Sunday 12 July 2020

கறுப்புக் கொண்டைக் கடலை பயன்பாடுகள்


கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று வெள்ளை கொண்டைக்கடலை, மற்றொன்று நமக்கெல்லாம் நன்கு தெரிந்த கறுப்புக் கொண்டைக்கடலை. இது அளவில் சற்றுச் சிறியது, உறுதியானது. பொதுவாகச் சுண்டலாகவும் குழம்பில் சேர்க்கப்பட்டும் சாப்பிடப்படும் இது, நாடு முழுவதும் முக்கிய இடம்பிடித்திருக்கிறது. கறுப்புக் கொண்டைக்கடலை உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடும் இந்தியா.

கறுப்புக் கொண்டைக்கடலை உள்நாட்டு வகையாகத் தற்போது கருதப்பட்டாலும், இது தென்கிழக்கு துருக்கியில் இருந்து வந்ததுதான். வெள்ளை கொண்டைக்கடலை இந்தியாவுக்கு வரும் முன்னரே, கறுப்பான கொண்டைக்கடலை நம் மண்ணைத் தொட்டுவிட்டது. இப்போது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தில் பெருமளவு விளைவிக்கப்படுகிறது. இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் அதேநேரம், உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒன்று.

பழுப்பும் கறுப்பும் கலந்த நிறத்தில் சிறியதாக இருந்தாலும், புரதம் நிரம்பியது. அதன் எல்லா வளர்ச்சி நிலைகளிலும் உண்ணப்படுகிறது. கறுப்புக் கொண்டைக்கடலையின் காய் பச்சையாக இருக்கும்போதே வேக வைக்கப்பட்டுச் சாலடிலும், வடஇந்தியச் சாட் நொறுவைகளிலும் சேர்க்கப்படுகிறது. முதிர்ந்த கறுப்புக் கொண்டைக்கடலையை ஊற வைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.

கறுப்புக் கொண்டைக்கடலை பயன்பாடுகள்

சுண்டல் என்றாலே, பொதுவாகக் கறுப்புக் கொண்டைக்கடலை சுண்டல்தான். உறுதியாகவும் இனிப்பு சுவை இல்லாமலும் இருப்பதால் உப்பு சேர்த்தோ, வேக வைத்தோ, வறுக்கப்பட்டோ சாப்பிடப்படுகிறது. பொரிகடலை கடைகளில் விற்கப்படும் உப்புக்கடலை, மிகவும் பிரபலமான ஒரு நொறுவை. உடைச்ச கடலை எனப்படும் பொட்டுக்கடலையும் அதற்கு இணையாகப் பிரபலமானதுதான்.

சுண்டல் என்றாலே, பொதுவாகக் கறுப்புக் கொண்டைக்கடலை சுண்டல்தான். உறுதியாகவும் இனிப்பு சுவை இல்லாமலும் இருப்பதால் உப்பு சேர்த்தோ, வேக வைத்தோ, வறுக்கப்பட்டோ சாப்பிடப்படுகிறது. கடைகளில் விற்கப்படும் உப்புக்கடலை, மிகவும் பிரபலமான ஒரு நொறுவை. உடைச்ச கடலை எனப்படும் பொட்டுக்கடலையும் அதற்கு இணையாகப் பிரபலமானதுதான்.

புட்டு, ஆப்பத்துக்குச் சிறப்பு சுவை சேர்க்கும் கேரளக் கடலைக்கறி, கறுப்புக் கொண்டைக்கடலை குழம்புதான். இது முளை கட்டப்பட்டுச் சாலட்களில் சேர்க்கப்படுகிறது. கெட்டி குழம்பு, சூப்புகளில் இடம்பிடிக்கிறது. தெற்காசியாவில் பல்வேறு சுவையான உணவு வகைகளில், கறுப்புக் கொண்டைக்கடலை பயன்படுத்தப்படுகிறது. இதை வறுத்துப் பொடி செய்து, நீர் சேர்த்துக் கொதிக்க வைத்துக் காப்பியைப் போலப் பயன்படுத்தலாம்.

ஊட்டச்சத்து

  • கறுப்பு கொண்டைக்கடலையில் போலி அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன. இது மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, அந்நோய் வராமல் பாதுகாக்கும் உன்னத உணவு.
  • கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான ஃபோலிக் அமிலம், ஆன்டிஆக்சிடண்ட் தன்மை கொண்ட சாப்போனின் போன்ற ஃபைட்டோ வேதிப்பொருட்கள் அதிகமுள்ளன.
  • வெள்ளைக் கொண்டைக்கடலையைவிட இதில் நார்ச்சத்து அதிகம், சர்க்கரையை வெளியிடும் பண்பு குறைவு.
  • குளுகோஸ் பயன்பாட்டை மேம்படுத்தக்கூடியது என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதைத் தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.
  • இதன் சாறு இரும்புச்சத்து நிரம்பியது. இரும்புச் சத்து குறைபாடு, ரத்தசோகையைத் தடுக்க உதவுகிறது.
  • இதில் இரும்புச்சத்து, சோடியம், செலெனியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன.
  • அளவுடன் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுமந்தம் தீர்க்க உதவும்.
  • வேக வைத்த கறுப்புக் கொண்டைக்கடலை ஒரு கப் 269 கலோரி சக்தியைத் தரும். அதேநேரம் இதில் இருக்கும் 15 கிராம் புரதம், ஒரு நாளைக்குத் தேவையான 2000 கலோரி உணவில் 30 சதவீதத்தை ஆரோக்கியமான வகையில் தரக்கூடியது.

மருத்துவ குணங்கள்

  • முதிராத கொண்டைக்கடலையில் சிறிது நீர் விட்டு அருந்த, சீதக்கழிச்சல் உடனடியாகக் கட்டுப்படும்.
  • சிறுநீர்ப்பெருக்கி செய்கை இருப்பதால், சிறுநீர் அடைப்பை சரி செய்யும் தன்மை, கறுப்புக் கொண்டைக்கடலை சுடுநீருக்கு உண்டு.
  • இளம் கொண்டைக்கடலை விதைகளுக்குக் காமம் பெருக்கும் செய்கை உண்டு.
  • கொண்டைக்கடலைச் செடியின் மீது ஒரு வெள்ளைத் துணியை இட்டு, அதன் மீது படியும் பனி நீரைப் பிழிந்து சேகரிப்பது ‘கடலைப் புளிப்பு’ என்று அழைக்கப்படுகிறது. செரியாமை, வாந்தி போன்ற நோய்களுக்கு இந்தப் புளிப்பு நீர் மருந்தாகப் பயன்படுகிறது.

கடலைப்பருப்பு

ஆங்கிலப் பெயர்: Bengal Gram (Split) / Split black chickpea

வரலாற்றின் ஆரம்பக் காலத்திலேயே பயிரிடப்பட்ட பருப்பு வகை இது. இந்திய உணவு வகைகளில் மிகவும் பிரபலம். குறிப்பாகப் பருப்பு வடை, அடை போன்ற மொறுமொறு உணவு வகைகள், லட்டு போன்ற இனிப்புகள் செய்யப் பயன்படும் கடலை மாவு போன்றவற்றுக்கு அடிப்படை கடலைப்பருப்புதான். சுவையைக் கூட்டுவதற்காகக் கூட்டுகளிலும் இது சேர்க்கப் படுவது உண்டு.

கடலைப் பருப்பும் கொண்டைக்கடலையும் முற்றிலும் வேறு வேறானவை அல்ல; நெருங்கிய உறவு கொண்டவை. கடலைப்பருப்பு விதைகள் தோலுடன் கறுப்பாகவும், சிறியதாகவும், சொரசொரப்பாகவும் இருக்கும். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஈரான், மெக்சிகோவில் அதிகம் பயிரிடப்படுகிறது.

இளம் கொண்டைக்கடலை நெற்றுகள் முற்றுவதற்கு முன்பாகவே பறிக்கப்பட்டு, மேல்தோல் உரிக்கப்பட்டு, விதை இரண்டாக உடைக்கப்பட்டால் அதுவே கடலைப் பருப்பு. மஞ்சள் நிறத்தில், கொண்டைக்கடலையைவிட சிறியதாகவும் சற்று இனிப்பாகவும் இருக்கும். இதைக் கொஞ்ச நேரம் ஊற வைத்து வேக வைக்க வேண்டும்; உடனடியாக மசியாது. இந்தியாவில் சைவ உணவு சாப்பிடுபவர்களின் புரதத்துக்கான முதன்மைத் தேர்வு கடலைப்பருப்புதான்.

பொட்டுக்கடலையோடு நெய்யும் ஏலக்காயும் சேர்த்துச் செய்யப்படும் உருண்டை, புரதச்சத்து நிறைந்த பிரபலமான தின்பண்டம். ஏலக்காய் சேர்வதால் வாயுத் தொந்தரவு உண்டாகாது. பருப்புப் பொடிகளிலும் பொட்டுக்கடலை சேர்க்கப்படுவது உண்டு. கடலை மாவு குளியல் பொடியாகப் பயன்படுகிறது.

ஊட்டச்சத்து

  • கடலைப்பருப்பு புரதம் நிரம்பியது என்பதால், இறைச்சிக்கு மாற்றாகக் கருதப்படுகிறது.
  • கடலைப்பருப்பைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், புரதச் சத்துக் குறைபாடு நீங்கும்.
  • ரத்தநாளங்களில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.
  • சர்க்கரையை மெதுவாக வெளியிடுவதால், நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment