Saturday, 14 August 2021

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்

சாவு வீட்டில் சாவைத் தவிர, பணத்துக்காக ஒருத்தரும் அழக்கூடாது.

தவறாக எண்ண வேண்டாம். கௌரவ குறைவாக நினைக்க வேண்டாம்.

குடும்ப உறுப்பினர் ஒருவர் திடீரென இறந்து போகையில் கையில் காசு இல்லாமல் திணறும் அந்த குடும்பத்தின் முக்கிய நபரை கவனித்தது உண்டா..?

உண்மையில் பிச்சை எடுக்காத குறையாக அந்த நாள் மாறி விடும்.

எளிமையாக பார்த்தாலும் ப்ரீசர் பாக்ஸ், ஆம்புலன்ஸ், ரெண்டு மாலை போட்டு சுடுகாட்டு செலவு செய்தாலே இன்றைய தேதிக்கு 30, 40 ஆயிரம் இல்லாமல் முடியாது. அப்படி இருக்க உறவொன்று இறந்ததை நினைத்து அழுவதா????

சிலமணி நேரத்தில் பணம் எப்படி தயார் செய்வது என்ற நெருக்கடியை நினைத்து அழுவதா????

கடன் பழக்கமே, இல்லாதவர்களைக் கூட, அச்சூழல் வட்டிக் கடைக்கும், அடகு கடைக்கும் கொண்டு போய்த் தள்ளும்.

இது விசயத்தில் முக்கியமான ஒரு கருத்தை எல்லோரும் தயவு செய்து ஏற்க வேண்டும் அல்லது இனிமேலாவது இந்த செயலை ஏற்படுத்த வேண்டும்...

அப்படி என்ன செயல்..?

இனிமேல் எந்த துக்க வீட்டுக்குச் சென்றாலும், யாரும் பூமாலை வாங்கிப் போட வேண்டாம். தேவையானால் மரியாதைக்கு உதிரிப் பூ தூவுங்கள். ஏன்..?

நாம் மாலை வாங்கி போட்ட அடுத்த நிமிடமே அந்த மாலையை வெளியே எடுத்து வந்து ஒரு இடத்தில் மாட்டி விடுவார்கள்.

அந்த பூ மாலைக்கு ரூ. 100, 200, 500, 1000 என செலவு செய்வதை விட, இறந்து போனவர் குடும்பத்துக்குப் பணமாக கொடுத்தால், அவர்களுக்கு ஈமக்கிரியை செலவுக்கு ஆகும்.

ஏழையோ, பணக்காரக் குடும்பமோ எல்லா இடங்களிலும் கூலர் பாக்ஸ், தள்ளிக்கிட்டு போக, ஓட்டிக்கிட்டு போக வண்டி என ஏகப்பட்ட செலவுகள் வந்து விடும். ஓர் இருபது வருடங்களுக்கு முன்பு கையில்தான் தூக்கி போவார்கள். ஆனால், இன்று உடலிலும் தெம்பு இல்லை. மனதிலும் தெம்பு இல்லை.

எனவே, இனி வரும் காலத்தில் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

திருமண வீடுகளில் மொய் எழுதும் பழக்கம் நாம் அறிந்த ஒன்று தான்.

“ஏதோ கடன உடன வாங்கி கல்யாணம் பண்றான். நாம எழுதுற மொய்ப் பணம் கொஞ்சம் அவனுக்கு உதவியா இருக்குமே” என்பதால் தான், இந்த மொய்ப்பழக்கம்.

கல்யாணம் என்பது திடீர் செலவு இல்லை. நம்ம வசதிக்கு தகுந்த மாதிரி நாள் / மண்டபம் குறிச்சு நம்ம திட்டப்படி கல்யாணம் நடத்திக்கலாம்.

பல சடங்கு சம்பிரதாயங்கள் இப்படி ஏதோ காரணத்துக்காக ஏதோ ஒரு கால நெருக்கடியில உருவாகி இருக்கலாம்.

ஆனால், கல்யாண வீட்டை விட சாவு வீட்டில் தான் மொய் எழுதும் பழக்கம் அவசியம். இன்றைய விலைவாசி கால நிலைமைக்கு தேவை.

சில ஏரியாகளில் இந்த பழக்கம் இருக்கலாம். தெரியல..? ஆனால் பெரும்பாலும் இல்லைதானே.

அம்மாவை, அப்பாவை, அண்ணனை, தம்பியை, பிள்ளையை, இழந்த ஒருத்தன் நம்ம கண்ணு முன்னாடி சாவு செலவுக்கு காசில்லாம அலையலாமா..? தன்மானம் சுட அவனை நாம் கடனோ உதவியோ கேட்க விடலாமா..?

உண்மையில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதன் ஒருவனின் கரங்களை இறுகப் பற்றி,

“நாங்க இருக்கோம்யா, தைரியாமா இருய்யா. செலவை நாம் எல்லோரும் பாத்துக்கலாம்” என சக மனிதனாக, உறவுக்காரனாக நாம் சொல்ல வேண்டிய தருணம், மற்றதை விட அதுதான்.

இதுவரை இல்லாவிட்டாலும் இனி இப்படியொரு பழக்கத்தை துவங்குதல் நல்லது.

சாவு வீட்டில் சாவைத் தவிர பணத்துக்காக ஒருத்தனும் அழக்கூடாது.

நம் நண்பன் வீடாக இருந்தாலும் சரி.

நாம் அனைவரும் மனம் வைத்தால் கண்டிப்பாக ஓர் நல்ல மாற்றம் கிடைக்கும். செய்வோமா..?

*கண்டிப்பாகச் செய்தே தீர வேண்டும்*

தொகை முக்கியம் அல்ல, இயன்றது போதும்.



*தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்*

No comments:

Post a Comment