உடல் வாசம் எப்படி உருவாகிறது?
எக்கிரைன் வியர்வை சுரப்பி, அப்போக்கிரைன் வியர்வை சுரப்பி, தோல் மெழுகுச்சுரப்பி என்ற மூன்று சுரப்பிகள் மனித தோலில் உள்ளன. உடல் வெப்பநிலையை சீராக வைப்பதில் பங்காற்றும் எக்கிரைன் வியர்வை சுரப்பியிலிருந்து வெளியேறும் திரவத்தின் பெரும் பகுதி நீரை உள்ளடக்கியதாகும். மூளையின் செயல்பாடான மனதின் உணர்ச்சி மாற்றத்தால் பெருமளவு தூண்டப்படும் அப்போக்கிரைன் வியர்வை சுரப்பிகள் உடலில் அக்குள் போன்ற முடியிருக்கும் பகுதிகளில் அதிகமாக இருக்கின்றன. இவற்றிலிருந்து வெளியேறும் திரவத்தில் புரதம், கொழுப்பு அமிலங்கள் அதிக அளவு கலந்துள்ளன. இச்சுரப்பிகளிலிருந்து வெளியேறும் திரவத்தை, தோலில் உயிர்வாழும் நுண்ணுயிரிகள் உட்கொண்டு வளர்சிதை மாற்றமடைய செய்வதால் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு தனிநபரின் வாசனை வகை-மாதிரியானது, MHC எனப்படும் பல்லுரு மரபணு தொகுதியிலுள்ள மரபணுக்களால் தீர்மானிக்கப்படுவதால், ஒவ்வொரு மனிதருக்கும் கைரேகை, கருவிழியைப்போல தனித்துவமான உடல்வாசம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தி – அமைப்பில் முக்கிய பங்காற்றும் MHC மரபணுக்கள் உடல் வாசத்தைக் கொண்டு தனது இணையை தேர்ந்தெடுப்பதிலும் ஆதிக்கம் செலுத்துவது கண்டறிப்பட்டுள்ளது. ஒரு சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட அனைவரும் இயற்கையான தனித்துவமான வாசத்தை கொண்டு எதிர் MHC மரபணு கொண்டோரை அடையாளம் கண்டு பாலியல் இணையாக தேர்ந்தெடுத்தது தெரிய வந்துள்ளது. அதாவது, செயற்கையான வாசனை திரவிய மணத்தால் மட்டும் பாலியல் உணர்வை தூண்ட முடியாது.
உடல்வாசத்தில் வயது, உணவு, பாலினம், உளவியல் மனப்பாங்கு மற்றும் மரபணு பின்புலம் ஆகியவற்றை பொறுத்து ஏற்படும் சிறு சிறு மாறுபாடுகள் கூட வேறு வகையில் பயனுள்ளதாக இருக்கின்றன. அதாவது நாம் வெளிவிடும் மூச்சு, வியர்வை, தோல், சிறுநீர், மலம் மற்றும் இனப்பெருக்க சுரப்பிகள் VOC கலவைகளின் முக்கிய மூலங்கள் எனவும் நோய் தொற்று மற்றும் உடலின் உட்புற வளர்சிதை மாற்ற குறைபாடுகள், புதிய VOC கலவைகளை உற்பத்தி செய்யும் அல்லது உற்பத்தி செய்யும் விகிதங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
காலரா, நிமோனியா, காசநோயிலிருந்து இரத்த புற்றுநோய், கணைய மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய்கள் வரை ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட வாசமிருப்பதாகவும், அவற்றைக் கொண்டு நோய்களை முன்னறிந்து விடமுடியும் என்றும் மன நோய்களைக் கூட உடல் வாசங்களை கொண்டு அறியமுடியுமென்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே பண்டைய கிரேக்கத்திலும், பண்டைய இந்தியாவிலும் நோய்களையும், விசக்கடிகளையும் உடலின் வாசம்மூலமே கண்டறியும் முறை அனுபவத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாசங்களை நுகர்ந்தறிய மின்னணு நுகர்கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவதுடன் இத்துறையில் ஆய்வுகளும் நடந்து வருகின்றன.
விலங்குலகில், உணவை கண்டறிவதிலும், சுற்றுச்சூழல் நச்சுகளை நுகர்ந்தறிவதிலும், உறவினர்கள், எதிரிகளை வேறுபடுத்திக் கொள்வதிலும் உடல்வாசம் முக்கிய பங்காற்றுகிறது. மனிதர்கள் உள்ளிட்டு அனைத்து பாலூட்டிகளின் குட்டிகளும் முதலில் வாசனை உணர்வின் மூலமே தனது தாயுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கின்றன.
இது மட்டுமின்றி மோப்ப நாய்களைக் கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க உலகெங்கிலும் உடல்வாசம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒருவரின் தனித்துவமான அடையாளமாக அவரது உடல் வாசத்தை பயன்படுத்த முடியும் என்று மாட்ரிட் பல்தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் புதிய உயிர்புள்ளியியல் அங்கீகரிப்பு முறையை உருவாக்கி வருகின்றனர்.
உளவியல் மனப்பாங்கு உடல்வாசத்தில் ஏற்படுத்தும் பாதிப்பை ஆய்வு செய்வதற்கு 13 பேர் கொண்ட குழுவை 28 வெவ்வேறு அமர்வுகளில், வெவ்வேறு மனநிலைகளில் சோதித்ததில் தனித்துவமான உடல்வாசத்தின் வகை-மாதிரி 85%-க்கும் மேல் நிலையானதாக, அடையாளம் கண்டுணரக்கூடியதாக இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது நடைமுறையிலிருக்கும் நுகர் உணர்கருவி தொழில்நுட்பத்தாலும் 85%-க்கும் மேற்பட்ட துல்லியத்தில் ஆட்களின் அடையாளங்களை கண்டறிந்து விடலாமாம்.
இன்னும் ஆரம்ப ஆய்வுகட்டத்தில் இருக்கும் இத்தொழில்நுட்பம் வளர்ச்சியடையும் போது ஒரு அறையில் உணர்கருவியை பொறுத்தி, அறைக்குள் வருபவர்கள் அறியாமலேயே அவர்களது உடல் வாசத்தை பதிவு செய்யும் சாத்தியமிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, ஒருவர் தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு வந்தாலும், மாட்டிறைச்சி சாப்பிட்டு விட்டு வந்தாலும் அவரது உடல் வாசத்தின் அடிப்படை தன்மை மாறுவதில்லை. அதே போல சாஸ்திர பஞ்சாங்கங்கள் ஜவ்வாது பூசி விட்டு வந்தாலும், ஒரு நகர சுத்தித் தொழிலாளி கால்வாயில் வேலை செய்து விட்டு வந்தாலும் அவர்களது தனித்துவமான உடல் வாசனை மாறிவிடுவதில்லை.
உண்மை இப்படியிருக்க உடலுழைப்பை செலுத்தும் உழைக்கும் மக்கள் வியர்வையின் காரணமாக அருவருப்புடன் பார்க்கும் மேட்டிமைத்தனம் உலகெங்கும் இருக்கிறது. நமது நாட்டிலோ அதற்கும் மேலதிகமாக மாட்டிறைச்சி உண்பதால் தலித் மக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் உடல் நாற்றமெடுப்பதாகவும், அதன் காரணமாகவே முஸ்லீம்கள் பெரும்பாலும் வாசனை திரவியங்களை பயன்படுத்துவதாகவும் கருத்து நிலவுவதுடன் உடல்வாசம் என்பது சமூக ஒடுக்கு முறையின் பகுதியாகவும் இருக்கிறது.
மேலும், இன்றைய முதலாளித்துவ நுகர்வு உலகில் ‘உடல் துர்நாற்றம்’ மிகப்பெரும் பிரச்சனையாகவும், அதற்கு தீர்வாக வகைவகையான சோப்புகளும், வாசனை திரவியங்களும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. அதிலும் சில வாசனை திரவியங்கள் பெண்களை பாலியல் ரீதியில் ஈர்க்குமெனவும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. வாசனை திரவியங்களுக்கு பெயர் பெற்ற பாரீஸ் நகரத்தை நோக்கி உலகின் சீமான்களும், சீமாட்டிகளும் எப்போதும் படையெடுக்கிறார்கள்.
இயற்கையான, மரபுரீதியாக தொடர்புடையதும், வரலாற்று – அறிவியல் ரீதியாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் உடல்வாசம் தான் அருவருப்பானதாகவும் சாதிரீதியான ஒடுக்குமுறை கருவியாகவும் இந்திய சமூகத்தில் கருதப்படுகிறது. நவீன முதலாளித்துவ நுகர்வு கலாச்சாரமோ அதையும் மூடி மறைத்து, இருபாலினத்தவரும், எதிர் பாலினத்தவரை கவருவதற்கு விதவிதமான பொருட்களை களமிறக்கி சந்தையாக்கி விட்டுள்ளது.
ஆனால் உங்களது இயல்பான தனித்துவமான உடல் வாசனைதான் உங்களது அடையாளமாகவும், வரும் நோய்களை முன்னறிந்து சொல்வதற்கும் எதிர்காலத்தில் பயன்படப்போகிறது. ஆகவே உங்களது நாற்றத்தை போற்றுங்கள்!
No comments:
Post a Comment