Wednesday, 15 November 2023

சிறு கதை:பழிகாரி


பழிகாரி!
பழிகாரி!


வைகறைப்பொழுதினில் வெட்ட வெளிச்சத்தினை உணர்ந்த யாழ் அரைகுறைத் தூக்கத்தில் புலம்பிக் கொண்டிருந்தாள். யாரோ அவள் கையைப் பிடித்து இழுத்து தேவலோகத்தில் கொண்டுபோய் விடுவது போன்ற மெய்யுணர்வினால் நெகிழ்ச்சியில் கண் திறக்க முடியாமல், தூக்கத்தையும் கலைக்க விரும்பாமல் உளறிக்கொண்டிருந்தாள். உறக்கத்திலேயே எழுந்து சென்றாள். தேவலோகத்திற்கு வழி தெரியாமல் அரவமன்றி நடந்துசென்றவளை, ஒரு ஆடல் அழகி கையைப்பிடித்து வேகமாக அழைத்துச் சென்று இந்திர சபையில் அமர வைத்தாள்.

“இதென்ன சபை...? நான் இதுவரை பார்க்காத இடம்; பழகாத மனிதர்கள்; உணராத உணர்ச்சிகள்; மிகவும் பிரம்மிக்கத்தக்க அழகிகள்! நான் எப்படி இங்கு வந்தேன்?” என்று வியந்து சபையில் சங்கமித்தவாறு இருந்தாள். இந்திர சபையில் விழா தொடங்கியது. மன்னனை மகிழ்விக்க பதினெட்டு வாத்தியங்களும் முழங்கின. அதனை, ஆச்சர்யத்துடன் கண்டு இதன் பெயரென்ன என்று ஒருவரிடம் கேட்டாள் யாஷ். அவரோ ‘நாராயண.. நாராயண...’ என்று சிரித்தவாறு அதன் பெயரை முற்றிலும் வினவ, யாழ் வியந்துபோனாள். தேவலோகக் கன்னிகளில் புகழ்பெற்ற வாகினியும், நர்த்தினியும் ஆடலைத் தொடங்கினர். சரியான போட்டி அரங்கேறியது. இருவருக்கும் மத்தியஸ்தம் பண்ண முடியாமல் தவித்த நடுவர்களுக்கு நாரதர் ஒரு வழி கூறினார். “இருவரும் கையில் ஒரு பூச்செண்டினை ஏந்தி ஆடுங்கள். அதை கீழே விழாமல் எவர் இறுதிவரை ஆடுகிறாறோ, அவரே சிறந்த ஆடலரசி” என்று கூறினார்.

“இதென்ன பெரிய ஆட்டம் நம்ம ஊரு ஆட்டத்துக்கு மேல” என்று நினைத்தபடியே அதிர்வின்றி கண்திறக்க முயன்றாள் யாழி. முடியவில்லை... மறுபடியும் தொடர்ந்தாள்... விழா நிகழ்வு தொடங்கியது. இருவரின் பூங்கொத்திலும் ராஜா தேளும், ராணித் தேளும் வைக்கப்பட்டு இருந்தன.

நர்த்தினி ராணித் தேளுடன் ஆட்டத்தை ரம்மியமாக ஆடினாள். வாயாடி வாகினி ராஜாத் தேளின் கொட்டில் கைகள் அரிதாரம் பூசியதைவிட மூன்று பங்கு சிவந்துபோக, பூங்கொத்தினை பொத்தென்று கீழே போட்டாள். இரண்டு நாட்களாகத் தொடர்ந்த ஆட்டத்தில் தோற்ற வாகினியை பூலோகத்தில் போய் வாழுமாறு இந்திரன் கட்டளையிட்டுச் செல்ல, அவரை பின்தொடர்ந்து கூந்தல் பூக்கள் தெறிக்க ஓடிய வாகினி “மன்னரே... சிறு வேண்டுகோள்!” என்று கூறி நின்றாள்.

       “நடன மங்கையே! கூறு, நும் வேண்டுதலைக் கேட்போம்.”

   “இல்லை மன்னா, எமக்கு பூலோக வாழ்வு வேண்டவே வேண்டாம். அதற்கு நான் நரகம் செல்வேன் மன்னா! பொய் பேசும் மாந்தர்களும், புறங்கூறும் மாந்தர்களும் நிறைந்த அவ்வுலகு எனக்கு வேண்டாம்” என்றாள் வாகினி.

       “பூலோகம் செல்வதற்கு நீ மனிதப்பிறவியாக செல்லப்போவது இல்லை. அகிலத்தையும் இயக்கும் இயக்கியாவாய்” என்று மீறமுடியாத கட்டளையை விடுத்து சென்றான் இந்திரன். நர்த்தினியும், மேனகையும் நமட்டுச் சிரிப்புடன் சென்றனர். ஆனாலும், தன் சகோதரியின் பிரிவை எண்ணி உள்ளூர வருந்தினாள் நர்த்தினி.  ராஜாத் தேளின் விஷம் தலைக்கேறிய  பாரத்தில் சற்று கண்ணயர்ந்தாள் வாகினி. இதெல்லாம் பார்த்திருந்த யாழ், வாகினியை துயில் எழுப்பி பூலோகத்திற்கு வழிசொல்லிவிட்டு, தனது வீட்டிற்குச் சென்றாள்.

இதுவரை நனவிலி மனதில் அகக்கண் கனவில் வாகினியுடன் பயணித்த யாழ், தானும் துயில் எழுந்து கல்லூரிக்கு புறப்பட்டாள். யாழிற்கு  அதிகாலை கனவு மனவோட்டமாக  சென்றது. யார் இந்த வாகினி? இவளின் கனவில் ஏன் வந்தாள்? சரி ஏதோ புத்தக பிரம்மையாக இருக்கும் என்று எண்ணி தோழிகளுடன் உணவகம் சென்றாள்.

       மையிருட்டுக் கூடியது. நிலவு வானின் உச்சத்தை தொட்டது. யாழின் கனவு தொடர்ந்தது. பழையனூரில் தாசிக்குலத்தில் ஆண்களின் பரிகாச ஆசைகளை தீர்க்கும் தாசியின் மகள் லெட்சுமியாகவும், சிறந்த தேவநாட்டியக்காரியாகவும் மறுஜென்மமெடுத்தாள் வாகினி. யாழின் கண்கள் இறுகின. கண் திறக்க முற்பட்டு தோற்று, கதையில் ஆர்வமானாள் யாழ்.

     தாசியின் மகளானாலும், கோவலனைக் கண்டு தாசி வேடம் கலைத்து பத்தினியாக நிலைத்த மாதவிபோல, லெட்சுமி தன் தாயின் பேச்சை மீறி (கோயில்) பட்டனை விரும்பினாள். அவனோ, ‘இவள் என்னதான் இருந்தாலும் கணிகைதானே! இவள் நமக்கு வேண்டாம்’ என்று அவளை விட்டு நீங்கி நெடுந்தூரம் சென்றான். .

      லெட்சுமி மகாலட்சுமி போல் அணிகலன் அணிந்து  அவனின் கால்தடம் பார்த்து, அவன் சென்ற வழி அறிந்து, அவனிடம் சென்றாள். இவளைக் கண்ட பட்டன்,

     “ஆஹா  இவள் நம்மை விட மாட்டாள்போல.  இவளை இந்தக் கள்ளிக்காட்டிலே சமாதி செய்து நகையை கழற்றிகொண்டு, நம் நாடு செல்ல  வேண்டியதான்” என்று திட்டமிட்டான்.

     அதன்படி, அவளும் “அத்தான் உங்கள், மடியில் சற்று நேரம் உறங்கிகொள்ளவா? தூக்கம் வருகிறது” என்றாள். அவனும் கண்ணசைக்க, அவன் மடியில் லெட்சுமி.  ஆற்று மணலை மடிதலையணை போல் பரப்பி அவளின் தலையை வைத்தான். அருகில் கிடந்த கருங்கல்லை அவளின் தலையில் தொப்பென்று போட்டான்.

     பட்டனின் முகத்தில் குருதி தெளித்தது. உயிர் போகாமல் துடிதுடித்த நிலையில், “இந்தக்  கள்ளிச்செடியும், கடவுளுமே இக்கொலைக்கு  சாட்சி.  அம்மை அப்பனும் சாட்சி” என்று சாபமிட்டு கண்மூடினாள் லெட்சுமி. 

        அயர்ந்து போன பூசாரி பட்டன் கிணற்றடியில் இளைப்பாறி தண்ணீரை இறைந்தான். அம்மை அப்பனின் மாற்று உருவ கருநாகம் தீண்டி இறந்து விட்டான்.


இவர்களின் கணக்கை ஏற்ற சித்திரகுப்தனின் கட்டளைக்கு இணங்க  சோழ அரசனின் மகளாகப் பிறந்தாள் லெட்சுமி.

        பிறந்ததுமே, “தாய்ப்பால் ஒரே நாற்றமடிக்குது. வெளியே போய் ஆடு, கோழியை அடித்து சாப்பிடுவோம்” என்று கூறி ஓடினாளாம் முன்பிறவியில் லெட்சுமியாகிய நீலி.”

       சோழ வம்ச மரபினர்  இது குழந்தையல்ல… அசுரப்பிறவி என்று அஞ்சி நீலியை காட்டில் விட்டனர். கள்ளிச் செடிகள் தழைத்த காட்டில், பட்டனின் மறுபிறவியை அறிந்து அவனின் வரவிற்காக காத்திருந்தாள் நீலி. கொலைக்கு சாட்சியான கள்ளியை  ஒடித்து ஆண் பிள்ளையாக ஒக்கலில் அமர்த்தினாள். ஊராரை அழைத்து,  “ஐயா இந்த செடிதான் என் கணவன்.  இது அவனது குழந்தை" என்றாள். அதுவும் அப்பா என்று ஓடியது. “என்னை இப்பொழுது சிறு சண்டைக்காக விலகிச் செல்ல பார்க்கிறான்” என்று கூறினாள்.

       மறுபிறவி எடுத்த செட்டி “இவள் யார் என்றே எனக்கு தெரியாது ஐயா! இவள் என்னை கொல்ல பார்க்கிறாள் காப்பாற்றுங்கள்” என்றான்.  ஊரார் அவர்களை சந்தேகித்து செட்டியின் பாதுகாப்பை மனதில் கொண்டு அவனை கல்மண்டபத்தில் தங்க வைத்தனர்.

       நீலி கள்ளிப்பிள்ளையை தாலாட்டும் ஓசையில் ஊரே உறங்கியது. உறங்கும் செட்டியின் நடுநெஞ்சை கள்ளிச் செடியைக் கொண்டு பிளந்தாள் நீலி. பின்னர் ஊராரிடம் செட்டியின் தாய்போல் வேடமிட்டு சென்றாள்

       “ஐயா என் மகன் வணிகச்செட்டி உங்களை நம்பிதானே வந்தான். இப்படி அவன் உயிரை எடுத்தீயளே  என்று கதறினாள்.

       வணிகச் செட்டியிடம் கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற முடியாத நாற்பது ஊரார் அக்னிகுண்டத்தில் இறங்கி உயிரை மாய்த்தனர். பின்னர் நாற்பது ஊர் பெண்களையும், குழந்தைகளையும் கொல்வதற்கு கள்ளிச்செடியில் மோரையும், பாலையும் தயார் செய்தாள்.

         “பாலோ பால்... மோரோ மோர்... இந்த பாலை உங்க குழந்தை குடிச்சுதுன்னா வேற எந்த பாலையும் குடிக்காது என்று பாலையும், மோரையும் கொடுத்து பழி தீர்த்த கையுடன் ஈசனிடம் வரம்  கேட்கச் சென்றாள். ஈசனும் அவருக்கு அருள்பாலித்தார். “நினைத்த இடமெல்லாம் நீலி தேவதையாக கண்கண்ட இடமெல்லாம் காட்சி தந்திடுவாய்!” என்று வரமளித்தார்.

   யாரோ முகத்தில் தலையணையை எறிவது போன்ற உந்துதலில்  முழித்தாள் யாழ். “ஐயோ மணி 9.30 ஆகிடுச்சா” என்று அம்மாவின் அர்ச்சனையில் வேகமாக கல்லூரிக்கு கிளம்பினாள்.  செல்லும் வழியில் இசக்கி தேவி ஆலயத்தை கண்டு ஒரு கும்பிடு போட்டாள். அங்குள்ள பெண் யாழை அழைத்து “நீ என்னை தேடி இப்போதுதான் வந்தாய். ஆனால், நான் உன்னிடம் தினமும் வருகிறேன்” என்று கூறினாள். “கனவுக் கதையை நம்மிடம் கூறியது அம்பாளா!” என்று கூறி யாழ் திரும்பியதும் அப்பெண் மறைந்தாள். அதிலிருந்து இயக்கியம்மனின் (இசக்கி அம்மன்) குழந்தையாக தன்னை எண்ணி அவளை வலம் வருகிறாள் யாழ்.




No comments:

Post a Comment