திருநாவுக்கரசர் குருபூஜை
விழுப்புரம் அருகிலுள்ள திருவாமூரில் புகழனார் - மாதினியார் தம்பதியருக்கு, மகனாக பிறந்தார் மருள்நீக்கியார். இவரின் தந்தை பெரும் பணக்காரர்; தாயார் மாதினியோ சிறந்த சிவபக்தை. இவரது சகோதரி திலகவதி.
திலகவதிக்கும், அந்நாட்டு படைத் தலைவரான கலிப்பகையாருக்கும் திருமணம் நிச்சயமானது. இந்நிலையில், புகழனாரும், மாதினியாரும் அடுத்தடுத்து இறந்து விட்ட நிலையில், திலகவதிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையான கலிப்பகையாரும், போரில் கொல்லப்பட்டார்.
தாய், தந்தை மற்றும் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை என, எல்லாரும் இறந்து போனதால், மனம் நொந்து, தானும் இறந்து விட முடிவு செய்தார் திலகவதி. ஆனால், தம்பி மருள்நீக்கி சிறுபிள்ளையாக இருந்ததால், அவருக்காக வாழ வேண்டிய கட்டாயம் திலகவதிக்கு ஏற்பட்டது. தம்பியை நல்வழியில் வளர்த்து, பெரிய மனிதனாக்க உறுதி பூண்டார்.
அனைத்து கலைகளையும் திறம்பட கற்றுத் தேர்ந்தார் மருள்நீக்கி. அச்சமயம், பல்லவ மன்னன் மகேந்திரவர்மன், நாட்டு மக்களை சமண மதத்தை கடைபிடிக்க உத்தரவிட்டான். சமணர்கள், புத்திசாலியான மருள்நீக்கியை சைவத்தில் இருந்து சமணத்திற்கு மதமாற்றம் செய்தனர்.
இதை அறிந்த திலகவதி, தன் தம்பி திரும்பவும் சைவத்திற்கே திரும்ப வேண்டும் என, சிவனை வேண்டி வந்தார். ஆனால், மருள்நீக்கி, சைவத்தின் பக்கம் திரும்பவே இல்லை.
இதனால், மிகுந்த வேதனை அடைந்தார் திலகவதி. அப்போது அவர் கனவில் தோன்றிய சிவன், 'உன் தம்பிக்கு கடும் வயிற்றுவலியைக் கொடுத்து, அதன் மூலம் மீண்டும் சைவத்திற்கு திரும்ப வைப்பேன்...' என, அருள்பாலித்தார்.
அதுபோல், மருள்நீக்கி வயிற்று வலியால் துடித்தார். சமணர்கள் ஏதேதோ செய்து பார்த்தனர். ஆனால், அவர்களால் அவரைக் குணப்படுத்த முடியவில்லை. தன் சகோதரியுடன் சிவன் கோவிலுக்கு சென்ற மருள்நீக்கி, சிவனை நோக்கி பல இனிய பாடல்களைப் பாடினார். அது கேட்டு மகிழ்ந்த சிவன், அவர் வயிற்று வலியை நீக்கியதுடன், அவருக்கு காட்சியளித்து, 'இனி உன்னை, 'நாவுக்கு அரசன்' என உலகத்தார் பாராட்டுவர்; திருநாவுக்கரசர் என்ற பெயர் உனக்கு விளங்கும்...' என்று அருள்பாலித்தார்.
இதை அறிந்த சமணர்கள், சைவத்தின் பெருமை பல்லவ மன்னனுக்கு தெரிந்தால், தங்களுக்கு மதிப்பில்லாமல் போய்விடும் என்பதை உணர்ந்தனர். மன்னனிடம் இல்லாததும் பொல்லாததுமாகச் சொல்லி, நாவுக்கரசரை கொல்ல ஏற்பாடு செய்தனர்.
அது கண்டு நாவுக்கரசர் பயப்படவில்லை. 'நான் யாருக்கும் அடிமையில்லை; எமனுக்கு கூட அஞ்ச மாட்டேன்...' என பொருள் பட, 'நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்...' என்ற பாடலை பாடினார்.
அவரை, சுண்ணாம்பு காளவாசலில் வைத்து கொல்ல முயன்றான் மன்னன். ஆனால், காளவாசல் குளிர்ந்துவிட்டது. பின், விஷ உணவு, கொடுக்கப்பட்டது; அதுவும் அவரை எதுவும் செய்யவில்லை. பட்டத்து யானையை வைத்து, அவரது தலையை மிதிக்க ஏற்பாடு செய்தான் மன்னன். ஆனால், யானையோ, பாகனைக் கொன்றது. ஒரு கல்லில் கட்டி, கடலில் தூக்கி வீசினர். கல்லோ பூவாக மாறி தண்ணீரில் மிதந்தது. அதன்பின், அரசனே சைவத்தின் பெருமையை உணர்ந்து, அதற்கு மாறி விட்டான். அவரது குருபூஜை சித்திரை சதயம் நட்சத்திரத்தில் நடக்கிறது. அந்நாளில், அவரது பாடல்களை பாடி, நாமும் சிவனருள் பெறுவோம்
No comments:
Post a Comment