Thursday, 14 December 2023

பாலாரிஷ்ட வழிபாடு,



புத்திர பாக்கியத்தை விரும்பாதவர் யாரும் இல்லை. திருமணமான நாளில் இருந்தே வம்சம் தழைக்க ஒரு வாரிசு எப்போது பிறக்கும் என்று எதிர்பார்ப்பது மனித இயல்பு. அப்படி பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்தால்தானே சந்தோஷம் இருக்கும்? ஆனால், ஜோதிடத்தில் பாலாரிஷ்ட தோஷம் என்று ஒன்று இருக்கிறதே..?

அது என்ன பாலாரிஷ்டம்?

ஒரு குழந்தை எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் ஆரோக்கியமாகப் பிறக்கவேண்டுமானால், பெற்றோர்களின் ஜனன ஜாதகத்தில் சத்புத்திரயோகம் இருக்க வேண்டும்.


அப்படி இல்லாமல் கருவில் உருவான குழந்தை கை - கால்கள் ஊனத்துடனோ, மன வளர்ச்சி இல்லாமலோ பிறக்கும் நிலையில், பெற்றோர்களுக்கும் பிள்ளைக்கும் பாலாரிஷ்டம் உள்ளதென்று சொல்லலாம். பால - குழந்தைப் பருவம்; அரிஷ்டம் - நோய் என்று பொருள்.

குழந்தை பிறக்கும்போது ஏற்படக்கூடிய உடல் குறைபாடு மற்றும் மனவளர்ச்சிக் குறைபாடு மட்டும்தான் பாலாரிஷ்ட தோஷம் என்பது இல்லை. வளரும் பருவத்தில் விபத்து மற்றும் அதிர்ச்சிகளின் காரணமாக ஏற்படக்கூடிய உடல் குறைபாடு, மனச்சிதைவு போன்றவற்றுக்கும்கூட காரணம் பாலாரிஷ்ட தோஷம்தான்.

பாலாரிஷ்ட தோஷத்திற்கான அறிகுறிகள்:

* சுய நினைவில்லாமலும், பால் குடிக்காமலும், அழாமலும் அமைதியாக இருத்தல்.

* மூக்கு சப்பையாகவும் கண்கள் சொருகியது போன்றும் இருத்தல்.

* கால்கள் மடங்கி, உட்கார முடியாமல் கஷ்டப்படுதல்.

* வயிற்றுப் பக்கம் சுருக்கமாகி வளைந்தது போல உடல் அமைப்பு காணப்படுதல்.

* சுய நினைவு இல்லாமல், பால் அருந்தாமல், பிரக்ஞை இல்லாமல் படுத்துக் கிடக்கும் நிலை.

* மூன்று மாதங்கள் ஆனபிறகும் இமைகளைத் திறக்காது, கண்களில் வெண்மையாகக் காணப்படுதல்.

* ஊமைத்தன்மை, காது கேளாமை.

* கைகள் இல்லாமல், காதுகள் உள்சுருங்கி, தலை பள்ளமாகி அமைந்திருத்தல்.

இவ்வாறு இன்னும் 76-க்கும் மேற்பட்ட பாலாரிஷ்ட தோஷங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பொதுவாக, பாலாரிஷ்ட தோஷங்களில், 1. அங்க ஹீன பாலாரிஷ்ட தோஷம், 2. ஜென்ம அரிஷ்டம், 3. சந்ததி விருத்தியா பாலாரிஷ்ட தோஷம் என மூன்று வகைகள் இருக்கின்றன. இதுபற்றிப் பெற்றோர்கள் கவலைப்படவேண்டியதில்லை. உரிய பரிகாரங்களைச் செய்து பலன் பெற முடியும்.

பாலாரிஷ்டம் வரும் கிரஹ நிலைகள்:

சூரியன், புதன், கேது, சிம்மத்தில் அமர்ந்து குரு நீசம் பெற்றிருந்தாலும், நவாம்சத்தில் குருவும் கேதுவும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்தாலும், புதனும் குருவும் 12-லும் ஞானகாரகன் கேது 5-ம் இடத்தில் இருந்தாலும் இந்நிலை ஏற்படக்கூடும்.

புத்திரகாரகனான குரு, பெற்றோர்களது ஜனன ஜாதகத்தில் பலவீனமாக அமைந்தாலும் குழந்தைக்குப் பாலாரிஷ்ட தோஷ நிலை தாக்கக்கூடும் என்கின்றன ஜோதிட விதிகள்.

பாலாரிஷ்ட தோஷம் நீங்க... சிசுவின் ஜனன ஜாதகத்தில் ஆயுள்காரகனாகிய சனியின் அஷ்டவர்க்கம்வரை உள்ள ஸ்தான நிலை, குழந்தையின் தசாபுக்திக் காலம் என்ன, நட்சத்திரப்படி கோள்களின் அசைவுகள் என்ன சொல்கின்றன, குழந்தை பிறந்தபோது பெற்றோருக்கு நடைபெற்ற தசாகாலம் போன்றவற்றுக்குத் தக்கபடி, செய்யவேண்டிய பரிகாரங்கள் உள்ளன. சூரிய தசை - ராகு, கேது புக்திகளில் அதற்கு உரிய பூஜாக்ரமங்களைச் செய்துவிட வேண்டும்.

செவ்வாய் தசையில் ராகு அல்லது கேது புக்தி, சனி தசையில் ராகு அல்லது கேது புக்தி, ராகு, கேது தசையில் புதன் புக்தி போன்ற காலங்களில் பாலாரிஷ்ட பாதிப்புக்கு உள்ளான குழந்தைகள் கடுமையான சோதனைகளை, அழற்சியைச் சந்திக்க நேரிடும்.


வழிபடும் முறை: குழந்தை பிறந்த நட்சத்திர தினத்தன்று (கரி நாள் இல்லாத) அல்லது சனி, செவ்வாய்க்கிழமைகளில் உன்மத்த பைரவரை அவருடைய சக்தி தேவியான வராஹியுடன் சேர்த்து கலசத்தில் வர்ணித்து ஒன்பது செங்கற்களால் யக்ஞ மண்டலமிட்டு 108 யாகக் கூட்டுப் பொருளால் உன்மத்த பைரவ மூர்த்தியை அவரது காயத்ரி மற்றும் மூலமந்திரத்தால் விசேஷ ஆவர்த்தி செய்து, பெற்றோர் மடியில் குழந்தையை வைத்து கலச நீரை மங்கள ஸ்நானம் செய்து விட வேண்டும்.

பராக்கியம், வாருண பத்ததி ஆகிய நூல்களில் உன்மத்த பைரவ மூர்த்தி அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோத பைரவர் வரிசையில் ஐந்தாவது மூர்த்தியாக வீற்றுள்ளார்.

முதலில் விக்னேஸ்வர பூஜை, குரு வந்தனத்தைச் செய்த பிறகு,

'மமபுத்திர பாலாரிஷ்ட தோஷ

நிவாரணார்த்தம் ஆரோக்ய திடகாத்ரதா சித்யர்த்தம், பாலக்ரஹ துர்தசாகால சாந்தியர்த்தம், பாலஹிஷ்ட நிக்ரஹ ப்ரார்த்தனா காலே உன்மத்த பைரவ பூஜாம் கரிஷ்யே!’ என்று சங்கல்பம் செய்து, கலசத்தில் பைரவரை வரிக்கவும். தொடர்ந்து,

ஓம் உன்மத்த பைரவாய நம: ஓம் பூதபாவநாயநம: ஓம் க்ஷேத்ர பாலாய நம: ஓம் கால சமனாய நம: ஓம் த்ரிநேத்ராய நம: ஓம் அரிஷ்ட நிக்ரஹாய நம: ஓம் கங்கானாய நம: ஓம் வராஹி சக்தி சகிதாய நம: ஓம் கட்க பாணினே நம; ஓம் பசுபதயே நம: ஓம் சாந்திதாய நம: ஓம் நாகஹாராய நம: ஓம் வைத்யாய நம: ஓம் துஷ்டபூத நிவேவிதாய நம: ஓம் சர்வாபத் தாரணாய நம; ஓம் அஷ்ட மூர்த்தயே நம:

என்று அர்ச்சனை செய்து, கை கூப்பியபடி தியான மந்திரம் கூறுக:


உன்மத்த பைரவ தியானம்:

த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
ஹேம வர்ணம் மகாதேவம் அஸ்வவாஹன சுஸ்திதம்
கட்கம் கபாலம் முசலம் ததந்தம் கேடகம் ததா
வராகி சக்தி சகிதம் வந்தே உன்மத்த பைரவம்:

மூலமந்திரத்தால் எளிய யாகமுறை செய்து, தூப தீபம் காட்டி மிளகுவடை, பேரீச்சம் பழம், மிளகு சாதம், கொண்டைக் கடலை சுண்டல், தயிர் சாதம், கறிவேப்பிலைசாதம் இவற்றில் ஏதேனும் ஒன்றை நிவேதனம் செய்து, ஆரத்தி செய்ய வேண்டும். பாலாரிஷ்ட ரட்சை ஒன்றை கலசம் நடுவில் செய்து வைத்து,

அதில் ஜவ்வாது புனுகு தடவவும்.

பூஜை முடிந்ததும் ஓம் ------------ (குழந்தை பெயர்) பாலகம் ரக்ஷ: ரக்ஷ: என்று 108 முறை ஜபம் செய்ய வேண்டும். பிறகு இப்பாடலை 3 முறை சொல்லி வணங்கிவிட்டு கலச நீரில் பெற்றோரும் குழந்தையும் குளித்தல் வேண்டும்.

தெருட்கபரு நலன வாவித் தீவிர தலத்துற்றோர்க்கு
மருட்பெரு மாயை நூறி வல்வினைப் படலங்கீறி
கருட்பெருங் கொடிய துக்க நிவர்த்தியும் அகத்தின் பேறும்
அருட்பெருஞ்செயலா நல்கும் வடுகனை அடைந்து வாழ்வாம்.

பாலாரிஷ்ட ரட்சை செய்முறை: பனை ஓலையிலோ, தாமிரத் தகட்டிலோ இந்த ரட்சையைச் செய்யலாம். பனை ஓலையில் செய்வதானால் குங்குமப்பூ, கோரோசனை, பச்சைக் கற்பூரத்துடன் ஊமத்தை இலைச்சாறு விட்டுக் குழைத்து இந்தச் சக்கரத்தை குழந்தையின் நட்சத்திர நாளில் எழுதி குலதெய்வ பூஜை செய்து, உன்மத்த பைரவரை தியானித்து பூஜை செய்து வெள்ளி தாயத்தின் உள்ளே வைத்து கழுத்திலோ, இடுப்பிலோ கட்டி விட வேண்டும். இதன் பலனாக, மன வியாதி, மந்த நிலை ஆகியன விரைவிலேயே விலகி குழந்தை ஆரோக்கியம் பெறும். தொடர்ந்து, வல்லாரை இலைத்தூள் 100 கிராம், வசம்பு 25 கிராம் சேர்த்து இடித்துத் தூள் செய்து தேனில் குழைத்து, குழந்தைக்குக் கொடுத்து வந்தால் ஒரு வருடத்தில் குழந்தையின் உடல் மற்றும் மனநிலையில் திருப்திகரமான முன்னேற்றம் தெரியும்.


No comments:

Post a Comment