Saturday 24 October 2020

பிரம்மஹத்தி_தோஷம்

#குரு_சனி சேர்க்கையினால் உண்டாகும் தோஷமும் யோகமும்

ஜோதிடத்தின் ராஜாகிரகங்களாக வர்ணிககப்படும்,
இயற்கை சுபரான குருவும்,
இயற்கை பாபியான சனியும், இணைவதால் #ஜீவ_கர்ம_யோகம் அல்லது #பிரம்மஹத்தி_தோஷம் உண்டாகிறது. 

பூர்வ புண்ணியம், தனம், அறிவு, வேதங்கள் கற்றோர், அந்தணர், ஆசிரியர், முன்னோர்கள், முதியோர், ஆலயம், குழந்தை  போன்றவற்றிற்கு காரகனான குருவும்,

கர்மா, அடிமை தொழில், வறுமை, நோய், கடன், தடைகள், மந்தம், அவமரியாதைகள், இறந்தவர்கள், தர்ப்பணம் (எள்ளும் தண்ணியும்), ஊனம், எளிமை, பாழடைந்தவை, அநாதைகள், வாழ்விழந்தோர், கொலை ஆகியவற்றிற்கு காரகருமான சனியும்,

ஏக ராசியில் சேர்ந்தோ அல்லது சம சப்தமாகவோ, ராசி பரிவர்த்தனை பெற்றோரா, சார பரிவர்த்தனை பெற்றோ அமருமானால் ஜீவகர்ம யோகம் அல்லது பிரம்மஹத்தி தோஷம் ஜாதகரை பீடிக்கிறது.

#குரு_பலம் பெற்று சனி உடன் தொடர்பில் இருப்பதனால் #ஜீவ_கர்ம_யோகம் உண்டாகிறது. இரண்டுமே நீதியை மையப்படுத்தும் கிரகம் இதில் குரு பலம் பெற்று இருப்பதன் பலனாக ஜாதகர் நீதிபதியாக இருக்கலாம், அனைத்தையும் ஆராய்ந்து அறியும் திறமை, பழமைகளை பாதுகாப்பது, ஆலயங்களில் முன்னணி பதவி வகிப்பது, அருங்காட்சியகத்தில் பணி புரிவது, முன்னோர்களின் பூர்வ புண்ணியங்களை அனுபவிப்பது, விரிவுரையாளராக செயற்படுவது, உலவு துறை, முதியோர் பராமரிப்பு நிலையம் அமைப்பது போன்ற பலன்கள் சம்பந்தப்பட்ட பாவகங்கள் சார்பான சுப பலன்களும் நடக்கும்.

#சனி_பலம் பெற்று குருவுடன் தொடர்புபடும் போது #பிரம்மஹத்தி_தோஷம் பீடிக்கின்றது. இதன் பலனாக ஜாதகருக்கு வறுமையும் கஷ்டமும்  சுபகாரியங்கள் தடையாவது, திருமணம் தடையாவது, புத்திர தடை, குழந்தைகளின் கல்வி சார்ந்த நிதி பிரச்சினை, ஊனமுற்ற களத்திரம் அமைவது, உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லாமை, சரியான முடிவு எடுக்க முடியாமை, இருதய நோய்கள் வருவது, பொய் பேசுவது (வழக்கறிஞராகவும் வரலாம்), தொழில் அங்கீகாரம் கிடைக்காமை, திறமை இருந்தாலும் முன்னேற்றம் இன்மை, புண்ணிய பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமைகள்  உண்டாவது போன்ற அசுப பலன்களும் உண்டாகும். 



1 comment: