Sunday, 14 January 2024

நைஷ்கர்ம்ய சித்தி என்பதன் பொருள்

 நைஷ்கர்ம்ய சித்தி என்பதன் பொருள் ஆத்ம ஸ்வரூபத்தை அடைதல் என்பதாகும். அதாவது தன்னுடைய இயல்பான ஸ்வரூபத்தை அடைதலாகும். ஆத்மா தன்னிடத்திலேயே இருந்தாலும் அதை உணரவிடாமல் அறியாமை மறைத்திருக்கிறது. எனவே அறியாமை நீக்கிவிட்டால் ஆத்மஸ்வரூபத்தை அடைந்தவிடலாம். அந்த அறியாமையை நீக்கக்கூடிய அறிவை கொடுப்பதே இந்த நூலின் குறிக்கோள்

 
வேதாந்த சாஸ்திரம் (உபநிஷத்) ஆத்மஞானத்தை நேரிடையாக கொடுக்கக்கூடிய ஒரே பிரமாணமாகும். கண்கள் பார்க்கின்ற பொருளைப் பற்றிய அறிவைக் கொடுக்கக்கூடிய பிரத்யக்ஷ பிரமாணமாக இருப்பதைப் போல உபநிஷத் ஆத்மஞானத்தை கொடுக்கக்கூடிய பிரத்யக்‌ஷய பிரமாணமாக இருக்கிறது. கண்கள் அனாத்மா விஷயங்களை அறிவதற்கு உதவும் பிரமாணம், உபநிஷத் ஆத்ம விஷயத்தை அறிவதற்கு உதவுகின்ற பிரமாணமாகும்.  இரண்டு பிரமாணங்களும் கொடுக்கின்ற அறிவை வேறெந்த பிரமாணத்தாலும் நீக்கவும் முடியாது, சரிபார்க்கவும் முடியாது. வேதாந்தத்தை சாஸ்திரத்தின் கண்கள் என்றும், பிரத்யக்ஷம் என்றும் அழைக்கப்படுகிறது.
 
வேதாந்தம் மகாவாக்கியத்தின் மூலம் நானே பிரம்மனாக இருக்கிறேன் (அஹம் பிரம்ம அஸ்மி) என்ற அறிவைக் கொடுத்தாலும், அந்த அறிவில் நிலைபெற முடிவதில்லை, காரணம் நம்முடைய புத்தியில் உள்ள குறைகள்தான். இந்த குறைகள் நீங்கிவிட்டால் அடைந்த அறிவில் நிலைத்துநிற்க முடியும், சம்சாரத்திலிருந்த முழுவதுமாக விடுபட்டு விடுவோம். எனவே ஆத்மஞானத்தை அடைந்தாலும் ஞானநிஷ்டை அடைவதற்கு புத்தியிலுள்ள குறைகளை நீக்குவதற்கு தொடர்ந்து முயற்சியை மேற்கொண்டு வரவேண்டும். வேதாந்த மகாவாக்கியம் அறிவை கொடுக்கும், பிரகரண கிரந்தங்கள் நம் புத்தியிலுள்ள குறைகளை நீக்குவதற்கு உதவி செய்வதால் அடைந்த அறிவு சுபாவமாக மாறிவிடும்.
 
நைஷ்கர்ம்ய சித்தி ஒரு பிரகரண கிரந்தமாகும். இது த்வம்(நான்) என்ற சொல்லின் பொருளை புரிந்து கொள்ள தடையாக இருக்கின்ற புத்தியிலுள்ள உள்ள குறைகளை, சந்தேகங்களை நீக்குகிறது. பலர் இந்த த்வம்(நான்) என்ற சொல்லின் பொருளைப் புரிந்துக் கொள்ள கஷ்டப்படுகிறார்கள் என்று ஆசாரியாக நினைக்கிறார்.
 
இந்த நூல் நான்கு அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அவைகளாவது,
 
அத்தியாயம்-1:       
இதில் மோட்சத்தை அடைய உதவும் வழியைப் பற்றி பேசப்படுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் மோட்சம்தான் அடையவேண்டிய இறுதி லட்சியமாகும். எனவே அதை அடைய உதவும் வழிகளைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. கர்மத்தின் பயனென்ன என்பதையும், வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள கர்மங்களைப் பற்றி;யும், ஞான காண்டத்தில் கூறப்பட்டுள்ள உபதேசங்களைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. மோட்சத்தை உடைய நோரிடையான வழி எது கர்மமா அல்லது ஞானமா என்பதையும் விவாதிக்கப்படுகிறது.. மற்ற மதங்களின் தத்துவங்களைப் பற்றியும் பேசப்படுகிறது. ஞான-கர்ம சமுச்சயம் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.
 
அத்தியாயம்-2:       
த்வம் பத விசாரத்தைப்பற்றி பேசப்படுகிறது. நான் என்ற சொல்லின் உண்மையான பொருளை சரியாக புரிந்து கொள்ளவில்லையென்றால் மகாவாக்கியமான அஹம் பிரம்ம அஸ்மி என்பது பொருளற்றதாகிவிடும். எனவே த்வம் பதார்த்த விசாரம் அவசியம் செய்யவேண்டியதாக இருக்கின்றது.. இது ஆத்மா-அனாத்மா விவேகத்தைப் பற்றியும் விசாரம் செய்ய உதவுகின்றது.
 
அத்தியாயம்-3:       
ஆசாரியார் மகாவாக்கியமானது கேட்பவர்கள் மனதில் எப்படி செயல்படுகிறது என்பதையும், எப்படி ஞானத்தை உண்டு பண்ணுகிறது என்பதைப் பற்றியும் விரிவாக கூறியிருக்கிறார். மகாவாக்கியத்தினால் மட்டுமே நோரிடையாக ஆத்மஞானத்தை அடைய உதவுகின்றது. அதை சாரியாக புரிந்து கொண்டுவிட்டால் வேறெந்து சாதனமும் மோட்சத்தை அடைவதற்கு தேவை இரிருக்காது. ஆனால் இதை சாரியாக புரிந்து கொள்வதற்கு புத்தியிலுள்ள குறைகள் அனைத்தும் நீங்கியிருக்க வேண்டும்.
 
மேலும் ஆசாரியார் மகாவாக்கிய சிரவணம்தான் மிகமுக்கியமான ஞானயோக சாதனம். ஏனென்றால் இந்த சாதனமே ஆத்ம ஞானத்தை அடைவதற்கு போதுமானதாக இருக்கிறது. மனனம், நிதித்யாஸனம் இவைகளை விட சிரவணம்தான் மிகவும்  முக்கியமானது.  மேலும் அக்ஞானத்தின் ஸ்வரூபத் தன்மையையும் இந்த அத்தியாயத்தில் விளக்கியிருக்கிறார்.
 
அத்தியாயம்-4         
இதில் முதல் மூன்று அத்தியாயத்தில் கூறியுள்ள கருத்துக்களைத் தொகுத்து கூறியிருக்கிறார். பிறகு ஜீவன் முக்தி நிலையைப்பற்றியும், ஞானி எப்படி பிராரப்த கர்மப்பலனை எதிர்கொள்கிறான் என்பதைப் பற்றியும் கூறியிருக்கிறார்.
 
முதல் அத்தியாயத்தில் ஆசாரியார் இரண்டு கருத்துக்களை மிகவும் வலியுறுத்தி கூறியிருக்கிறார். அவைகளாவது:
 எல்லா மனிதர்களுக்கும் ஒரு குறிக்கோள் உள்ளது. இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. இந்த குறிக்கோள் இயல்பானது, தேர்ந்தெடுக்கவோ அல்லது சிந்தித்து எடுக்கும் குறிக்கோள் கிடையாது. முதல் அம்சமானது துக்கத்தைப் போக்கிக்கொள்வதாகும். மனிதனுக்குரிய இயல்பான போக்கு மனதுக்கு வரும் வலியையும், உடலுக்கு வருகின்ற வலியையும், புத்திக்க வருகின்ற துன்பத்தையும் போக்கிக்கொள்வதற்கு முயற்சி செய்வதுதான். துன்பத்தைப் போக்கிக் கொள்வது எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. எனவே இது சுபாவமாகவே இருக்கிறது. இரண்டாவது அம்சமானது சுகத்தை அடைதலாகும். உலகத்திலுள்ள இன்பங்களை அடையவேண்டும் என்ற இயல்பான மனதை உடையதாகும்.
ஆத்மஞானத்தை அடையாமல் துன்பத்திலிலுந்து முழுவதுமாக விடுதலை பெறமுடியாது. நமக்கு வருகின்ற துன்பங்கள் அனைத்தும் மூன்று விதமான வழிகளிலிருந்த வருகின்றது. அத்யாத்மிகம், ஆதிபௌதிகம், அதிதைவிகம் ஆகிய  மூன்று வழிகளிலிருந்து ஆத்ம அக்ஞானத்தால் அனுபவிக்கப்படுகிறது. எனவே துன்பத்திலிருந்து நிலையாக விடுபெற வேண்டுமானால் அக்ஞானம் முற்றிலுமாக நீங்கிவிடவேண்டும்.  ஆத்மஞானத்தை அடைவதன் மூலமாகத்தான் அக்ஞானத்தை முழுவதுமாக நீக்கிக் கொள்ளமுடியும். ஆத்மஞானமானது அக்ஞானத்தை அடியோடு நீக்கிவிடும். அக்ஞானம் நீங்கிவிட்டால் எல்லாவிதமான துன்பங்களும் அடியோடு நீங்கிவிடும்.     
ஆனால் மனிதனின் பகுத்தறிவு இந்தக் கருத்தை ஒத்துக் கொள்ளாது. இதை நன்கு அறிந்துள்ள ஆசாரியார் இந்த நூலில் அக்ஞானம் நேரிடையாக நாம் அனுபவிக்கின்ற துன்பங்களுக்கு காரணமாகாது, ஆனால் மறைமுகமாக எவ்வாறு துன்பத்திற்கு காரணமாகிறது என்பதை கீழ்கண்ட கருத்துக்கள் மூலம் புரிய வைக்கிறார்.
 தன்னைப்பற்றிய அறியாமை இருமையை தோற்றுவிக்கிறது.
இந்த இருமையை ஏற்றுக் கொள்வதால், உலகத்தில் இருக்கும் பொருட்களில் வேண்டுவது, வேண்டாதது, பிடித்தது, பிடிக்காதது என்று பிரித்து வைத்துக் கொள்கிறோம்.
இதிலிருந்து ஆசை, கோபம், பற்று, வெறுப்பு போன்ற உணர்ச்சிகள் மனதில் உருவாகின்றது.
இவைகள் நம்மை தர்ம-அதர்ம காரியங்களைச் செய்யத் தூண்டுகிறது.
கர்மங்கள் செய்வதால் அதற்கான பலன்களான பாவ-புண்ணியங்கள் சேருகிறது.
புண்ணிய பலன்கள் மீண்டும் மனிதபிறவியெடுக்க வைக்கிறது, உடலின் மீது அபிமானம் கொள்ள வைக்கிறது.
ஸ்தூல, சூட்சும உடலின் மீது வைக்கின்ற அபிமானமே துக்கத்திற்கு காரணமாகின்றது.
எனவே துன்பத்தை போக்கிக் கொள்ள வேண்டுமானால், உடல் மீது வைத்திருக்கின்ற அபிமானத்தை நீக்கிவிட வேண்டும். இதனால் கர்மபலன்களை தரக்கூடிய செயல்களை செய்யமாட்டோம். ஆசை, கோபம், பற்று ஆகியவைகள் நீங்கப்பெற்று, இருமையை நீக்கிவிடுவோம். இதனால் ஆத்மாவைப் பற்றிய அறியாமை நீங்கி விடும். இது ஆத்மஞானத்தை அடையவைத்துவிடும். ஆத்ம ஞானத்தை தவிர்த்து வேறெதனாலும் துன்பத்தை நிலையாக நீக்க முடியாது. இந்த உண்மையை உணர்ந்தவர்களுக்காக இந்த நூலானது என்னால் எழுதப்பட்டிருக்கிறது.
 
பிரம்மா முதல் சிறுஉயிரினங்கள வரையுள்ள அனைத்துமே இயல்பாகவே துன்பத்தை போக்கிக் கொள்ளவே முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள். அகங்காரமும், மமகாரமும் இந்த தேகத்தோடு சம்பந்தமுடையது. இந்த உடலானது வயோதிகம், நோய், மரணம் இவைகளின் பிடியில்தான் இருக்கிறது. ஆகவே இந்த தேகத்தோடு சம்பந்தம் வைத்துக் கொண்டிருக்கும் வரையில் துன்பத்தின் பிடியிலிருந்த விடுபடவே முடியாது. ஆழ்ந்த உறக்கத்தில் தேகசம்பந்தமே இல்லாமல் இருப்பதால் நம்மால் எந்தவிதமான துன்பத்தையும், உடல்வலியையும் அனுபவிப்பதில்லை.
 
இந்த உடல் இறந்தபிறகு தேகசம்பந்தமற்று போய்விடுவதால் மோட்சம் அடைந்து விடமாட்டோமா என்ற சந்தேகம் வரலாம். நாம் முற்பிறவியில் செய்த பாவ-புண்ணிய பலன்களினால் இந்த தேகம் தோன்றியிருக்கிறது. இந்த தேகம் வீழ்ந்தபின் இனி வெளிப்படப் போகும் பிராரப்த கர்மத்தின் அடிப்படையில் வேறொரு தேகம் எடுப்போம், சம்சாரத்தை அனுபவிப்போம். இந்த சம்சார சக்கரத்திலிருந்து விடுபட வேண்டுமானால் ஆத்மஞானத்தை அடைவதை தவிர வேறெந்த வழியும் கிடையாது.
 
பாவ-புண்ணிய கர்மபலன்களை அனுபவித்து தீர்க்கவே முடியாது. நாம் செயல்கள் செய்வதன் மூலம் இவைகளில் ஏதாவதுவொன்று சேர்ந்து கொண்டேயிருக்கும். சஞ்சித கர்மம் என்கின்ற கர்மபலன் தொகுப்பில் இவை சேர்ந்து கொண்டிருக்கும். வெளிப்பட்ட சிறு பாவ-புண்ணிய பலன்கள் மூலம் கிடைத்த சரீரத்தைக் கொண்டு இவைகளை மட்டும்தான் தீர்க்கமுடியும். அதேசமயம் இந்தப் பிறவியில் சேர்க்கின்ற பாவ-புண்ணியங்கள் ஆகாமி என்கின்ற பாவ-புண்ணிய தொகுப்பில் சேர்ந்து கொண்டிருக்கும். தேகம் வீழ்ந்தவுடன் ஆகாமி கர்மத்தில் உள்ளவைகள் சஞ்சித கர்மபல தொகுப்பில் சேர்ந்துவிடும். ஆகவே கர்மங்கள் செய்வதன் மூலம் கர்மபலன்களும் சேர்ந்து கொண்டே போகும். எனவே கர்மத்தை யோகமாக செய்வதன் மூலம் பலன்கள் எதுவும் புதியதாக உருவாகாது. ஆத்மஞானத்தை அடைவதற்கு தகுதிபடுத்திவிடும்.. ஆத்மஞானம் மூலம் சஞ்சித, ஆகாமி; கர்மபலன்கள் அழிக்கப்பட்டு வெளிப்பட்ட பிராரப்தம் மட்டும் செயல்பட்டு கொண்டிருக்கும்.
 
விருப்பும், வெறுப்பும் ஒருவனை செயலில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும். இவைகள் நீங்கிவிட்டால் செயல் செய்ய வேண்டிய சூழிநிலையே ஏற்படாது. அதனால் கர்மபலன்களும் ஏற்படாது. பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் இதையேதான் கூறியிருக்கிறார். ஆசையும், கோபமும் ஒருவனை தர்ம-அதர்ம செயலில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும்.
 
இதிலிருந்து விருப்பு, வெறுப்பை நீக்கிவிடவேண்டும் என்று தோன்றுகிறது. இருந்தாலும் நம்மால் அவ்வாறு செய்யமுடிவதில்லை. காரணம் நாம் இந்த உலகத்தை எனக்கு பிடித்தமானவைகள் (உறவு, சூழ்நிலை, மக்கள் இவைகள் மூலம் இன்பத்தை அனுபவித்தல்), பிடிக்காதவைகள் (உறவு, சூழ்நிலை, மக்கள் இவைகள் மூலம் துன்பத்தை அனுபவித்தல்), என்று பிரித்து வைத்திருக்கிறோம்.
 
இந்த உலகத்தில் பிடித்தமானவைகள், பிடிக்காதவைகள் என்று பாகுபடுத்தி வைத்திருப்பதாலதான் ஆசையும், கோபமும் மனதில் வருகின்றது. இருமையை பார்க்கின்ற வரையில் இந்த பாகுபாட்டை நீக்கிக் கொள்ளமுடியாது. இந்த உலகத்தை ஈஸ்வரனாக பார்க்கின்ற மனதை அடையவேண்டும். இந்த உலகமே பிரம்மமயமாக உணர்கின்ற மனநிலையை அடைந்திட வேண்டும். அப்போதுதான் உலகத்தை பிடித்தவைகள், பிடிக்காதவைகள் என்ற வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
 
பொய்யான இந்த உலகத்தை விசாரிக்காமல் உண்மையை தெரிந்துக் கொள்ள முடியாது. வேதாந்தத்தில் பொதுவாக எடுத்துக்காட்டுகின்ற உதாரணங்களான சிப்பியில் வௌ;ளி என்ற உதாரணமானது ஆசையினால் செயலை செய்ய தூண்டுவதற்கும், கயிற்றில் பாம்பு என்ற உதாரணமானது பயத்தினால் செயல் எதுவும் செய்யாமல் ஓடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. வேதாந்தம் இந்த உலகமே சிப்பியில் பார்க்கும் வௌ;ளியைப் போலவும், கயிற்றில் பார்க்கும் பாம்பைப் போலவும் நாம் பார்த்துக் கொண்டிருப்பதால் செயலில் ஈடுபடுவதற்கும், செயல் செய்யாமல் நீங்கியிருப்பதற்கும் காரணமாக இருக்கிறது. சரியான முறையில் விசாரம் செய்யாததால் இந்த தவற்றை நாம் செய்கின்றோம். தோன்றிக் கொண்டிருக்கும் இந்த உலகமே பிரம்மமயமானது என்ற உறுதியான நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால். உலகமே ஈஸ்வர ஸ்வரூபமாக பார்க்க முடியும். பகவான் கிருஷ்ணரும் இந்த உலகத்தில் என்னைத் தவிர வேறெதுவும் கிடையாது என்று கூறியிருப்பதை சிந்தித்துப் பார்த்து தெளிவடைய வேண்டும்.
 
ஆதலால், எல்லோரிடத்திலும் அறியாமை இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. இருமையிருக்கும்வரை சம்சாரம் தொடர்ந்து கொண்டிருக்கும், துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்போம்.  ஆசாரியார் இரண்டு அடைமொழிகளை ஆத்மாவிற்கு கொடுக்கிறார். அவைகள் ஒன்று அத்விதீயம் (இரண்டற்றது), மற்றொன்று தானே பிரகாசித்துக் கொண்டேயிருக்கிறது என்பதாகும். அதாவது அதை காட்டிக் கொடுப்பதற்கு வேறெந்த பிரமாணமும் தேவை கிடையாது.  சுய அறியாமையே எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது.. எங்கிருந்தும் வராதது, எங்கும் செல்லாதது, எதையும் சார்ந்திருக்காது இவைகளே உண்மையான ஆனந்தத்தின் இயல்பாகும். சுய அறியாமை இந்த ஆனந்தத்ததை மறைத்திருக்கிறது.
 
உண்மையான ஆனந்தம் வந்துபோவதல்ல, எப்பொழுதும் நிலையாக இருக்கூடியதாகும். மற்ற ஆனந்தங்கள் நிலையற்றவை, வந்து போகக்கூடியது. சமாதி நிலையில் அனுபவிக்கின்ற ஆனந்தமும் உண்மையான ஆனந்தமல்ல, அதனுடைய பிரதிபிம்பமே அனுபவிக்கப்படுகிறது.  ஆத்மானந்தம் என்பது அனுபவிக்கக்கூடியது இல்லை. எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பதே நம்முடைய உண்மையான ஸ்வரூபம். இந்த ஆத்மானந்தம் வெளியேயுள்ள எந்தவொன்றையும் சார்ந்திருப்பது கிடையாது. ஆனால் அனாத்மானந்தம் வெளியேயுள்ள பொருட்களையும், சூழ்நிலைகளையும் சார்ந்திருக்கிறது. ஆத்மானந்தம் காலத்தையும் சார்ந்திருப்பது கிடையாது.
 
ஒரு பெரியத் துணியைக் கொண்டு நம்முடலை மறைக்கலாம். ஆனால் எல்லையே இல்லாததும், எப்பொழுதும் அனுபவித்துக் கொண்டிருப்பதும், தானே பிரகாசித்துக் கொண்டிருப்பதுமானதும், நிலையானதுமான ஆத்மாவை எப்படி அறியாமையால்  மறைக்க முடியும்? ஆத்மாவைப் பற்றிய அறிவேயில்லாதவனுக்கு ஆத்மா மறைக்கப்பட்டிருப்பதாகதான் கூறமுடியும்.
 
அவித்யாவின் இரண்டு சக்திகளான விக்ஷேபம், ஆவரணம் இவைகள்தான் மனிதர்களின் துன்பத்திற்கு காரணங்களாகும். அறியாமையால் துன்பத்தை அனுபவிக்கின்றோம். நம் இயல்பான ஆனந்த ஸ்வரூபமானது இநத இரண்டு மாபெரும் சக்தியால் மறைக்கப்பட்டிருப்பதால் நிலையற்ற இன்பத்தை நாடி நாம் சென்று கொண்டிருக்கின்றோம். இவையிரண்டும் சேர்ந்தவையே சம்சாரமாகும். எனவே இந்த அறியாமையை போக்கிக் கொள்வதே நம்முடைய முக்கியமான குறிக்கோளாகும்.
 
இந்த அக்ஞானத்தை ஆத்மஞானத்தை அடைவதன் மூலம்தான் போக்கிவிட முடியும். வேறெந்த வழியும் கிடையாது. இருட்டறையில் உள்ள பொருட்களை பார்ப்பதற்கு வெளிச்சம் மட்டும்தான் தேவை வேறெதுவும் தேவையில்லை அதுபோலதான் இந்த ஞானம். பக்தியோகமோ, உபாஸன யோகமோ, ராஜயோகமோ, ஹதயோகமோ இதற்கு பயனபடாது. மனத்தூய்மையை அடைவதற்கு பலவழிகள் உண்டு, ஆனால் அறியாமையை நீக்கிக் கொள்வதற்கு ஆத்மஞானத்தை அடைவதை தவிர வேறெந்த வழியும் கிடையாது. நாம சங்கீர்த்தனம் சித்தசுத்தியைத்தான் கொடுக்குமே தவிர மோட்சத்தை கொடுக்காது. இந்த ஆத்மஞானத்தை வேதாந்தத்தை தவிர வேறெதனாலும் கொடுக்க முடியாது. குருமுகமாக மகாவாக்கியத்தை நன்றாக விசாரம் செய்து அடையப்படுவதே ஆத்மஞானமாகும். இதை அடைவதற்கு நீண்டகாலமானாலும், இதைத்தவிர வேறெந்த உபாயமும் கிடையாது.
 
இத்துடன் முகவுரையை முடித்துவிட்டு, மங்கள ஸ்லோகத்துடன் விசாரத்தை தொடங்குகிறார்.
 
நான் பகவான் ஹரிக்கு என் நமஸ்காரத்தை செலுத்துகிறேன். சாட்சி ஸ்வரூபமாகவும், அறிவு ஸவரூபமாகவும், அறியாமை என்கின்ற இருளைப் போக்கக்கூடியவரும், கயிற்றில் தோன்றும் பாம்பு போல அவரிடத்திலிருந்து ஆகாசம், காற்று, நீர், நெருப்பு, பூமி ஆகியவைகள் தோன்றின.
 
பிறகு குருவுக்கு நமஸ்காரம் தெரிவிக்கின்றார். தன்னிடத்திலிருந்த அறியாமை என்கின்ற முடிச்சுக்களை அவிழ்த்துவிட்ட குருவுக்கு வணக்கம் செலுத்துகின்றார்.
 
இந்த நூலின் மூலம் தெளிவாக சொல்ல விரும்பும் முக்கியக் குறிக்கோளான, வேதாந்தத்தில் மறைந்திருக்கும் முழுமையான உண்மையை எடுத்துச் சொல்கிறேன் என்று உறுதி கூறுகிறார்.
 
முழுமையான உண்மையென்பது சுத்த சைதன்யமாகும். இது எல்லாப ;பொருட்களுக்கும் இருப்பைக் கொடுக்கிறது. எல்லாபொருட்களிலும் இருக்கிறது, ஆனால் அதனிடத்தில் எதுவும் கிடையாது. எல்லாப்பொருட்கள் அழிந்தாலும் அதுமட்டும் இருந்து கொண்டிருக்கும். இதை கேட்கும் போது இந்த தத்துவத்தை அறிந்துக் கொள்ள மனம் விரும்புகிறது. உபநிஷத் நீயேதான் அந்த சுத்தசைதன்யம் என்று சொல்கிறது.
 
வேதாந்தம் இந்த தத்துவத்தை உபதேசிக்கும் போது மூன்று படிகள் மூலமாக இறுதி லட்சியத்தை அடைகிறோம். முதல்படி பரோக்ஷபிரம்மன் (ஆத்மா எங்கேயோ இருக்கிறது என்ற அறிவு), இரண்டாவதுபடி ப்ரத்யக்ஷ பிரம்மன் (என்னருகேதான் இருக்கிறது), மூன்றாவது படியானது அபரோக்ஷ பிரம்மன் (நானே அந்த பிரம்மன்) என்ற இறுதியான ஞானத்தை அடைதல்.
 
பார்க்கப்படுகின்ற உலகம் பார்ப்பவனான என்னை சார்ந்திருக்கிறது. காட்சியளிக்கின்ற அனைத்திற்கும் இருப்பைக் கொடுப்பது நான்தான். எனவே இந்த உலகமே பொய்யான தோற்றமாகும், நான் மட்டும் உண்மையான வஸ்து. ஆசிரியர் இந்த கருத்தைத்தான் எடுத்துக் கொண்டு விளக்கப் போகிறார். சரியான அறிவு என்கின்ற நெருப்பானது ஆத்ம அறியாமையை எரித்துவிடுகிறது. சரியான அறிவு எல்லா கர்மபலன்களையும் நாசம் செய்துவிடுகின்றது, எரித்து சாம்பலாக்கிவிடுகிறது.

ஆத்ம ஞானத்தை நெருப்புடன் இரண்டு கோணங்களில் ஒப்பிட்டுப் பார்க்கிறார்:

நெருப்பானது இருட்டறையில் உள்ள மறைந்திருக்கின்ற பொருட்களை காட்டிக் கொடுக்கின்றது.
நெருப்பானது எரிக்கக்கூடிய சக்தி உடையதாக இருப்பது போல ஆத்மஞானமும் சம்சாரத்தை, அத்யாஸத்தை, அகங்காரத்தை, கர்மவாசனைகளை எரித்துவிடக்கூடியது.
இரண்டு அரணிகட்டைகளை தேய்ப்பதனால் நெருப்பு உண்டாகின்றது. கீழேயுள்ள அரணிக்கட்டையை மனதிற்கும், மேலேயுள்ள அரணிக் கட்டையானது வேதாந்த உபதேசத்திற்கும் ஒப்பிட்டு இரண்டையும் சிரவணம், மனனம், நிதித்யாஸனம் என்கின்றவற்றை கொண்டு தேய்க்கும்போது ஞானம் என்கின்ற நெருப்பு தோன்றுகின்றது.
 
ஆசிரியர் வைராக்கியத்தைப் பற்றி அவருடைய பாணியில் கூறியிருக்கிறார். வைராக்கியத்தை உடைய மனம் இரண்டு விதமான நல்லொழுக்கங்களைக் கொண்டு இருக்கிறது. அவைகளாவது,
 
வெளியேயுள்ள புலனுகர் பொருட்கள், விஷயங்கள், மனிதர்கள் ஆகியவைகளின் பிடியில் இருப்பதில்லை. ஆசை-துவேஷம் கொண்ட மனம்தான் இவைகளின் பிடியில் சிக்கி துன்பத்தை அனுபவிக்கின்றது. இந்த மனம் வேதாந்தத்தை படிப்பதற்கு ஏற்றதாக இருக்காது. எனவே வெளியேயுள்ள உள்ள பொருட்கள், விஷயங்கள், மனிதர்கள் போன்றவற்றின் பிடியிலிருந்து நம்மை விலக்கிக் கொள்வதே முதல் அம்சமாகும். மனதில் ஆழ்ந்து, எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் அனாத்மா விஷயங்களை, மனிதர்களை முழுவதுமாக நீக்கிவிடவேண்டும்.
இரண்டாவது மனமானது இயல்பாகவே வேதாந்த உபதேசத்தை கேட்க விரும்பவதாக இருக்கவேண்டும். மனதை வலியுறுத்தி கேட்க வைக்கக் கூடாது. விரும்பிக் கேட்கின்ற விஷயத்தைத்தான் மனம் நன்கு கிரகிக்கும், அதையை சிந்தித்துக் கொண்டிருக்கும். எனவே ஆத்மஞானத்தை அடைய வேண்டும் என்ற இயல்பான மனதை உடையவனாக இருக்க வேண்டும். 
வேதம் உரைத்த தர்ம,-அதர்மப்படி  நித்திய-நைமித்திக கர்மங்களை தொடர்ந்த செய்து கொண்டுவந்தால் இத்தகைய வைராக்கியத்தை உடைய மனதை அடையலாம். வைராக்கியத்தை அடைந்தவுடன் மனதளவிலாவது கர்மங்களை செய்வதை விட்டுவிடவேண்டும்.
 
மனதை அமைதிப்படுத்துவதற்கு யோக அப்யாஸம் தேவைப்படும். அமைதியான மனம்தான் நீண்டநேரம் வேதாந்த உபதேசத்தை கேட்பதற்கும், அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதற்கும் உதவியாக இருக்கும். அஷ்டாங்க யோகத்தின் மூலமாக சிந்தனைச் செய்கின்ற, ஆத்மவிசாரம் செய்யக்கூடிய மனதை அடைந்திடலாம்.
 
யோக அப்யாஸத்தின் மூலம் மனதை அமைதிபடுத்தி விடுவதால், அது தனிமையில் இருக்க பழகிவிடுகிறது. இதனால் வேதாந்த சிரவணம், மனனம், நிதித்யாஸளனம் செய்வது எளிதாகிறது. மனதை தனிமையில் இருக்க பழக்கி வைப்பது சுகத்தைக் கொடுக்கக்கூடியது. இவ்வாறு மனதை தயார்படுத்தி விட்டால் நாம் வேதாந்த சிரவணம் செய்வதற்கு எந்த தடையும் வராது. முக்கியமாக தன்னிடத்தில் இருக்கின்ற செல்வங்கள், கடமைகள், உறவுகள் ஆகியவற்றினால்  நாம் செயல்களை செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற உந்துதலும் இல்லாமல் மனம் அமைதியாக இருக்கவேண்டும்.  இதற்கு பிறகு ஆத்மஞானத்தை தரக்கூடிய மகாவாக்கியத்தை முழுமையாக விசாரம் செய்யவேண்டும். அபரோக்ஷ ஞானம் வேதாந்த சிரவணம்-மனனம்-நிதித்யாஸம் என்கின்ற வேதாந்த விசாரத்தின் மூலம் அடைந்து விடலாம்.
இதனால் அக்ஞானமானது முழுமையாக நீக்கப்பட்டுவிடும். பிறகு ஆத்ம ஸ்வரூபமாக இருந்துகொண்டு மற்ற அனைத்தையும் அனாதமாவாக, மித்யாவாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
 
ஆத்மஞானம் மூன்று படிகளில் அடையப்படுகிறது. அவைகளாவது,
 
முதல்படி: வெளிச்சம் வந்தவுடன் இருள் நீங்கிவிடுவது போல, ஆத்மஞானம் வந்தவுடன் அறியாமை சென்றுவிடும்.
 
இரண்டாவதுபடி: அக்ஞானம் என்பது காரக த்வைதத்தின் அடிப்படையாகும். காரகம் என்பது செயல் செய்வதற்கு உதவி புரிகின்ற பலவகையான பொருட்களை சேர்த்து குறிக்கின்ற ஒரு சொல். செயல் செய்பவன், செயல் செய்வதற்கு உதவும் கருவிகள், செய்யப்படும் பொருள், இடம் போன்றவைகளாகும். கர்மம் செய்வதற்கு காரகம் தேவைப்படுகிறது, அக்ஞானம் காரகத்திற்கு துணைபுரிகிறது.
 
மூன்றாவதுபடி: ஞானம் அக்ஞானத்தை அழித்துவிடுகிறது. இதனால் காரகமும் அழிக்கப்படுகிறது, செயல் செய்வதும் தேவையில்லாமல் போய்விடுகிறது.
 
பொதுவாக சிரவணம் மட்டுமே தெளிவான அறிவைக் கொடுத்துவிடும். ஆத்ம தத்துவத்தைப் பற்றிய தெளிவான் புரிதலைக் கொடுத்துவிடும். ஆனால் பலருக்கு அவர்களுடைய புத்தியில் உள்ள குறையினால் புரிந்துக் கொள்ளமுடியாமல் போகலாம். இத்தகைய சாதகர்களுக்குத்தான் மனனம், நிதிதியாஸனம் போன்ற சாதனங்கள் தேவைப்படுகின்றது. இவைகள் புத்தியில் உள்ள குறைகளை நீக்கி ஆத்மஞானத்தை அடைவதற்கு உதவியாக இருக்கும். இந்த இரண்டு சாதனங்ளும் ஞானத்தைக் கொடுக்காது, ஞானத்தை அடைவதற்கு தடையாக இருக்கின்ற புத்தியில் உள்ள குறைகளை நீக்கிவிட்டு சிரவணத்திற்கு தயார் செய்துவிடுகின்றது.
 
புத்தியில் உள்ள குறைகள் நீங்கியபின்னர், அமைதியான மனதை அடைந்த பின்னர். சாதகன் மீண்டும் சிரவணத்தை மேற்கொள்ள வேண்டும். பயனைத் தரக்கூடிய அளவுக்கு முழுமனதுடன் செய்யப்படும் சிரவணத்தால்தான் இறுதி ஞானத்தை அடையமுடியும்.  ஆசிரியர் மகாவாக்கியத்தை சரியாக புரிந்து கொள்வதை தவிர வேறெதுவும் ஞானத்தை அடையத் தேவைப்படாது.
 
புத்தியிலுள்ள முதல் தடை:
எந்தவொரு அறிவையும் புத்தகத்தின் மூலமாக அடைந்தாலும் அதை அன்றாட செயல்களில் பயன்படுத்தினால்தான் அதைப்பற்றிய சரியான புரிதலை நாம் அடைந்திருக்கின்றோம் என்பது பொதுவான கருத்து.  இந்த கருத்தை வேதாந்த உபதேத்திற்கு பொருந்தாது. இந்தக் கருத்துப்படி வேதாந்த உபதேசத்தைப் பெற்ற பின்னர், அதைப்பற்றிய புத்தக அறிவை அடைந்து விட்டேன். இனி அடைந்த அறிவை அனுபவத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று நினைக்கத் தோன்றும். இதுதான் புத்தியில் ஏற்படுகின்ற முதல் தடையாகும். இந்த தடையை மனனம் என்ற சாதனத்தின் மூலமாக நீக்கிக் கொள்ளலாம். இந்த சாதனத்தின் மூலமாக வேதாந்த அறிவென்பது மற்ற அறிவிலிருந்து வேறுபட்டது, இந்த சப்தபிரமானமே இறுதியான அறிவைக் கொடுக்கக்கூடியது என்ற நம்பிக்கையை பெற்றுவிடுவோம். இதனால் மனதில் உள்ள முதல் தடையானது நீக்கப்படுகிறது.
 
புத்தியிலுள்ள 2வது தடை:
தேகாபிமானம் இருக்கும் வரைக்கும், அவைகளுக்கு வரும் கஷ்ட-நஷ்டங்கள் தன்னைப்பாதிக்கிறது என்று துயரப்படுகிறோம். வேதாந்தத்தை நன்கு படித்து, நானே ஆத்மா என்ற அறிவை அடைந்திருந்தாலும், மனதையும், உடலையும் நான் என்றுதான் எண்ணிக்கொண்டிருக்கிறான். அதனால் துன்பப்பட்டு கொண்டிருக்கிறான். இதையே விபரீத பாவனா என்று கூறப்படுகிறது. இந்தத் தடையிருக்கும் வரையில் ஒருவனால் இறுதி ஞானத்தை அடையவே முடியாது. இந்தத்தடையை நீக்கிக் கொள்வதற்குதான் நிதித்யாஸனம் என்கின்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் தேகாபிமானத்தை முற்றிலுமாக நீக்கிவிட்டால் ஆத்மஞானத்தை அடைந்துவிடலாம்.
 
எனவே மனனம், நிதித்யாஸனம் மூலமாக மனதிலுள்ள தடைகளை நீக்கிவிட்டால் மகாவாக்கிய சிரவணமே சம்சாரத்திலிருந்து விடுவித்துவிடும். சிரவணம்தான் முக்கிய சாதனம், மற்ற இரண்டும் புத்தியிலுள்ள குறைகளை நீக்கிக் கொள்வதற்கு பயன்படுகிறது.
 
தொகுப்புரை
 
முதல் அத்தியாயம் ஆறு தலைப்புகளாக பிரிக்கப்படுகிறது. அவைகளாவது,
முகவுரை
வேதாந்த உபதேசத்திற்கு எதிரான மூன்றுவகையான மறுப்புக்கள். அவைகளாவது 1.முதல் மறுப்பை நிராகரித்தல், 2. இரண்டாம் மறுப்பை நிராகரித்தல், 3.மூன்றாம் மறுப்பை நிராகரித்தல்
முடிவுரை.
1.முகவுரை
ஈஸ்வரனையும், தனது குருவான ஆதிசங்கரரையும் துதித்துவிட்டு எதற்காக இந்த நூலை எழுதுகிறேன் என்று கூறுகிறார். எனது குருவின் உபதேசம் போதுமானதாக,  முழமையானதாக இல்லை என்று நினைத்தோ, குறைகள் இருக்கின்றது என்று நினைத்தோ, எனக்கு பேரும், புகழும் வரவேண்டும் என்று நினைத்தோ இந்த நூலை எழுதவில்லை. நான் பெற்ற அறிவை மேலும் மெருகூட்டிக் கொள்ளவே எழுதுகிறேன்.
 
பிறகு வேதாந்தம் உபதேசத்தின் முக்கியமான அம்சத்தை நான்கு பகுதிகளாக பிரித்து சுருக்கமாக கூறியிருக்கிறார். அவைகளாவது,
அறியாமையே சம்சாரத்திற்கு காரணம். தன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை அறியாமல் இருப்பதற்கு சம்சாரத்தினால் அடையும் விளைவுகள்.
ஆத்ம ஞானமே மோட்சத்திற்கு காரணமாகும். தன் உண்மை ஸ்வரூபத்தை அறிவை அடைவதே மோட்சத்தை அடையும் வழிகளாகும்.
உபநிஷத்தின் மகாவாக்கியமே மோட்சத்தை அடைவதற்கு காரணமாக இருக்கிறது.
கர்மம் எந்தவகையிலும் மோட்சத்தை அடைவதற்கு காரணமாக இல்லை.
அக்ஞானம் சம்சாரத்திற்கு காரணமாக இருக்கிறது. எப்படி சம்சாரத்தை அனுபவிப்பதற்கு அறியாமையே காரணமாக இருக்கிறது என்பது சுருக்கமாக கூறப்படுகிறது.
அத்வைத தத்துவத்தைப் பற்றிய அறியாமையினால் இருமை(த்வைதம்) இருப்பதாக தவறாக புரிந்துக் கொள்ளப்படுகிறது.
இருமையை பார்ப்பதால் இந்த உலகமே தனக்கு சாதகமான, பாதகமான சூழ்நிலைகளுடையதாக தோன்றுகிறது.
இந்த நிலையில்தான் ஆசை, கோபம் என்ற மன உணர்ச்சிகளும், பிடித்தமானவைகள், பிடித்தமற்றவைகள் என்ற வேற்றுமைகளும் மனதில் எழுகின்றது.
ஆசையும், கோபமும் தர்ம-அதர்ம செயல்களை செய்யத் தூண்டுகின்றது.
தர்ம செயல்கள் புண்ணிய பலனையும், அதர்ம செயல்கள் பாவப்பலனையும் கொடுக்கின்றது
இந்த புண்ணிய-பாவ பலன்கள் மீண்டும் பிறப்பதற்கு காரணமாகின்றது. புண்ணயம் அதிகமாக இருந்தால் உயர்ந்த ஜீவராசியாகவும். பாவங்கள் அதிகமாக இருந்தால் கீழான பிறவியாக பிறப்பதற்கு காரணமாக இருக்கின்றது.
தேகத்தின் கொண்டிருக்கம் பற்றினால் பலவகையான துன்பங்களை அனுபவிக்கப்படுகின்றது. அதாவது பிறப்பு, வியாதி, இறப்பு, துக்கம் போன்ற பலவகையான துன்பங்களை அனுபவிக்கின்றோம். இவையனைத்தும் சேர்ந்துதான் சம்சாரம் எனக்கூறப்படுகிறது.
இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது அறியாமை சம்சாரத்திற்கு காரணமாக இருக்கின்றது. ஆத்மஞானமே மோட்சத்தை அடைவதற்கு காரணமாக இருக்கிறது.

2. வேதாந்த உபதேசத்திற்கு எதிரான மூன்றுவகையான மறுப்புக்கள்
மூன்று வகையான கர்மகாண்டம், அதைச்சார்ந்த தத்துவவாதிகளின் எதிர்வாதங்கள்.
 அப்4யுபேத3ய கர்மவாதம்
அப்4யுபேத்3ய சமுச்சய வாதம்
அனப்4யுபேத3ய கர்மவாதம்
 
1. அப்4யுபேத3ய கர்மவாதம்
இந்த பூர்வபக்ஷி ஆத்மஞானம் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.  ஆனால் அதை மோட்சம் அடைவதற்கு பயன்படுத்தக்கூடாது. மோட்சத்தை அடைவதற்கு ஆத்மஞானம் தேவைப்படாது. செயல் செய்வதன் மூலமாகத்தான் மோட்சத்தை அடைய முடியும். கர்மமே மோட்சத்தை அடைவதற்கு போதுமானதாக இருக்கும் போது எதற்காக ஆத்மஞானத்தை அடைய முயற்சிக்க வேண்டும்.
 
ஆசாரியார் இந்த வாதத்தை நீக்குவதற்கு ஐந்து வகையான குறிப்புக்கள் கொடுக்கிறார். அவைகளாவது,
எத்தனை லௌகீக, வைதீக கர்மங்கள் செய்தாலும் அவைகளால் ஆத்ம அறியாமையை நீக்கமுடியாது. ஏனென்றால் கர்மம் செய்வதே அறியாமையின் விளைவினால்தான், அதுவே நம்மை அறியாமையில் வைத்திருக்கிறது. கர்மம் அறியாமையின் விளைவு மட்டுமல்ல அது நம்மை அறியாமையில் தொடர்ந்த வைத்திருந்து உண்மையை தவறாக புரிந்து கொள்ள வைத்துக்  ;கொண்டிருக்கிறது. நான் செயல் செய்பவன், வைதீக கர்மங்களை செய்வதற்கு வர்ணாசிரம தர்மங்களுக்கு உட்பட்டவன் என்று தவறாக நினைக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இவ்வர்று தன்னைப் பற்றிய உண்மையை அறியாதவாறு கர்மம் நம்மை வைத்துக் கொண்டிருக்கிறது. கர்மத்தால் இந்த அறியாமையை நீக்கமுடியாததால், இதன் மூலம் மோட்சத்தை அடையவே முடியாது. ஏனென்றால் மோட்சம் என்பது ஆத்மாவின் இயல்பாகும். அதனால் அக்ஞானம் நீங்காதவரை மோட்சம் என்பதை அடையவே முடியாது.
கர்மத்தால் அடையும் பலன்கள் நிலையற்றவைகள். கர்மமே ஒரு எல்லைக்குள் வரையறுக்கப்பட்டதாக இருப்பதால் அதிலிருந்து அடையப்படும் பலன்களும் வரையறுக்கப்பட்டதாகவே இருக்கும். செயல் செய்வதன் மூலம் நான்கு வகையான முடிவுகளை அடையப்படுகிறது. அவைகளாவது ஓரிடத்தை அடைதல், புதியதாக ஒன்றை உருவாக்குதால், ஒன்றிலிருந்து வேறான்றாக மாற்றத்தை அடைதல், தூய்மைப்படுத்துதல் ஆகியவைகளாகும்.  ஆனால் மோட்சம் என்பது வரையறுக்கப்பட முடியாதது, நிலையானது. கர்மம் செய்வதால் அடையப்படும் பலன்கள் நிலையற்றதாக இருக்கும் போது எப்படி நிலையான மோட்சத்தை அடையமுடியும.
கர்மத்தினால் மோட்சத்தை தவிர மற்ற பலன்களை அடையலாம். கர்மகாண்டத்தில் விதவிதமான கர்மங்கள் கூறப்பட்டிருக்கிறது. அவைகளால் அடையப்படும் பலன்கள் புத்திரபேறு, செல்வம், சொர்க்கம் போன்றவைகளாகும்.  சில கர்மங்கள் பலனைக் குறிப்பிடாமல் இருக்கிறது அது மோட்ச பலனாக எடுத்துக் கொள்ளலாம் என்று வாதம் செய்தால், அது மாதிரி பலனைக் குறிப்பிடாத எந்தக் கர்மத்தையும் வேதம் குறிப்பிடவில்லை.
மேலும் வேதாந்தம் கர்மத்தினால் அடையப்படுகின்ற விளைவுகள் சம்சாரம், மீண்டும் மீண்டும் பிறத்தலாகும் என்று அதிலுள்ள குறைகளை கூறியிருக்கிறது. கைவல்ய உபநிஷத் தியாகத்தினால் மட்டுமே சிலர் சாதகர்கள் மீண்டும் பிறவாத நிலையை அடைகிறார்கள். இந்த நிலையை சாஸ்திர கர்மங்களை செய்வதாலோ, சந்ததியை அடைவதாலோ, அளவற்ற செல்வத்தை அடைவதாலோ அடைவதில்லை.
இன்னொரு பூர்வபக்ஷியின் உபாயத்தை நிராகாரித்தல். அந்த உபாயமானது. காம்யமான கர்மங்களை செய்யாமல் இருந்தால் புண்ணியம் சேராது, அதேபோல நிஷித்த கர்மங்களை செய்யாமல் இருந்தால் பாவமும் சேராது. இதனால் பாவ-புண்ணியங்கள் எதிர்காலத்தில் சேராமல் தடுத்துவிடலாம். அடைந்த பாவ-புண்ணியங்களை அனுபவித்து தீர்த்துவிட வேண்டும். மரணகாலத்தில் பாவ-புண்ணியங்கள் இரண்டும் இல்லாமல் போய்விடுவதால் மோட்சமானது அடையப்படுகிறது.  ஆசாரியார் இது நடக்கமுடியாத காரியமாகும். ஏனென்றால் அறியாமை இருக்கும்வரை ஆசைகள் இருக்கும், இது காம்ய கர்மங்களை செய்ய தூண்டிக்கொண்டிருக்கும். அதேமாதிரி ராக-துவேஷங்கள் இருக்கும்வரை நிஷித்த கர்மங்களை செய்யாமல் இருக்க முடியாது. பழைய பாவ-புண்ணியங்கள் கணக்கற்ற முற்பிறவிகளில் சேர்ந்திருக்கிறது. அவைகளை ஒரே பிறவியில் அனுபவித்து தீர்த்துவிட முடியாது. எனவே உன்னுடைய உபாயத்தை பயன்படுத்தவே முடியாது என்று அவனுடைய கருத்தானது நிராகாரிக்கப்பட்டது.
கர்மம் செய்வது முற்றிலும் பயனற்றதல்ல. அதை யோகமாக செய்யும்போது சித்த சுத்தியை (மனத்தூய்மையை) அடையலாம். இது    ஞானயோகத்திற்கு செல்ல உதவி செய்யும்.
 
2. அப்4யுபேத3ய சமுச்சய வாதம்
இது இரண்டாவது வகையான பூர்வபக்ஷியின் வாதம். கர்மத்தையும், ஞானத்தையும் சேர்ந்து செய்தால்தான் மோட்சத்தை அடையமுடியும். இந்த வாதத்தை ஐந்து விதமான விவாதங்கள் மூலமாக நீக்கிவிடுகிறார்.
இளமையும், முதுமையும் எப்படி சேர்ந்து இருக்காதோ அதுபோல ஞானமும், கர்மமும் சேர்ந்தே இருக்கமுடியாது. கர்ம சாதனம் பயன்படுத்தும்போத ஞான சாதனத்மை பயன்படுத்த முடியாது.  ஏனென்றால் கர்மத்தை யோகமாக செய்து மனத்த}ய்மை அடைந்திடலாம். மனத்தூய்மையை அடைந்திடாமல் ஞானத்தை அடையமுடியாது. ஞானம் செயல்படுகின்றதென்றால் மனத்தூய்மை அடையப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் கர்மம தேவைப்படாது. எனவே ஞானமும், கர்மமும் ஒரே நேரத்தில் செயல்பட முடியாது என்றிருக்கும்போது எப்படி இவையிரண்டையும் சேர்த்து செய்யமுடியும். கர்மயோகம் சாதனமென்றால், ஞானயோகம் சாத்தியமாக இருக்கும்போது இவையிரண்டும் சேர்ந்திருக்கவே முடியாது.
செயல் செய்வதற்கு செய்பவன், செய்யப்படும் பொருள், இடம், கருவிகள் போன்றவைகள் தேவைப்படுகிறது. இவைகளையே காரகம் என்று அழைக்கப்படுகிறது. ஞானம் இருமையை நீக்கக்கூடியது. காரகங்களை நீக்கி விடுகின்றது. எனவே காரகங்களை சார்ந்திருக்கின்ற கர்மமும் நீக்கப்படுகிறது. இப்படியிருக்கும்போது எப்படி இவையிரண்டையும் சேர்த்து செய்யமுடியும். இருளும், ஒளியும் சேராதிருப்பது போல ஞானமும், கர்மமும் சேராது.
ஞானம் வர்ணாசிரம பிரிவையே நீக்கிவிடுகிறது. ஆனால் வர்ணாசிரம அபிமானம் வைதிக கர்மங்களை செய்வதற்கு தகுதியுடையவனாக கருதப்படுகிறது. ஞானம் இந்த அபிமானத்தையே நீக்கிவிடுகிறது. இப்படி இருக்கும்போத எப்படி இடையிரண்டும் ஒன்றுசேர முடியும்.
ஞானம் மோட்சத்தையும் கொடுத்துவிட்டு மோட்ச விருப்பத்தையும் நீக்கிவிடுகிறது. ஆதனால் கர்மத்தை ஞானத்துடன் சேர்த்து செய்ய வேண்டிய அவசியமில்லை.
இன்னொரு வாதம். வேதம் முற்பகுதி கர்மத்தையும், பிற்பகுதி ஞானத்தையும் கூறியிருக்கிறது. எனவே வேதத்தை மதித்து இரண்டையும் செய்ய வேண்டும். இவையிரண்டையம் செய்ய வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஒரேநேரத்தில் செய்ய முடியாது. முதலில் கர்மத்தை யோகமாக செய்து மனத்தூய்மையை அடைந்து ஞானயோகத்திற்கு தகுதியடைய வேண்டும்.
3. அனப்4யுபேத3;ய கர்மவாதம்
 
இந்த பூர்வபக்ஷியின் வாதம் வேதத்தின் முக்கிய உபதேசம் ஆத்மஞானம் கிடையாது என்பதாகும். இதற்கு நான்கு வகையான வாதத்தை வைக்கிறான் அவைகளை ஆசாரியார் நிராகரிக்கிறார்.
இந்த எதிர்வாதியின் வாதமானது, ஆதம்ஞானம் என்று ஒன்றே முக்கிய குறிக்கோளாக வேதத்தில் உபதேசிக்கப்படவில்லை. எங்கேயெல்லாம் ஞானம் பேசப்படுகிறதோ அங்கேயெல்லாம் கர்மத்தின் அங்கமாகவே பேசப்படுகிறது. ஞானமே எந்த பலனையும் தந்துவிடாது. ஆசாரியாரின் பதிலானது, வேதம் ஆதம்ஞானத்தையே முக்கிய குறிக்கோளாக உபதேசித்திருக்கிறது. ஆத்மஞானமே மோட்சத்தை அடைய உதவுகின்ற தனித்துவமுள்ள வழியாகும் என்று பலவிடங்களில் கூறியிருக்கிறது.
கர்மம் செய்துக்கொண்டே நூறு வருடங்கள் வாழ்வாயாக என்று வேதம் சொல்வதிலிருந்து கர்மம் எப்பொழுதும் மனித வாழ்வில் இருந்து கொண்டு இருக்கிறது. இதிலிருந்து சுத்தஞானம் இல்லையென்று உறுதியாகின்றது. இது எதிர்வாதியின் இன்னொரு வாதம். ஆசாரியார் பதில்: நீ வேதத்தை தவறாக புரிந்து கொண்டிருக்கிறாய். அதே வேதம் ஆசைகள் இருந்துக் கொண்டிருந்தால் கர்மம் செய்து கொண்டு வாழ்வாயாக என்று கூறியிருக்கிறது. அதாவது தேகாபிமானம் நீங்கும் போது கர்மம் தானாகவே செய்யாமல் விட்டுவிடுவோம்
ஜெய்மினி மகாரிஷியின் மீமாம்ஸ சூத்திரத்தின் அடிப்படையில் பார்க்கும் போது வேதம் கர்மத்தை மட்டுமே பேசுகிறது, ஞானத்தைப் பற்றி பேசவே இல்லை. இதற்கு ஆசாரியாரின் பதில்: ஜெய்மினி மகாரிஷி கர்மகாண்டத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு விளக்கம் எழுதியிருக்கிறார். அவரது குருவான வியாசபகவான் இவருக்கு முன்னமே ஆத்மஞானத்தை பற்றிய விளக்கத்தை தனது உத்தரமீமாம்ஸில் கூறியிருக்கிறார்.
வேதம் முழுவதுமே வாக்கியங்களால் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வாக்கியமும் ஒரு வினையை கொண்டிருக்கும். இந்த வினையானது எதாவது ஒரு செயலைக் குறிக்கின்றது. இதிலிருந்து வேதம் முழுவதும் கர்மத்தை மட்டும் பேசப்பட்டிருக்கிறது. ஞானத்தைப் பற்றி பேசவேயில்லை. ஆசாரியாரின் பதில்: எல்லா வினைச்சொற்களும் செயலைக் குறிக்காது. சில வினைச்சொற்கள் ஒரு உண்மையை கூறுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக “தத் த்வம் அஸி ”இ“அஹம் பிரம்மாஸ்மி” என்ற வாக்கியங்களில் உள்ள அஸி, அஸ்மி என்ற வினைச் சொற்கள் இருப்பதைக் காட்டிக்கொடுக்கிறது. எனவே உன்னுடை வாதம் தவறானது. கயிறு-பாம்பு உதாரணத்தில் கயிற்றைப் பற்றிய ஞானமே பயத்தைப் போக்குவதற்கு போதுமானது
3. முடிவுரை
 
ஆசாரியார் முகவுரையில் கூறியுள்ள நான்கு கருத்துக்களையே மீண்டும் கூறி முடிக்கிறார்.
அக்ஞானமே சம்சாரத்திற்கு காரணமாகும்.
 ஞானத்தினால் மட்டுமே மோட்சத்தை அடையமுடியும்.
மகாவாக்கிம் மட்டுமே ஞானத்தை கொடுக்கும்.
கர்மம் மோட்சத்தை கொடுக்கவே கொடுக்காது.
ஆகையினால் சித்தசுத்தி அடைந்து வேதாந்த சிரவணத்திற்கு தகுதியை அடைந்திருப்பவர்களுக்கு வேதாந்த மகாவாக்கியத்தின் மூலமாக அறிவைக் கொடுக்க விரும்புகிறேன். ஆறிவை அடைந்தவர்கள் முக்தியை அடைவதற்கும் உதவி செய்ய விரும்புகிறேன்.
---oo000oo---


4 comments:

  1. திருச்சிற்றம்பலம் அய்யா. சாஸ்திரங்களில் துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று நிலைகளுக்கும் இடம் உண்டு.

    மனுஷன் விழித்திருந்து வியவகாரம் பண்ணுகிறான். அது துவைத நிலை. அங்கு தான் வேறு, மற்ற உயிர்கள் வேறு, உலகம் வேறு. பிறகு சொப்பனம் காண்கிறான்.

    சொப்பனத்தில் தென்படும் மனிதர்களும், உலகமும் அவனுடைய மனத்திற்கு அவசியமானவைள் அல்ல. பேதம் போன்று தென்பட்டுக் கொண்டிருக்கும் அபேத நிலை அது.விசிஷ்டாத்வைத நிலையை இது விளக்குகிறது.

    விசிஸ்டாத்வைதம் சொப்பனமில்லாத அயர்ந்த உறக்கம் வருகிறது. அதில் பிரக்ஞை ஒன்றைத் தவிர, பாக்கியெல்லாம் போய்விடுகின்றன. எல்லா அவஸ்தைகளுக்கும் பொதுவாகிய பிரக்ஞை ஒன்றே அங்கு மிச்சம். அது அத்வைத நிலையாகும்.

    இந்த மூன்று நிலைகளும், அக்ஞானத்தில் இருப்பது போன்று, ஞானத்திலும் வந்து அமையக்கூடியவைகள்.

    இவைகளில் எது பெரியது, எது சிறியது, எது சாதனம், எது சாத்தியம் என்று மதவாதிகள் விரிவாக, விதவிதமாக பேசி வருகிறார்கள்..

    ஆனால், சுருதி என்று சொல்லப்படும் வேதாந்த சாஸ்திரம் கிருஷ்ணனை எவ்வாறு விளக்குகிறது என்றால், கிருஷ்ணன் என்பதும், பரமாத்மா என்பதும் ஒன்றே. ஒரு தேகத்துக்குள் கட்டுப்பட்டவன் போன்று அவன் தென்படுகிறான்.

    உடைக்குள் கட்டுப்பட்டது போன்று நமது உடல் தென்படலாம். ஆனால், இதனால் உடலுக்கு எந்த லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. என்கிறது..

    எனவே, அத்வைதம் என்பதற்கு, இரண்டல்ல என்பது பொருள்.

    பாருங்க அய்யா... ஜகத், ஜீவன் என்று சொல்லப்படுபவை வேறு, பரம் வேறு அல்ல. உள்ளது ஒரே பொருள்.

    அது அகண்ட"சத் சித் ஆனந்தம். எனவே,"தன்னை ஜகத் ஆகவூம், ஜீவனாகவும் காட்டிக் கொள்ளுகிற வல்லமை உண்டு. (இந்த வல்லமைக்கு மாயா சக்தி என்று பெயர்.)

    அடியேனுக்கு இன்னும் தனித் தனியாக அதிகம் எழுத ஆசை. ஆனா ல், நிறைவு செய்கிறேன் அய்யா.,

    ReplyDelete
  2. மகா வாக்கியம் என்பது, வேதங்கள் ஒவ்வொன்றிலும், அதன்கண் சொல்லப்படும் கருத்தைச் சுருக்கமாகத் தொகுத்துக் கூறும் சிறு தொடர்கள் உண்டு. அவை மகா வாக்கியங்கள் எனப்படும்.

    உதாரணமாக...

    சோஹம் அஸ்மி (அவன் தான் ஆகின்றேன்) தத்துவ மசி, (நீ அது நீ ஆகின்றாய்) சோயம் அஸ்தி(அது இது ஆகின்றது)

    ஆனால், இம்மூன்று வாக்கியமும் ஒரு பொருளையே உணர்த்துகின்றது.

    சோஹம் அஸ்மி "தன்மையில் வைத்துச் சொல்லிய பொருளையே... தத்துமசி மகா வாக்கியம் முன்னிலையிலும், சோயம் அஸ்தி மகா வாக்கியம் படர்க்கையிலும் வைத்துச் சொல்லு கின்றன.

    இதற்கு இன்னும் விளக்கம் அதிகம் கூறலாம்.

    இது, நீ, நான் எனும் சொற்களுக்கு பொருளௌ...சீவான்மாவும், அது, அவன், எனும் சொற்களுக்குப் பொருள் "பரமான்மாவும் (சிவமும் சைவ சித்தாந்தத்தில்) ஆதல் என்பதற்கு பொருள் சிவன் பாசத்தினின்றும் நீங்கிச் சிவத்தைத் தலைப்பட்டுச் சிவமோகீ நிற்கிறது என்று பொருள்.

    வடமொழியில், *ஞாதுரு, ஞானம், ஞேயம் ((திரிபுடி) என்பர்.

    அதாவது, அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் (அ) ஞாதுரு, ஞானம், ஞேயம்).

    மேற்கூறியவை, (பெரும் பெயர்) மகாவாக்கியம் என்பதற்கான சிறிய விளக்கம். திருச்சிற்றம்பலம்.

    ReplyDelete
  3. இது மாபாடிய விளக்கம் அய்யா அடியேன் கூறியது.

    ReplyDelete
  4. Wed. 10, Apl. 2024 at 7.37 pm.

    யார் முக்தன் ஆகிறான்...?*

    ௯ஷேத்ர ௯ஷேத்ரக்ஞயோரேவமந்தரம் ஞானச௯ஷுஷா |
    பூதப்ரக்ருதிமோட்௯ஷம் ச யே விதுர்யாந்தி தே பரம் ||

    ஏவம் − இப்பிரகாரம்

    ௯ஷேத்ர ௯ஷேத்ரக்ஞயோ − ௯ஷேத்ரம் ௯ஷேத்ரக்ஞனுக்கிடையில்

    அந்தரம் − வேற்றுமையையும்

    பூத ப்ரக்ருதி மோ௯ஷம் ச − உயிர்கள் பிரகிருதியினின்று விடுதலை அடைதலையும்

    ஞான ச௯ஷுஷா − ஞானக்கண்ணால்
    யே யார் விது: − அறிகிறார்களோ

    தே − அவர்கள்

    பரம் − பரத்தை

    யாந்தி − அடைகிறார்கள்.

    இச் சுலோகத்தில், கூறப்பட்ட விளக்கம் !

    இவ்வாறு ௯ஷேத்திர ௯ஷேத்ரக்ஞனுக்கிடையில் உள்ள வேற்றுமையையும், உயிர்கள் பிரகிருதினின்று விடுதலை அடைதலையும் ஞானக்கண்ணால் காண்போர் பிரம்மத்தை அடைகின்றனர்.

    அதாவது, ஒரு மருத்துவன், நோயையும், நோயாளிகளையும் நன்கு அறிந்து, நோயை நீக்க வல்லவன் ஆகிறான். இவ்விரண்டில் ஒன்றைத் தெரியாது போனாலும் சிகிச்சை சிலாக்கியப்படாது அல்லவா.

    அங்ஙனம், புருஷன் , பிரகிருதி ஆகிய இரண்டையும் உள்ளபடி அறிதல் வேண்டும்.

    எது புருஷன் ? எது பிரகிருதி ? என்று பாகுபடுத்துதலும் அவசியமானது.

    இதற்கெல்லாம் மேலாக "ஞான வாழ்க்கை" வோயிலாக "ஞானக்கண்ணை" பெறுதல் மிக முக்கியமானது.

    வெறும் சாஸ்திர ஞானம் போதாது. ஞானக்கண் திறக்கப்பெறுமிடத்து ஜீவர்கள், பிரகிருதியில் கட்டுண்டு கிடப்பதெல்லாம் அக்ஞானத்தால் என்பது விளங்கும்.

    அதற்கெல்லாம் மேலாகப் பிரகிருதியானது, புருஷனைச் சார்ந்திருக்கிறதென்றும், புருஷன் பிரகிருதியைச் சார்ந்திருப்பதில்லையென்றும், பிரகிருதி புருஷனுக்கு , அன்னியமானதல்லவென்றும், சுவானுபூதியில் தோன்றும்.

    அத்தகைய அப்ரோ௯ஷ அனுபூதியைப் பெறுபவன், பிரம்ம ஞானியாகிறான்.
    *அவனே முக்தன் ஆகிறான்.*

    ReplyDelete