Monday, 18 February 2013

ஒன்பதாம் பாவகம்


ஒன்பதாம் பாவகம்

ஐங்கரன் ஜோதிட பயிற்சி மையம் நாமக்கல்
அன்பு மாணவர்களே ,பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிவிட்டீர்கள் ,நீண்ட நாள் சந்திப்பது போல ஆகிவிட்டன சரி பாடத்திற்கு போவோமா
ஒன்பதாம் பாவகம்
இந்த பாவகம் ஒரு அருமையான பாவகமாகும் இதை பற்றி கொஞ்சம் பாப்போம் 
இந்த பாவக காரகம் 
  1. தந்தை, தந்தையின் சொத்துக்கள்
  2. தானம், தருமங்கள்
  3. ஜாதகரின் பாக்கியம் ,சௌரியம்
  4. பள்ளி கட்டுதல் ,அதற்க்கு தலைமை பொறுப்பு வகித்தல்
  5. கோவில் கட்டுதல், அதன் அறங்காவலர் ஆகுதல்
  6. பொது தர்ம ஸ்தாபனம் நிர்வாகம் செய்தல்
  7. மதம் போதித்தல், அதன் தலைவராக இருத்தல்
  8. தியான வாழ்க்கை ,சித்து நிலை அடைதல்
  9. நீண்ட தூர பிரயாண வாழ்க்கை , நல்ல கனவு காணுதல்
  10. நீதிபதியாக போகுதல்
  11. வனவாச நிலை மற்றும் முக்தி பெறுதல்  

என்ன மாணவர்களே மிகவும் ஆகாத பாவகமாக இருக்கிறதா, இந்த காலத்தில் இதற்க்கு வேலையே இல்லையே ,இது களிகாலமாக இருக்கிறதே, என்ன செய்வது இந்த பாவகம் வலுத்தால் ஜாதகர் பாவம் இந்த நிலைக்கு போய்விடுவார்கள்
மிகவும் புண்ணியம் நிறைந்தவர்கள் யோகம் பெரும் பாவமாகும் ,

ஒன்பதாம் பாவகதில் சூரியன் நின்றாள் தந்தை புகழ் ஈகை குணம் உடையவர், சந்திரன் நின்றாள் தந்தையார் அமைதியான குணம் கொண்டவர், செவ்வாய் இருந்தால் தந்தையார் கோபம் குணம் கொண்டவர், கழக பிரியர்,பிடிவாத காரர், புதன் இருந்தால் தந்தை புத்திசாலி, இளமை தோற்றம் இருக்கும்,
குரு இருந்தால் தந்தையார் சாந்த ,தர்ம குணம் உடையவர், பொறுப்பானவர் ,தெய்வ குணம் இருக்கும்,
சுக்கிரன் இருந்தால் தந்தை அழகானவர், அலங்கார பிரியம் இருக்கும், கலைத்துறை மீது பற்றுதல் இருக்கும்,
சனி இருந்தால் தகப்பனார் சோம்பல் தன்மை கொண்டவர், உடலில் அங்கம் பழுது ஏற்படும் ,
ராகு கேது இந்த பாவகதில் இருக்ககூடாது தந்தைக்கு பொறுப்பு வராது, விரக்தி மனப்பான்மை வந்துவிடும், 
எல்லா உறவுகளுமே ஒரு நாள் காலாவதியாகிவிடும். சுருக்கமாகச் சொன்னால்
காணாமல் போய்விடும்!

அன்பு, பரிவு, பாசம், காதல், மயக்கம், கிறக்கம் என்று உருகிப் போகக்கூடிய
உறவுகள் அல்லது நட்புகள் பல நமக்கு இருக்கலாம். ஆனால் அத்தனையுமே
ஒரு நாள் காலாவதி ஆகிவிடும்!

அல்லது அவற்றை விட்டு நானும், நீங்களும் ஒரு நாள் காணாமல் போய்விடுவோம்.

அதுதான் வாழ்க்கை!

இங்கே எதுவுமே சாசுவதம் இல்லை!

நிரந்தரமாக இருக்கப் போவதில்லை!

அதைத்தான் நமது வேதங்களும், புராணங்களும், காலம் காலமாகச் சொல்லிக்
கொண்டிருக்கின்றன!

உறவுகளே காணாமல் போகும்போது, உடமைகள்?

அவைகளும் நில்லாது போய்விடும்.

உங்களுக்குக் கெட்ட நேரம் வரும்போது அவைகள் போய்விடும்! அல்லது அவற்றை
அப்படியே பொட்டது பொட்டபடி நீங்கள் போய்விடுவீர்கள்!

அந்த அவலத்தை ஞானி ஒருவர் அசத்தலாகச் சுட்டிக் கட்டினார்:

(25 வரிகள் உள்ளன. இது முன் பதிவு ஒன்றில் எழுதியதுதான். மீண்டும் ஒருமுறை
படிப்பதில் தவறில்லை. படிக்க வேண்டுகிறேன்.)

எல்லாம் இருக்கிறது; நீ மட்டும் எங்கே போனாய்?

”நீ பிறந்த வீடு இருக்கிறது. நீ பொருள் சேர்த்துக் கட்டிய வீடு இருக்கிறது
உன்னைப்பெற்றவள் இருக்கிறாள், உன் கரம் பிடித்தவளும் இருக்கிறாள்
நீ பெற்ற பிள்ளைகளும் இருக்கின்றன
நீ பெற்ற விருதுகளும், ஊர் பேசிய பெருமைகளும் இருக்கின்றன
உற்றார் உறவினர்களும் இருக்கிறார்கள், சேர்த்த பொருள்களும் இருக்கின்றன
உணக்கு அடுத்த வேளை உணவும் தயாராக இருக்கிறது. இத்தனை காலமும்
உனக்கு உருவமளித்த உடலும் இங்கே இருக்கிறது -உயிரற்ற நிலையில்!
உன்னை மட்டும் காணவில்லையே - எங்கே போனாய்?”

என்று மனித வாழ்வு, ஒருநாள் முடிந்து, ஒன்றுமில்லாமல் போய் விடும்
அவலத்தை, ஒரு ஞானி நான்கே வரிகளில் நெத்தியடியாகப் பாட்டில்
சொன்னார்

அதை உங்களுக்காக மீண்டும் இன்று கொடுத்துள்ளேன்

”வீடிருக்கத் தாயிருக்க வேண்டுமனை யாளிருக்கப்
பீடிருக்க வூணிருக்கப் பிள்ளைகளும் தாமிருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே!”
- பட்டினத்தார்

பீடு = பெருமை (Honour)
ஊண் = உணவு (food)

இந்தப் பாட்டிலுள்ள கருத்தைக் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எளிமைப்
படுத்தி இப்படிச்சொன்னார்:

ஆடிய ஆட்டமென்ன?
தேடிய செல்வமென்ன?
பேசிய வார்த்தையென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன?
---------------------------------------------------------------------------------------
"இதெல்லாம் கவைக்கு ஆகாது வாத்தியார்! ஆவி போன பிறகு என்ன நடந்தால்
என்ன? இன்றைக்கு அதெல்லாம் வேண்டாமா? நடப்பைப் பற்றிப் பேசுங்கள்;
எதிர்காலத்தில் உயிர் பிரியும் வரை உள்ள தேவைகளைப் பற்றிப் பேசுங்கள்!
மற்றதைப் பேசுங்கள்; பயனுள்ளதை மட்டும் பேசுங்கள்"

அதைத்தான் சொல்ல வருகிறேன்!

ஆசைப் படுவது வேறு. தேவைகள் வேறு.

ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவைகள் கிடைக்க வேண்டும்.
இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு இம்மூன்றும் அடிப்படைத் தேவைகள்!

இருக்க வீடு வேண்டும். அது ஓட்டு வீடாக இருந்தால் என்ன? அல்லது
பிளாட்டாக இருந்தால் என்ன? அல்லது பெரிய பங்களாவாக இருந்தால்
என்ன? வாடகை வீடாக இருந்தால் என்ன? அல்லது சொந்த வீடாக இருந்தால்
என்ன?

நம் உடம்பே நமக்குச் சொந்தமில்லை! அது இரவல் வீடு. வாடகை இல்லை!
நம் ஆன்மா அதில் குடியிருக்கிறது.

அதைத்தான் கவியரசர் இரண்டு வரிகளில் சொன்னார்

"இரவல் தந்தவன் கேட்கின்றால்
இல்லையென்றால் அவன் விடுவானா?"

(பாடலின் முதல் வரி ஞாபகம் இருக்கிறதா?)

அதனால் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருங்கள்! இல்லாததற்கு ஏங்காதீர்கள்!
போராடாதீர்கள் (முயற்சி செய்யலாம் அதில் தவறில்லை)
மேலே குறிப்பிட்டுள்ள நிலைப்பாடுகளில் பிறப்பிலேயே ஞானம் உள்ளவன்
பிறப்பிலேயே செல்வந்தன், பிறப்பிலேயே ஏழை என்பதெல்லாம் யார் கையிலும்
இல்லை! யார் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் அப்படிப் பிறக்க
முடியாது.

அதெல்லாம் கொடுப்பினை!

நாம் பிறக்கும்போதே அதீதமான செலவந்தர் வீட்டில் - அதுவும் தவமிருந்து பெற்ற
ஒரே பிள்ளையாக இருந்துவிட்டால் எவ்வளவு அற்புதமாக இருக்கும். வாழ்க்கையில்
எந்தத் தேடலும் இல்லாத நிலை இருந்து விட்டால் எப்படி இருக்கும்?

கற்பனை செய்து பாருங்கள் ; கற்பனைக்கென்ன காசா? பணமா?
கற்பனை செய்து பாருங்கள்.

சென்னை அடையாறில் இரண்டு ஏக்கர் தோட்டத்துடன் பங்களா,
அண்ணா சாலையில்
ஸ்பென்சர் பிளாசா அளவிற்குக் கட்டடம், நுங்கம்பாகத்தில் ஒரு ஃபைவ் ஸ்டார்
ஹோட்டல், வளசரவாக்கத்தில் 25 வீட்டு மனைகள், கோடம்பாக்கத்தில் ஒரு ஸ்டுடியோ,
திருவான்மியூரில் 50 ஏக்கர் பூமி, ஊட்டியில் 200 எக்கர் தேயிலைத் தோட்டம்,
ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பிரம்மாண்டமான - நம் குடும்பத்திற்குச் சொந்தமான
பொறியியற் கல்லூரி, 500 கோடி ரூபாய் அளவிற்குப் ப்ளூ சிப் பங்குப் பத்திரங்கள்
வீட்டில் 2 ரோல்ஸ்ராய்ஸ், மற்றும் 4 பென்ஸ் கார்கள் அதோடு நம்மை மணம்
செய்துகொள்ளப் போட்டி போடும் நிலையில் சினேகா போன்ற அத்தை மகள்
அல்லது நயன்தாரா போன்ற மாமா மகள்........இப்படியெல்லாம் by birth நமக்கு
இருந்தால் எப்படியிருக்கும்?

(நன்றாக இருக்காது. சுவையில்லாமல் போய்விடும். தேடிப் பிடிப்பதில் உள்ள
த்ரில் இருக்கிறதே அதற்கு நிகரானது எதுவுமே இல்லை. அது புரிபவர்களுக்கு
மட்டுமே புரியும்)

அதெல்லாம் முயற்சியின்றி வருவது. அதற்கு ஜோதிடத்தில் பாக்கியம் (gains)
என்று பெயர்.

அந்த பாக்கியம் ஒருவனுக்கு எந்த அளவு இருக்கிறது என்பதைக் காட்டுவதுதான்
ஒன்பதாம் வீடு. தமிழில் அதைப் பாக்கிய ஸ்தானம் என்பார்கள். ஆங்கிலத்தில்
It is called as House of Gains!

அந்த வீடுதான் ஒருவனுக்கு அமையும் தந்தையைப் பற்றிய வீடு. பூர்விகச் சொத்துக்
களுக்கான வீடு. தந்தைவழி உறவுகளுக்கான வீடு.

ஜோதிடத்தின் மேன்மை அதன் வீடுகளின் பிரிவில்தான் இருக்கிறது. ஒருவனுக்குத்
தாய்தான் முதன்மையான உறவு. தாய்க்கு 4ஆம் வீடு. அடுத்து தந்தை. அதற்கு
9ஆம் வீடு.

கல்வி முக்கியம். கல்விக்கு 4ஆம் வீடு. கல்வியைவிட அறிவு முக்கியம். அதற்கு
5ஆம் வீடு.

வேலை முக்கியம். ஆதற்கு 10ஆம் வீடு. வேலையைவிட அதனால் நமக்குக்
கிடைக்கும் ஆதாயங்கள் முக்கியம். அதற்கு 11ஆம் வீடு.

எல்லாவற்றையும் விட நாம் முக்கியம் அதற்கு ஒன்றாம் வீடு. அதைவிட நமது
உயிர் முக்கியம். இங்கே வாழப்போகும் நாட்கள் முக்கியம். அதற்கு 8ஆம் வீடு.

எல்லாக் காலத்திலேயும் நம்மை அரவணைக்க குடும்பச் சூழல் முக்கியம். அதற்கு
2ஆம் வீடு. கையில் காசு முக்கியம் அதற்கும் அதே 2ஆம் வீடு.

எதுவந்தாலும் தாங்கக்கூடிய துணிச்சல் முக்கியம். அதற்கு மூன்றாம் வீடு.

நோய்களையும், எதிரிகளையும், இழப்புக்களையும், வாழ்க்கையில் சந்தித்தாக
வேண்டும். அதற்கான வீடுகள் 6ம் 12ம் ஆகும்!

ஒரு கவிஞன் சொன்னான்:

"அணைக்க ஒரு அன்பில்லாத மனைவி
பிழைக்க ஒரு பிடிப்பில்லாத தொழில்
வளர்க்க இரு நோயுற்ற சேய்கள் - ஆனாலும்
இன்னும் உலகம் கசக்கவில்லை!"

என்ன ஒரு அசத்தலான மனம் பாருங்கள் அவனுக்கு!
இங்கே சொல்லப்படும் நல்ல அமைப்பு என்பது உங்களுக்கெல்லாம்
தெரிந்ததுதான். நல்ல அமைப்பு என்பது ஒரு கிரகம் வலுவாக உச்சம்
அல்லது நட்பு வீடுகளில் அல்லது நல்ல கிரகங்களின் பார்வையுடன்
அமர்ந்திருப்பதாகும்.

அதுபோல கெட்டிருப்பது என்பது நீசம் அல்லது பகை வீடுகளில்
அல்லது சனி, ராகு, கேது போன்ற தீய கிரகங்களின் பார்வை பெற்று
அமர்வதாகும்.

அதை இரண்டையும் மனதில் அழுத்தமாகக் கொண்டு மேலே படிக்கவும்.
தண்ணீரில் வந்த பணம் எப்படிப் போயிற்று?

கோமதிக்கு வயது 24. வாட்டசாட்டமானவள். உயரமானவள்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக அழகானவள். பார்த்தவர்களைத்
திரும்பப் பார்க்க வைக்கும் அழகு.

அழகு என்பது எதற்கு இங்கே வலியுறுத்திச் சொல்லப்படுகிறது?

அப்போதுதான் ஒரு சுவாரசியத்தோடு படிப்பீர்கள். பதிவிற்கு வந்து
செல்கிறவர்களில் எண்பது சதவிகிதம் இளைஞர்கள். அதாவது நாற்பது
வயது வரை உள்ள அனைவரும் இளைஞர்கள் என்று நீங்கள்
ஏற்றுக் கொண்டால்!:-))))

நாற்பதிற்கு மேல்தான் நாய்க்குணம்; அறுபதிற்கு மேல் பேய்க்குணம்
(என்பார்கள்) இந்த என்பார்கள் என்பது நான் தப்பித்துக் கொள்வதற்காக!
அதாவது அந்த வயதுக்காரர்களின் கேள்விக் கணைகளில் இருந்து
விடுபடுவதற்காக!:-))))

கோமதி கதைக்கு வருகிறேன்.

காலம் எழுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்.அவளுடைய வீடு
பொதிகைத் தென்றல் வருடிக்கொடுக்கும் ஒரு பசுமையான கிராமத்தில்
இருந்தது.கோமதி நான்கு பசுமாடுகளை வைத்துப் பால் வியாபாரம்
செய்து கொண்டிருந்தாள்.

அவளுடைய கணவன் சுகவாசி! இருந்த நான்கு வேலி நிலத்தையும்
குத்தகைக்குக் கொடுத்து விட்டு, குத்தகைப் பணத்தில் சுகமாக வாழ்ந்து
வந்தான்.

பொழுது போக்கு?

அதுதான் கோமதி இருக்கிறாளே!:-))))

கோமதி சுறுசுறுப்பானவள். சுயமாக எதாவது செய்ய வேண்டும்
என்பதற்காக மாடுகள், மாட்டுத் தொழுவம், அதைச் சுத்தப் படுத்துதல்,
மாட்டுத் தீவனம், பால் கரத்தல், இத்யாதி போன்றவற்றில் தன்னை
ஈடுபடுத்திக் கொண்டிருந்தாள்.

அதேபோல காலையில் இருபது லிட்டர் பால் - மாலையில் 20 லிட்டர்
பால் எனப் பால்வியாபாரத்தையும் அவள்தான் செய்து வந்தாள். இரண்டு
பாத்திரங்களில் பால்.அதை வைத்துத்தூக்க வசதியாக ஒரு கூடை.அந்தக்
கூடையைத் தலைமேல் வைத்துப் பிடித்துக்கொண்டு பக்கத்தில் உள்ள
நகரத்திற்குக் கொண்டுபோய் வாடிக்கையாளர்கள் வீடுகளில் அவள்தான்
விற்றுவிட்டு வரவேண்டும். அதோடு அவள் செல்லும் வழியில் குறுக்கிடும்
காட்டாற்றையும் கடந்து சென்று வரவேண்டும்.

காட்டாற்றில் வருடம் முழுவதும் கணுக்கால் அளவு அல்லது முழங்கால்
அளவிற்குத் தண்ணீர் ஓடும். மழைக்காலங்களில் மட்டும் வெள்ளப் பெறுக்
கெடுக்கும். அப்போது ஆற்றைக கடக்க நினைப்பது முடியாத காரியம்.
கோமதியும் அந்தக் காட்டாற்றில் தனது சிவந்த பாதங்களை முழுமையாக
நனைத்து விளையாடிக்கொண்டே போய்வருவதில் ஒரு அலாதியான மகிழ்வு
கொள்வாள்.

ஆரம்ப காலங்களில் அந்த வியாபரத்தை மிகவும் நாணயமாக செய்துவந்த
கோமதி, பின்னாட்களில் காசின் மேல் கொண்ட காதலால், சம அளவு
தண்ணீர் கலந்து விற்க ஆரம்பித்தாள்.

அவள் புறப்படும் முன்பு, தங்கள் கிணற்று நீரைத் துணியால் வடிகட்டி, பாலில்
சேர்ப்பதைப் பார்த்த, பக்கத்து வீட்டு ஆவுடையா பிள்ளை, அவளைக் கடிந்து
கொண்டார்.

"தாயீ, பாலில் எதையும் கலக்காதே! அது பாவச் செயல். எத்தனை பேர்
உன்னை நம்பி தங்கள் குழ்ந்தை குட்டிகளுக்கு இந்தப் பாலைக் கொடுக்கி
றார்கள். எதாவது நீர்த் தொற்று நோய் ஏற்பட்டால் அந்தப்பாவம் உன்னைத்தான்
வந்து சேரும்"

கோமதி அதைக் கண்டு கொள்ளவில்லை!

எப்போது முன்னேறுவதாம்?

தண்ணீர் ஊற்றி விற்க ஆரம்பித்தவுடன் அவள் கையில் அபரிதமாகப் பணம்
சேர ஆரம்பித்தது. அந்தக் காலத்தில் ஏது வங்கிச் சேமிப்புக் கணக்கு?

கோமதி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நெல்லைக்குச் சென்று, அந்தப்
பணத்தை நகையாக மாற்றிக் கொண்டு வந்து விடுவாள். வாங்கிய நகைகளை
வீட்டில் வைக்க யோசனை செய்து தானே அணிந்து கொண்டு திரிவாள்.
ஒற்றை வடம், இரட்டை வடம் என்று சங்கிலிகள். கையைக் கலகலக்கச்
செய்யும் வலையல்கள் என்று ஒரு நகைக் கடைப் பொம்மை போல் ஆகி
விட்டாள். தாய் வீட்டுச் சீதனம், தான் வாங்கியது என அவள் மேனியில்
ஐம்பது பவுன்களுக்கு மேல் தங்கம் நகை வடிவில் குடி கொண்டது.

ஒரு நாள், நகருக்குச் சென்று பாலை விற்றுவிட்டு வந்தவள், ஆற்றின் அருகே
வந்த பின்தான் கவனித்தாள். ஆற்றில் அரை முழங்கால் அளவு நீர், சுர்'ரென்று
சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. அவள் உணர்ந்து விட்டாள், இன்னும்
சில மணித்துளிகளில் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கான
முன்னோட்டம் அது!.

வெள்ளம் வருவதற்குள் ஆற்றைக் கடந்து விடலாம் என்று பரபரப்பாக
ஆற்றைக் கடக்க முனைந்தவளை, அவள் பாதி ஆற்றை கடக்கும் முன்பே,
இடுப்பளவு உயர்ந்த ஆற்று நீர் புரட்டிப் போட்டு விட்டது. அவள் சுதாகரிக்கும்
முன்பே, அடுத்தடுத்தடுத்த நொடிகளில் வந்த பெரு வெள்ளம் அவளோடு
முழுமையாக விளையாட ஆரம்பித்தது.

ஈடு கொடுத்து அவளால் விளையாட முடியவில்லை. அதோடு பயத்தில்
மயங்கி விட்டாள்
--------------------------------------------------------------------
இரண்டு மணி நேரம் சென்றிருக்கும். ஆற்றின் ஒரு பக்கக் கரையில்
மயங்கிக் கிடந்த கோமதி நினைவு திரும்பிவர கண் விழித்துப் பார்த்தாள்.
ஆற்றில் வெள்ளம் வடிந்திருந்தது.

தான் எங்கே கிடக்கிறோம் என்று பார்த்தாள். தான் செல்ல வேண்டிய
பாதையில் இருந்து ஒரு மைல் தூரம் தள்ளி செட்டியார் தோப்பு அருகே
இருப்பதை உணர்ந்தாள்.

ஆற்று நீர் தன்னை உருட்டி கொண்டு வந்து அங்கே தள்ளிவிட்டுப்
போயிருக்கிறது என்று எண்ணினாள். அதோடு தன்னை உயிரோடு விட்டு
விட்டுப் போன ஆற்றை நோக்கிக் கை எடுத்துக் கும்பிட்டாள்.

அதற்குப் பிறகுதான் அவள் கவனித்தாள். அடுத்த நொடி தீயை மிதித்தவள்
போலாகிவிட்டாள்.

என்ன ஆகிவிட்டிருந்தது?

அவள் உடலை அலங்கரித்துக் கொண்டிருந்த நகைகளில் ஒன்று கூட
இல்லை. எல்லாம் எங்கே போயிருக்கும்? அவள் மயங்கிக் கிடந்தபோது
அந்த வழியாகச் சென்ற வழிப்போக்கன் எவனோ ஒருவன் அத்தனை
நகைகளையும் அடித்துக் கொண்டு போயிருந்தான்.

ஈரத்தில் உடலோடு உடலாக ஒட்டிக் கொண்டிருந்த தன்னுடைய
ஆடைகளைக்கூடச் சரி செய்யும் சிந்தை இன்றி அவள் 'ஓ' வென்று
குரல் கொடுத்துத் துக்கத்தோடு கதறி அழுக ஆரம்பித்தாள்.

பின்னே அழுகை வராதா என்ன?

இழந்தது, ஒரு பவுனா அல்லது இரண்டு பவுனா? மொத்தமாக ஐம்பது
பவுன்களாயிற்றே!

அப்படியே உட்கார்ந்து ஒரு பத்து நிமிடமாவது அழுதிருப்பாள்.
அப்போதுதான் அது நடந்தது. யாரோ தன்னை நோக்கி நடந்துவரும்
ஓசை கேட்டு. அழுகையுடனேயே திரும்பிப் பார்த்தாள்.

அவளுடைய பக்கத்துவீட்டு மனிதர் ஆவுடையாபிள்ளை அவர்கள்தான்
வந்து கொண்டிருந்தார். கையில் காலிக்கூடை. தன்னுடைய தோட்டத்துக்
காய்கறிகளை விற்றுவிட்டுத் திரும்புகிறார் போலும்.

வந்தவர் கோமதியைப் பார்த்துக் கேட்டார்," என்ன தாயி, இங்கின
உக்கார்ந்து அழுதுக்கிட்டிருக்கே?"

கோமதி நடந்ததைச் சொன்னாள்.

ஒரு குறுகுறுப்புடன், அவள் தன்னுடைய பெரிய விழிகளை ஏற்றி இறக்கி
விவரித்ததைக் கேட்ட பிள்ளை சொன்னார்.

"சரி, விடுதாயி! போன நகைகள் திரும்ப வரவா போகுது? வா, வீட்டுக்குப்
போகலாம்"

"எப்படியண்ணே, உங்களால் இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள
முடிகிறது? என் துக்கம் தெரியவில்லையா?"

"நீ விசனப்பட்டு என்ன பயன். எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு இருக்கிறது.
நீ பாலில் தண்ணீர் கலந்து விற்றபோது, அப்படி விற்காதே - அது பாவச்
செயல் என்று சொன்னேன். கேட்கவில்லை. பாவச் செயல் எல்லாமே
தர்மத்திற்கு எதிரானது. தர்மதேவன் கண்டிப்பாகக் கணக்கைத் தீர்க்காமல்
விடமாட்டான். உன் கணக்கை இப்போது அவன் தீர்த்திருக்கிறான்.
தண்ணீரில் வந்த காசு தண்ணீரிலேயே போய்விட்டது. நீ உழைத்த
உழைப்பிற்கு உன் உயிர் மிஞ்சியிருக்கிறது.வா போகலாம்!"
----------------------------------------------------------------
இந்தக் கதைக்கும் இன்றைய பாடத்திற்கும் சம்பந்தம்?

"ஆகா, இல்லாமலா, இன்றைய பாடம் தர்ம ஸ்தானத்தைப் (Ninth House)
பற்றிய பாடம்!

"ஒன்பதாம் வீட்டிற்குப் பாக்கியஸ்தானம் என்றல்லவா பெயர்?"

"இன்னொரு பெயரும் உண்டு. அதைத் தர்ம ஸ்தானம் என்றும் அழைப்பார்கள்!"

1. ஒன்பதில் சூரியன் சென்று நல்லவிதமாக அமர்ந்திருந்தால், ஜாதகன்
பொறுப்புணர்வு மிகுந்தவனாக இருப்பான். இறை நம்பிக்கை உள்ளவனாக
இருப்பான். ஜாதகன் எதிலும் ஆர்வம் உள்ளவனாக இருப்பான்.
ரசனை, நகைச்சுவை உணர்வுகள் மிகுந்தவனாக இருப்பான்.

2. ஒன்பதில் சூரியனும், புதனும் சேர்ந்து அமர்ந்திருந்தால் (அதற்கு புத
ஆதித்ய யோகம் என்று பெயர்) ஜாதகன் அதிகம் படித்தவனாகவும்,
செல்வம் மிகுந்தவனாகவும் இருப்பான்.

3. ஒன்பதில் சூரியனுடன், சுக்கிரன் கைகோர்த்து அமர்ந்திருந்தால் ஜாதகன்
நோய்கள் உள்ளவனாகவும், மிகுந்த உடல் உபாதைகள் உள்ளவனாகவும்
இருப்பான்.

4, இங்கே சூரியன் கெட்டுப்போய் அமர்ந்திருந்தால் அல்லது தீயவர்களின்
கூட்டோடு அமர்ந்திருந்தால், ஜாதகன் தெனாவெட்டாக இருப்பான்.
தன்னுடைய தந்தை, பெரியவர்கள் என யாரையும் மதிக்க மாட்டான்.
இறை நம்பிக்கை இல்லாதவனாக இருப்பான்.

5. ஒன்பதில் குரு அல்லது சுக்கிரன் இருவரில் ஒருவர் அமர்ந்திருந்தாலும்
அல்லது இருவரும் சேர்ந்து அமர்ந்திருந்தாலும் (5 பாகை இடைவெளியுடன்)
அதோடு அவர்கள் ஒன்பதாம் அதிபனின் பார்வை பெற்றிருந்தால் ஜாதகன்
அதிர்ஷ்டம் உடையவனாக வாழ்வான். அவனுடைய வாழ்க்கை சிறப்பாக
இருக்கும்.

6. லக்கினாதிபதியும், ஒன்பதாம் இடத்து அதிபதியும் பரிவர்த்தனை யோகம்
பெற்றிருந்தால் (அதாவது ஒருவர் வீட்டில் இன்னொருவர் மாறி அமர்வது
(The lagna lord and ninth lord exchanging their houses), ஜாதகன் எல்லா
விதத்திலும் அதிர்ஷ்டம் உள்ளவனாக இருப்பான். The native of the
horoscope will be very lucky in all respects.

7. ஒன்பதாம் இடமும், பத்தாம் இடமும் மிகவும் முக்கியமானதாகும்.
ஒன்பதிற்குப் பெயர் தர்ம ஸ்தானம். 10ற்குப் பெயர் கர்ம ஸ்தானம். அந்த
இரு இடங்களுக்கும் உரிய வீட்டு அதிபர்களுக்குப் பெயர் தர்ம - கர்ம
அதிபதிகள். அவர்கள் இருவரும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால்
(அதாவது ஒருவர் வீட்டில் இன்னொருவர் மாறி அமர்வது Tஅந்த யோகத்திற்குப் பெயர்
தர்மகர்மாதிபதி யோகம். அந்த யோகம் பெற்றவன் அதீதமான பொருள்
ஈட்டுவான். ஏராளமான தர்ம காரியங்களைச் செய்வான். கோவில்களுக்குத்
திருப்பணி செய்வது, இலவச மருத்துவமனைகள் கட்டுவது, பள்ளிகள்,
கல்லூரிகளைக் கட்டுவது, பெரிய அளவில் அடிக்கடி அன்னதானம் செய்வது,
ஏழைகள், எளிய மக்களுக்கு உதவிகள் செய்வது - ஆகிய செயல்கள் தர்ம
காரியங்கள் ஆகும் (இது அதைப்பற்றித் தெரியாத இளைஞர்களுக்காக
விவரிக்கப்பட்டுள்ளது அல்லது எடுத்துச் சொல்லப்பட்டது என்று வைத்துக்
கொள்ளுங்கள்)

8. ஒன்பதாம் வீட்டில் குரு அல்லது சுக்கிரன் அல்லது சந்திரன் வந்து
அமர்ந்திருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன்.

9. ஒன்பதாம் வீட்டில் சனி அல்லது ராகு அல்லது கேது அமர்ந்திருந்தால்,
ஜாதகன் துரதிர்ஷ்டமானவன்.

10. 11ஆம் இடத்து அதிபதி ஒன்பதில் அமர்ந்து, பத்தாம் இடத்து அதிபதியின்
பார்வை பெற்றால், ஜாதகனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

11. அதேபோல ஒன்பதாம் வீட்டுக்காரன் 2ல் அமர்ந்து, பத்தாம் வீட்டு
அதிபதியின் பார்வை பெற்றாலும் ஜாதகனுக்குச் சென்ற இடமெல்லாம்
சிறப்பு.

12. ஒன்பதில் சந்திரன் அமர்ந்திருந்தால், ஜாதகன் அதிர்ஷ்டமானவன்.
வளமாக வாழக்கூடியவன். நிறையக் குழந்தைகள், உறவினர்கள், நண்பர்
களை உடையவன். அதிகாரத்தில் உள்ளவர்களின் தொடர்பு உடையவன்.
கொள்கைப்படி நடப்பவன். பெருந்தன்மை உடையவன்.

13. இங்கே அமரும் சந்திரன் நல்ல பார்வை பெற்று அமர்ந்தால், ஜாதகன்
பல தர்மச் செயல்களைச் செய்வான். பலவிதமான சொத்துக்களை வாங்கிக்
குவிப்பான். பல நாடுகளுக்கும் சென்று வருவான்.

14. ஒன்பதில் சந்திரனுடன் சனியும் சேர்ந்தமர்ந்தால் அல்லது இங்கே
அமரும் சந்திரன் சனியின் பார்வை பெற்றால், ஜாதகன் பலவிதமான
துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.

15. ஒன்பதில் சந்திரன் இருந்து, அந்தச் சந்திரனை, சனி, செவ்வாய், புதன்
ஆகிய மூன்று கிரகங்களும் பார்த்தால் (தங்களது பார்வையால்) ஜாதகன்
ஒரு அரசனைப் போல வாழ்வான்.
(He will be a ruler)

16. சந்திரனுடன், செவ்வாய் சேர்ந்து ஒன்பதில் இருந்தால், ஜாதகனின்
தாய்க்கு விபத்து போன்ற துன்பங்கள் நேரிடலாம்.

17. இங்கே இருக்கும் சந்திரன் சுக்கிரனின் சேர்க்கை பெற்றால், ஜாதகன்
நெறிமுறைகள் இல்லாதவனாக இருப்பான். பல பெண்களோடு தொடர்பு
கொண்டு வாழ்வான். ஜாதகிக்கும் இதே பலன்கள்தான்.

18. . ஆதீதமான பொருள்
சேரும்.

19. 3ஆம் அதிபதியும், ஒன்பதாம் அதிபதியும் சேர்ந்து நல்ல நிலைமையில்
இருந்தால் அல்லது வலுவாக இருந்தால், ஜாதகன் தன் சகோதரர்கள்
மூலமாக பல உதவிகளைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பான்.

20. 5ஆம் அதிபதியும், 9ஆம் அதிபதியும் சேர்ந்து நல்ல நிலைமையில்
இருந்தால், ஜாதகனின் பின்வாழ்க்கை நன்றாக இருக்கும். அவன்
தன்னுடைய வயதான காலத்தில் தன் குழந்தைகள் மூலம் வசதியாக
வாழ்வான்.

21. ஒன்பதாம் வீட்டு அதிபதி பாவ கிரகங்களின் வீட்டில் அமர்ந்தல்
ஜாதகன் தன் தந்தையைத் தன் இளம் வயதிலேயே இழக்க நேரிடும்.

22. லக்கினத்திற்கு ஏழில் சூரியன் நல்ல நிலைமையில் இருந்தால்,
ஜாதகனுக்கு அவனுடைய தந்தை மூலமாக செல்வங்கள் கிடைக்கும்.

23. ஜாதகத்தில் சூரியன் எந்த இடத்தில் இருந்தாலும் - நல்ல நிலைமை
யில் இருந்தால், ஜாதகன் தன் தந்தைக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக்
கூடியவன்.

24. ஜாதகத்தில் சூரியன், சனி அல்லது ராகு அல்லது கேது அல்லது
மாந்தியால் கெட்டிருந்தால், ஜாதகனால் அவனுடைய தந்தைக்குத்
துன்பங்கள்தான் ஏற்படும்.

25. சூரியனுக்குத் திரிகோணத்தில் செவ்வாயும் அல்லது சந்திரனுக்குத்
திரிகோணத்தில் சனியும் இருந்தால், ஜாதகன், அவனுடைய பெற்றோர்
களால் புறக்கணிக்கப்படுவான்.

26.ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் சென்றமர்ந்தால், ஜாதகன் அதிகாரங்கள்
உடையவனாக இருப்பான்.வேலையில் அல்லது தொழிலில் அல்லது
ஆட்சியில் அல்லது அரசில் எப்படி வேண்டுமென்றாலும் அந்த அதிகாரம்
அமையும். அந்த அமைப்பானது அவனது தொழில் ஸ்தானத்தைவைத்து
மாறுபடும். ஆனால் அதிகாரங்கள் உடையவனாக இருப்பான்.

27. ஒன்பதாம் இடத்தில் அமரும் செவ்வாயோடு சுக்கிரன் சேர்ந்தால்,
ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் அல்லது பெண்கள் தொடர்பு உண்டாகும்.
ஜாதகனுக்கு வெளிநாட்டு வாழ்க்கை ஏற்படும்.

28. ஒன்பதில் செவ்வாயும், சனியும் கூட்டாக அமர்ந்தால் ஜாதகன் போதைக்கு
அடிமையாவான். போதை என்பது பல விதமான போதைகளில் ஒன்றைக்
குறிக்கும் (addiction to women or some other things). பிடிவாதக்காரனாகவும்,
முரண்பாடுகள் உடையவனாகவும் இருப்பான்.

29. ஒன்பதாம் இடத்தில் புதன் அமர்ந்தால், கல்வியாளனாக ஜாதகன்
இருப்பான் (scholar).

30. ஒன்பதில், புதனுடன் சுக்கிரனும் சேர்ந்திருந்தால், ஜாதகன் விஞ்ஞானியாக
அல்லது பெரிய இசை மேதையாக இருப்பான். கெட்டிக்காரனாக இருப்பான்.
அந்த அமைப்பானது அவனது தொழில் ஸ்தானத்தை வைத்து மாறுபடும். ஆனால்
மேதையாக இருப்பான்.

31. ஒன்பதில், புதனுடன் குரு சேர்ந்திருந்தால், ஜாதகன் சிறந்த அறிவாளியாக
இருப்பான். நகைச்சுவை உணர்வு மேலோங்கியவனாக இருப்பான். தந்தையுடன்
நட்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பான். பல அமைப்புக்களில் சிறப்பாக உரை
யாற்றுபவனாக இருப்பான். வெளி நாடுகளில் உள்ள கழகங்களின் அழைப்பின்
பேரில் சென்று உரையாற்றுபவனாக இருப்பான்.

32. ஒன்பதில் சனி இருந்தால், ஜாதகன் தனித்து வாழும்படி ஆகிவிடும்.
சிலருக்குத் திருமண வாழ்க்கை இல்லாதுபோய்விடும். இந்த அமைப்புள்ள
ஜாதகன் ராணுவத்தில் இருந்தால் பெரிய வீரனாகச் சிறப்படைவான்.

33.ஒன்பதில், சனியுடன் சூரியனும் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குத் தன் தந்தை
மற்றும் தன் குழந்தைகளுடன் நேசம் இருக்காது.

34.ஒன்பதில், சனியுடன் புதன் சேர்ந்திருந்து, நல்ல பார்வை எதுவும் இல்லை
யென்றால், ஜாதகன் நம்பிக்கைக்கு உரியவனாக இருக்கமாட்டான். பலரையும்
ஏமாற்றிப் பிழைப்பான். அவன் செல்வந்தனாக இருந்தாலும், இப்படிப்பட்ட
குணமுடையவனாகத்தான் இருப்பான்.

35.ஒன்பதில் குரு இருந்தால், ஜாதகன் சட்டத்துறையில் அல்லது தத்துவத்தில்
நிபுணனாக இருப்பான். இங்கே அமரும் குரு நல்ல பார்வை பெற்றால், அபரிதமான
பொருள் ஈட்டுவான். சொத்துக்கள் சேரும். சகோதரர்கள் மேல் நேசமுடைய
வனாக இருப்பான்.

36.ஒன்பதில் இருக்கும் குரு, சந்திரன் மற்றும் செவ்வாயின் பார்வை பெற்றால்,
ஜாதகன் ராணுவம் அல்லது காவல்துறையில் பெரிய அதிகாரியாக விளங்குவான்.

37. ஒன்பதில் குருவுடன் சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்ந்தால், ஜாதகன் நடத்தை
சரியில்லாதவனாக ஆகிவிடுவான்.

38. ஒன்பதில் சுக்கிரன் இருந்தால், ஜாதகன் மிகவும் அதிர்ஷ்டமானவன். கல்வி,
வேலை, மனைவி, குழந்தைகள் என்று எல்லாமே அவனுக்குச் சிறப்பாகக்
கிடைக்கும். மகிழ்ச்சியாக வாழ்வான்.

39. ஒன்பதில் சுக்கிரனும் சூரியனும் சேர்ந்திருந்தால், ஜாதகன் அருமையாகப்
பேசக்கூடியவனாக இருப்பான். உடல் உபாதைகள் உடையவனாகவும் இருப்பான்.

40. ஒன்பதில் சுக்கிரனுடன் சனி சேர்ந்திருந்தால் ஜாதகன் பஞ்சாயத்து, சமரசப்
பேச்சுக்கள்,தூதுவராகச் செயல்படுவது ஆகியவற்றில் சிறந்து விளங்குவான். ஒரு
அரசனின் கீழோ அல்லது ஒரு நாட்டு அரசிற்கோ தூதுவனாகச் செயல்படுவான்.
மனிதர்களைப் பற்றியும் உலக நடைமுறை விஷயங்களைப் பற்றிய அவனுடைய
கருத்துக்களும், கண்ணோட்டங்களும் சிறப்பாக இருக்கும்.

41.ஒன்பதில் சுக்கிரனுடன் சூரியனும், சனியும் சேர்ந்திருந்தால் ஜாதகன் notorius
criminal ஆக இருப்பான். அல்லது அதுபோன்ற விஷயங்களில் தீவிர ஈடுபாடு
உடையவனாக இருப்பான்.

42. ஒன்பதில் ராகு இருப்பது பலவிதங்களில் நல்லதல்ல. அந்த ராகு வேறு நல்ல
கிரகங்களின் பார்வை பெறவில்லை என்றால், ஜாதகன் கடுகடுப்பான ஆசாமியாக
இருப்பான். வாழ்க்கை துன்பங்கள் நிறைந்ததாக இருக்கும்.

43. ஒன்பதில் ராகு இருந்து ஜாதகனின் ஏழாம் வீடும் கெட்டிருந்தால், ஜாதகனுக்கு
மிகவும் அவலட்சணமான மனைவி வந்து சேர்வாள். அவனுடைய மண வாழ்க்கையில்
மகிழ்ச்சி இருக்காது.

44. ஒன்பதில் ராகு இருந்தால் பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்காது.
ஜாதகத்தின் வேறு அமைப்புக்களால் கிடைத்தாலும், மிகுந்த வம்பு, வழக்கு,
போராட்டங்களுக்குப் பிறகே கிடைக்கும்.

45. ஒன்பதில் கேது இருந்தால், ஜாதகன் உணர்ச்சி வசப்படுபவன் (short tempered).
மனநிலை பிரள்பவன்.

46. ஒன்பதாம் இடத்துக் கேது, ஜாதகனுக்கு அவனுடைய பெற்றோர்களுடன் நல்ல
உறவை ஏற்படுத்தாது.

47. ஒன்பதாம் இடம், தந்தை, தந்தைவழி உறவினர்கள், பூர்வீகச் சொத்துக்கள்,
வெளிநாட்டுப் பயணங்கள் அல்லது வெளிநாட்டு வாழ்க்கை, முயற்சி இன்றிக்
கிடைக்கும் பலன்கள் (பாக்கியம்) ஆகியவை சம்பந்தப்பட்டது.

48. பெண்களுக்கு இந்த வீடு மிகவும் முக்கியமானது. இது நன்றாக அமையப்
பெற்ற பெண் வாழ்க்கையில் எல்லா பாக்கியங்களையும் பெற்று மகிழ்வோடு
வாழ்வாள்.

49. இந்த வீடு சரிவர அமையாத மங்கை நல்லாள் வாழ்க்கையில் பலவித
இன்னல்களுக்கு ஆளாவாள்.

50. இந்த ஒன்பதாம் வீட்டிற்குரிய பலன்கள், அதன் அதிபதி, மற்றும் அதில்
அமர்ந்துள்ள கிரகங்களின் தசா, புத்தி காலங்களில் கிடைக்கும் அல்லது
உண்டாகும் அல்லது நடைபெறும்.
--------------------------------------------------
ஜோதிடம் என்பது கடல். வடமொழியிலும், தமிழிலும் ஜோதிட விதிகளை
எழுதிய விற்பன்னர்கள் சுமார் இரண்டு லட்சங்களுக்கும் மேற்பட்ட விதி
முறைகளை எழுதி வைத்துள்ளனர். சில முக்கியமான விதிகளை மட்டுமே
ஒருவர் தன் மனதில் தக்க வைத்துக் கொள்ள முடியும்

எல்லாவறையும் கற்று பண்டிதன் ஆவது இன்றைய சூழ்நிலையில் சாத்தியம்
இல்லாதது. ஒரளவு தெரிந்து கொள்ளலாம். அதுவும் அர்வம், தன் முனைப்பு,
முயற்சி, நேரத்தைச் செலவிட்டுக் கற்றுக்கொள்ளுதல், படித்தவற்றை
திரும்பத் திரும்பப் படித்து மனதில் உருவேற்றுதல், குறிப்பாக involvement
& dedication ஆகியவை இருந்தால்தான் ஒருவர் ஜோதிடத்தில் தேர்ச்சி
அடைய முடியும்.

பிறகு, பல ஜாதங்களைப் பார்ப்பதன் மூலமும், பலருடன் உரையாடுவதன்
மூலமும், அனுபவம் பெற்று முழுமை பெறலாம்.

அனுபவம் முக்கியமானது. படித்தல் மட்டும் அல்லது மனதில் வைத்தல்
மட்டும் உதவாது. அதை நினைவில் கொள்ளவும்.

இங்கே நான் எழுதிவருவது அனைத்தும் பொது விதிகள். ஒருவருடைய
ஜாதகத்தில் உள்ள லக்கினாதிபதி (அவர்தான் சாமி முக்கியம்) மற்றும்
கிரகங்கள் சுயவர்க்கத்தில் பெற்றுள்ள பரல்கள், வீடுகளுக்குக் கிடைத்துள்ள
பரல்கள் ஆகியவற்றை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

No comments:

Post a Comment