Tuesday 8 June 2021

பஞ்ச மகா புருஷ யோகம்

பஞ்ச மகா புருஷ யோகம்

யோகங்களிலேயே  சிறப்பான யோகங்கள் பஞ்சமகா புருஷ யோகங்களாகும். நவகிரகங்களில் சூரியன், சந்திரன் மற்றும் சர்ப கிரகங்களான ராகு கேதுவை தவிர்த்து, மற்ற கிரகங்களான செவ்வாய், குரு, சுக்கிரன், புதன், சனி போன்ற கிரகங்களால் உண்டாகக்கூடிய யோகங்களே பஞ்சமகா புருஷ யோகங்களாகும்.

இவைகள் ருச்சுக யோகம்,  பத்திர யோகம், ஹம்சா யோகம், மாளவியா யோகம், சச யோகம் என்று குறிப்பிடப்படுகின்றன. இவற்றைப் பற்றி தெளிவாகப் பார்ப்போம்.

ருச்சுக யோகம்

நவகிரகங்களில் அங்காரகன், மங்கள காரகன், பூமி காரகன் என பலவகையில் போற்றப்படும் செவ்வாய் பகவான் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ 1,4,7,10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் ஏதாவது ஒன்றில் அமயப்பெற்றால் ருச்சுக யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு துணிவும், தைரியமும் சிறப்பாக இருக்கும். மிகச் சிறந்த கெட்டிக்காரர்களாக இரப்பார்கள். செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று பலமாக இருந்துவிட்டால் போலீஸ், ராணுவம் போன்ற துறைகளில் பெரிய பதவிகளை வகிக்க்கூடிய யோகமானது தேடிவரும்.

நல்ல கட்டமான உடலமைப்பு மற்றவர்களை கவரும்படி அமையும். நல்ல அறிவாற்றல், பேச்சுத் திறன் இருக்கும். கல்வியில் நல்ல ஈடுபாடு கொடுக்கும். குறிப்பாக நிர்வாக தொடர்புடைய கல்வியில் மேன்மை உண்டாகும்.

செவ்வாய், பூமி காரகன் என்பதால் செவ்வாய் பலம் பெற்றவர்களுக்கு பூமி, மனை சேர்க்கைகள் சிறப்பாக அமையும். செவ்வாய் பெண்களுக்கு களத்திர காரகன் என்பதால் பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் வலுப்பெற்று ருச்சுக யோகம் உண்டாகுமேயானால் நல்ல தேக ஆரோக்கியம், மண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் எதுவும் இல்லாமல் சிறப்புடன் செயல்படும் ஆற்றலை கொடுக்கும். பூமி, மனை போன்றவற்றால் லாபத்தை அள்ளி தருவது ருச்சுக யோகமாகும்.

ஹம்ச யோகம்

தனக்காரன், புத்திரகாரகன், மங்களகாரகன் என பல பெயர்களால் வர்ணிக்கப்படும் பொன்னவனான குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ 1,4,7,10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் அமையப் பெற்றிருந்தால் ஹம்ச யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமைய பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியான மணவாழ்க்கையும், சிறப்பான வாழ்க்கைத் துணையும் அமையும். சுபகாரகனான குருபகவானே பலம் பெற்றிருப்பதால் சுமுதாயத்தில் பலர் போற்ற கூடிய அளவிற்கு பெயரும் புகழும் பெறுவார்கள். நல்ல தெய்வீக சிந்தனை, ஆண்மிக, தெய்வீகக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு, பலருக்கு எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல் உதவி செய்யும் நற்பண்புகள், நல்ல ஒழுக்கமான வாழ்க்கை சிறப்பாக அமையும்.

வேத சாஸ்திரங்களை கற்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். பிறருக்கு ஆலோசனைகள் வழங்கும் ஆற்றல், ஆசிரியர் பணி செய்யும் வாய்ப்பு உண்டாகும். பின்னால் நடக்கப் போவதைக் கூட முன் கூட்டியே அறியக்கூடிய ஞானம் இருக்கும். இவருடைய வார்த்தைகளுக்கு ஊரே கட்டுபடுமளவிற்கு சமுதாய உயர்வினைக் கொடுக்கும். குரு தனக்காரகன் என்பதால் ஹம்ச யோகம் பெற்றவர்களுக்கு பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம், வெளிவட்டார தொடர்புகளில் பெயர் புகழ் உயரும் யோகம் உண்டாகும். குரு புத்திர காரகனானவும் இருப்பதால் ஹம்ச யோகம் பெற்றவர்களுக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். பிள்ளைகளால் நல்ல அனுகூலமானப் பலன்களை அடையும் வாய்ப்பு உண்டாகும். பணபுழக்கம் அதிகமுள்ள இடங்களில் உயர்வான பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும். கமிஷன், ஏஜென்ஸி, வட்டித் தொழில் போன்றவற்றில் ஈடுபடக்கூடிய யோகமும் அவற்றால் நல்ல அனுகூலங்களும் உண்டாகும். பெரியோர்களின் நட்பும், ஆன்றோர் சான்றோர்களின் ஆசி போன்றவை யாவும் ஹம்ச யோகம் பெற்றவர்களுக்கு சிறப்பாக அமையும்.

பத்திர யோகம்

கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சிமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை யாவும் அமையும். கற்றவர்களின் சபையில் ஒரு முக்கியமான பங்கு  வகிப்பவராக இருப்பார். பலருக்கு ஆலோசனை வழங்கும் திறன் இருக்கும். தன்னுடைய பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து விடுவார், கல்வி அறிவு மிகச் சிறப்பாக இருக்கும்,  கணிதத்தில் மேதையாக இருப்பார். பேச்சால், வாக்கால் முன்னேற்றம் ஏற்படும். வக்கீல் பணியில் திறமைசாலியாக இருப்பார். சமுதாயத்தில் மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய அளவிற்கு உன்னதமான நிலை உண்டாகும். நீண்ட ஆயுளையும் அற்புதமான ஆரோக்கியத்தையும் அழகான உடலமைப்பையும் பத்திர யோகம் கொடுக்கும். சகல கலைகளையும் கற்று தேறக்கூடிய ஆற்றல் உண்டாகும்.  வாக்கு சாதுர்யமும், கற்பனை திறனும் உண்டாகும் என்பதால் கலைத்துறையில் பெரிய இடத்தை பிடிக்கும் வாய்ப்பு  அமையும்.
புதன பகவான் பலம் பெற்று பத்திர யோகம் உண்டாகி இருந்தால் நல்ல உடல் ஆரோக்கியமும், ரத்த ஓட்டமும் உண்டாகி உடல் நிலை சிறப்பாக இருக்கும்.

மாளவியா யோகம்

அசுரகுரு, களத்திர காரகன், சுக காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சுக்கிர பகவான் ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானமான 1,4,7,10 ல் அமையப் பெற்றால் மாளவியா யோகம் உண்டாகிறது. மாளவியா யோகம் அமையப் பெற்றவர்களுக்கு  சிறப்பான மண வாழ்க்கை அமைந்து தாம்பத்திய வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு உயர்வடையும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கைகளும் குடும்பத்திற்கு தேவையான அதி நவீன பொருட்களின் சேர்க்கைகளும் சிறப்பாக அமையும். ஆடம்பரமான வாழ்க்கை, வாசனை திரவியங்களில் ஆர்வம் உண்டாகும்.  பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் அனுகூலம் சிலருக்கு பெண்களாலேயே உயர்வு உண்டாகும்.

சந்திரனின் சேர்க்கையுடன் சுக்கிரன் இருந்தால் கலை, இசைத் துறைகளில் அதிக ஈடுபாடும் அதன்மூலம் வாழ்வில் உயர்வும் உண்டாகும். வண்டி, வாகனச் சேர்க்கை, சுகவாழ்வு, சொகுசு வாழ்வு போன்ற யாவும் மாளவியா யோகம் அமையப் பெற்றவர்களுக்கு மிகச் சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும்.

சச யோகம்

ஆயுள்காரகன், ரவி புத்ரன், ஜடாதரன் என அழைக்கப்படக்கூடிய சனி பகவான் ஆட்சியோ உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ 1,4,7,10 ஆகிய ஸ்தானங்களில் அமைந்திருந்தால் சச யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு நீணட ஆயுள், நல்ல ஆரோக்கியம், திடகாத்திரமான உடல் அமைப்பு யாவும் உண்டாகும்.  அரசாங்க வழியில் உயர்பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் அமையும். பல வேலையாட்களால் வாழ்வில் உயரக்கூடிய யோகம்  உண்டாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து வாழ்வில் ஏற்றம் பெறும் ஆற்றலைக்கொடுக்கும். வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம், இரும்பு சம்பந்தப்பட்ட துறைகளில் முன்னேற்றம் கொடுக்கும். சமுதாயத்தில் கௌரவமான நிலையை உண்டாக்கும். நல்ல குடும்ப வாழ்க்கையும், மனைவி பிள்ளைகளால் அனுகூலங்களும் குடும்பத்தில் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை யாவும் சிறப்பாக அமையும்.

No comments:

Post a Comment