Saturday, 18 September 2021

மாளயபட்சம்

மாளயபட்சத்தின் பதினாறு தினங்களிலும் நித்தியத் தர்ப்பணம். தினமும் அன்னதானம் அவசியம். மாளயபட்சத்தில் ஆற்றும் நித்திய அன்னதானத்திற்கும் அன்ன சிரார்த்தம், அன்னத் தர்ப்பணம் என்றே பெயர் உண்டு. இந்த மாளய பட்சத்தில் விநாயகருக்கான சதுராவிருத்தி தர்ப்பணம் எனும் விசேஷமான பூஜையை நிகழ்த்துதல் விசேஷமானது. தாய் அமாவாசை புரட்டாசியின் மாளய அமாவாசை : சூரிய, சந்திர கிரஹ மூர்த்திகள் ஒரே இடத்தில் (ஒரே ராசியில்) கூடும் நாள் அமாவாசை. இவ்விரு கிரஹங்களும் வானில் தொண்ணூறு டிகிரி கோணத்தில் எதிரெதிரே வரும் (எதிர் ராசியில் வரும்) தினம் பௌர்ணமி. மேலும் பௌர்ணமி, அமாவாசையில் சந்திர கிரஹத்தின் உவா ஏற்றம், இறக்கம் என்பதாக - பூமியின் ஆகர்ஷணம், சந்திர கிரஹத்தின் ஆஹர்ஷணத்தில் சில விளைவுகள் உண்டாகி இவை கடலிலும், மனித உடலிலும் பிரதிபலிக்கும். இதை நன்முறையில் சீர்படுத்திடவே இந்நாட்களில் விசேஷமானப் புனிதத் தீர்த்த நீராடல், ஆலய தரிசனம், விளக்கேற்றுதல், பௌர்ணமி விரதம், பௌர்ணமி கிரிவலம், பௌர்ணமி பூஜை. அமாவாசை விரதம், பிதுர்ப் பூஜை. அன்னதான தர்மங்கள் போன்றவற்றைக் கடைபிடிக்கிறோம். இதற்காகவே பௌர்ணமி, அமாவாசையில் புனித நீராடுகிறோம். இக்காரணப்படியாகக் கடலில் தினமும் நீராடலாகாது, குறித்த நாட்களில் மட்டுமே கடலில் நீராட வேண்டும். என்ற ஆன்மக் கட்டுப்பாடும் உள்ளது. கடல் நீரில் ஆசமனம் செய்வது கிடையாது எனும் நியதியும் உண்டு. உண்மையில் ஒவ்வொரு பௌர்ணமியும், ஒவ்வொரு அமாவாசையும் முறையே சந்திர கிரஹணம், சூரிய கிரஹணமும்தான். ரவிச்சந்திர அமாவாசை : பூ லோகத்தில் முதன் முதலாக ஏற்பட்ட அமாவாசை - பாத்ரபத மாதம் எனப்படும் புரட்டாசி தமிழ் மாதத்தில் வரும் மாளய பட்ச அமாவாசைத் திதி தினமாகும். எனவே இதுவே தாய் அமாவாசை, தலைஅமாவாசை. எவ்வாறு சூரிய, சந்திர மூர்த்திகள் கிருஷ்ண பரமாத்மாவின் முன் ஒன்று சேர்ந்து தோன்றிட - சூரிய, சந்திர கிரஹ சங்கமமே அமாவாசை ஆவதால் முதல் ஸ்ரீகிருஷ்ணரின் சங்கல்பப்படியாக அன்று மாலையில் சூரிய சந்திரர்கள் சேர்ந்து (உ)வந்தமையால் அமாவாசைக்கு முதல் நாளில் அமாவாசைத் திதி திகழுமாயின் இது போதாயன அமாவாசை எனும் சாங்க்யமாகக் கடைபிடிக்கப் பெறுகிறது. இதே போல்தான் பூலோகத்தின் முதல் அமாவாசையாகப் புரட்டாசி மாதத்தில் சூரிய, சந்திர சங்கமத்தில் உற்பவித்ததே விசேஷமான ரவிச்சந்திர அமாவாசை எனும் மாளயபட்ச அமாவாசை (ரவி சூரியன்). ஆகவே புரட்டாசி மாதத்தைய அமாவாசை தினமானது அமாவாசைகளுக்கு எல்லாம் தாய் அமாவாசை, தலைஅமாவாசை, மூத்த அமாவாசையாகப் போற்றப்படுகின்றது. மஹாளய அமாவாசை, மஹாலய அமாவாசை, மாளய அமாவாசை, பெரிய அமாவாசை எனப் பல பெயர்களில் பிரசித்தி பெற்றுள்ள புரட்டாசி மாதத்தின் அமாவாசையே வருடத்தின் பன்னிரு அமாவாசைத் திதிகளுக்குமான தலைமைத் திதிப் பீடமாகும். பிரதமை முதல் அமாவாசை / பௌர்ணமி வரை ஒவ்வொரு திதிக்குமான காலதேவதையும் உண்டு. இது பற்றி லலிதா சஹஸ்ரநாமத் துதியிலும் வரும். இதற்கான விளக்கத்தை நவம்பர் 2020 இதழில் அளித்துள்ளோம். சாகாவரந் தரும் அமிர்தத்தை அடைவதற்காக ஆதியுகமொன்றில் தேவர்களும், தேவர்களின் சகோதரர்களான அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து மஹாலக்ஷ்மீ தேவியும், சந்திர மூர்த்தியும் ஏனையோரும் ஏனையவையும் தோன்றினர். இதனால் சந்திர மூர்த்தியைத் திருமகளின் சகோதரராகப் போற்றுவர். இதை லலிதா சஹஸ்ரநாமம் எனப் போற்றும். அமாவாசைத் திதி பிறத்தல்: பாற்கடலில் சந்திர மூர்த்தி தோன்றியப் பல யுகங்களுக்குப் பிறகு தட்சரின் சாபத்தினால் சந்திரனின் ஈரெட்டுப் பதினாறு கலைகளும் தேயலுற்ற போது அமாவாசை எனும் திதி வைபவம் ஏற்பட்டது. இதற்கு முன் வரையில் வானில் சூரிய, நட்சத்திரப் பிரகாசங்களே பொலிந்தன. நாம் பொதுவாக நினைப்பது போல வானில் இருப்பது ஒரே ஒரு இப்பிரபஞ்சத்தில் கோடானு கோடி நட்சத்திரங்கள் திகழ்வது போல் எண்ணற்ற பூமிகளும், லோகங்களும் உள்ளன. சில பூமிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சூரிய, சந்திரர்கள் இன்றும் ஒளி வீசிக் கொண்டுதாம் உள்ளன. . நம் பூமியிலும் எதிர்காலத்தில் இரண்டாவது சூரியன் வரும் என வேங்கடராம சுவாமிகள் தீர்கதரிசனமாக உரைத்துள்ளார். இவை யாவும் மானுடப் பகுத்தறிவுக்கு இன்னமும் எட்டாத ஆன்மீக ரகசியங்கள். இது இப்போதைக்குப் புலப்படாது. விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்ட மெய்ஞ்ஞான விஞ்ஞானமிது. தக்க சத்குரு மூலமாகவே அறியற்பாலது. ஆனால் சத்குருவின் மீதும், சத்குருவின் சர்வஞானத்திலும் ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட வேண்டுமே. மாதத்திற்கு ஒரு சூரிய மூர்த்தி : நம் பூமியிலும் ஒவ்வொரு மாதத்திற்கு ஒரு சூரிய மூர்த்தியாக வருடத்திற்குப் பன்னிரு சூரிய மூர்த்திகளின் விஜயமும் அருள்பாலிப்பும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. சூரிய ஒளி இல்லையேல் ஜீவ வாழ்க்கை இல்லை. அமாவாசைத் திதி என்பது சூரிய மூர்த்தியின் நேரடியான அனுகிரஹத்தையும், சந்திர மூர்த்தியின் சூக்கும அனுகிரஹத்தையும் பொழிவதாம். தாய் வழி மாத்ருகாரகர் சந்திர மூர்த்தி. இவரே மனகாரகரும் ஆவார். தந்தை வழி பித்ருகாரகர் சூரியர் எலும்பு அங்கத்துக்குமான மூர்த்தியும் ஆவார். ஆகவே அமாவாசையில் பிதுரர் வழிபாடாக தாய், தந்தை இரு தலைமுறை வகை மூதாதையர்கட்கும் தர்ப்பணம், திவசம், படையல், திதி கொடுத்தல், சிரார்த்தம் போன்றவற்றை நிகழ்த்தி வழிபடுகின்றோம். இதில் தாய் அமாவாசையான புரட்டாசி மாதத்தின் மாளய பட்சத்தின் புனிதச் சிறப்பு யாதெனில் ... பிரபஞ்சத்தின் அத்தனைக் கோடிப் பித்ரு மூர்த்திகளும், வசு, ருத்ர, ஆதித்ய, விஸ்வதேவ, பந்து தரணி பித்ருக்களும் பூலோகத்திற்கு நேரடியாக வருகை தரும் வைபவம். பூமிக்கு நேரடியாக வரும் பிதுர்க்கள் : புரட்டாசி மாதத்தின் தேய்பிறைக் காலமாகிய இந்த இருவாரக் காலத்தைய (15 தினங்கள் பிரதமைத் முதல் அமாவாசைத் திதி வரை) மாளயபட்சத்தில் இந்த பூலோகத்தில் எந்த நாட்டில் எந்த மூலையில் எவர் தர்ப்பணம் அளித்தாலும் அதனை அவரவருக்கு உரித்தான மூதாதையரே - அந்தப் பிதுரரே தற்போது எந்த நிலையிலும் இருந்தாலும் நேரடியாக வந்து தர்ப்பணம், திதி கொடுத்தல், படையலை ஏற்பது மாளய பட்சப் பிதுர்ப் பண்டிகைக் காலத்தின் சிறப்பு. கழிவு படாது மலை போல் நெடுங்காலமாகத் தேங்கி இருக்கும் கர்மவினைகள் : மேலும் வருடம் முழுவதும், தினந்தோறும் நித்திய தர்ப்பணமாகப் பிதுர்ப் பூஜையை ஆற்ற வேண்டிய இவ்வுலக மானுடச் சமுதாயத்தார் - காலப்போக்கில் நித்தியத் தர்ப்பணத்தைக் கை விட்டு விட்டமையால் உலகெங்கும் இப்போது பணக்கஷ்டம், நோய்க கடன்கள், மனக்கஷ்டம், விவாகரத்து, குடும்பத்தில் பிளவு, தொற்று நோய் போன்று பல வகைகளிலும் அல்லல்படுகின்றனர். மூதாதையர்க்கு தினமுமே தர்ப்பணம் அளிக்கும் நித்தியத் தர்ப்பணம் என்பதானது உலக மக்கள் சமுதாயத்தின் அவநம்பிக்கை, அசிரத்தையால் தற்போது மாதாந்திர அமாவாசையில் மட்டும் தர்ப்பணம் என்பதாக மிகவும் குறுகி விட்டது. இதனால் மக்கள் சமுதாயத்தில் முற்காலத்தே துலங்கிய பிறர் நலன்களுக்காகச் சேவை ஆற்றித் தம்மை அர்ப்பணிக்கும் தியாக உணர்வு. பெருந்தன்மையான உள்ளமும் சுருங்கி சுயநலம், பேராசை, முறையற்ற காமம் போன்றவை மனித மனத்துள், மானுடச் சமுதாயத்துள் - ஆட்டிடையில் நரி போல் - புகுந்து விட்டன. இதன் காரணமாக நடப்பு உலகச் சமுதாயமானது பலத்த பிதுர் தோஷங்களுக்கு ஆட்பட்டுத் துன்புறுவதோடு நித்தியத் தர்ப்பணத்தின் மூலம் எளிதில் கழியக் கூடிய, கரைய வேண்டிய கோடானு கோடி கர்மவினைகள் உலகெங்கும் 195 நாடுகளிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் கழிவு படாமலேயே நெடுங்காலமாகத் தேங்கி உள்ளன. இத்தகையப் பெருங்குறைகள், குற்றங்கள், பாவங்கள் அனைத்திற்கும் தீர்வு தருவதாகப் புரட்டாசி மாதத்தின் மாளயபட்சம் வந்தமைந்திருப்பதும் கடவுளின் பெருங்கருணையால் நாம் பெற்ற பாக்யமே. ஆகவே புரட்டாசி மாதத்தின் மாளய பட்சத்தின் பதினைந்து நாட்களிலும் தினமும் தர்ப்பணம் செய்து - இதுகாறும் வாழ்வில் விடுபட்டுப் போன நித்தியத் தர்ப்பணப் பூசனையை ஓரளவேனும் வாழ்வில் புனரமைத்துத் தாய், தந்தையர், இவ்விரு வர்கத்தினருக்கும் திவசம், சிராத்தம், படையல், தர்ப்பணம், திதி கொடுத்தலை ஆற்றி கர்மவினைகள், பாவங்களைக் களைந்து பக்திமிகு நல்வாழ்வில் உய்ந்திடவும். முக்கியமான மாளயபட்சத் திதிகள் மேலும் பிரதமைத் திதி முதல் அமாவாசைத் திதி வரையில் வரும் இரு வாரக் காலத்தின் பதினைந்து திதிகளில் வரும் மிகவும் முக்கியமான திதி தினங்களிலாவது தர்ப்பணம், திவசம், சிராத்தம், படையல்களை அவரவர்க்கு இயன்ற வகையில் அன்னதான தர்மங்களுடன் நிகழ்த்திடவும். 24.9.2021 மஹாபரணி நட்சத்திர - தினம் - நெடுநாள் மருத்துவ மனையில், படுக்கையில், நோயில் கிடந்து உயிர் துறந்தோர்க்கு விசேஷத் தர்ப்பணம் வீட்டில், கோயிலில் நிறைய விளக்குகளை ஏற்றி வழிபடுதல், 16 வகை ஷோடசோபார தீபாரதனை. 29.9.2021 அஷ்டமித் திதி மத்யாஷ்டமி, புதாஷ்டமி, ருத்ராஷ்டமி - சகோதர, சகோதரிகளுக்கு, விசேஷத் தர்ப்பணம். பெற்றோர்கள் தாம் இழந்த வாரிசுகளுக்குத் தர்ப்பணம் அளிக்கவும். 30.9.2021 - மஹாநவமி - பெண் குலத்தார்க்கு, மாதா வர்கத்தினருக்குக் கூடுதல் தர்ப்பணம் 3.10.2021 - யதிமாளயம் - துறவிகள், சந்நியாசிகள், மஹான்கள், யோகியர், ஞானியர், உத்தமப் பெரியோர், தியாகத்துடன் வாழ்ந்தோர்க்கு அர்க்யம், தர்ப்பணம். மஹான்களின் ஜீவ சமாதிகளில் வழிபாடு. 5.10.2021 சஸ்த்ர ஹதமாளயம், கஜச்சாயா, போதாயன அமாவாசை, கிருஷ்ணாங்காரக சதுர்த்தசி - விபத்து, நெருப்பு, ஆயுதம், போர், தற்கொலை மூலமாக இறந்தோர்க்கு விசேஷப் பிதுர்ப் பூஜை 6.10.2021 ஸர்வ மாளய அமாவாசை எல்லோருக்கும் சகல ஜீவன்களுக்கும் காருண்யத் தர்ப்பணம்

No comments:

Post a Comment