Saturday 17 October 2020

ஐப்பசி

#ஐப்பசி

⭐ ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில் சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். ஐப்பசி மாதத்தில் சிறப்புமிக்க பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் பௌர்ணமியில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம், தீபாவளிப் பண்டிகை, கந்தசஷ்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் பல்வேறு சிறப்புகள் நிறைந்துள்ளது.

ஐப்பசி பௌர்ணமி :

⭐ சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த சிவனுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

⭐ எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் பெயர் பெற்ற தலமான தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் சிறப்பாக வழிபாடு செய்யப்படுகிறது.

⭐ சிறப்புவாய்ந்த அன்னாபிஷேக வழிபாட்டில் கலந்துக்கொண்டு இறைவனின் பரிபூரண அருளைப் பெற்று நமது குறைகளை நீக்கி பேறு அடையலாம்.

ஐப்பசி சதயம் :

⭐ ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மா மன்னர் ராஜராஜசோழன். அவரை சிறப்பிக்கும் வகையில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 

வளர்பிறை ஏகாதசி :

⭐ ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி 'பாபாங்குசா" என்று அழைக்கப்படுகிறது.

⭐ இந்த நாளில் ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் வறுமை அகலும், பசிப்பிணி நீங்கும், பாவ விமோச்சனம் பெறலாம்.

தேய்பிறை ஏகாதசி :

⭐ ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி 'இந்திரா ஏகாதசி" என்று அழைக்கப்படுகிறது.

⭐ இந்திரா ஏகாதசியில் விரதமிருந்தால் நாம் செய்த பாவம் மட்டுமின்றி நம் முன்னோர்களின் பாவங்களும் நீங்கும்.

கடைமுகம் :

⭐ ஐப்பசி மாதக்கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது.

⭐ ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர். இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது. அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடலை கடை முழுக்கு என்பர்.

⭐ ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் முழுகி, மயூரநாதரை வழிபட்டால் நன்மை உண்டாகும். மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும்.

தீபாவளி :

⭐ தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பட்ச பிரதமை நாட்களில் கொண்டாடப்படுகிறது.

கந்த சஷ்டி :

⭐ கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.


No comments:

Post a Comment