Saturday, 16 January 2021

துரதிர்ஷ்டம், வறுமை நீக்கும் சத்-திலா ஏகாதசி மகிமை...

துரதிர்ஷ்டம், வறுமை நீக்கும் சத்-திலா ஏகாதசி மகிமை...

சத்-திலா ஏகாதசி /  மக க்ருஷ்ண ஏகாதசி...

நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட.... 

'மக' மாதம், (மகர / மக மாதம்- Makara  - January  / February) தேய் பிறையில் (கிருஷ்ண பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "சத்-திலா  ஏகாதசி" (Sath-Thilaa Ekadasi) என்று   அழைக்கப் படுகின்றது.  ('திலா' என்றால் 'எள்' என்று அர்த்தம்) 

சத்-திலா ஏகாதசி பற்றி 'பவிஷ்ய-உத்தர' புராண விளக்கம்: 
சிகீதையன் என்பவரது மகனான தல்ப்ய மகரிஷி, ப்ரம்மாவின் வழித்தோன்றலான புலஸ்ய முனிவரிடம் கேட்கிறார் ...

முனிவரே, 
இந்த உலகத்தில் ஒரு ஆன்மா ஒரு உடலை எடுத்தவுடன், பல பாவங்களை செய்யும் எண்ணம் வந்து விடுகிறது. திருடுதல், தவறான உறவு, மேலும் மிக உயர்ந்த பாவமான ப்ராமணரை கொல்லுதல் போன்ற பாவச்செயல்களை செய்கின்றனர். இதன் மூலம் பர வாழ்வில் அவர்கள் நரகத்திற்கு செல்கின்றனர். மற்றும் இக வாழ்வில் துரதிர்ஷ்டம் மற்றும் வறுமையை அனுபவிக்கின்றனர். இதிலிருந்து, அவர்களை காப்பது எப்படி ? அதற்குரிய உபாயம் என்ன என்று கேட்கிறார் ?
அதற்கு, புலஸ்ய முனிவர் கீழ்வரும் பதிலைக் கூறுகிறார் ... 
ஓ மகரிஷி, மிக முக்கியமான, மனித குலம் உயர்வடைவதற்கு உண்டான   உயர்ந்த  கேள்வியினை நீங்கள் கேட்டுள்ளீர்கள். அதற்குறிய  உபாயத்தினை கூறுகிறேன் கவனமாகக் கேளுங்கள் என்று கூறி, தொடர்கிறார்...

மக மாதத்தில், (January /February), தூய எண்ணத்துடன்  பகவான் கிருஷ்ணரை ப்ரார்த்தனை செய்து நன்றாக குளித்த பின்னர், பூர்வ-ஆஷாட (பூராடம்) நட்சத்திரம் அன்று பசுஞ்சாணம் எடுத்து (பூமியில் விழுவதற்கு முன்) அதில் சிறிது எள் கலந்து, 108 உருண்டைகளாக பிடித்து பஞ்சு திரியும் இட்டு அதனை வைத்து ஏகாதசி அன்று முழுவதும் ஹோமம் போல ஆராதனை செய்து அவரது 108 பெயர்களை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும். 

விஷ்ணு அஷ்டோத்ர ஸத நாமாவளி தேவையெனில்  இங்கு கிளிக் செய்யவும்..

மேலும், மக மாத கிருஷ்ண பட்சத்தில் (தேய்பிறை) வரும் ஏகாதசி அன்று,
1.  காலையில்  எள் கலந்த நீரில் குளிக்க வேண்டும்.
2.குளிக்கும் பொழுது எள்ளை பசை போல அரைத்து சிறிது உடலின் மேலும் பூசிக்கொள்ள வேண்டும்.
3. எள்ளைப் பயன்படுத்தி ஹோமம் செய்ய வேண்டும். 
4. சிறிது எள் உண்ண வேண்டும்.
5. எள்ளை தானமாக கொடுக்க வேண்டும். 
6. எள் கலந்த நீரை முன்னோர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். 

புலஸ்ய முனிவர் மேலும் கூறுகையில், ஓ தல்ப்ய மகரிஷியே,
இந்த ஏகாதசியின் பெருமைகளை பற்றி ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், 
நாரத முனிவரிடம்  நேரடியாக கூறிய விஷயங்களை இப்பொழுது உமக்கு விவரிக்கிறேன் என்றார்...

முன்னர், பகவான் கிருஷ்ணரிடம் மிகுந்த பக்தி கொண்ட  ஒரு ப்ராம்மண பெண்மணி,  ஜன்மாஷ்டமி, ராம-நவமி, வாமன துவாதசி, நரசிம்ம சதுர்த்தசி   போன்ற எல்லா  நாட்களிலும் உபவாஸம் இருந்து அதனால் உடல் மெலிந்து இருப்பினும், விடாமல் தொடர்ந்து உபவாஸம் இருப்பதை தொடர்ந்து கடைபிடித்து வந்தார். மேலும், அந்தணர்களுக்கும், சிறிய பெண்களுக்கும்  பலவித தானங்களையும் செய்து வந்தார். ஆனால், ஏதோ காரணத்தால் அவர், யாருக்கும் உணவு அல்லது தானியங்களை தானம் அளிப்பதை விரும்ப வில்லை.  

இவ்வாறு இருவேறுபட்ட குணங்களையும் கொண்டிருந்த அந்தப்  பெண்மணியை பகவான் கிருஷ்ணர் சோதனை புரிய வேண்டி, ஒரு சிவனடியார் வேடத்தில் கழுத்தில் மண்டை ஓடுகள் கூடிய மாலையுடனும், கையில் ஒரு பிட்சை பாத்திரத்துடனும், யாசகம் வேண்டி அந்தப் பெண்மணியின் இல்லம் முன் நின்றார். அவரது உருவத்தைக் கண்டு வியந்த பெண்மணி, நீர் யார், உண்மையிலேயே உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டாள்? அவரோ, தங்களிடம் இருந்து புனிதமான உணவு பிட்சை வேண்டும் என்று கேட்டார். ஆனால், அந்தப்பெண்மணியோ அவரது பிச்சைப்பாத்திரத்தில் கோபத்துடன், சிறிது களிமண்ணை போட்டார். பகவானோ சிரித்துக்கொண்டே அதனையும் பெற்றுக்கொண்டு சென்று விட்டார்... 

அன்று இரவு, அந்தப்பெண்மணி கனவில், அவர் சொர்க்கலோகம் சென்றது போல் தோன்றியது. ஆனால்,  அங்கு ஒரு களிமண்ணால் கட்டப்பட்ட வீடு ஒன்று மட்டுமே அவருக்கு  கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தவிர வேறு எதுவுமே இல்லை. இதனைக்கண்ட அந்தப் பெண்மணி கோபத்துடன் பகவான் விஷ்ணுவை  சந்தித்து, நான் இவ்வளவு விரதங்கள் இருந்ததன் பயன் என்ன ? ஏன், எனக்கு எந்த ஒரு பயனும் கிடைக்கவில்லை ? எந்த ஒரு உணவுப்பொருளும் இல்லை, எந்த ஒரு ஆடை, அணிகலன்கள் எதுவுமே இல்லை என்று வினவினாள் ? பகவான் சிரித்துக்கொண்டே, உனது இல்லத்திற்கு விரைவில் தேவர்களின் துணைவியர்கள் வருவார்கள், அவர்களிடம் 'சத்திலா ஏகாதசி' விரத மகிமை பற்றி கூற சொல்லி கேள் என்று கூறி மறைகிறார். 

அதன் பின்பு ஒரு நாள், பகவான் கூறியது போலவே, தேவகன்னிகை, அந்தப்பெண்மணி இல்லத்திற்கு வந்து பகவான் கூறியபடி 'சத்திலா ஏகாதசி' மகிமையினை எடுத்துச்சொல்ல, (மேலே விவரித்த) அந்த ப்ராமணப் பெண்மணி தனது தவறை உணர்ந்தது மட்டும் அல்லாது 'சத்திலா ஏகாதசி' விரதத்தினையும் முழுமையாகக் கடைபிடித்து அந்தணர்களுக்கு 'திலா' (எள்) தானம் வழங்கி, அதன் மூலம் தான், இதுவரை விரதங்கள் பல இருந்தாலும் அன்னதானம் செய்யாமல் இருந்த பாவம் நீங்கி, இக வாழ்வில் துரதிர்ஷ்டம் மற்றும் வறுமை நீங்கி அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெற்று அதன் பின்னர் பர வாழ்வில் பகவான் விஷ்ணுவின் பரமபத வாசலை அடைந்தாள்...

புலஸ்ய முனிவர், இவ்வாறு பூலோகத்தில் ஒருவர், துரதிருஷ்டம் மற்றும் வறுமை நீங்கி வாழவும், பாவச்செயல்கள் செய்யாமல் நல்வழி செல்லவும் 'சத்-திலா ஏகாதசி' விரத மகிமையினை தல்ப்ய மகரிஷிக்கு எடுத்துக்கூறினார். 

இந்த 'சத்-திலா ஏகாதசி' நாளில், ஸ்ரீ ஹரியை வெற்றிலை,பாக்கு, கொய்யாப்பழம், மற்றும் பூசணி கொண்டு பூஜிப்பதன் மூலம் அவரது அருளுக்கு உரியவர்கள் ஆகிறோம். 

ஆகவே, வறுமை மற்றும் துரதிர்ஷ்டம் நீக்கும், நமது  பாவங்களை போக்கும் சிறப்புகள் கொண்ட இந்த 'சத்-திலா ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை: 


  • வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அருகில் உள்ள பெருமாள் கோவில் சென்று பெருமாளை ஸேவிக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அன்று வெற்றிலை, பாக்கு, கொய்யாப்பழம்மற்றும் பூசணி  கொண்டு பெருமாளை வழிபடலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள் எள் தானம் செய்யலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள் எப்படியெல்லாம் எள்ளை பயன்படுத்த வேண்டும் என்று மேலே கூறப்பட்டுள்ளதோ அதனை பின்பற்றலாம்.
  • வாய்ப்பு இருப்பவர்கள் பசுஞ்சாணம், எள் மற்றும் பஞ்சு திரி கொண்டு ஹோமம் செய்யலாம். 
  • இவை எல்லாவற்றையுமோ அல்லது முடிந்த ஏதேனும் ஒன்றையோ செய்யலாம். இதில் எதுவுமே முடியவில்லை என்றால், இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'ராஜஸூய யாகம்' செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.

No comments:

Post a Comment