Saturday, 16 January 2021

வேண்டியதை அருளும் வைக்கத்தஷ்டமி (பார்கவ புராண விளக்கம்)...

வைக்கத்தஷ்டமி என்று பெயர் வரக்காரணம் என்ன ?


உப புராணங்களில் ஒன்றான 'பார்கவ புராணத்தில்' கூறியுள்ள சாஸ்திர விளக்கம் இதோ:

த்ரேதா யுக காலத்தில், 'வியாக்ரபாத முனிவரின்' தவத்தில் மகிழ்ந்து சிவபெருமானும், பார்வதி தேவியும் காட்சி கொடுத்த நாள் ஒரு கார்த்திகை மாத கிருஷ்ண பட்ச அஷ்டமி (தேய்பிறை அஷ்டமி) அன்று காலை ஆகும்.  (யோகக்கலையின் தந்தை / பதஞ்சலி முனிவர் / புலிக்கால் முனிவர் என்பது இவரது மற்ற பெயர்கள் ஆகும்). 

மேலும்,
அந்த நாளில் அங்கு வந்து தரிசனம் செய்யும் அனைவரது வேண்டுதலையும் நிறைவேற்ற வேண்டும் என்று வியாக்ர பாதர் சிவபெருமானிடம் வேண்டி அந்த வரத்தையும் ஈசனிடம் இருந்து  பெற்றார். 

ஈசனின் இந்த அற்புதமான தரிசன காட்சி நடைபெற்றது  இந்தியாவில், கேரளா மாநிலத்தில், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கோம் என்ற இடத்தில் தான். (Vaikom, Kerala) தமிழில் 'வைக்கம்' என்று அழைக்கப்படுகிறது. முந்தைய கால கட்டத்தில், இந்த காரணத்தினாலேயே இந்த இடம் ''வியாக்கிர பாத புரம்' என்றும் 'வியாக்கிர புரம்'  என்றும் பின்னர் காலப்போக்கில் மருவி வியாக்கரோம்,  'வைக்கோம்'  என்றாகியது. 

மூலவர் திருமேனி விளக்கம் மற்றும் ஸ்தல புராணம் : 
{மஹாதேவர் / வைக்கத்தப்பன் / வியாக்ர பாதீஸ்வரர் }
த்ரேதா யுக காலத்தில், கரண் என்ற அசுரன், தான் அரக்க குலத்தில் தோன்றியிருப்பினும் சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவனாகவும்,  முக்தி பெறவும் வேண்டி அவரை நோக்கி வரம் பெறுவதற்காக கடும் தவம் புரிந்தான். உண்மையான பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான் அவன் முன் தோன்றி அவனுக்கு மூன்று சிவலிங்கங்களை கொடுத்து 'இந்த மூன்று லிங்கங்களையும்' மூன்று வெவ்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபடுவதன் மூலம் முக்தி அடையலாம் என்று கூறி மறைந்தார். கரண், தனது வலக்கையில் ஒன்றும், இடக்கையில் ஒன்றும் தனது வாயில் ஒரு லிங்கத்தையும் எடுத்து கொண்டு சென்றான். 

(இங்கு ஒரு விஷயம் பதிவு செய்ய நினைக்கின்றோம்...)
என்னது, வாயில் ஒரு லிங்கமா ? இது ஆச்சாரக்குறைவு அல்லவா ? சிவலிங்கத்தை எச்சில் செய்யலாமா ? என்று நம்மில் ஒரு சிலருக்கு வரும் சந்தேகம் போலவே இந்த சிறியவனுக்கும் சந்தேகம் தோன்றிய அடுத்த நொடியே மனதில் தோன்றிய பதில் இது தான்... வேடுவர் குல கண்ணப்பன் சிவபெருமானின் கண்ணிலேயே தனது காலை வைத்து மிதித்து ஈசனுக்கே கண் தானம் செய்ய முயன்று முக்தி பெற்ற கதையும் மற்றும் இராமாயணத்தில் மலை ஜாதி பெண்மணியாகிய 'சபரி' என்கிற பாட்டி தான் புசித்த கனிகளை பகவான் ராமனுக்கு பயபக்தியுடன் கொடுக்க, லட்சுமணன் தடுத்த பொழுதும் ராமபிரான் பக்திக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதனை உண்டு சபரிக்கு மோட்ஷம் அளித்த கதையும் தான் நினைவுக்கு வந்தது.. 

இதில் மிக முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் முழு சரணாகதி அடைந்த பக்தி மட்டுமே முக்கியம், இதனை தவறாக புரிந்து கொண்டு நாமும் பகவானது பொருள்களை எச்சில் படுத்தவோ, அவரது திருமேனிகளை தவறாக கையாள்வதற்கோ அல்ல... பகவானுக்காக உண்மையிலேயே தனது உயிரைக்கூட  விட தயாராக இருக்கும் அதி சிறந்த பக்தர்களின் கதை இது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் .. 


சரி மீண்டும் 'வைக்கம்' ஸ்தல புராணத்திற்கு வருவோம்...

சிவபக்தன் கரண், மூன்று லிங்கங்களுடன் வரும் வழியில், அவனது வலது கையில் இருந்த சிவலிங்கத்தை 'வியாக்ர பாதர்' பெற்று இந்த 'வைக்கம்' (Vaikom) ஸ்தலத்தில் பிரதிஷ்டை செய்தார்...

எட்டுமனூர் (Ettumanoor) என்ற ஸ்தலத்தில் கரண், தனது இடது கையில் இருந்த சிவ லிங்கத்தை மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்தான். 



கடுத்துருத்தி (Kaduthuruthy) என்ற ஸ்தலத்தில் கரண், தனது வாய் மூலம் கொண்டு வந்த சிவ லிங்கத்தை கிழக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தான்.  
(வாயில் வைத்து கடித்து துருத்தி வந்ததால் கடிச்சு துருத்தி என்று பெயர் பெற்று பின்னர், மருவி கடுத்துருத்தி ஆயிற்று.)



இந்த மூன்று சிவலிங்கங்களுக்குமே "மஹா தேவர்' என்றே திருநாமம் இருப்பினும், வைக்கம் ஸ்தலத்தில் 'வைக்கத்தப்பன்' என்றே அந்த பகுதி மக்களால் பரவலாக அழைக்கப்படுகிறார்.  வியாக்ரபாதர்  பிரதிஷ்டை செய்ததால் 'வியாக்ர பாதீஸ்வரர்' என்றும் பெயர் உள்ளது. 

வைக்கம் ஸ்தலத்தின் மற்ற சிறப்புகள் / புராண விளக்கங்கள் 
முருகப்பெருமான், அரக்கர்களாகிய சூர பத்மனையும், தாரகாசுரனையும் போரில் வதம் செய்து வெற்றி பெறுவதற்கு சிவபெருமானே இந்த ஸ்தலத்தில் அன்னதானம் செய்ததாக ஸ்தல புராணம் கூறுகின்றது. ஆகவே தான், இங்கு அன்னதானம் செய்வது மிக பிரசித்தி பெற்றது. 

மற்றும், பரசுராமர் ஒருமுறை வான்வழி பயணம் புரிகையில், இந்த வைக்கம் ஸ்தலத்தின் அதிர்வலைகள் அவரை இழுக்கவே இங்கு வந்து சிவலிங்க பூஜையை செய்தார். மேலும், வியாக்ரபாதர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தின் அடியில் பீடம் ஒன்றை நிறுவி பல ஆண்டுகள் பூஜை செய்த பின்னர் ஒரு அந்தணருக்கு சிவ ஆகம விதிகளை விளக்கி தொடர்ந்து அந்த ஸ்தலத்தில் பூஜை செய்யுமாறு கூறிவிட்டு அவர் அங்கிருந்து மறைந்து விட்டார். (அவரது வழித்தோன்றல்களே இன்றும் பூஜை செய்கின்றனர்)

மலையாள நாட்காட்டி படி விருச்சிக மாதம் (தமிழில் கார்த்திகை மாதம்) தேய்பிறை அஷ்டமி அன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை சூரிய பகவான் வைக்கத்தப்பன் மீது நேரடியாக தனது ஒளிக்கதிர்களை பரவச்செய்து தானும் தரிசனம் செய்வதாக ஐதீகம். 

வியாக்ரபாதருக்கு தரிசனம் கொடுத்ததை நினைவு படுத்தும் விதமாக ஆலமரத்தோடு கூடிய 'வியாக்ர பாதர்' மேடை ஒன்று இன்றும் வைக்கம் மஹாதேவர் கோவிலில் உள்ளது. 

வைக்கத்தில் இந்த அஷ்டமி அன்று அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறும். அன்று ஈசன், பார்வதிதேவியுடன் தானும் அமர்ந்து அந்த அன்னதானத்தில் பங்கு பெறுவதாகவும் அதனால் நமது அனைத்து பிரார்த்தனைகளையும் உடனே செவிமடுப்பார் என்றும் ஐதீகம் உள்ளது. 

மேலும், உச்சிக்கால பூஜைக்கு முன்பாக, இந்த மூன்று கோவில்களிலும் (வரிசையாக) தரிசனம் முடிப்பவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பது இங்கு வழி, வழியாக அதனை உணர்ந்தவர்களின் வேத வாக்கு. 

இதுவே 'வைக்கத்தஷ்டமி' புராண விளக்கம் ஆகும், இதனையே அனைத்து சிவாலயங்களிலும் பின்பற்றுகிறார்கள்.  இந்த விளக்கங்கள் பலவும், உப புராணங்களில் ஒன்றான 'பார்கவ புராணத்தில்' கூறப்பட்டுள்ளது. 17ம் நூற்றாண்டில் மலையாள மொழியில், எழுதப்பட்டுள்ள ஓலை சுவடிகள் தற்பொழுது லண்டனில் உள்ள பிரிட்டிஷ்  நூலகத்தில் (London British Library)  இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு ...

No comments:

Post a Comment