Wednesday, 15 November 2023

ஆன்மிகக் கதை: அரங்கன் அருந்திய நழுவமுது!


ஆன்மிகக் கதை: அரங்கன் அருந்திய நழுவமுது!

ஸ்ரீ ரங்கம் அருகே, 'அகண்ட காவேரி' என்ற ஊர் உண்டு. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் ஒரு விஷ்ணு பக்தை அங்கே வாழ்ந்துவந்தாள். ஸ்ரீ ரங்கநாதர் மீது அபார பிரேமைகொண்டு இரவும், பகலும் ஸ்ரீ ரங்கனையே ஆராதிப்பவள். ஆனால், பரம ஏழை. தனது ஒரே மைந்தனுக்கு, 'அரங்கன்' என்றே பெயர் சூட்டினாள். மாடு மேய்ப்பது அவனது தொழில். அரங்கன் காலையிலேயே மாடு கன்றுகளை மேய்ச்சலுக்கு ஒட்டிச் செல்வான்.

பகல் வேளையில் அவனுக்கு நழுவமுது (கஞ்சி) எடுத்துச் செல்வாள் அன்னை. கூப்பிடு தூரத்தில் மாடுகள் மேய, ஒரு பூவரச மரத்தடியில் அமர்ந்துகொண்டு குரல் கொடுப்பாள். “இதோ வந்துட்டேன்" என்று பதிலளித்தபடி வருவான் அரங்கன். சருகு போன்ற இலையைப் பரப்பி அதில் நழுவமுதை வார்ப்பாள் தாய். கலையம் காலியானதும் சருகில் சொட்டிய கஞ்சியை எடுத்து உறிஞ்சுவான் மகன். பிறகு, சற்றே இளைப்பாறி விட்டு மீண்டும் மேய்ச்சலுக்குப் புறப்படுவான் அரங்கன்.

ஒருநாள், "அரங்கா... அரங்கா" என்ற தாயின் குரல் கேட்டு, பதில் குரல் வரவில்லை. தாயார் கண்ணீர் விட்டாள். மகனுக்கு என்ன நேர்ந்ததோ என்று அஞ்சினாள். சிறிது நேரத்தில் அரங்கன் வந்தான். “ஏன் இத்தனை நேரம்? என்னை இப்படித் தவிக்க விட்டு விட்டாயே” என்று கேட்டாள் தாய்.

"ரொம்ப தூரம் ஒரு கன்று போய்விட்டது. அதைப் பிடித்து வர ஓடினேன்" என்றபடி நழுவமுதைக் குடித்தான். "இன்று நேரமாகி விட்டது" என்றபடி இளைப்பாறாமல் ஒடி விட்டான். அன்னையார் சற்றே களைப்பாறி  புறப்படும் சமயம் மீண்டும் ரங்கன் வந்தான். என்னடா மறுபடி வந்திருக்கிறாய்? இந்தப் பக்கம் கன்று ஒன்றும் வரவில்லையே?" என்றாள் அன்னை.

"நான் அமுது அருந்த வந்திருக்கிறேன். இன்றைக்கு நேரமாகி விட்டது. ஒரு கன்று புதரில் சிக்கிக்கொண்டது. அதை மீட்டுத் தாயிடம் விட்டு விட்டு வருகிறேன். ஏன் எழுந்து விட்டாய்?" என்று கலவரமாகக் கேட்டான் மகன்.

"இப்போதுதானே நழுவமுது குடித்தாய்? திரும்ப வந்து கேட்கிறாயே! எப்படி வரும்?” என்று அம்மையார் கூற, "இதென்ன ஆச்சரியம்?  நான் பசியோடிருக்கிறேன். விளையாடாதீர்கள்" என தர்க்கித்தான் அரங்கன்.

"அப்போது உன்னைப் போலவே வந்து நழுவமுது உண்டவன் யார்?" தாயார் கலக்கமுற்றார். மறுநாள் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று இருவரும் தீர்மானித்தனர்.

மறுதினம்,  அம்மையார் அழைத்தபோது மகன் வராமல் ஒரு மரத்தடியில் ஒளிந்திருக்க, முந்தைய தினம் அமுதுண்ட ரங்கன் குதி போட்டுக்கொண்டு. வந்தான். தாயிடம் போலிச் சிறுவன் அமுதுண்பதைக் கண்டு பதைபதைத்து ஒடி வந்தான் உண்மையான மகன். "நான்தானம்மா நிஜம். இவன் பொய்யன்" என்றவனிடம், "யாரடா நீ?" என்று அதட்டினான் ஏற்கெனவே வந்தவன்.

அதோடு, "நான்தான் உண்மையான அரங்கன். நீ யார்?" என்று பதிலுக்கு அவன் அதட்ட, அம்மையார் கலக்கமுற்றார். யார் தம்முடைய மகன் என்று அவருக்குத் தெரியவில்லை! "ஸ்ரீ ரங்கநாதா! இது என்ன விளையாட்டு?" என்று அரற்றினாள்.


"விளையாடத்தான் வந்தேன் அம்மா" என்று கஞ்சியை நக்கிவிட்டுக் காட்சி கொடுத்தார் பெருமாள்.

"அம்மையே! உன் பக்தி கண்டு நெகிழ்ந்தோம். உம் கரத்தால் அமுதுண்ண விரும்பி வந்தோம். குறைவற இருவரும் வாழ்ந்து, முடிவில் வைகுண்ட பதவி அடைவீர்கள்" என அருளி மறைந்தார்.

இருவரும் பரவசமடைந்தனர். இது ஊருக்கெல்லாம் தெரிந்தது. ராமானுஜர் இதைக் கேட்டு மெய்சிலிர்த்து அந்த அம்மையார் வாழ்ந்த இடத்துக்கு ஜீயர்புரம் என்று பெயர் சூட்டினார். அங்கேயே ஒரு மண்டபமும் கட்ட ஏற்பாடு செய்தார்.

பங்குனி பிரம்மோத்ஸவத்தில் ஒருநாள் அரங்க நாதர் அங்கே எழுந்தருளுவார். மண்டபத்தில் அம்மையார் திருப்பந்தல் சேவை தரும்படியும், அன்று நழுவமுது நிவேதனமும் ஏற்பாடு செய்தார்.




No comments:

Post a Comment