Saturday, 16 January 2021

ஐப்பசி பௌர்ணமி-அன்ன அபிஷேகம் சிறப்புகள்

ஏன் 'ஐப்பசி பௌர்ணமி' யில் அன்ன அபிஷேகம் ?
(ஐப்பசி பௌர்ணமி 31-10-2020  சனிக்கிழமை)



புராண கதைகளின் படி, சந்திரன் தனது சாபம் நீங்கப்பெற்று சிவபெருமான் மூலம் மீண்டும் முழு பொலிவும்  கிடைக்கப்பெற்றது இது போன்ற ஒரு ஐப்பசி மாத பௌர்ணமி அன்று தான். 

சிவபெருமான் தனது தலையில் சந்திரனை சூடி கொண்டதால் தான், பிறை சூடன், சந்திரசேகரன் என்று நாம் அவரை அழைக்கின்றோம். சந்திரனின் காரகம் பெற்ற தானியம் தான் நெல்.  

பாகவத புராணத்தின் படி, பகவானுக்கு நாம் எதையெல்லாம் படைக்கின்றோமோ, (சமர்பிக்கின்றோமோ) அவையெல்லாம் நமக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்கும், என்று கூறப்பட்டுள்ளது. நாம் அவருக்கு அன்னத்தையே அபிஷேகமாக செய்வதன் மூலம் நமக்கு அந்த அன்னம் அபரிமிதமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

அன்னத்தை ஈஸ்வர ஸ்வரூபமாகவே  பாவிக்க வேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன. 

மேலும், {முற்காலங்களில்} விவசாயிகள் அறுவடை செய்து புதிய நெல் வரக்கூடிய கால கட்டமாக ஐப்பசி மாதம் இருந்தது. அதில் சிறு பகுதியை,  உலகிற்கே படியளக்கும் ஈசனுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொருவரும் படைப்பது என்பதும் வழக்கமாக இருந்தது. (பொதுவாக ஆடியில் விதை விதைத்து, புரட்டாசி / ஐப்பசியில் அறுவடை செய்வது) (தற்பொழுது வெவ்வேறு பருவங்களில் பயிரிடப்படுகிறது...)


அதனாலேயே, அரிசி அதிகம் விளையும் தஞ்சை சுற்றியுள்ள கோவில்களில் 'ஐப்பசி பௌர்ணமி' அன்ன அபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறுவதை காணலாம். 

தஞ்சை பெரிய கோவிலில் அன்ன அபிஷேகம் மிக சிறப்பாக நடைபெறும். 100 மூடை அரிசிக்கும் மேலாக அன்னம் தயாரித்து 13 1/2 அடி உயரம் மற்றும் 60 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்து, 11 வகை இலைகள், 21 வகை பூக்கள் ஆகியவை கொண்டு பூஜை செய்து அதன் பின்பு பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்படும்.


சிவபெருமான் ஒரு அபிஷேக பிரியர்... அதனாலேயே அவருக்கு 11 விதமான த்ரவியங்கள்  மூலம் அபிஷேகம் செய்யப்படுகிறது..
புண்ணிய தீர்த்தம், பசும்பால், பசு நெய், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, பசுந்தயிர், பஞ்சாமிர்தம், மாம்பழ பொடி மற்றும் மஞ்சள் பொடி.
ஐப்பசி பௌர்ணமியில் மேலும் சிறப்பான அபிஷேகமாக அன்னத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது.


அன்ன அபிஷேகம் செய்வதால் / கலந்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன ?:
தொழிலில் மேன்மை, உணவு / விவசாய துறையில் வளர்ச்சி, குழந்தைகளுக்கு  ஞாபக சக்தி அதிகரிப்பு, தம்பதியரிடையே ஒற்றுமை, குழந்தைப் பேறு, அன்ன தோஷம் நீங்குதல் மற்றும் என்றும் உணவிற்கு பஞ்சமின்மை...


அன்ன தோஷம்  என்றால் என்ன ?:
கை நிறைய அதிகமாகவே சம்பாதித்தாலும், கையில் உணவை வைத்திருந்தும் (Lunch Box in hands) சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிட முடியாத நிலை, (வேலைப்பளு, சாப்பிட வேண்டிய நேரத்தில் வாகன பயணம் அல்லது அதற்கு எந்த ஒரு பெயரும் வைத்துக்கொள்ளலாம்)   கையில் பணம் இருந்தும் பசிக்கும் நேரத்தில் உணவு கிடைக்காத நிலை, (உணவகங்கள்  இல்லாமல், உணவகங்கள் இருந்தும் உணவு காலியான நிலை) இது போன்ற நிலை சிலருக்கு இருப்பதை பார்க்க முடியும். அதற்கு உண்மையான காரணம்,  'அன்ன தோஷம்' ஆகும்.

ஆம், முற்பிறவியில் சாப்பிட அமர்ந்த ஒருவரை சாப்பிட விடாமல் தடுத்தது, நாம் உண்ணும் பொழுது, அன்னத்தை அதிகமாக வாங்கி கொண்டு சாப்பிடாமல் வீணடித்தது, கர்ப்பிணி பெண்கள் பசியோடு இருக்கும் பொழுது அவர்களுக்கு முதலில் உணவளிக்காமல் தாம் உண்டது ஆகிய இது போன்ற காரணங்களால் ஏற்படக்கூடியதே 'அன்ன தோஷம்' ஆகும்...

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள், ஐப்பசி பௌர்ணமி அன்று ஈசனுக்கு அன்ன அபிஷேகம் செய்து தான் அறியாமல் செய்த தவறுகளுக்கு (இப்பிறவியிலோ அல்லது முற்பிறவியிலோ) மனதார, மானஸீகமாக மன்னிப்பை வேண்டி, ஈசனின் அன்ன பிரசாதத்தை உட் கொண்டால் அவர்களது இந்த 'அன்ன தோஷம்'  நீங்கும்...


இங்கு, பகவானுக்கு படைக்கப்பட்ட அன்னம், பிரசாதம் ஆகி அதனை உட்கொள்வதன் மூலம், நமது துயர்கள் அனைத்தும் தீர்க்கப்படுகின்றன.

சிவன் ஒரு பிம்ப ஸ்வரூபி.. நாம் அனைவரும் பிரதிபிம்ப ஸ்வரூபிகள் என்று வைத்துக்கொள்ளலாம். ஒரு பிம்பத்தில் என்ன விளைவு நிகழ்கிறதோ அது அனைத்து பிரதிபிம்பங்களுக்கும் நிகழும் அல்லவா ?

உலகிற்கே படியளக்கும் ஈசன், நமது அன்ன அபிஷேகத்தால் மனம் குளிர்ந்தால்,  பிரதிபிம்பங்களாகிய மனித ஜீவிதர்கள் அனைவரும் மனம் குளிர்வோம் அல்லவா ? அந்த தேசம் முழுமைக்கும் உணவு தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் அல்லவா ? 

இதனை மேலும் எளிதாக விளக்க, இந்த நேரத்தில், இந்த கதை பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றோம்...

மஹாபாரதத்தில், கிருஷ்ணர் எப்படி, அட்சயபாத்திரத்தில் இருந்த ஒரே, ஒரு பருக்கையை உண்டு 'விஸ்வரூபிக்களுக்கு அர்ப்பணம்' என்று கூறியதால், கடும் பசியுடன் இருந்த துர்வாச முனிவர் மற்றும் அவர் உடன் வந்த அனைத்து சீடர்களும் பசி நீங்கி, திரௌபதியிடம் இப்பொழுது எங்களுக்கு பசி இல்லை, உணவு வேண்டாம் என்று கூறினார்களோ அது போல...
(உணவு அனைத்தும் தீர்ந்த பிறகு, மதிய வேளையில் துர்வாசரை பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி திரௌபதியால் உணவிட முடியவில்லை என்றால் துர்வாசர் சாபம் இடுவார் என்ற ஒரு கெடுதலான எண்ணத்தோடு துரியோதனன் செய்த செயல் இது...)


ஆகவே, பகவானுக்கு அன்ன அபிஷேகம் செய்வதன் மூலம், பூலோக ஜீவிதர்களாகிய நாம் தான் பலன் பெறுகிறோம் என்பதை புரிந்து கொண்டு அன்ன அபிஷேகம் செய்வோம் ஈசனின் அருள் பெறுவோம்... இதுவே, அன்ன அபிஷேகத்தின் தாத்பரியமும் கூட...

...ஓம் நம ஷிவாய... 

No comments:

Post a Comment