Saturday, 16 January 2021

சகல ஐஸ்வர்யங்களை வழங்கும் ஹரி போதினி ஏகாதசி...

ஹரி போதினி  / உத்தான ஏகாதசி
08-11-2019

நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் 'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட. 




கார்த்திகை தொடக்கத்தில், (அல்லது சில நேரங்களில் ஐப்பசி மாத முடிவில் ) வளர் பிறையில் வரக்கூடிய ஏகாதசியே "ஹரி போதினி" ஏகாதசி என்று அழைக்கப்படுகின்றது.  

மேலும் இதன் இதர பெயர்களாக ப்ரபோதினி ஏகாதசி (அ) தேவோத்தனி  ஏகாதசி (அ) உத்தான ஏகாதசி  என்றும்  உள்ளன. வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த படியாக 'ஹரி போதினி' ஏகாதசியும் மிகவும் முக்கியத்துவம் பெற்றது...


"ஸ்காந்த புராணத்தில்" பகவான் ப்ரம்மாவிற்கும், நாரத மகரிஷிக்கும் இடையில் நடைபெறும் சம்பாஷணையில், ப்ரம்ம தேவர், இந்த "ஹரி போதினி" ஏகாதசியின்    பெருமைகளையும், அதன் புண்ணியங்களையும் விவரிக்கின்றார்.


ப்ரம்ம தேவர்: ஓ, மகனே, "ஹரி போதினி" ஏகாதசியின் பெருமைகளை விரிவாக கூறுகிறேன் கேள், என்று சொல்லி தொடங்குகிறார்... 

ப்ராமணர்களில் தலைசிறந்தவனே, இந்த ஹரி போதினி ஏகாதசியானது, அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடி கிடைக்கப்பெறும் புண்ணியங்களை விட உயர்ந்தது. 
இந்த புண்ணிய "ஹரி போதினி" ஏகாதசி தினத்தன்று மதியம் ஒருவேளை மட்டும் (காலை , இரவு உணவு தவிர்த்து) உணவு உண்பவர் (அன்னம் தவிர்த்து) தனது கடந்த பிறவியில் செய்த பாவத்தை போக்கும் வல்லமை பெறுகிறார். காலை, மதியம் விரதம் இருந்து இரவு ஒருவேளை  உணவு மட்டும் உண்பவர் (அன்னம் தவிர்த்து) தனது கடந்த இரண்டு முற்பிறவிகளில் செய்த பாவத்தினை போக்கும் வல்லமை பெறுகிறார். மூன்று வேளையும் விரதம் இருந்து பகவான் 'ஸ்ரீ ஹரி' நாம ஜபம் செய்தவர் தனது கடந்த ஏழு பிறவிகளில் செய்த பாவத்தை போக்கும் வல்லமை பெறுகிறார்...

மேலும் அவர் கூறுகிறார்...
ஒருவர்,  தனது குழந்தை பருவத்திலோ, இளைஞராக இருக்கும் பருவத்திலோ அல்லது வயோதிக பருவத்திலோ மலை அளவு பாவங்கள் செய்திருப்பினும் இந்த "ஹரி போதினி" விரதம் இருப்பதன் மூலம் பகவான் "ஸ்ரீ ஹரி" நேரடியாக அந்த ஆன்மா, தனது  எண்ணம், செயல் மற்றும் வார்த்தைகள் மூலம் செய்த அனைத்து  பாவங்களில்     இருந்தும்  விடுவிக்கின்றார்.  

             இதன் மூலம் வாழ்விற்கு தேவையான, உணவு தானியங்கள், சொர்ணம் (தங்கம்), உயர்ந்த கல்வி, நன்மக்கள் என  சகல ஐஸ்வர்யங்களையும்    வழங்குகின்றார். அதன் பின்பு பர வாழ்வில் நேரடியாக சொர்க்க லோகம் அளிக்கின்றார் ...

மேலும் பகவான் ப்ரம்ம தேவர் விவரிக்கையில் , பாவங்கள் எவை, எவை ? மேலும் எப்பேற்பட்ட பாவங்கள் இந்த "பாப ஹரிணி" ஏகாதசி விரதம் இருப்பதனால் தீரும் என்றும் பட்டியல் இடுகின்றார்...(பாபங்கள் அனைத்தையும் தீர்ப்பதால் இதற்கு 'பாப ஹரிணி' என்று  மற்றும் ஒரு பெயர்)  

ஓ, நாரதா...

  • பாவங்களில் மிகக்கொடியது ஒரு ப்ராமணரை கொலை புரிவது...
  • ப்ராமணர் மூன்று வேளை காயத்ரி மந்திரம் ஜபம் செய்யாமல் இருப்பது  ...
  • மற்றும் ரிஷிகள், முனிவர்கள், தபஸ்விகள் , ஞானிகள் ஆகியோரை பழிப்பவர்கள் ...
  • வேத மந்திரங்களை பழிப்பவர்கள் ...
  • அவ்வாறு பழிப்பவர்கள் நம் முன்னே செய்யும் போது அதனை கண்டும் காணாமல் [தட்டி கேட்காமல்] இருப்பவர்கள்... (அவ்வாறு இருப்பவர்கள் கழுதைக்கு சமம் என்று கூறுகிறார்...)
  • அடுத்தவர் மனைவி மேல் ஆசைப்படுவது (அ) தவறான உறவு வைத்திருப்பது ...
  • பிறரை ஏமாற்றுவதன் மூலம் சம்பாதிப்பது ...
  • பிற நபர்களிடம் எப்பொழுதும் குற்றம் மட்டுமே கண்டுபிடிப்பவர், நல்ல காரியங்கள் செய்த பொழுதும் பாராட்டாதவர்...  
'பாப ஹரிணி' ஏகாதசி (ஹரி போதினி ஏகாதசி) விரதம் இருந்து இரவு விழித்திருந்து பகவான் 'ஸ்ரீ விஷ்ணு' நாம ஜபம் செய்வதன் மூலம் மேலே  கூறிய அனைத்து பாவங்களும் , பகவான் 'ஸ்ரீ விஷ்ணுவால்' முழுமையாக அழிக்கப்பட்டு சாம்பல் ஆக்கப்படும் என்று ப்ரம்ம தேவர் நாரத மஹரிஷியிடம் கூறுகிறார்.

மேலும், அன்று செய்யக்கூடாத விஷயமாக கூறுகையில்,

அன்று, மதியமோ (அ) இரவோ உணவு உண்பவர்கள், (வெளி இடங்களில்) ஏகாதசி விரத மகிமை பற்றி உணராதவர்கள் (அ) கடவுள் மறுப்பாளர்கள் (நாத்தீக கொள்கை)  தயாரித்த உணவை உண்ணக்கூடாது என்று கூறுகிறார்.  



விரதம் இருக்கும் முறை பற்றி கூறுகையில் :
ஓ, நாரதா, அன்று காலை ப்ரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளித்து, பகவான் 'ஸ்ரீ விஷ்ணு' நாம ஜபம் செய்துவிட்டு அன்று முழுவதும் உண்ணாமல் இருந்து, ஆலய தரிசனம் செய்து விட்டு இரவு முழுவதும் உறங்காமல் இருந்து 'ஸ்ரீ விஷ்ணுவை' தொழுது பாடல்கள் பாடி அடுத்த நாள் 'துவாதசி' திதி அன்று காலையில் குளித்துவிட்டு பகவான் விஷ்ணுவை தரிசித்துவிட்டு துளசி தீர்த்தம் அருந்திய பிறகு, ஏதேனும் ஒரு ப்ராமணருக்கு {தன்னால் முடிந்த அளவு} தங்கம் (அ) வெள்ளி (அ) செம்பு பாத்திரத்தில் சுத்தமான நெய் (அ) வஸ்திரம் (அ) தன்னால் முடிந்த தட்சணை (அ) இவை எதுவும் இல்லாத பொழுது ஒரு சில கனிவான வார்த்தைகளையாவது கூறி ஒருவேளை உணவை ஒரு ப்ராமணருக்கு (அ) வேறு ஒரு உணவு தேவைப்படும், பசியில் இருக்கும் ஒரு நபருக்கு  தானமாக  வழங்கிவிட்டு அதன் பின்பு, தானும்  உண்டு விரதத்தினை பூர்த்தி செய்ய வேண்டும். 

விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், ஒரு பசுவினை ஒரு அந்தணருக்கு தானம் செய்த புண்ணியம் பெறுகிறார்கள் என்று ப்ரம்ம தேவர் நாரத முனியிடம் உரைக்கின்றார்... 



இவ்வாறு, ஸ்காந்த புராணத்தில், ப்ரம்ம தேவர், நாரத மஹரிஷியிடம் "ஹரி போதினி ஏகாதசி" விரத மகிமையை பற்றி எடுத்துக் கூறுகின்றார்....

No comments:

Post a Comment