jaga flash news

Sunday 27 January 2013

கல்வி


கல்வி


கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்உடையர் கல்லாதவர்

படித்தவர்கள் இரண்டு கண்களை உடைய வராகவும், படிக்காதவர் முகத்தில் இரண்டு கண்கள் இருந்தாலும், அது புண்களுக்குச் சமமாகும் என்பது வள்ளுவரின் வாக்கு.

படிக்க படிக்கத்தான் பொது அறிவு வளரும். ஒருவர் கற்கும் கல்வியானது அவரது ஏழு தலைமுறையினருக்கும் சேர்த்து வைக்கும் செல்வமாகும். எல்லாச் செல்வங்களையும் ஒருவர் இழந்தாலும், அவர் கற்ற கல்வியினால்  எந்த ஊருக்கு, நாட்டிற்குச் சென்றாலும் பிழைத்துக் கொள்ள முடியும்.  நாம் கற்றதை பிறருக்கு சொல்லிக் கொடுக்க, கொடுக்க நமக்கும் அறிவுத்திறன் உயரும். மற்றவர்களும் இதனால் பயனடைவார்கள். அதனால்தான் கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்புடையதாகிறது. நாம் கற்ற கல்வியை பிறரால் களவாட முடியாது. படிப்பதால் உலக விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. நல்லத கெட்டது எது என ஆராய்ந்து செயல்பட முடிகிறது. யாரிடம் எப்படிப் பழக  பேச வேண்டும் என்ற  பண்பாடு வளர்கிறது. பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை உண்டாகிறது. கல்வி கற்றால்தான் இதெல்லாம் முடியுமா? கல்வி கற்காதவர்கள் சாதிக்கவில்லையா? என தர்க்கம் செய்பவர்களும் உண்டு. கண்டிப்பாக சாதிக்க முடியும். அதுவும் கற்றவரின் துணையுடன். ஆனால் அதனால் என்ன பயன்? எளிதில் ஏமாறக்கூடிய வாய்ப்புகள் அதிகமல்லவா?
அள்ள அள்ள குறையாத அமுத சுரபியான கல்வியோகம் உண்டாக ஜோதிட ரீதியாக அவரவரின் ஜெனன கால ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளே காரணமாக உள்ளது. அதிலும் குறிப்பாக 4ம் பாவம் கல்விக்குரிய ஸ்தானமாகும். இந்த 4ம் பாவத்தில் கிரகங்கள்  பலமாக அமைந்து சுபர் சேர்க்கை பார்வை பெற்றிருந்தால் அவரின் கல்வித் தகுதியானது மேலும் மேலும் உயர்ந்து கொண்டே போகும். 4ம் பாவம் கெட்டு பலவீனமடைந்து சுபர் பார்வையின்றி இருந்தால் கல்விச் செல்வத்தை அனுபவிக்கவே முடியாமல் போய்விடும்.

நான்காம் பாவமானது கல்விச் செல்வத்தைப் பற்றியும், நல்ல அறிவாற்றல், அனுபவ அறிவு பற்றியும் குறிப்பிடுவதாகும். குறிப்பாக பேச்சுவன்மை, ஞாபக சக்தி, மூளையின் செயல்பாடு, கல்வி கற்க வேண்டும் என்ற வெறி போன்றவற்றைப் பற்றியும் 4ம் பாவத்தைக் கொண்டு அறியலாம்.

நவக்கிரகங்களில் சந்திரன் மனோகாரகனாவார். இவர், ஒருவரின் மனநிலையையும், மன வலிமையையும் எந்த நிலையில் இருக்கும் என அறியும் கிரகமாவார்.  புதன் கல்வி காரகனாவார். இவர் ஞாபகசக்தி, புத்திசாலித் தனம், கல்விகற்கும் திறன் பற்றிக் குறிப்பிடும் கிரகமாவார். குரு நல்ல பேச்சாற்றல், அறிவாற்றல், புத்திசாலித்தனம், படிப்பறிவு போன்றவற்றிற்குக் காரகனாவார்.

பொதுவாக ஒருவருக்குக் கல்விச் செல்வம் சிறப்பாக அமைய ஜெனன ஜாதகத்தில் 4ம் பாவமும், சந்திரன், குரு, புதன் போன்ற கிரகங்களும் பலமாக அமைந்திருப்பது நல்லது. 4ம் பாவம் பலம் பெறுவது மட்டுமின்றி அடிப்படைக் கல்வியை குறிக்கக் கூடிய 2ம் பாவமும் பலம் பெறுவது நல்லது. குறிப்பாக கற்ற கல்வியை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற 5ம் பாவமும் பலம் பெறுதல் அவசியம். ஆகவே 2,4,5 ம் பாவங்கள் பலம் பெற்று அமைந்துவிட்டால், சரஸ்வதி தேவி கதவைத் தட்டி கல்விச் செல்வத்தை வாரி வழங்குவாள். அதன் மூலம் வாழ்வில் வளம் பெற முடியும்.

ஆக 4ம் அதிபதியும், புதன் பகவானும் ஆட்சி உச்சம் பெற்றிருப்பது, சுபகிரக சேர்க்கை பார்வை பெற்றிருப்பது மூலமாக கல்விச் செல்வமானது சிறப்பாக அமையும். 4 ல் அமையக்கூடிய கிரக அமைப்பைக் கொண்டு ஒருவருக்கு எந்த கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைப் பற்றிக் தெளிவாக அறியலாம்.

கல்வி காரகன் புதன் 4ம் வீட்டில் பலமாக அமையப் பெற்றால் கணக்கு, கம்ப்யூட்டர், ஆடிட்டிங் தொடர்புடைய கல்வியில் யோகம் உண்டாகும். புதன், சூரியன் சேர்க்கை பெற்று இருந்தால் கம்ப்யூட்டர் துறையில் சாதனை செய்யக்கூடிய வாய்ப்பு, அந்தத் துறையில் பொறியாளர் ஆகும் யோகம் உண்டாகும்.

செவ்வாய் 4ம் வீட்டில் பலமாக இருந்தால் நிர்வாகத் தொடர்புடைய கல்வி, குறிப்பாக பி.பி.ஏ., எம்.பி.ஏ., தொடர்புடைய கல்வியில் ஏற்றம் உண்டாகும். கல்வித் தகுதியின் காரணமாக அரசுத் துறையில் பணியாற்றக்கூடிய யோகம் உண்டாகும். சூரியன், செவ்வாய், புதன் ஆகியோர் 4 ம் வீட்டில் இணைந்திருந்தால் பொறியியல் துறையில் பொறியாளராக ஆகக்கூடிய யோகம் உண்டாகும். சூரியன், செவ்வாய் பலமாக அமையப் பெற்றவர்கள் மருத்துவத்துறையில் சாதனை செய்வார்கள். சூரியன் செவ்வாயுடன் சந்திரன் அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் கண்டிப்பாக மருத்துவத் துறையில் சாதனை செய்யும் வாய்ப்பு உண்டாகும்.

செவ்வாய் புதன் இணைந்திருந்தால் கட்டப் பொறியாளராகும் யோகம், செவ்வாய், சந்திரன் இணைந்திருந்தால் கப்பல் துறை தொடர்புடைய கல்வி யோகம் உண்டாகும்.  செவ்வாய், புதன், குரு சேர்க்கை பெற்றால் அறிவியல் சார்ந்த கல்வி சாதகமாக அமையும் பட்சத்தில் விஞ்ஞானியாகும் யோகம் ஏற்படும்.

புதன் பகவான் குரு போன்ற சுபர் சேர்க்கை பெற்றால் பேச்சால், வாக்கால் மேன்மை கிடைக்கும். அவர்கள் ஆசிரியர் பணி, பள்ளிக் கல்லூரிகளில் பணிபுரியக்கூடிய யோகம் வழக்கறிஞராகும் நிலை, மற்றவர்களுக்கு ஆலோசகராக விளங்கக்கூடிய கல்வி யோகம் உண்டாகும். குறிப்பாக குரு அதிபலம் பெற்றால் வங்கிப் பணி சார்ந்த கல்வி யோகம் உண்டாகும்.

குரு புதனுடன் சந்திரன் சேர்க்கை பெறுகின்றபோது ஒருவர் எழுத்துத் துறை, பத்திரிகை துறையில்  சாதனை செய்யும் யோகம், நல்ல கற்பனை வளம், கதை, கவிதைகள் எழுதக்கூடிய ஆற்றல் உண்டாகும். 4ம் வீட்டில் சந்திரன் பலம் பெறுகின்றபோது கேட்டரிங் கல்வி, கடல் சார்ந்த கல்வி உண்டாகும். சந்திரனும், சுக்கிரனும் இணைந்திருந்தால் கலை, இசை, சங்கீதம் பாட்டு தொடர்புடையவற்றில் ஈடுபாடு உண்டாகும். சுக்கிரன் பலம் பெற்று புதன் சேர்க்கைப் பெறுகின்றபோது கலை தொடர்புடைய தொழில்நுட்ப  கல்வி யோகம் உண்டாகும்.

ஒருவர் எவ்வளவுதான் கல்வி ரீதியாக உயர்வுகளைப் பெற்றாலும், பலபட்டங்களை வாங்கி இருந்தாலும் கற்ற கல்விக்கேற்ற பணியையோ, தொழிலையோ செய்யமுடியாத நிலை உண்டாகி விடுகிறது. கல்வியை விட்டு பிற தொழிலில் ஈடுபடகூடிய சூழ்நிலை உண்டாகிறது. இதற்கு காரணம் என்ன எனப் பார்க்கும்போது ஜோதிட ரீதியாக 4ம் வீட்டை சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் பார்த்தால்  இந்த நிலை ஏற்படுகிறது.

No comments:

Post a Comment