Monday, 7 June 2021

சோதிடத்தை புரிந்துகொள்வோம்..!

சோதிடத்தை புரிந்துகொள்வோம்..!

சோதிடம் ஒருவர் பிறந்த நேரம் வைத்து கணிக்கப்படும் கர்ம வரைபடத்தை கொண்டு வருங்காலம், நிகழ்காலம், எதிர்காலத்தின் பலன்களை கணித்து அறிய ஒரு கர்ம சாதனம் அல்லது வழிமுறை, ஒரே நேரத்தில் ஒரே ஊரில் பல ஜீவன்களின் ஜனனம் நிகழ்கிறது, எல்லோரது வாழ்க்கையும் ஒரே போல இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றே கூறவேண்டும், அப்படி என்றால் இதில் வேறுபாட்டை எவ்வாறு உணர்வது என்கிற கேள்வி எழும், ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் நின்ற நிலையின் பலனை பல வழிகளில் கணிக்கலாம், அந்த கிரகம் நின்ற நட்சத்திர சாரம், வீடு கொடுத்தவன் நிலை, அந்த கிரகத்துடன் ஒரே ராசியில் நின்ற கிரகத்தின் காரகம், அந்த கிரகத்துக்கு கிடைக்கும் மற்றோரு கிரகத்தின் பார்வை, வர்ககட்டங்களில் ஏற்படும் மாறுதல்கள் இப்படி பல வகையில் கணிக்கலாம், இவ்வளவு ஏன் 1 நிமிட வித்தியாசத்தில் பிறந்த குழந்தைக்கு பலனை கணிக்க வர்க்க கட்டங்களில் ஏற்படும் மாறுதல்களே உதவுகிறது என்றால் மிகையாகாது..!

இவ்வாறு நாம் ஒரே நேரத்தில் பிறந்த மனிதனின் ஜாதகத்தை கணிக்க சோதிடத்தில் பல விதிகள் அல்லது வழிகள் உள்ளன, ஆனாலும் ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவர் இப்படி தான் என்று தீர்மானம் செய்வது பெரும்பாலும் தவறானதே என்பதே என்னுடைய கருத்து, உண்மையில் சோதிடம் என்பது எவ்வாறு பார்க்க வேண்டும் என்றால் பிரச்சனையை கூறி தீர்வை பெற வேண்டும், ஆனால் கலியுகம் அனைத்தையும் சந்தேகிப்பதால் பலர் சோதிடத்தை சோதிக்கவே பலன் கேட்கிறார்கள், ஒரு கிரகநிலை பொது பலன் என்பது பெரும்பான்மையானவருக்கு பொருந்தும் என்றாலும் அதில் உள்ள விதிவிலக்குகளை முழுதாக ஆராயாமல் சோதிட பலனுறைப்பது தவறாகும், இதனால் தான் பெரும்பாலான சோதிட பலன்கள் பொருந்தாமல் போகிறது, ராகு+சந்திரன் இணைவு உள்ளவர் அனைவரும் தாயின் மீது அன்பு அல்லது ஈர்ப்பு கொண்டவர் என்பது பொது பலன், இதுவே தாய் அந்த ஜாதகரின் கர்மவினை பயனாக பிறக்கும் போதே இறந்து விட்டால் என்ன பலனை கூறுவீர்கள்?, அப்போது ஜாதகர் பெண்களின் மீது அதிக ஈர்ப்பு உடையவர் என்று பலன் கூற வேண்டும், அதே போல இந்த இணைவு ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏற்பட்டு இருந்தால் அந்த பெண்ணின் மனமே அவளுக்கு எதிரியாகும், அவளின் தாயுடன் அந்த பெண்ணுக்கு ஒற்றுபோகாது இப்படி பலன் கூற வேண்டும், ஆக ஒரு கிரகத்தின் பலன் அந்த ஜாதகரின் கர்மவினையை பொறுத்து மாற்றமடைகிறது, ஒரு பாவத்துக்கு 100 பலன்கள் கூறலாம் என்கிறபோது ஒரு கிரகத்தின் பலனை இது தான் என்று தீர்மானிக்க இயலாது என்பதே என் கருத்து, இதனால் தான் நான் பெரும்பாலும் ஒரு கிரக நிலை பலன்கள் உரைப்பதில்லை, உண்மையில் துல்லியமான பலன் கூற வேண்டும் என்றால் முழு ஜாதகம் மற்றும் ஜாதகரின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது, எப்படி மருத்துவரிடம் நோயாளி உரையாடுகிறாரோ அவ்விதத்தில் ஜாதகரும் சோதிடரிடம் தனக்கு இருக்கும் கஷ்ட நஷ்ட்டங்களை கூறி பலன் கேட்பதே உத்தமம், ஆகவே சோதிடத்தில் பலன் கூறும் முன்னர் விதிவிலக்குகளையும், ஜாதகரின் நிலையையும் ஆராய்ந்து உரையாடி அறியவேண்டியது அவசியமாகிறது, அப்பொழுது தான் ஜாதகருக்கு தீர்வும், சோதிடருக்கு மன நிம்மதியும் கிடைக்கும், மீண்டும் சந்திப்போம்..!

No comments:

Post a Comment