Saturday 16 January 2021

கிருஷ்ணன் எப்பொழுதும் மயிலிறகுடன் காட்சியளிக்கக் காரணம் என்ன ?

கிருஷ்ணன், அவன் நேரான ஆள் அல்ல. சற்றே முரட்டுத்தனம் கொண்டவன். நிற்கும் போது கூட நேராக நில்லாமல் ஒரு காலை மடித்து வைத்தே நின்று காட்சியளிப்பான். எதைச் செய்தாலும் தனக்கென ஒரு தனி பாணி வகுத்துக்கொண்டு அதன்படியே நின்றான், நடந்தான், வாழ்ந்தான்.
கிருஷ்ணன் காலை மடித்து நின்று ஒயிலாகக் காட்சியளித்தது மட்டுமல்ல, தனது கிரீடத்தில் மயிலிறகு இன்றியும் ஒரு நாளும் காட்சியளித்ததில்லை.

ஏன் அவ்வாறெல்லாம் செய்தான் அவன் ?
மயில் வர்ணனைக்கு அப்பாற்பட்டதோர் அழகான பறவை. அது தோகை விரித்தாடுவதைப் பார்த்திருக்கிறீர்களா?
உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு பாரதத்தில் மயில்கள் அதிகம். விருந்தாவனத்திலும் ஏராளமான மயில்கள் இருந்தன. தோகை அதிகம் கொண்ட ஆண் மயில்கள் ஆண்டு முழுவதும் இறகுகளை உதிர்க்கும். மயிலிறகுகளுக்காக அவற்றைக் கொல்ல வேண்டியதில்லை. தரையிலிருந்தே பொறுக்கிக் கொள்ளலாம்.
மயிலிறகு எவ்வளவு அழகானதென்பது பார்த்தாலே தெரியும். மயிலின் நிறமென்பது எவராலும் எளிதில் உருவாக்க இயலாத இயற்கையின் உன்னதப் படைப்பு. அழகுக்கு அர்த்தம் அளிக்கும் மயிலிறகு எப்போதுமே போற்றத்தக்க விஷயம். கிருஷ்ணனுக்கோ மயிலிறகுகள் மீது அப்படி ஒரு பித்து.
அவன் அலங்காரப் பிரியன். அவனும், பலராமனும் பட்டு வேட்டியைப் பஞ்சகச்சமாகக் கட்டிக் கொள்வார்கள். பலராமன் எப்போதும் கிருஷ்ணனின் உடல் நிறமான நீலவண்ணப்பட்டு வேஷ்டியையே கட்டிக்கொள்வான்.
கிருஷ்ணனோ பலராமனின் உடல் நிறத்தில் இருக்கும் பட்டுப் பீதாம்பரத்தை அணிந்து கொள்வான். அவனது பீதாம்பரத்தின் மடிப்பு ஒவ்வொன்றும் அவ்வளவு நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கும்.
அவனுக்குத் தலையில் அலங்காரமாகச் சூட்டிக்கொள்வதற்கென ஒரு கிரீடம் வழங்கப்பட்டிருந்தது. அதில் அவன் மயிலிறகுகளைச் செருகிக் கொள்வான். மயிலிறகு இன்றி வெளியே சென்றதே இல்லை.

குழந்தைப் பருவத்தில் கூட நேர்த்தியான தோற்றத்துடன் தன்னைக் காட்டிக் கொள்வதில் விருப்பமுள்ளவனாக இருந்தான்.
மனதிலும், செய்யும் செயல்களிலும், அணியும் ஆடைகளிலும் வெளிப்படுத்தும் உணர்வுகளிலும் எப்போதும் உன்னதமானவாகவே இருக்க விரும்பினான்.
அவன் ஒரு நாளும் சோர்வாகவோ, வாட்டமாகவோ காட்சியளித்து மக்கள் பார்த்ததேயில்லை. சில சமயங்களில் அவனும் வாட்டமாக இருந்தான். ஆனால் அந்தத் தருணங்களில் அவன் மற்றவர் பார்வையில் படுவதைத் தவிர்த்தான்.
உடலில் ஏற்பட்ட தொய்வு என்றாலும் சரி, மனதில் ஏற்பட்ட வாட்டமாயினும் சரி, உணர்வுகளில் நேர்ந்த சரிவாயினும் சரி, எதையும் வெளிக்காட்டாமல் தன்னை உன்னதமாகவே ஒவ்வொரு பொழுதிலும் வெளிப்படுத்திக் கொண்டான்.
நீங்கள் வாழ்க்கையை உண்மையிலேயே நேசித்தால் உங்களை எப்போதும் உன்னதமாக வெளிப்படுத்திக் கொள்வதில் கவனமாக இருப்பீர்கள்.
ஆனால் மக்களோ நேசமுடன் இருப்பது என்றால் அழுது வடிவது என்று அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அன்பாக இருக்க வேண்டுமென்றால் ஆனந்தமாக இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஒருவரை நேசிக்கிறீர்கள் என்றால் அவர்களிடம் உங்களை வசீகரமாகப் பளிச்சென்றுதானே வெளிப்படுத்திக் கொள்ளவேண்டும்.?
மக்களால் நீண்ட நேரம் மகிழ்ச்சியைத் தாங்க முடிவதில்லை. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். வாழ்க்கையை நேசிக்கிறீர்கள் என்றால், வாழ்க்கையின் மீது உண்மையிலேயே அக்கறை இருக்கிறது என்றால் நீங்கள் எப்போதும் கொண்டாட்டமாகத்தான் இருக்கவேண்டும்.

நீங்கள் வாட்டமான முகத்துடன் காட்சியளித்தீர்கள் என்றால் வாழ்க்கையின் மீது அக்கறையே இல்லை என்று பொருள்.

அடுத்த வினாடியே உங்களை மரணம் தழுவப்போகிறது என்ற நிலை ஏற்பட்டால் கூட நீங்கள் ஆனந்தமாக விடை பெறவேண்டும். அதுதான் நேசம். அதைத்தான் கிருஷ்ணன் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் வெளிப்படுத்தினான். காலை மடித்து நின்று ஒயிலாகக் காட்சி தந்தான். தலைக்கிரீடத்தில் மயிலிறகு சூட்டிக் கொண்டான்

No comments:

Post a Comment