உற்பத்திக்குத் தேவைப்படுவதைப்போல ஏரோபிக் பயிற்சிகள் போன்ற மிதமான உடற்பயிற்சிகள் செரோட்டோனின் உற்பத்தியைத் தூண்டுவதோடு பயிற்சிக்குப்பிறகும் மன அமைதி நீடித்து இருக்கும்.

டோபமைன்

மகிழ்ச்சிக்கு காரணமான டோபமைன்(Dopamine) ஒரு இலக்கை நோக்கி முயற்சிக்கும்போது தூண்டப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட இலக்கை அடையும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கிறது.

அந்த இலக்கை அடையும்போது கிடைக்கும் பாராட்டுகள், பரிசுகள் மேலும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். நினைவுத்திறன், செயலாற்றல் ஆகியவற்றுக்கும் டோபமைன் உற்பத்தி தேவைப்படுகிறது. மனிதனின் செயல் ஒருங்கிணைப்பிற்கு ‘டோபமைன்’ தேவை. அளவுக்கதிகமான டோபோமைன் உற்பத்திக் குறைவு ஒருவருக்கு நடுக்கு வாத நோயை ஏற்படுத்துகிறது.

எப்படி டோபமைன் உற்பத்தியை அதிகரிக்கலாம்?

அவ்வப்போது எளிதில் அடையக்கூடிய சின்னச்சின்ன இலக்குகளை வகுத்துக்கொள்வது, டோபமைன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். உடற்பயிற்சிகள் செய்வதால் செரோடோனினுடன் டோபமைன் அளவுகளும் உயரும். இலக்கை அடைவதோடு டோபமைன் தொடர்புடையதாக இருப்பதால் மூளை விளையாட்டுக்களை தொலைவு அல்லது கால இலக்குகள் நிர்ணயித்து விளையாடும்போது டோபமைன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலாம்.

ஆக்சிடோசின்

‘காதல் ஹார்மோன்’ என்ற பெருமையைப் பெற்ற ஆக்சிடோசின்(Oxytocin) ஹார்மோன் உடல் தொடர்பின் மூலமாக வெளிப்படுகிறது. ஹைபோதலாமஸால் மூலம் உற்பத்தியாகும் ஆக்சிடோசின் மற்றும் பிட்யூட்டரி சுரப்பி மூலம் சுரக்கிறது. உறவில் நீடித்த அன்பையும், நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள ஆக்சிடோசின் முக்கியம்.

இந்த ஹார்மோன் பிரசவத்திலும் ஒரு முக்கிய பங்கு வகிப்பதோடு, ஆண் இனப்பெருக்கத்துடனும் தொடர்புடையது. பிரசவ வலியில் இருக்கும் பெண்களுக்கு கருப்பை தசைகளை சுருங்கச்செய்து பிரசவ வலியைத் தூண்டச் செய்கிறது. குழந்தை பிறந்தபின் தாய்ப்பாலை சுரக்கச் செய்வதும் இந்த ஆக்சிடோசினின் வேலை. இதனால்தான் பிறந்த குழந்தையை தாயின் மார்போடு அணைத்துக் கொள்ள அறிவுறுத்துகிறார்கள்
மருத்துவர்கள்.

ஆக்சிடோசினை எப்படி அதிகரிக்கச் செய்யலாம்?

தசைகளுக்கு மசாஜ் செய்வது உடல் தளர்விற்கு உதவுவதோடு நம் உடலமைப்பில் ஒரு நீடித்த நல் உணர்வை கொடுக்கக்கூடிய ஆக்சிடோசினை அதிகரிக்கவும் செய்கிறது. இருக்கவே இருக்கு ‘கட்டிப்பிடி வைத்தியம்’. குடும்பத்தில் பிள்ளைகள், மனைவி, கணவன் மட்டுமில்லை நண்பர்களையும் அப்பப்போ கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம். அவர்களையும் சந்தோஷப்படுத்தி, நாமும் சந்தோஷமடையலாமே. ‘ஆக்சிடோசின்’ உறவுப்பாலத்தை வலிமையாக்கும் பொக்கிஷம் என்பதை மறந்துவிடாதீர்கள்!

No comments:

Post a Comment