Wednesday, 25 September 2024

3 ம் பாவகம் எனும் சகோதர ஸ்தானம்(தைரியம்,வீரியம்,வெற்றி,விடாமுயற்சி) பற்றிய புரிதலும் ஆய்வும்.

3 ம் பாவகம் எனும் சகோதர ஸ்தானம்(தைரியம்,வீரியம்,வெற்றி,விடாமுயற்சி) பற்றிய புரிதலும் ஆய்வும்...

ஜோதிட சாஸ்திரத்தில் சகோதர ஸ்தானத்தைப்பற்றி குறிப்பிடுவது இந்த 3 ம் பாவகம் ஆகும்.இந்த 3 ம் பாவகத்திற்குள்தான் இளைய சகோதரம், ஜாதகரின் தைரியம்,வீரியம்,ஜாதகரின் வெற்றி வாய்ப்புகள்,மற்றும் அதிர்ஷ்டங்கள்,புகழ்,கீர்த்தி, சுயமுயற்சியால் முன்னேறுவது போன்ற சூட்சுமங்கள் அடங்கியுள்ளது.சுருங்கச் சொல்ல முயற்சிக்கிறேன் நண்பர்களே.பதிவை இறுதிவரை பொறுமையாக வாசிக்கவும்...
                 3 ம் பாவகம் உபஜெய ஸ்தானம் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.(3,6,10,11 உபஜெயஸ்தானங்கள்).இந்த 3 ம் பாவகத்தின் அதிபதி மற்றும் 3 ல் அமரும் கிரகம் மூன்றை பார்க்கும் கிரகங்கள் இதை வைத்துதான் சகோதர உறவுகளின் நிலையைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்.சகோதர்களின் நட்பு நிலை,பகை நிலை, சகோதரர்களின் ஒத்துழைப்பு, சகோதர பாசம் இவையெல்லாம் 3 ம் பாவகத்திற்குள் அடங்கியுள்ளது.3 ம் இடத்தில் சுப கிரகங்களை விட பாவ கிரகங்கள் அமர்வது சிறப்பான அமைப்பாகும்.அதிலும் ராகு கேதுக்களுக்கு 3 ம் இடம் சிறப்பான இடமாகும்.3 ல் ராகு கேதுக்கள் அமர்ந்து ராகு கேதுவிற்கு வீடு கொடுத்த அதிபதி லக்ன யோகாதிபதியாகவோ அல்லது சுபத்துவம் பெற்றோ நல்ல நிலையில் கெடாமல் இருந்து திசை நடப்பில் வந்தால் நற்பலன்கள் கிடைக்கும்.3 ம் பாவகம் மட்டுமல்லாமல் ராகு கேதுக்கள் எந்த பாவத்தில் அமர்ந்தாலும் அவர்களுக்கு வீடு கொடுத்த அதிபதிகள் பலவீனப்படாமல் இருப்பது யோக ஜாதகமே.எப்போதுமே ராகு-கேதுக்களைப் பொறுத்தவரை அவர்கள் அமர்ந்த அதிபதிகள் பலவீனப்படாமல் இருப்பது நல்லது.
                   அடுத்து இந்த 3 ம் பாவகத்தின் மூலம்தான் இளைய சகோதரன் மற்றும் சகோதரியை கண்டறிய முடியும்.ஒரு தம்பதியருக்கு ஒரு குழந்தை பிறந்த பின்னர் அடுத்த குழந்தை ஆணா? பெண்ணா?என்பதை இந்த 3 ம் பாவகத்தை வைத்துதான் கணிக்க முடியும்.முதல் குழந்தையின் பிறந்த நாள் நேரம் லக்னம் மாறாமல் துல்லியமானதாக இருக்கும் பட்சத்தில் இளைய சகோதரத்தை சரியாக கணிக்க இயலும் நண்பர்களே...குறிப்பாக பிறந்த லக்னம் மாறாமல் இருக்க வேண்டும்.லக்ன சந்தியில் பிறந்த குழந்தைக்கு கணிப்பது சில நேரங்களில் தவற வாய்ப்பு உள்ளது.முதல் குழந்தையின் 3 ம் பாவகம் ஆண்ராசியா? பெண்ராசியா? அதன் அதிபதி ஆண் கிரகமா?பெண் கிரகமா?3 ம் பாவகத்தின்  அதிபதி ஆண் ராசியில் அமர்ந்திருக்கிறதா?பெண் ராசியில் அமர்ந்திருக்கிறதா? 3 ல் அமரும் கிரகம் ஆண் கிரகமா? பெண் கிரகமா? 3 ம் பாவகத்தை பார்க்கும் கிரகங்கள் ஆண் கிரகங்களா? பெண் கிரகங்களா? அப்படிப் பார்க்கும் கிரகங்கள் ஆண் ராசியில் இருந்து பார்க்கிறதா? பெண் ராசியிலிருந்து பார்க்கிறதா?இவையெல்லாம் ஆய்வு செய்து தான் ஒரு குழந்தைக்கு அடுத்து கிடைப்பது சகோதரனா?சகோதரியா? என்பதை நிர்ணயம் செய்ய முடியும்.
               ஒரு உதாரணம் பார்ப்போம்.முதல் குழந்தை பெண் குழந்தை என்று வைத்துக்கொள்வோம்.அடுத்து ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? அதாவது அந்தக்குழந்தைக்கு சகோதரனா? சகோதரியா? என்று ஆய்வு செய்ய வேண்டும்.மேஷ லக்னத்தையே எடுத்துக்கொள்வோம்.3 ம் பாவகம் மிதுனம் ஆண் ராசியாகும்.3க்குரிய புதன் அலி கிரகம் மற்றும் பெண் கிரகம் என்றும் சொல்லப்படுகிறது.3 ல் அமரும் கிரகம் ஆண் கிரகம் என்று வைத்துக்கொள்வோம்.3 குரிய புதனும் ஆண் ராசியில் போய் அமர்ந்து இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.3 ம் பாவகத்தை வேறு ஆண் கிரகங்கள் பார்க்கிறது என்று வைத்துக்கொள்வோம்.இம்மாதிரியான அமைப்பில் இருக்கும் போது அடுத்து பிறக்கும் குழந்தை அதாவது அந்தப் பெண்ணுக்கு சகோதரன் என்று தீர்மானிக்க முடியும்.ஆனால் மேற்சொன்ன அமைப்பிலேயே  எல்லா ஜாதகமும் அமையாது.நான் உதாரணத்திற்குத்தான் கூறியுள்ளேன்.ஆண் கிரகம் பெண் ராசியில் அமர்ந்து இருக்கலாம்.பெண் கிரகம் ஆண் ராசியில் அமர்ந்து இருக்கலாம்.அல்லது மேற்சொன்ன அமைப்பிலேயே ஜாதகம் இருந்து பெண் கிரகம் பெண்ராசியில் சுபத்துவமாகவோ லக்ன யோகாதிபதியாகவோ இருந்தோ அல்லது 3 ம் பாவகத்தை பார்த்தோ திசையோ புத்தியோ நடப்பில் இருந்தால் பெண் குழந்தையை கொடுத்து விடும்.ஷட்பல ரீதியாக பலம் பெற்றுள்ள கிரகம் ஆண் கிரகமா? பெண் கிரகமா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். எனவே சுய ஜாதகத்தை அனைத்து நிலைகளிலும் தீர ஆய்வு செய்வதுதான் சிறப்பு.ஏனென்றால் ஒவ்வொரு ஜாதகமும் தனித்துவமானது நண்பர்களே...
                        3 ம் பாவத்திற்கு ராகு கேது தொடர்பு எனது அனுபவத்தில் பெண் குழந்தையைதான் அதாவது சகோதரியைத்தான் கொடுக்கும்.3 ல் ராகுவோ கேதுவோ அமர்ந்திருப்பது/3க்குரியவர்களுடன் ராகு கேதுக்கள் சேர்ந்திருப்பது பெரும்பாலும் சகோதரியைத்தான் கொடுக்கும். சகோதரனை கொடுக்காது.ஆய்வு செய்து பாருங்கள் நண்பர்களே.3 ல் ராகு கேது உள்ள ஜாதகர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு நிச்சயமாக ஒரு சகோதரி இருக்கும்.இதை இப்படியும் பொருத்திப் பார்க்கலாம்.அதாவது முதலில் பெண் குழந்தை பிறந்து அடுத்து ஆண் குழந்தை பிறக்குமானால் அந்த ஆண் குழந்தைக்கு 3 ம் பாவத்தோடு மேற்சொன்னமுறையில்  ராகு கேது தொடர்பிருக்கும். ஆய்வு செய்து பாருங்கள் நண்பர்களே.
                      அடுத்து இந்த 3 ம் பாவகத்திற்குள் இருப்பது தைரியம் மற்றும் வீரியமாகும்.ஒருவர் தைரியம் மிக்கவராகவும், துணிச்சல் மிக்கவராகவும் விளங்குகிறார் என்றால் 3 ம் பாவகம் நிச்சயமாக பலம் பெற்றிருக்கும்.முக்கியமாக 3 ல் பாவ கிரகங்களான சனி,செவ்வாய்,சூரியன் ராகு கேதுக்கள் அமர்வது தைரியத்தையும் வீரியத்தையும்  கொடுக்கும்.முக்கியமாக செவ்வாய் 3 ம் இடத்தோடு தொடர்பு கொண்டிருப்பவர்கள் தைரியமானவர்களாக இருப்பார்கள்.எதற்கும் அஞ்சமாட்டார்கள்.ஏனென்றால் செவ்வாய்தான் தைரியகாரகன் ஆயிற்றே...காரகமும் பாவகமும் இணையும்போது துணிச்சலும் தைரியத்தையும் கொடுக்கும்.ஆனால் இந்த அமைப்பு காரக பாவ நாஸ்தி அமைப்பில் வருவதால் சகோதர உறவை கெடுக்கும்.சகோதரர்களின் பாசம் ஒத்துழைப்பு கிடைக்காது.ஆனால் தைரியம் வீரியத்திற்கு பஞ்சமிருக்காது.லக்னாதிபதி 3 ல் இருப்பது/3 க்குரியவர் லக்னத்தில் இருப்பது/3 க்குரியவர் ஆட்சி உச்சம் பெறுவது/ ஆட்சி உச்சம் பெற்ற செவ்வாய் 3 ம் இடத்தைப் பார்ப்பது/ 3 ம் அதிபதியோடு செவ்வாய் சேர்க்கை பெறுவது இம்மாதிரி அமைப்பு உள்ளவர்கள் தைரியசாலியாகவும் வீரியம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஓடுகிற பாம்பை ஓடிச்சென்று கையில் பிடித்து அடிக்கிற ஆட்கள் எல்லாம் மேற்சொன்ன அமைப்பில் உள்ளவர்கள்தான் ஆய்வு செய்து பாருங்கள் நண்பர்களே...
                       அடுத்து சுய முயற்சியால் முன்னேறுபவர்கள் மற்றும் எதிலும் மனம் தளராது விடாமுயற்சியோடு இருப்பவர்கள் எல்லாம் இந்த 3 ம் பாவகம் பலம் பெற்ற ஜாதகர்கள்தான் நண்பர்களே.ஒருவர் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் யாருடைய பின்புலமும் உதவியும் இல்லாமல் தன்னுடைய சொந்த உழைப்பால் முன்னேறுகிறார் என்றால் அவரது ஜாதகத்தில் 3 ம் பாவகம் பலம் பெற்று லக்னம் /லக்னாதிபதியும் பலம் பெற்று தொடர்பு சேர்க்கை நிச்சயமாக இருக்கும்.ஆய்வு செய்து பாருங்கள் நண்பர்களே.3 ம் இடத்தோடு லக்னமும் பலம் பெற வேண்டும்.அப்போதுதான் முன்னேற்றம் உண்டாகும்.3 ம் பாவகம் பலம்பெற்று லக்னம் பலவீனப்பட்டால் முயற்சிகள் பலனளிக்காமல் போகும்.விடாமுயற்சியோடு போராடிக் கொண்டிருப்பார்கள்.ஆனால் அதற்குரிய பலன்கள் அனுபவிக்க முடியாது.அதிலும் 3 ம் இடத்தில் சனி பலம் பெற்று லக்னமும் பலம் பெற்று யோக தசாபுத்திகள் தொடர்பு ஏற்பட்டு நடப்பில் வந்தால் கடின உழைப்பில் முன்னேறுவார்கள்.3 ல் சனி உள்ளவர்கள்/ 3 க்குரியவர்களோடு சனி சேர்க்கை/ 3 க்குரியவரையோ 3 ம் பாவகத்தையோ பலம் பெற்ற சனி பார்த்தால் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள்.ஆனால் இதோடு லக்னம் லக்னாதிபதி பலம் பெற்று யோகதிசையோ அல்லது லக்னத்தோடு தொடர்பு கொள்ளும் கிரகத்தின் திசையோ நடப்பில் வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.3 ம் பாவத்தோடு சனி பலம் பெற்று தொடர்புகொண்டு லக்னம்/லக்னாதிபதி பலம் இழக்கக்கூடாது.3 ல் சனி பலம் பெற்று லக்னாதிபதி பலம் இழந்தால் கடைசிவரை செக்குமாடு போல் உழைத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து போகிறவர்கள் ஜாதக அமைப்பு எல்லாம் மேற்சொன்ன அமைப்பில் உள்ளதுதான் நண்பர்களே.கடுமையாக உழைத்தும் அதற்குரிய பலன் கிடைக்கவில்லை என்றால் 3 ம் பாவகம் வலுத்து லக்னம்/ லக்னாதிபதி பலவீனப்பட்டு இருக்கும். ஆய்வு செய்து பாருங்கள் நண்பர்களே.
                    அடுத்ததாக ஆயுளுக்கு இந்த 3 ம் பாவக ஆய்வு மிக முக்கியமாகும் நண்பர்களே.ஏனென்றால் 8 க்கு 8 ம் இடமாக 3 ம் இடம் வருவதால் ஆயுள் பலத்தை அறிய இந்த 3 ம் பாவகத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.8 ம் இடம் பலவீனமடைந்து 3 ம் பாவகம் பலம் பெற்று 3 ம் பாவகத்தை குரு போன்ற சுப கிரகங்களின் தொடர்பு சேர்க்கை ஏற்பட்டால் ஆயுள் பாவம் பலப்படும் நண்பர்களே.அதே போல் களத்திர ஸ்தானமான 7 க்கு 9 ம் இடமாக 3 ம் இடம் வருவதால் திருமண தடை /தாமத திருமணம் போன்றவைகளுக்கு 3 ம் பாவகம் ஆய்வு செய்யப்படவேண்டும்.சில ஜாதகங்கள் 7 ம் இடம் நல்ல நிலையில் இருக்கும்.தசா புத்தியும் நல்ல நிலையில் இருக்கும். ஆனால் 3 ல் கேது அமர்ந்து திருமணத்தடை/தாமத திருமணத்தை  உண்டாக்கும் நண்பர்களே.அதேபோல் காமம்/ஆண்மை சக்தி /தாம்பத்திய சுகம் இவற்றிற்கு வீரியம் வேண்டும் என்றால் 3 ம் பாவகம் பலம் பெற வேண்டும்.3ம் இடம் பலவீனப்பட்டால் தாம்பத்தியத்தில் நாட்டம் இருக்காது.குறிப்பாக பெண்களை விட ஆண்களுக்கு ஆண்மையின் பலத்தை காட்ட இந்த மூன்றாம் பாவகத்தின் பலம் நிச்சயம் தேவை நண்பர்களே.சில நேரங்களில் 5 ம் இடமான புத்திர ஸ்தானம் பலவீனப்பட்டு இருந்தாலும் 3 ம் இடம் பலம் பெற்று சுபத்துவம் பெற்று திருமண வயதில் அல்லது திருமணத்திற்கு பின் திசையோ புக்தியோ நடந்தால் குழந்தை பாக்கியத்தை கொடுத்துவிடுகிறது.அடியேனின் அனுபவத்தில் சில ஜாதகங்களில் நான் பார்த்திருக்கிறேன்.
                          திருமண காலங்களில் மற்றும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி பலம் பெற்ற 3 ம் பாவக அதிபதி திசையோ புத்தியோ அல்லது 3 ல் பலம் பெற்ற கிரகம் அமர்ந்து சுபத்துவம் அடையாமல் திசையோ புக்தியோ நடப்பில் வந்தால் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது.இக்காலகட்டத்தில்தான் ஜாதகருக்கு வீரியம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் எல்லை மீறும் சம்பவங்கள் எல்லாம் இக்காலகட்டத்தில்தான் அரங்கேறும் நண்பர்களே.வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது/திருமணத்திற்கு முன்னே தாம்பத்திய சுகம் அனுபவிப்பது/ திருமணத்திற்கு பின் ஏற்படும் கள்ளத்தொடர்பு இது போன்ற சிறப்பான சம்பவங்கள் எல்லாம் இக்காலகட்டத்தில்தான் அரங்கேறும் நண்பர்களே.குறிப்பாக இம்மாதிரியான காலங்களில் ஜென்மச்சனி /அஷ்டமச் சனி நடப்பில் வந்துவிட்டால் அவ்வளவுதான்.அவமானம்/துக்கம்/ கேவலம் என அனைத்தையும் சனிபகவான் சீரும் சிறப்புமாக செய்து விட்டு போய் விடுவார் நண்பர்களே.பதிவின் நீளம் கருதி நிறைவு செய்கிறேன் 


No comments:

Post a Comment