Sunday, 6 June 2021

குழந்தை பிறந்த பின்பு முன்னேற்றம் உண்டா?

குழந்தை பிறந்த பின்பு  முன்னேற்றம் உண்டா?


தம்பதியினர் சிலர் தங்களுக்கு குழந்தை பிறந்த பின்பு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டா என்று கேட்பது வழக்கம். 

சாதாரணமான பொருளாதார நிலையில் இருந்தவர்களும் புத்திர பாக்கியத்தை பெற்ற பிறகு அபரிதமான பொருளாதார வளர்ச்சி பெறுவதை நாம் பார்த்திருப்போம்.
 ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒருவரின் 5-ஆம் இடம் புத்திர பாக்கியத்தை சுட்டிக்காட்டும். அந்த வகையில் ஒருவரின் ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி, இலக்னாதிபதியைவிட பலம் பெற்றிருக்கும் போது தன்னைவிட எல்லா நிலைகளிலும் மேம்பட்ட குழந்தைகளை ஜாதகர் பெறுவார்.

ஐந்தாம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்று கேந்திர திரிகோணங்களில் நின்று அவரை வலுப்பெற்ற புத்திரகாரகனும் தனக் காரகனுமான  குரு பார்ப்பது குழந்தை பிறந்த பின்பு பொருளாதார ரீதியான உயர்வினைத் தரும்.

ஒருவரின் ஜாதகத்தில் 5ஆம் அதிபதியும் அதிர்ஷ்டம் மற்றும் தந்தையின் நிலையை குறிப்பிடும் ஒன்பதாம் அதிபதியும் கேந்திர திரிகோணங்களில் நின்று அவரை காலபுருஷ  பாக்கியாதிபதி குரு பார்ப்பது சிறப்பு..

பிறக்கும் குழந்தையானது பெற்றோரின் ஐந்தாம் அதிபதி சாரத்தில் நின்று, பெற்றோரின் ஜாதகத்தில்  ஐந்தாம் அதிபதி பலமின்றி வலுப்பெற்றிருந்தால் குழந்தை வளர வளர பெற்றோர்களுக்கு வளர்ச்சி உண்டாகும்.

ஒருவரின் ஜாதகத்தில் அதிர்ஷ்டத்தை குறிப்பிடும் பாக்கியாதிபதியும் காலபுருஷ  பாக்கியாதிபதியுமான குரு பகவானும் இணைந்து, புத்திர ஸ்தானமான 5-ஆம் வீட்டைப் பார்க்கும் பட்சத்தில் தொடர்புடைய திசா புக்திக் காலங்களில் பிறக்கும் குழந்தையால் தந்தைக்கு பெரிய அளவில் பொருளாதார முன்னேற்றங்கள் கிட்டும்.

இலக்ன,இராசிக்கு 5ஆம் அதிபதிகள் கேந்திர திரிகோணங்களில் நின்று அவரை தனக்காரகன் குரு பார்ப்பதும் சிறப்பு.

ஒருவரின் ஜாதகத்தில் 2ஆம் அதிபதியும் 5ஆம் அதிபதியும் ஒருவராகி கேந்திர, திரிகோணங்களில் நின்று அந்த அமைப்பிற்கு இலாபாதிபதி, பாக்கியாதிபதி  தொடர்பு இருப்பது சிறப்பான அமைப்பு. இந்த அமைப்பு ரிஷபம் மற்றும் விருச்சிக லக்னத்திற்கு மட்டுமே பொருந்தும்.

ஐந்தாம் அதிபதி தன ஸ்தானமான 2-ஆம் இடம், லாப ஸ்தானமான 11 ஆம் இடம் இவற்றினில் நின்று வீடு கொடுத்தவர் உச்சம் பெற்றிருப்பது குழந்தை பிறந்த பின்பு பெரும் பொருளாதார உயர்வினைத் தரும்.

மேஷம் மற்றும் துலா லக்கினத்திற்கு ஐந்தாம் அதிபதி லக்னத்தில் உச்சம் பெறுகிறார். அந்த வகையில் அவர்களுக்கு குழந்தை பிறந்த பின்பு பொருளாதார முன்னேற்றம் அவர்களுக்கு உண்டு.

மேஷ லக்னத்திற்கு லக்னத்தில் உச்சம் பெற்ற ஐந்தாம் அதிபதி சூரியனை பாக்கியாதிபதி குரு பார்ப்பது சிறப்பிற்குரிய அமைப்பு.

அதேபோல் துலா லக்னத்திற்கு லக்னத்தில் உச்சம் பெற்ற ஐந்தாம் அதிபதி சனிக்கு தந்தையைக் குறிப்பிடும் ஒன்பதாம் அதிபதி புதன் தொடர்பும் தனகாரகன் குரு தொடர்பும் சிறப்பினை நல்கும்.

பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 2 மற்றும் 11ம் அதிபதிகள் வலுப்பெற்ற நிலையில் இன்று தசா நடத்துவது குடும்பத்திற்கே பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை நல்கும்.

ஐந்தாம் அதிபதி ஐந்தில் ஆட்சியாகி அவரை வலுப்பெற்ற புத்திர மற்றும் தனகாரகன் குரு லாப ஸ்தானத்தில் நின்று பார்ப்பது சிறப்பிற்குரியது.

ஐந்தாம் அதிபதி கேந்திரத்தில் நின்று வீடு கொடுத்தவன் ஆட்சியாகி, அவரை பலம் பெற்ற பாக்கியாதிபதி மற்றும் தனகாரகன் குரு பார்க்க தொடர்புடையத் காலகட்டங்களில் பிறக்கும் குழந்தையால் குடும்பமே மேன்மையடையும்.

கேந்திரத்தில் நின்று லக்னாதிபதியை ஐந்தாம் அதிபதி குரு பகவானும் இணைந்து பார்ப்பதும் புத்திரம் கிட்டிய பின்பு பொருளாதார உயர்வினைத் தரும்.

No comments:

Post a Comment