Saturday, 31 October 2020

நரம்புகள் வலுப்பெற உதவும் உணவுகள்

ட்டச்சத்துக் குறைவான உணவுகளைச் சாப்பிடுவது அல்லது அதிகமாகச் சாப்பிடுவது இரண்டுமே நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்ட உணவு சரிவர உடலுக்குக் கிடைக்கவில்லை என்றால், `பெர்னீஷியஸ் அனீமியா’ (Pernicious Anemia) எனும் ரத்தத்தையும் நரம்பையும் பாதிக்கும் நோய் நிச்சயம் வரும். வைட்டமின் பி 12 குறைவால் ஏற்படும் இந்த நோய் புற நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதம், கை, கால் எரிச்சல் எனத் தொடங்கி, தள்ளாட்டம், வலுக்குறைவு எனக் கொடுத்துவிடும்.

உணவு, பசிக்காக மட்டுமல்ல; ருசிக்காக மட்டுமல்ல. விருந்தாகவோ, மருந்தாகவோகூட அல்ல. அதையும் தாண்டி அர்த்தமுள்ளது. உடலுக்குத் திறனை உருவாக்க உதவும். கூடியவரை நோயில்லா நல்வாழ்வு பெற்றிட உதவும் அமுது இது. ஆறிய கஞ்சியோ, லோப்ஸ்டர் மீன் துண்டோ எதுவாக இருந்தாலும், உணவும் நம் மனித வாழ்வின் அடித்தளம். எல்லாம் வணிகமயமாகிவிட்ட சூழலில் இன்றைக்கு உணவு ஒரு மிகப் பெரிய ஆயுதமாகிவிட்டது. கொஞ்சம் கவனமாக நம் பாரம்பர்ய உணவு விஷயங்களை, நவீன அறிவியலின் துணைகொண்டு மீட்டெடுக்கத் தவறும் பட்சத்தில், தலைவாழை இலையில், பச்சை கலர் மாத்திரைகள் பதினைந்தைப் போட்டு, வைட்டமின் சிரப் ஊற்றிப் பிசைந்து, வேண்டுமானால் தொட்டுக்கொள்ள லேகியம், தாகத்துக்கு கஷாயம் என உணவு வாழ்க்கை, தலைகீழாக மாறிவிடும். எனவே, காய், கனி, கீரைகளைக் காதலிப்போம். தினை, ராகி, குதிரைவாலி முதலிய சிறுதானியங்கள் மீது அலாதிப் பிரியம் வைப்போம். நம் தாத்தா-பாட்டி செய்து தந்த உணவு வகைகளை, புதுப்பொலிவுடன் அலங்காரமாகச் செய்து ஆரவாரமாகப் பரிமாறிடுவோம். 

நரம்பு வலுப்பெறவும் நரம்பியல் நோய்கள் தீரவும் என்னென்ன சாப்பிடலாம்... பார்க்கலாமா? 

* கோழியின் ஈரல் உள்ளிட்ட அசைவ உணவுகளில்தான் வைட்டமின் பி 12 அதிகம் இருக்கிறது. பால், முட்டையில் குறைவாக இருக்கிறது. பிற காய்கறிகளில் பி 12 இல்லை. இதனால்தான், தீவிர மரக்கறியாளருக்கு (வெஜிட்டேரியன்) பெர்னீஷியஸ் அனீமியா நோய் வர வாய்ப்பு அதிகம். அதற்கான அறிகுறிகள், கை, கால் எரிச்சல். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, இவர்கள் பால் பொருட்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

* நரம்பு மண்டலம் வலுப்பெற்றிருக்க பழங்கள் மிக அவசியம். தற்போது உலகமெங்கும் அதிகமாகிவரும் முதுமையில் வரக்கூடிய ‘அல்சீமர் நோய்’ எனும் மறதி, வலுக்குறைவு, தடுமாற்றம் நமக்கு வரமல் இருக்க வேண்டுமா? 40 வயதில் இருந்து தினமும் ஒரு முறை ஏதேனும் பழங்களை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

* பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரையை பகல் உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளுக்கு நல்லது. 

* இரவில் ஒரு சிட்டிகை சாதிக்காய் தூள் சாப்பிடுவது நரம்பு வலுப்பெற உதவும். 

* தேநீரில் லவங்கப்பட்டை போட்டுக் குடிப்பது, நரம்புகளுக்கு நலம் தரும். 

* நரம்பு பாதுகாப்புக்கு, எல்லா உணவிலும் மஞ்சள் தூள், வெந்தயத்தை மறக்காமல் சிறிதளவாவது சேர்க்க வேண்டும்.

* வயோதிகத்தில் நரம்பு வலுப்பெற அமுக்கிராங்கிழங்குப் பொடியை 1/2 தேக்கரண்டி அளவு பாலில் கலந்து இரவில் 45 நாட்கள் சாப்பிடவும்.

* ஓரிதழ் தாமரைப் பொடி, பூனைக்காலிப் பொடி நரம்பை வலுப்படுத்தும் மூலிகை உணவுகள். மருத்துவர் ஆலோசனையுடன் சாப்பிடுவது பார்கின்சன் நோய் உள்ளிட்ட பல நரம்பு நோய்களை ஆரம்பநிலையிலேயே களைந்துவிடும்

No comments:

Post a Comment