Friday 19 October 2012

மோசடியை தவிர்க்க ரயில்வே தட்கல் முன்பதிவு செய்ய இனி தனி விண்ணப்பம்


டெல்லி: ரயில்வே தட்கல் முன்பதிவு செய்யும் போது மோசடியை தவிர்க்க, இனி விண்ணப்ப படிவத்தை அறிமுகப்படுத்த போவதாக இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.
தற்போது ரயில்வே முன்பதிவு செய்யும் போது, சாதாரண மற்றும் தட்கல் முறைக்கு ஒரே மாதிரியான விண்ணப்ப படிவம் தான் பயன்படுத்தப்படுகிறது. இதனால் புரோக்கர்கள் உள்ளே நுழைந்து மோசடி முறையில் முன்பதிவு செய்து, சீட்களை அதிக விலைக்கு விற்கின்றனர்.
இதனால் பயணிகளுக்கு தட்கல் முறையை பயன்படுத்தி பயண சீட் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், தட்கல் முறையில் முன்பதிவு செய்ய விரைவில் தனி விண்ணப்பம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக வடக்கு ரயில்வே பொது மேலாளர் வி.கே.குப்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
கடந்த ஆண்டு(2011) பிப்ரவரி மாதம் முதல் இதுவரை, ரயில்வே முன்பதிவு சேவையை வியாபார நோக்கில் பயன்படுத்திய 5 லட்சத்திற்கு மேலாக ஏஜண்ட்களின் கணக்குகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி.யின் மோசடி தடுப்பு குழுவினர் தொடர்ந்து இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தட்கல் முன்பதிவு துவங்கும் நேரம் காலை 8 மணிக்கு பதிலாக, தற்போது 10 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தட்கல் முன்பதிவுமுறையில் மோசடிகளை தவிர்க்கும் வகையில், விரைவில் இளஞ்சிவப்பு நிறத்திலான தனி விண்ணப்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதை பயணிப்பவரே நேரடியாக வந்து பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
தனி விண்ணப்பத்தில் பயணிக்கும் நபரின் முழு முகவரி, தொலைப்பேசி எண், அடையாள அட்டை விபரம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களில் தவறு இருந்தால், ரயில்வே சட்டத்தின் கீழ் அபாராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்.
62 சிறப்பு ரயில்கள்:
விழா கால பயணிகளின் நெரிசலை தவிர்க்கும் வகையில், 62 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்

No comments:

Post a Comment