Saturday, 17 October 2020

கடக லக்கனம்

♥️#கடக லக்கனம் ....
நண்டானுக்கு இடம் கொடேல்’ என்றொரு பழமொழி உண்டு. அது உங்களை நினைத்து உருவாக்கப்பட்டது தான். ஏனெனில், மெதுவாக தன்னை நுழைத்துக் கொண்டு, முழுவதுமாக ஆக்கிரமிக்கும் கெட்டிக்காரர்கள் நீங்கள். அதிலும் கடகத்தையே லக்னமாகப் பெற்றவர்களுக்கு இன்னும் அதிகமாக இந்தப் பழமொழி பொருந்தும். ‘‘இடத்தை கொடுத்தா மடத்தை புடுங்கற’’ என்றும் உங்களை பலர் கேட்டதுண்டு. பெரும்பாலான ஆட்சியாளர்கள், ஆளுமைமிக்க பதவியில் அமர்பவர்கள் எல்லோருமே கடக லக்னத்தில் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இதை ரூலர்ஸ் லக்னம் என்றும் சொல்லலாம். தலைமைப் பண்பும், எல்லோரையும் வழி நடத்திச் செல்லும் திறனும் உங்களிடத்தில் இயல்பாகவே அமைந்திருக்கும்.

# உங்கள் லக்னாதிபதியாக சந்திரன் வருகிறார். இரண்டரை நாட்களில் ஒரு ராசியைக் கடந்து செல்வதால், சகல செயல்களையும் துரிதமாக நடத்தவே விரும்புவீர்கள். ‘நண்டு கொழுத்தால் வளையில் தங்காது’ என்பார்கள். நீங்கள் வளர வளர இடம்பெயர்ந்து கொண்டே இருப்பீர்கள். ‘‘என் திறமைக்கு நான் அங்க இல்ல இருக்கணும்’’ என்று வெவ்வேறு வேலைகளுக்குத் தாவிக்கொண்டே இருப்பீர்கள். ஐந்து நிமிடப் பேச்சிலேயே ஆளை எடைபோடும் சாமர்த்தியம் இருக்கும். 

#சந்திரனைப் போன்றே இந்த லக்னத்தில் பிறந்த நீங்கள் வசீகரமாகவும், ஈர்ப்பு சக்தியோடும் வளைய வருவீர்கள். ஆயிரம் பேர் இருந்தாலும் உங்களின் இருப்பு மட்டும் தனித்துத் தெரியுமாறு பார்த்துக் கொள்வீர்கள். தன்னைவிட அதிகாரத்தில் உள்ளவர்களின் மீது தனி கவனம் செலுத்துவீர்கள். சந்தர்ப்பம் பார்த்து சறுக்க வைப்பீர்கள். பிறகு நீங்களே அந்தப் பதவியில் சென்றும் அமர்வீர்கள். அப்படிப்பட்ட ராஜதந்திரி நீங்கள்.

#கடக லக்னத்தைப் பொறுத்தவரை மூன்று கிரகங்கள் முக்கியமானவை. முதலாவதாக சந்திரன். இரண்டாவதாக செவ்வாய். மூன்றாவதாக குரு. இதில் சந்திரன் ஏற்கனவே இந்த லக்னத்திற்கு அதிபதியாக வருகிறார். சூரியன், சந்திரன் இந்த இரண்டு கிரகங்களுக்கும் ராசி மண்டலத்தில் ஒரே வீடு மட்டும் சொந்தமாகும். அதுபோல சந்திரன் கடகத்திற்கு மட்டுமே அதிபதியாக வருகிறார். எனவே, தன்னுடைய சொந்த லக்னமான, சுய வீட்டிற்கு நல்லதைச் செய்தே தீருவார். 

#சந்திரனை சர்வகலாபிதன் என்பார்கள். அதேபோல தாய் ஸ்தானத்திற்கு உரியவராகவும் வருகிறார். அதனால் ஏதேனும் ஒரு கலை உங்களுக்குக் கைகூடும். தாயின் ஆசியும், அரவணைப்பும் இருக்கும். சிலருக்கு தாய் வழிச் சொத்துகளும் கிடைக்கும்.

#உங்களை பிரபலமாக்குவதும் சந்திரன்தான். வி.ஐ.பிகளோடு நட்பை ஏற்படுத்திக் கொடுப்பதும் சந்திரன்தான். சந்திரன் தேய்வது, வளர்வது, மறைவது என்று பல தன்மைகளைக் கொண்டது. அதனால் எல்லாவிதமாகவும் உங்கள் வாழ்க்கை மாறுவதால் அனுபவச் சுரங்கமாகத் திகழ்வீர்கள். ‘‘அவர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோ’’ என்று உங்களைச் சுட்டுவார்கள்.

நீங்கள் வளர்பிறையில் பிறந்து, ராகு, கேது, சனி சம்பந்தப்படாமல் இருந்தால் நல்லது. எப்போதுமே சந்திர தசை, அல்லது வேறெந்த தசை நடந்தாலும், அதில் வரும் சந்திர புக்தி, திங்கட்கிழமை, ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திரங்கள், 2, 11, 20, 29 ஆகிய தேதிகள் என்று சந்திரனின் ஆதிக்கமுள்ள அனைத்திலும் உங்களுக்கு நன்மையான செயல்களே நடைபெறும். உங்கள் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்துவிட்டால், தாய்வழிச் சொத்துகள் கிடைக்கும். சந்திரன் பாவ கிரகங்களோடு சேர்க்கை பெற்றிருந்தாலோ, தேய்பிறை சந்திரனாக இருந்தாலோ, கிரகயுத்த அவஸ்தையை அடைந்திருந்தாலோ, சூரியனால் ஏற்படக்கூடிய அஸ்தங்க அவஸ்தையைப் பெற்றிருந்தாலோ, உங்களுக்கு மன உளைச்சல் அதிகமாக இருக்கும். தாயார் அடிக்கடி நோய்வாய்ப்படக் கூடும்.

#கடக ராசியிலுள்ள புனர்பூச நட்சத்திரத்தில் உங்கள் லக்னம் அமையப் பெற்றிருந்தால் பெரிய அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். பூசம் நட்சத்திரத்தில் லக்னம் அமையப் பெற்றிருந்தால் நல்ல நிர்வாகத்திறன் கைகூடும். ஆயில்யத்தில் இருந்தால் எந்த விஷயத்தையுமே எளிதாக எடுத்துக்கொள்ளும் பக்குவமுள்ளவர்களாக இருப்பீர்கள். உங்கள் ராசிநாதனான சந்திரனை ஜோதிடம் ‘மனோகாரகன்’ என்கிறது. அதனாலேயே பிறரின் மனதில் இடம்பிடிக்கும் கலையை நன்கு கற்று வைத்திருப்பீர்கள். யாருடன் பழகினாலும், அவரால் மறக்க முடியாத அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவீர்கள். வேறொரு பக்கம் பார்த்தால் தாய் ஸ்தானத்திற்கு அதிபதியாக, உங்களின் பாதகாதிபதியான சுக்கிரன் வருகிறார். அவ்வப்போது ஏதேனும் பணி நிமித்தமாக தாயை விட்டுப் பிரிய வேண்டியதிருக்கும்.

உங்களுக்கு அதிமுக்கியமான கிரகம் செவ்வாயே ஆகும். உங்களின் தெய்வமே செவ்வாய்தான் என்றால் அது மிகையாகாது. இவர் உங்கள் ஜாதகத்தில் எங்கிருந்தாலும் சரிதான்... ‘வாழ்க’ என்று ஆசீர்வதித்துக் கொண்டேயிருப்பார். மிகமோசமாக பகைவர்களோடு இருந்தாலும், தன்னால் தீங்கு நேராமல் பார்த்துக் கொள்வார். ஜாதகத்தில் அதிமுக்கியமான இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியாக செவ்வாயே வருகிறார். ‘ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி’ என்று சொந்த பந்தங்களோடு புடைசூழ வாழ்வீர்கள். அழகும் அறிவும் துணிவும் கொண்ட வாரிசுகளைக் கொடுப்பார். குழந்தைகளுக்கு தர்ம சிந்தனையை அதிகம் புகட்டுவீர்கள். தான் சார்ந்திருக்கும் இனம், மதக் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்பதில் கடுமையாக இருப்பீர்கள். தவறு செய்து விட்டால் தயங்காமல் தண்டிப்பீர்கள்.

இதே செவ்வாய் பத்தாம் இடத்திற்கும் அதிபதியாக வருவதால் அதிகாரமுள்ள பதவிகளைத் தருவார். அள்ள அள்ளக் குறையாத செல்வத்தையும் அருள்வார். யோகாதிபதியாக வரும் செவ்வாயே பூமிகாரகனாகவும் வருவதால், இந்த லக்னத்தில் பிறந்தோருக்கு எங்கேனும் ஓரிடத்தில் வீடு, மனை இருக்கும். ஜாதகத்தில் செவ்வாயோடு அதன் சத்ருவான புதன் அல்லது சனி சேர்ந்திருந்தாலோ, பார்வை பெற்றிருந்தாலோ, செவ்வாயின் நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தாலோ, போராடிப் போராடித்தான் ஒவ்வொன்றையும் பெறுவீர்கள். மனதில் எப்போதுமே எதிர்மறை சிந்தனைகள் இருந்துகொண்டே இருக்கும். இதுவா... அதுவா... என்கிற குழப்பமும், தெளிவின்மையும் இருக்கும்.

♥️உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லையென்றால் நடைமுறையில் சில விஷயங்களைக் கடைப்பிடிக்கலாம். 

♥️செவ்வாய்க் கிழமையன்று விரதம் இருங்கள். துவரையை தானம் கொடுங்கள். கேரட், பூண்டு மற்றும் மிளகு ரசத்தை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 
♥️பழங்களில் பப்பாளி சாப்பிடுங்கள். சகோதரனை இழந்தவருக்கு உங்களாலான உதவியைச் செய்யுங்கள். விபத்தில் அடிபட்டவருக்கு உதவிகளைச் செய்யுங்கள். 
♥️ரத்ததானம் செய்யுங்கள். உடன்பிறந்தவர்களுக்கு உண்டான சொத்துகளை தர்மத்தோடு பிரித்துக் கொடுங்கள். 
இப்படிச் செய்தால், செவ்வாய் உங்கள் ஜாதகத்தில் பலம் பெறும். செவ்வாய் தசை, அல்லது செவ்வாய் புக்தி, அந்தரம் நடக்கும்போதெல்லாம் உங்களுக்கு சாதகமான பலன்களே நடைபெறும். மேலும், மிருக
சீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திர நாட்கள், செவ்வாய்க் கிழமை, 9, 18, 27 போன்ற தினங்களில் நல்ல முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். செவ்வாய் ஸ்திரமாக நின்று உதவுவார்.  
மூன்றாவதாக குரு உங்களுக்கு முக்கியமான யோகங்களை அளிப்பவராக விளங்குகிறார். செவ்வாய் அளவுக்கு இல்லாவிட்டாலும் செவ்வாய்க்கு அடுத்தபடியாக குரு உங்களுக்கு நன்மைகளைச் செய்வார். ஆறாம் இடம் என்றழைக்கப்படும் ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கும், பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக குருவே வருகிறார். தங்க ஆபரணங்கள், சரளமான பணவரவு, கல்வி நிறுவனங்கள் வைத்து நடத்துதல் என்று முக்கியமான விஷயங்களை குருதான் அருள்கிறார். இதே குரு ஆறாம் இடத்திற்கும் வருவதால் செலவுகளையும், அலைச்சல்களையும் கொடுத்துத்தான் நன்மைகளை அடையும்படி செய்வார். அதேசமயம் குரு பாக்கியாதிபதியாக வருவதால், தந்தையை மிஞ்சி சாதிக்க வைப்பார். உங்களின் சொந்த ஜாதகத்தில் கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய வீடுகளில் ஒன்றில் குரு அமர்ந்திருந்தாலோ, குரு சூரியனுடன் சேர்ந்திருந்தாலோ, நிறைவான வாழ்க்கை வாழ்வீர்கள். அமைச்சராக, காவல்துறை அதிகாரியாக, பேராசிரியராக, வங்கி மேலாளராக வருவீர்கள். குரு, செவ்வாயுடன் மேஷம், தனுசு வீடுகளில் சேர்ந்திருந்தால் ராணுவம் அல்லது விமானப் படையில் முதன்மைப் பதவி வகிப்பவராக இருப்பீர்கள். மற்ற வீடுகளில் சேர்ந்திருந்தால் தந்தை சொல் தட்டுபவராகத்தான் இருப்பீர்கள். குரு உங்களுக்கு சபைகளில் மாலை மரியாதையோடு பெரிய கௌரவத்தை பெற்றுத் தருவார். குரு தசை, குரு புக்தி, வியாழக்கிழமை, புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்கள், 3, 12, 21, 30 போன்ற தேதிகள் என்று குறிப்பிட்ட காலங்கள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.

பொதுவாக இந்த மூன்று கிரகங்களுமே சனியை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் அமரக் கூடாது. சனியின் பார்வையோ அல்லது சேர்க்கையோ பெற்றிருந்தால், காலதாமதமாக பலன்கள் கிடைக்கும். வேர்க்கடலை, பனங்கற்கண்டு, பால், மலை வாழைப்பழம் போன்றவற்றை அவ்வப்போது எடுத்துக் கொள்ளுங்கள். வியாழக்கிழமையன்று தயிர்சாதத்தோடு எலுமிச்சை ஊறுகாய் வைத்தும், எலுமிச்சை சாதமாகவும் உங்களால் இயன்ற அளவு கொடுங்கள். ஏழைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.

மாற்றம் தரும் மந்திரம்
கடக லக்னத்தில் பிறந்த நீங்கள், எல்லா வளங்களும் பெற அபிராமி அந்தாதியிலுள்ள இந்த 75வது பாடலை சொல்லுங்கள்...
தங்குவர் கற்பக தாருவின் தாயர் இன்றி
மங்குவர் மண்ணில் வாழாப்
பிறவியை மால்வரையும்
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே
                    ஓம் நமசிவாய 🙏

No comments:

Post a Comment