Saturday 16 January 2021

புத்ர பாக்யம் அருளும் 'புத்ரதா ஏகாதசி' விரத மகிமை...

புத்ரதா ஏகாதசி பற்றி 'பவிஷ்ய புராண' விளக்கம்: 

யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக்   கேட்கிறார்; பரம்பொருளே, மதுஸூதனா,  ஸ்ரவன  மாதத்தில், சுக்ல பட்சத்தில்  வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம்... பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளைக் கூறுங்கள் என்று, யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார். 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கூறுகையில், ஓ யுதிஷ்டிரா, என் மனதிற்கு ப்ரியமான இந்த ஏகாதசி மகிமை பற்றி உங்கள் ஐவருக்கும் சொல்கிறேன் கேளுங்கள் என்று கூறி தொடர்கிறார்...

ஸ்ரீ கிருஷ்ணர், யுதிர்ஷ்டிர மஹாராஜாவிற்கு எடுத்துரைத்த விளக்கங்களை நாம் இங்கே நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக  தொகுத்துள்ளோம் ...

முன்னர் துவாபர யுகத்தில், 'மஹிஷ்மதி புரி' என்ற நகரை 'மஹிஜிதா' என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது, ராஜ்யத்தை சிறப்பான முறையில் ஆண்டு வந்திருப்பினும், மன்னருக்கு புத்ர பாக்யம் இல்லை என்பது ஒரு மிகப்பெரும் குறையாக இருந்தது. 

இதனால், தனது அரண்மனை மந்திரி பிரதானிகளுடனும், அந்தணர்களுடனும் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார் மன்னர். அப்பொழுது அவர் பேசுகையில், நான் இந்த ஜென்மத்தில் எனக்குத் தெரிந்து யாருக்கும் எந்த ஒரு கெடுதலும் செய்யவில்லை, எனது அரண்மனை கஜானாவில் யாரையும் கட்டாயப்படுத்தி சேர்த்த பொருள்கள் இல்லை, அந்தணர்களை அவமதித்தோ அல்லது அவர்களை மிரட்டியோ சேர்த்த பொருள்கள் எதுவும் இல்லை. மேலும், ஷத்ரிய தர்மப்படி மட்டுமே போர்கள் புரிந்து வந்துள்ளேன், அதிலும், வேற்று தேச மன்னர்கள் நம் தேசத்தின்  மீது படையெடுத்து வந்தால் மட்டுமே போர் புரிந்துள்ளேன். அதிலும் அவர்கள், சரண் அடைந்துவிட்டால், அவர்களை தண்டிக்காது மன்னித்து விட்டு விடுகிறேன். 

இவ்வாறு, அனைத்து விதங்களிலும் நான் எந்த ஒரு பாவமும் செய்யாது இருக்கும் பொழுது எனக்கு புத்ர பாக்யம் இல்லாமல் போகக் காரணம் என்ன ? இதற்கு விடை கண்டுபிடித்து அதற்குரிய பிராயச்சித்தம் என்ன என்பதையும் நீங்கள் அனைவரும் கண்டறிந்து சொல்லுங்கள் என்று ஒரு வேண்டுகோளை வைத்தார் மன்னர்.

அவையில் இருந்த அனைவரும் மன்னரின் கருத்தை ஆமோதித்து, அதற்கான விடையுடன் விரைவில் மன்னரை சந்திப்பதாக வாக்களித்து விட்டு அவர்களுக்குள்ளாக ஆலோசனைகளை தொடங்கினர். அப்பொழுது அந்தணர்களில் ஒருவர், மன்னர் கூறியது முற்றிலும் சரியே, மன்னர் நம் ராஜ்யத்தில் உள்ள   எல்லாருக்குமே, எப்பொழுதுமே நன்மைகளை மட்டுமே செய்து  வருகின்றார், ஆகவே இது கடந்த ஜென்ம வினைப்பயனின் காரணமாகவே இருக்க வேண்டும், எனவே, நாம் முனிவர் ஒருவரின் ஆலோசனை பெறுவது நன்று என்று  கூறினார். அவையில் இருந்த மற்ற அனைவரும் அந்த கருத்தில் உடன்பட்டு, நகருக்கு வெளியில் இருக்கும் முனிவர்கள் வசிக்கக்கூடிய வனத்திற்கு சென்றனர்.

அங்கு, பல கல்ப காலங்கள் வாழக்கூடிய "லோமச மகரிஷி" ஆஸ்ரமத்தினை அடைந்தனர். அங்கு தேஜஸ்வரூபியாக இருந்த முனிவரைக் கண்டு, மந்திரி பிரதானிகள் மற்றும் அந்தணர்கள் அனைவரும் நமஸ்கரித்து தங்களது பணிவான மரியாதையை வெளிப்படுத்தினர். 

மகரிஷியும், அவர்கள் அனைவரையும் ஆசிர்வதித்து  விட்டு, அவர்கள் வந்த நோக்கத்தினை கேட்கிறார். அவர்களும், தாங்கள் வந்த நோக்கத்தினை பணிவாக எடுத்துரைக்கின்றனர். மகரிஷி அவர்களே, எங்களது மன்னரின் பணிவான வணக்கத்தினை, மன்னர் சார்பாக தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.  அதனோடு அவரது பணிவான வேண்டுகோளையும் தெரிவிக்கின்றோம். 

இந்தப் பிறவியில், பிரஜைகள் அனைவருக்கும்  எந்தவிதப் பாகுபாடுமின்றி நல்ல விஷயங்களை  மட்டுமே செய்து வரும்  எமது மன்னர் புத்ர பாக்யம் இன்றி இருக்க காரணம் என்ன ? மேலும், அதற்குரிய பிராயச்சித்தம் என்ன என்பதையும் கூறி அருள வேண்டும் என்று கேட்கின்றனர்.  

லோமச மகரிஷி கூறிய பிராயச்சித்தம் என்ன ?

மகரிஷியும், இவர்களது வேண்டுகோளை ஏற்று, தனது ஞான திருஷ்டி மூலம், மன்னரின் வாழ்வில் நடந்த பூர்வ ஜென்ம  நிகழ்வை  அறிகிறார். 

பின்னர், மந்திரி பிரதானிகளிடம் இவ்வாறு கூறுகிறார்; தற்பொழுது உங்களது மன்னராக இருக்கக்கூடிய 'மஹிஜிதா' பூர்வ ஜென்மத்தில் ஒரு வியாபாரியாக இருந்திருக்கிறார். பல்வேறு நகருக்கு சென்று வந்திருக்கிறார். அப்பொழுது, ஜேஷ்ட மாதத்தில் வரக்கூடிய ஒரு ஏகாதசி முடிந்த மறுநாள் துவாதசி அன்று, பகல் வேளையில் தாகம் ஏற்பட்டு ஒரு குளத்தில் நீர் அருந்த சென்றுள்ளார். அப்பொழுது, அந்தப் பொழுதில் தான் கன்று ஈண்ட ஒரு பசு ஒன்றும் கடும் வெப்பம் காரணமாக தாகம் எடுத்து அந்த குளத்தில் நீர் அருந்த வந்துள்ளது. 

ஆனால், தான் நீர் அருந்த வேண்டும் என்ற காரணத்தால், அந்த வியாபாரி அந்தப்  பசுவினை,  நீர் அருந்த விடாமல் செய்து குளத்தின் கரையில் இருந்து விரட்டி விட்டுள்ளார். அந்தப் பசுவின் 'தாக தோஷமே', அப்பொழுது வியாபாரியாய் இருந்து தற்பொழுது இந்த ஜென்மாவில் மன்னராக இருக்கும் 'மஹிஜிதா'விற்கு  புத்ர பாக்யம் இல்லாமல் உள்ளது என்று கூறினார் மகரிஷி. 

இதனைக் கேட்ட மந்திரி பிரதானிகள் மகரிஷியிடம், மகரிஷி அவர்களே, இதற்கு இந்த ஜென்மாவில் செய்யக்கூடிய பிராயச்சித்தம் என்ன என்பதையும் தாங்களே கண்டறிந்து கூற வேண்டும் என்று  பணிவுடன் வேண்டி நின்றனர். 

லோமச மகரிஷியும், மீண்டும் தனது ஞான திருஷ்டி மூலம் ஒரு நிமிடம் யோசித்து விட்டு பின்னர்  அதற்குரிய உபாயமாக இவ்வாறு கூறுகிறார்;  ஸ்ரவன மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசி அன்று மன்னர், மகாராணி மட்டுமல்லாது மந்திரி பிரதானிகள் மற்றும் நகரில் இருக்கும் பிரஜைகள் அனைவரும் ஏகாதசி விரதம் இருந்து, மறுநாள் துவாதசி அன்று அனைவரும் அவரவர் விரதம் இருந்த புண்ய பலனை மன்னருக்கு தாரை வார்த்துக் (தானம்) கொடுப்பதன் மூலம், மன்னர் அழகான ஒரு ஆண் குழந்தைக்கு தகப்பன் ஆவார் என்று கூறி ஆசி வழங்கினார். 

இதனைக்கேட்டு மிக்க மகிழ்வுற்ற மந்திரி பிரதானிகள் மற்றும் அந்தணர்கள் அனைவரும் மகரிஷிக்கு மிகுந்த நன்றியினை தெரிவித்து, மீண்டும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து 'மஹிஷ்மதி புரி' நகருக்கு திரும்பினர். 

பின்னர் நடந்த விவரங்களை எல்லாம் மன்னரிடம் தெரிவித்து, மன்னர், மகாராணி மட்டுமல்லாது பிரஜைகள் அனைவரும் 'ஸ்ரவன மாத சுக்ல பட்ச ஏகாதசி' விரதம் இருந்து, பின்னர் துவாதசி அன்று அதன் பலனை மன்னருக்கு ஒவ்வொருவரும் அளித்து, அதன் பயனாக மகரிஷி கூறியது போலவே மகாராணியும் அழகான ஒரு ஆண் குழந்தையைப் பெற்று மிகுந்த சௌபாக்யத்தோடு வாழ்வை மேற்கொண்டு பகவான் விஷ்ணுவின் நாமத்தை வாழ்நாள் முழுவதும் கூறி இக வாழ்வில் அனைத்து நலன்களும் பெற்று பர வாழ்வில் முக்தியை அடைந்தனர்.

இதனை, பாண்டவர்களிடம் எடுத்துக்கூறிய பகவான்   ஸ்ரீ கிருஷ்ணர், மேலும் கூறுகையில், ஹே யுதிர்ஷ்டிரா, நம்பிக்கையுடன், இந்த புத்ரதா ஏகாதசி விரதத்தை  கடைபிடிப்பவர்களது, அனைத்து பாவங்களும் நீங்கி, அவர்கள்  புண்ணியம் பெறுவார்கள், அவர்கள் மறு பிறவியின்றி முக்தி அடைவார்கள் என்று கூறி அருளினார். 

இவ்வாறு "புத்ரதா ஏகாதசி" விரத மகிமை பற்றி "பவிஷ்ய  புராணம்" விளக்குகின்றது.

ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும்  'புத்ரதா ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை: 

  • வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது  இரு வேளைகளோ இருக்கலாம்.) 
  • வாய்ப்பு இருப்பவர்கள் பழங்கள், பழச்சாறு மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அவரவர் இல்லங்களிலேயே பெருமாள் படத்திற்கு முன்பாக நெய் விளக்கேற்றி, துளசி சாற்றி வழிபடலாம். 
  • (இப்போது சீன வைரஸ் காரணமாக) இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'கோ' தானம்  செய்த புண்ணியம் பெறுகிறார்கள். 

No comments:

Post a Comment