Tuesday, 8 June 2021

சரஸ்வதி யோகம்:

சரஸ்வதி யோகம்:
இயற்கையிலேயே சுப கிரகங்களான குரு, புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் லக்கினத்தில் இருக்கலாம் அல்லது இரண்டாம் வீட்டில் இருக்கலாம்; 4-ம் வீட்டில் இருக்கலாம்; 5-ம் வீட்டில் இருக்கலாம்; ஏழு, ஒன்பது அல்லது 10-ம் வீட்டில் இருக்கலாம். மூன்று கிரகங்களும் ஒரே வீட்டில் சேர்ந்து இருக்கலாம். அல்லது மேற்கூறிய வீடுகளில் தனித்தனியாகவும் இருக்கலாம். ஆனால், குரு மட்டும் தன் சொந்த வீட்டிலோ அல்லது அது உச்சம் பெறும் வீடான கடகத்திலோ அல்லது அதன் நண்பர்கள் வீடான மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகிய வீடுகளில் ஒன்றில் இருக்கலாம். இவ்வாறு இருந்தால் அது சரஸ்வதி யோகம் ஆகும்.

சரி! இந்த யோகம் இருந்தால் அதற்குப் பலன் என்ன?

நல்ல கல்வி இருக்கும். பொதுவாக, எல்லாக் கலைகளிலும் ஆர்வமும், பாண்டித்யமும் இருக்கும்; மற்றவர்களால் புகழப்படுவார்கள்; நல்ல வாழ்க்கைத் துணையும், குழந்தைகளும் இருப்பார்கள்.

இந்த யோகம் அமைய கிரகங்கள் எப்படி இருக்க வேண்டும்?

1. முதலில், குரு தன் சொந்த வீடுகளான தனுசிலோ அல்லது மீனத்திலோ இருக்க வேண்டும்.
2. அல்லது அது உச்சம் பெறும் வீடான கடகத்தில் இருக்கலாம்;
3. அல்லது அது தன் நண்பர்கள் வீடான மேஷம், விருச்சிகம், சிம்மம், கன்னி ஆகிய வீடுகளில் ஒன்றில் இருக்க வேண்டும்;
4. மேற்கூறிய வீடுகள், 1, 2, 4, 5, 7, 9. 10 ஆகியவற்றில் ஒன்றாக இருக்க வேண்டும்.
5. அதேபோல், புதனும் சுக்கிரனும் மேற்கூறிய வீடுகளில் இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால், அது சரஸ்வதி யோகம்.

புதன் என்பவர் கல்விக்கு அதிபதி; சுக்கிரன் கலைகளுக்கு அதிபதி; குருவின் குணாதிசமோ எதையும் குறைவின்றி அதிகமாகவே கொடுப்பவர். ஆக இந்த மூன்று பேரும் தனித்தனியாக இல்லாது ஒரே வீட்டில் இருப்பார்களேயானால் இந்த யோகம் முழுப் பயனையும் கொடுக்கும் என்பது எனது அனுபவம்.

2-ம் வீட்டில் மூவரும் இருப்பார்களேயானால், இசைஞானத்தைக் கொடுப்பார்கள். ஒருவர் வாய்ப்பாட்டில் சிறந்து விளங்குவர். 2-ம் வீடென்பது வாக்கு ஸ்தானம் அல்லவா? புதனும் சுக்கிரனும் கலையில் ஒருவரை சிறந்து விளங்கச் செய்வார்கள் அல்லவா? ஆக, வாய்ப்பாட்டில் அவர் சிறந்து விளங்குவர். நல்ல பேச்சாளராகவும் ஆவதற்கு வாய்ப்பு உண்டு.

No comments:

Post a Comment