Thursday, 19 November 2020
ஊழ்வின
ஊழ்வினை
நுகர்வினை
இது 'பிராரப்த கர்மம்' என்று வடமொழியில் சொல்லப்படும் ஊழ்வினை. எல்லா முற்பிறப்புகளிலும் நாம் செய்த, செய்ய நினைத்த, செய்ய விரும்பிய செயல்களின் மூட்டை தான் நம் கருமம் அல்லது வினை. இம்மூட்டையிலிருந்து ஆண்டவன் திருவருளால் இப்பிறவிக்காக ஒரு பிடியளவு நாம் பிறக்கும்போதே நம் கூட வருகிறது. வில்லிலிருந்து புறப்பட்டுவிட்ட அம்பை அம்பு எய்தியவனே எப்படி எதுவும் செய்யமுடியாதோ அப்படி, நாம் பிறந்தபிறகு அதை அந்த ஆண்டவனும் ஒன்றும் செய்வதில்லையென்று அத்தனை இந்து சமய நூல்களும் கூறுகின்றன. இந்தப் பிடியளவு வினைதான் மாறாத வினை எனப்படுகிறது. இந்து சமய சாத்திரங்களும் புராணங்களும் எங்கெல்லாம் 'விதி வலிது, அதை மாற்ற ஈசனாலும் முடியாது' என்று சொல்கின்றனவோ அங்கெல்லாம் இந்த ஊழ்வினையைத்தான் அப்படிச் சொல்கிறார்கள். இதை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். பிரமனால் நெற்றியில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் இந்து உலக வழக்கு இவ்வினையைப் பற்றித்தான்.
ஒரு நபருக்கு வாய்க்கும் பெற்றோர், வாய்த்திருக்கும் அல்லது வாய்க்கப்போகும் கணவன்/மனைவி, வாய்க்கப்போகும் வாழ்க்கைச் சூழ்நிலை, பொதுவாக கஷ்ட வாழ்க்கையா சுக வாழ்க்கையா, மற்றும் ஆயுள், இதெல்லாம் ஊழ்வினையைப் பொறுத்தது என்பது இந்து சமய நூல்களின் கூற்று.
'விதியின் பிழை நீ இதற்கு என் கொல் வெகுண்டது' என்று இராமன் இலக்குவனுக்குச்சொல்வதாக கம்பன் சொல்வது இந்த ஊழ்வினையைத்தான். 'ஊழிற்பெருவலி யாவுள' என்று வள்ளுவர் சொல்வதும் இவ்வினையைப்பற்றித்தான்.
தொல் வினை
ஒரு நபரின் முற்பிறப்புகளில் சேகரித்துக்கொண்ட செயல்களின் மூட்டையிலிருந்து ஒரு துளியளவு ஊழ்வினைக்காக இப்போதைய பிறவியில் அனுபவிப்பதற்காக எடுக்கப்பட்டுவிட்டது.எஞ்சியுள்ளது இனி வரப்போகும் பிறவிகளுக்காக உள்ளது. இந்த எஞ்சியுள்ள மூட்டை தான் தொல் வினை எனப்படும். வடமொழியில் 'ஸஞ்சித கருமம்' என்பர். மொத்த வினையின் இப்பகுதிதான் மிக அதிகமான பகுதி. ஆனால் இது மாறக்கூடிய விதி, மாற்றக்கூடிய விதி. 'விதியை மதியால் வெல்லலாம்' எனப் பெரியோர்கள் சொல்வது இத்தொல்வினையையே. காசிக்குப்போய் பாவத்தைத் தொலைக்கலாம் என்றும், கோயில் தரிசனம், தீர்த்தஸ்நானம், பெரியோர் ஆசிகள் இவைகளால் பாவம் தொலையும் என்றும் இந்து மத நூல்கள் சொல்லும்போது இத்தொல்வினையில் உள்ளடங்கிய பாவத்தைத்தான் சொல்கின்றன. ஊழ்வினை அனுபவிக்கப்பட்டுத்தான் ஒழியும். ஆனால் தொல்வினை என்பது புண்ணியம் செய்வதாலும், ஆண்டவன் திருநாம ஜபத்தாலும் கரையும் என்பது இந்து சமய நூல்களின் கூற்று. 'லிங்காஷ்டகம்' என்ற சிவபெருமான்தோத்திரத்தில் 'ஸஞ்சித பாப வினாசக லிங்கம்' என்று வெளிப்படையாகவே 'தொல்வினையை அழிக்கக்கூடிய பெருமான்' என்று சொல்லப்பட்டிருக்கிறது.
'கோயில்களுக்குப்போய் திரும்பும் கடவுள் பக்தர்கள் அவர்கள் பிரயாணம் செய்த பேருந்து கவிழ்ந்ததால் உயிரிழந்தார்கள்' போன்ற சில செய்திகளைக் கேட்கும்போது 'புண்ணியம் செய்தவர்க்கு இதுதான் கைமேல் கண்ட பயனா' என்ற கேள்விகள் அடிக்கடி எழுவதுண்டு. செய்த புண்ணியம் தொல்வினையில்தான் பத்து வரவு செய்யப்படும்; ஊழ்வினையை அனுபவிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியாது என்ற கூற்றுதான் இதற்கு பதில்.
வரும் வினை
இவ்வினை முழுவதும் மனிதன் கையில்தான் இருக்கிறது. ஏனென்றால் இது நாம் இப்பிறவியில் இனி செய்யப்போகும் செயல்கள். 'போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்' என்ற திருப்பாவை வரிகளில் தொல்வினையையும் வரும் வினையையும் தான் சொல்கிறாள் ஆண்டாள்.
பின்வரும் காரியங்கள் நாம் அடிக்கடி செய்வதால்தான் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம்.அவற்றை தவிர்க்கப் பாருங்கள்:
1.பிறரது சொத்துக்களை தனது அதிகாரம்,ஆளுமை,ஆளும் திறன்,தனித்திறமை,நயவஞ்சகம் இவற்றால் அபகரித்தல்
2.சொன்ன சொல்லைத் தவறுதல்
3.காம உணர்ச்சியைத் தூண்டுதல்;அப்படித் தூண்டிவிட்டு அதற்கு வடிகால் இல்லாமல் செய்வது மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாகும்.(திரைப்படங்களை இயக்குபவர்கள்,கவர்ச்சியாக நடிப்பவர்கள்,நீலத்திரைப்படங்களை எடுப்பவர்கள்,நடிப்பவர்கள்,விநியோகிப்பவர்கள்,ஒளிபரப்புபவர்கள்,சேமித்து வைத்து விற்பவர்கள்)
4.அநியாயமான விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல்/சேவை செய்தல்
5.அடைக்கலம் தேடி வருபவர்களை விரட்டுதல்; அடைக்கலம் தருகிறேன் எனக் கூறி அவர்களை அழித்தல்(இலங்கையின் தற்போதைய அதிபரின் பெயர் உங்களுக்கு ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல)
6.வழிபாட்டுக்குரிய சொத்துக்களை திருடுதல்;அபகரித்தல்;அழித்தல்;சூறையாடுதல்;மோசம் செய்தல்
7.தன்னைப் பெற்றவர்களுக்கு அவர்களது இயலாத காலத்தில் அவர்களை பராமரிக்காமலிருத்தல்;அவர்களை சபித்தல்;அவர்களை கண்டுகொள்ளாமலிருத்தல்
8.தனது வாழ்க்கைத் துணையின் காம ஆசையை நிறைவேற்றாமலிருத்தல்;தனது வாழ்க்கைத்துணையைப் பற்றி இழிவாகப் பேசுதல்;தனது வாழ்க்கைத்துணையை தனது பெற்றோர்கள்/உடன்பிறந்தோருடன் சேர்ந்து இம்சித்தல்/சித்திரவதை செய்தல்/கொலை செய்தல்
9.தனது குழந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமலிருத்தல்
10.தன்னை நம்பிவந்த தொழில் கூட்டாளிகள், நண்பனை கழுத்தறுத்து ஏமாற்றுதல்
11.அன்னதானம் செய்கிறேன் எனக்கூறி வசூல் செய்து அதை சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்துதல்
12.ஆன்மீகத்தின் பெயரால் யோகாசனம் மற்றும் தியானத்தை (நியாயமான குரு தட்சிணை வாங்காமல்) வியாபாரம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்தல்
13.பிற மதங்களை இழிவாகப் பேசுதல்;பிற மதத்தைச் சேர்ந்தவர்களை குறுக்கு வழியில் தனது மதத்திற்கு மாற்றுதல்
14.அடுத்தவர்களின் காம ரீதியான அவமானங்களை தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி மகிழுதல்(புறங்கூறுதல்)
15. மாமியார் மருமகள் ஒற்றுமையை கெடுத்தல்
16.குடும்ப ஒற்றுமையைக் கெடுத்தல்
17.ஜாதிகள் அல்லது இனங்களுக்கிடையே தீராதப் பகையை அரசியல் ரீதியாகவோ,வெறுமனயோ தூண்டுதல்
18.தவறான மருத்துவ சிகிச்சை
19.தவறான ஜோதிட ஆலோசனை
20.மாந்திரீகத்தின் உதவியால் கெடுதிகள் செய்தல்;இது 16 தலைமுறைகளைப் பாதிக்கும்.
21.இறைவழிபாடு செய்யாமல் தடுத்தல்,இறைவழிபாடு,ஜோதிடம்,ஆன்மீகச் சேவைகளை இழிவுபடுத்துதல்(.விஜய் டிவி, சன் டிவி ஞாபத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல)
22.முறையற்ற உறவுகளை ஊக்குவித்தல்;உருவாக்குதல்;பரப்புதல்;உருவாகக் காரணமாக இருத்தல்( தொலைக் காட்சியின் மெகாத்தொடர்கள்?!)
23.எதற்கெடுத்தால் கோபப்படுதல்;பொறாமைப் படுதல்; சந்தேகப்படுதல்.
இது தவிர,இன்னும் சில பாவங்கள் இருக்கின்றன.வார்த்தைகளால் அச்சிட முடியாத பாவங்கள் அவை.
No comments:
Post a Comment