Saturday, 16 January 2021

பெரும் புகழை கொடுக்கும் சபலா ஏகாதசி ...

சபலா ஏகாதசி / புஷ்ய க்ருஷ்ண ஏகாதசி...
நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட.... 
'புஷ்ய' மாதம், (பௌஷ்ய மாதம்- Paushya - December / January) தேய் பிறையில் (கிருஷ்ண பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "சபலா  ஏகாதசி" (Saphalaa Ekadasi) என்று   அழைக்கப் படுகின்றது.  

1. சபலா ஏகாதசி பற்றி 'பவிஷ்ய-உத்தர' புராண விளக்கம்: 

யுதிஷ்டிரர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம், புஷ்ய (பௌஷ்ய- Paushya) மாதத்தில் (December / January ) கிருஷ்ண பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசியின் பெருமைகளையும், அதனை கடைபிடிப்பது எப்படி மற்றும் அதன் பலன்களையும் கூறுங்கள் என்று வேண்டுகிறார்.

ஸ்ரீ கிருஷ்ணர், கூறுகிறார் ...
ஹே, யுதிஷ்டிர மஹராஜ், நான் முன்னர் கூறியபடி, என் மனதிற்கு ப்ரியமான 'ஏகாதசி' விரதம் அனைத்துமே சிறந்தவை தான்... கிருஷ்ண பட்சம் / சுக்ல பட்சம் என்று எனது பக்தர்கள் பிரித்து பார்க்க கூடாது... இருப்பினும் இந்த புஷ்ய மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி சிறப்பினை 
பற்றி விரிவாக கூறுகிறேன் கேள், என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவதை நாம் இங்கு விவரிக்கிறோம் ...

எப்படி, நாகங்களில் 'ஆதிசேஷன்' உயர்ந்ததோ, பறவைகளில் 'கருடன்' உயர்ந்ததோ, புண்ணிய நதிகளில் 'கங்கை' உயர்ந்ததோ, யாகங்களில் 'அஸ்வமேத யாகம்' உயர்ந்ததோ,  அதனைப் போலவே விரதங்களில் 'ஏகாதசி' உயர்ந்தது...

ஓ, பரத குலத் தோன்றலே , 
இந்த ஏகாதசி நாளில், ஸ்ரீ ஹரியை வெற்றிலை,பாக்கு, எலுமிச்சம்பழம், மாதுளம்பழம், மாம்பழம், கிராம்பு மற்றும்  பல நறுமண  மலர்கள் கொண்டு பூஜிப்பதன் மூலம் அவரது அருளுக்கு உரியவர்கள் ஆகிறோம். 
மற்றும் நறுமணம் கமழும் பத்திகளை ஏற்றி வழிபடுவதையும், நெய் விளக்கு ஏற்றுவதையும் மிகவும் முக்கியமான வழிபாடாக ஸ்ரீ கிருஷ்ணரே கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்...

முன்பொரு காலத்தில், 'சம்பாவதி' எனும் அழகிய நகரை, 'மஹிஷ்மதா' எனும் அரசன் ஆட்சி புரிந்து வந்தார்.   அவருக்கு நான்கு புதல்வர்கள். அவர்களில் முதல் புதல்வன் பெயர் 'லும்பகா'. மன்னரது முதல் வாரிசு என்ற காரணத்தாலும் அவனது பூர்வ ஜென்ம கர்மா காரணமாகவும், மற்ற புதல்வர்களைப்போல் அல்லாமல், மிகுந்த துஷ்டனாக விளங்கினான்.  எந்த நேரமும் மது மற்றும் மாது என்று சுற்றி திரியலானான். தாசிகளின் வீடே கதியென்று இருந்தான்..  தான் ஒரு இளவரசர்  என்ற மமதையில் நகரில் உள்ள மக்களை அடித்து துன்புறுத்தி அவர்களை மிகுந்த அல்லலுக்கு உள்ளாக்கினான். இவனது கொடுமைகளை  மக்களும் வேறு வழியின்றி சகித்து வந்தனர். 

ஆனால், லும்பகனது செயல் ஒரு கட்டத்தில் எல்லை மீறவே, மன்னர், அவனது நடத்தைக்காக மிகுந்த மனவேதனை கொண்டு  தனது மகன் என்றும் பாராமல் அவனை நாடு கடத்தினார். ஆம் அருகில் உள்ள ஒரு காட்டிற்கு கொண்டு சென்று விட்டு விட தனது சேனைகளுக்கு உத்தரவிட்டார். அவ்வாறே நடந்தது. 

லும்பகன் வேறு வழியின்றி காட்டில் உள்ள விலங்குகளை பிடித்து வேட்டையாடி உண்டும் சில நேரங்களில் கிடைத்த கனிகளை உண்டும் வந்தான்.  ஆனாலும், அவன் இரவு நேரங்களில் மீண்டும் நகருக்குள் வந்து மக்களிடம் திருடுவதையும் தனியாக இருக்கும் நபர்களை துன்புறுத்துவதையும் தனது வாடிக்கையாக்கி கொண்டான்... ஒரு சில நேரங்களில் மக்களிடம் பிடிபடவும் செய்தான் . ஆனால், மக்களோ, மன்னர் மேல் உள்ள நன்மதிப்பில் லும்பகனை ஒன்றும் செய்யாமல் திருப்பி அனுப்பி விட்டு விடுவார்கள்...

இவ்வாறு இருந்த வேளையில், ஒரு நாள் காட்டில் அவன் வெகு தொலைவு நடந்து வந்து உடல் களைப்பால் ஒரு 'ஆல' மரத்தின்  (பகவான் விஷ்ணுவிற்கு ப்ரியமான விருட்சம்) அடியில் அமர்ந்தான். அன்று அவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் சளித்தொல்லை வேறு மிகுந்திருந்தது.  எனவே வேறு வழியில்லாமல் அவன் இருந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள மரத்தில் இருந்த கனிகளை மட்டும் பறித்து புசித்து விட்டு மீண்டும் ஆல மரத்தடியில் வந்து அமர்ந்து விட்டான். அன்று வேறு எங்கும் செல்லவும் முடியவில்லை. ஆல மரத்தடியிலேயே உறங்கிவிட்டான். (அது ஒரு தசமி திதி, அதாவது ஏகாதசிக்கு முதல் நாள்) 

அடுத்த நாள்,  அவனால் எழுந்து அமர்ந்திருக்க மட்டுமே முடிந்ததே தவிர, நடக்க இயல வில்லை.  அவனும் வேறு வழியின்றி அன்றைய பகல் பொழுதை எந்த உணவும் இன்றி கழிக்க வேண்டி வந்தது. (ஏகாதசி தினம் அன்று). மாலையில் சிறிது முயற்சி செய்து எழுந்து அருகில் உள்ள மரங்களில் கனிகளை பறித்து உண்பதற்காக,  தான் அமர்ந்திருந்த  'ஆல' மரத்தினடியில்  கொண்டு வந்து வைத்த பொழுது அவன் மனதிற்கு அவனது தந்தையும் அவர் கூறிய சொற்களும் நினைவுக்கு வருகின்றன. (மன்னர் 'மஹிஷ்மதா' மிகுந்த மன விரக்தியில் கூறிய வார்த்தைகள்.... 'ஸ்ரீ ஹரி தான் இனி உன்னை காப்பாற்ற வேண்டும்'..)

(சிறப்பான அரண்மனை வாழ்வை விடுத்து, எளிய மக்களை துன்புறுத்தி, தற்பொழுது தன்னை இந்த உடல்நலமில்லாத நிலையில் கவனிக்க ஒருவரும் இல்லாத நிலை வரை அனைத்தும் அவனது மனதில் ஓடுகிறது...)

அவனையும் அறியாமல், தான் பறித்த பழங்களை  ஆல மரத்தடியில் வைத்து, ஓ, ஸ்ரீ ஹரி, என்னை, நான் செய்த பாவங்களில் இருந்து விடுவிக்க மாட்டாயா ?  என்று கண்ணீர் மல்க வேண்டினான். மேலும், அவன் அந்த பழங்களை உண்ணவும் இல்லை, அவனால் உறங்கவும் முடியவில்லை. (ஏகாதசி இரவு முழுவதும் உறங்காமல் இருக்கிறான்)

அடுத்த நாள் காலையில் சூரிய உதயத்திற்கு பிறகு, 'லும்பகன்' அருகில் ஒரு அழகிய குதிரை மட்டும் வந்து அவனை நோக்கியும், அவனுக்காக காத்து நிற்பது போலவும் நிற்கிறது. இந்த கானகத்தில் இப்படி ஒரு அழகிய குதிரையா என்று அவன் வியப்புடன் பார்க்கும் நேரத்தில், வானத்தில் இருந்து ஒரு அசரீரி கேட்கிறது. 

ஓ, மஹிஷ்மதா, புதல்வனே, 
நேற்று நீ இருந்த 'சபலா ஏகாதசி' விரதத்தின் பலனை உனக்கு அளித்தோம். இன்று முதல், நீ நல் ஒழுக்கத்துடன், நல் அறிவையும் பெற்று உனது தந்தைக்கு பிறகு ஆட்சி புரியும் வல்லமையும் பெறுகிறாய். உனது பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் தீர்ந்தது, நீ உனது நகருக்கு செல்லலாம் என்று கேட்கிறது...

லும்பகன் முன் எப்பொழுதும் இல்லாத அளவு மிகுந்த முகப்பொலிவுடன் தனது நகருக்கு சென்று, தந்தையை மிகவும் மரியாதையுடன் வணங்கி அவரிடம் நடந்த விஷயங்களை எடுத்துக் கூறினான். மேலும், தனது நடத்தையின் மூலம் நாட்டு மக்களுக்கும் தனது அறிவு தெளிவானதை புரிய வைத்தான்... இதன் காரணமாக மன்னர் 'மஹிஷ்மதா' தனது இராஜ்யத்தை மனமகிழ்வோடு தனது புதல்வன் 'லும்பகனிடம்' ஒப்படைத்தார்...

லும்பகனும், பெரும் புகழோடு பல ஆண்டுகள் நல்லாட்சி புரிந்து அதன் பின்பு நேரடியாக விஷ்ணுவின் பாதார கமலங்களை அடைந்தான்.

இவ்வாறு, 'சபலா ஏகாதசி' பெருமைகளை பற்றி 'யுதிஷ்டிரனிடம்' கூறிய ஸ்ரீ கிருஷ்ணர், 
ஓ, யுதிஷ்டிரா, லும்பகன் அவனுக்கு தெரியாமலேயே, இந்த 'சபலா ஏகாதசி' விரதம் கடைபிடித்திருப்பினும், அவன் மனமுருகி வேண்டி எனக்கு அளித்த கனிகளை நான் ஏற்றுக்கொண்டேன். அவனுக்கு  முக்தியை அளித்தேன். இந்த விரதத்தை கடைபிடிப்பவர்கள் பெரும் புகழை அடைவார்கள். மேலும் இந்த விரத மகிமையை மற்றவருக்கு எடுத்து சொல்பவர்கள் ஒரு 'ராஜஸூய யாகம்' செய்த பலனை பெறுகிறார்கள் என்று கூறி அருளினார் ஸ்ரீ கிருஷ்ணர்...

ஆகவே, பெரும் புகழை அளிக்கும், நமது பூர்வ ஜென்ம பாவங்களை போக்கும் சிறப்புகள் கொண்ட இந்த 'சபலா ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை: 

  • வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அருகில் உள்ள பெருமாள் கோவில் சென்று பெருமாளை ஸேவிக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அன்று வெற்றிலை,பாக்கு, எலுமிச்சம்பழம் (அ) மாதுளம்பழம் வாங்கி பெருமாள் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விட்டு வரலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள் நறுமணம் கமழும் பத்தி மற்றும் சுத்தமான நெய் வாங்கி பெருமாள் கோவிலுக்கு கொடுக்கலாம். 
  • இவை எல்லாவற்றையுமோ அல்லது முடிந்த ஏதேனும் ஒன்றையோ செய்யலாம். இதில் எதுவுமே முடியவில்லை என்றால், இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'ராஜஸூய யாகம்' செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.  

No comments:

Post a Comment