Nachiyar.
மகாவிஷ்ணுவின் கையில் இருக்கும் சக்கரம் ‘சுதர்சன சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சுதர்சன சக்கரத்திற்கு பெருமாள் ஆலயங்களில் தனி சன்னிதி இருக்கும். தனி சன்னிதியில் இருந்து அருள்பாலிக்கும் சுதர்சனரை ‘சக்கரத்தாழ்வார்’ என்பார்கள்.
சுதர்சன பெருமாளை வழிபட, சித்திரை நட்சத்திரம் வரும் தினங்கள் சிறப்பானவை. சித்திரை சுதர்சனருக்குரிய நட்சத்திரம் ஆகும். சுவாமி தேசிகன் இயற்றிய ‘சுதர்சனாஷ்டகம்’, ‘ஹோட சாயுத ஸ்தோத்திரம்’ பாராயணம் செய்து வந்தால், எளிதில் சுதர்சனரின் அருளைப் பெறலாம்.
சக்கரத்தாழ்வாரை, ‘திருவாழியாழ்வான்’ என்று ஆழ்வார்கள் போற்றுகின்றனர். சுவாமி தேசிகன் சக்கரத்தாழ்வாரை ‘சக்ர ரூபஸ்ய சக்ரிண’ என்று போற்று கிறார். இதற்கு ‘திருமாலுக்கு இணையானவர்’ என்று பொருள்.
கும்பகோணம் சக்கரபாணி ஆலயத்தில் உள்ள சக்கர தீர்த்தத்தில் தான், பிரம்மதேவன் நீராடி யாகம் செய்தார். உடனே பாதாளத்தில் இருந்து சக்கரம் வெளிக்கிளம்பி மேலே வந்தது. அந்த சக்கரத்தின் நடுவில் இருந்து, பிரம்மனுக்கு காட்சி தந்த நாராயணன்தான், இன்று நாம் வணங்கும் சக்கரபாணி ஆவார்.
சாளக்கிராமங்களில் சுதர்சன சாளக்கிராமம் மிகச் சிறந்தது. ஒரு சக்கரம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சாளக்கிராமம் சுதர்சனம் ஆகும். திருமாலின் சக்கராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு.
சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள நரசிம்மரையும் வணங்கி வலம் வந்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு.
நரசிம்ம அவதாரத்தில் எந்த ஆயுதமும் இல்லாமல் இரண்யகசிபுவை நரசிம்மர் அழித்தார். அப்போது அவரது நகங்களாக விளங்கியவர் சுதர்சனரே.
வாமன அவதாரத்தில், சுக்ராச்சாரியாரின் கட்டளையை மீறி வாமனருக்குத் தானம் கொடுக்க மகாபலி சக்கரவர்த்தி முன்வந்தான். அப்போது நீர் வார்க்கும் கமண்டலத்தின் நீர் பாதையை வண்டாக மாறி சுக்ராச்சாரியார் அடைத்தார். உடனே வாமனர் ஒரு தர்ப்பையை எடுத்து, நீர்பாதையை உடைத்தார். இதில் தர்ப்பை பட்டு, சுக்ராச்சாரியாரின் கண் பார்வை பறி போனது. இங்கு தர்ப்பை புல்லாக இருந்தது சுதர்சனரே ஆவார்.
No comments:
Post a Comment