jaga flash news

Thursday 12 June 2014

தூசியும் – ஒட்டடையும் வீட்டுக்கு ஆகாதா?

சுத்தமும்-சுகாதாரமும் வாஸ்து சாஸ்திர கலைக்கு அடிப்படை அம்சங்கள். நல்ல காற்று, நல்ல வெளிச்சம், வீட்டில் வளர்ப்பதற்கேற்ற மரங்கள், செடிகள் போன்றவை ஒரு இல்லத்திற்கு வாஸ்து பலத்தை அதிகப்படுத்துகிறது. ஒரு வீடு எவ்வளவு சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கப்படுகிறதோ அந்த வீட்டில்தான் தெய்வம் குடியிருக்கும். நல்லவையும் நடக்கும். கண்கண்ட தெய்வமான சூரியன்… கண்களுக்கு புலப்படாத காந்த அலைகள், (Magnetic waves,) இந்த பூமியில் நம்மை சுற்றி இயங்குகிறது. அந்த அலைகளானது மறைபொருள் சக்தியாக (Mystical energy) வெளிப்படுகிறது. இவற்றை நல்லவிதமாகவோ அல்லது எதிர்மறையாகவோ மாற்றக்கூடிய சக்தி சூரிய சக்திக்கு உள்ளது. காந்த அலைகளையும், மிஸ்டிகல் எனர்ஜி எனப்படும் மறைபொருள் சக்தியையும் இந்த பிரபஞ்சத்தை கட்டிக்காக்கின்ற          (Cosmic Energy) கண்கண்ட தெய்வமான சூரியன், தன் கட்டுப்பாட்டில் செயல்பட வைக்கிறது. கதவுக்கும் கண்ணுண்டு, சுவற்றுக்கும் காதுண்டு! இதனால், காந்த சக்தியையும், மறைபொருள் ஆற்றலையும் சூரியனின் அனுகிரகத்துடன் நல்லவிதமாக மாற்றி நன்மை பெறுவது எப்படி என்பதற்கு எண்ணற்ற விஷயங்களை நம் முன்னோர்கள் கண்டுபிடிப்புகளாக அறிந்து குறித்து வைத்தார்கள். அந்த குறிப்புகளே விதிகளாக மாற்றப்பட்டு நமக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதனை கட்டடகலை மிக முக்கியமாக எடுத்துக்கொள்கிறது. காரணம், மனிதனின் ஜெனனம் முதல் மரணம்வரையில் தொடப்புகொண்டது கட்டடம். மனித முன்னேற்றத்தின் ஏற்ற-இறக்கத்திற்கு சூரியனின் கட்டுப்பாட்டில் உள்ள காந்த மற்றும் மறைபொருள் ஆற்றலே காரணம் என்பதை நமது முன்னோர்கள் அறிந்தார்கள். அப்படி தோன்றியதே கட்டடகலை சாஸ்திரம். கதவுக்கும் கண்ணுண்டு, சுவற்றுக்கும் காதுண்டு என அவர்கள் சொன்னதற்கு காரணம், எந்த கட்டடத்திற்கும் உயிர் உண்டு என்பதை நமக்கு உணர்த்தத்தான். மெஞ்ஞான ரீதியாக… வாஸ்து என்கிற கட்டடகலை சாஸ்திரம் ஆச்சரியம் நிறைந்தது. ஒரு வீட்டுக்குள் ஒரு பகுதியில் அமைந்த அறைக்கு ஒருவிதமான பலனும், மற்றோரு பகுதியில் அமைந்த அறைக்கு வேறு விதமான பலனும் தருகிறது. இதன் காரணம், பிரபஞ்சத்தில் கண்ணுக்கு புலப்படாத காந்த அலைகளும், மறைபொருள் ஆற்றலும்தான். இயற்கையை தெய்வமாக மதிக்க வேண்டும் என அறிவறுத்தப்பட்டு அவ்வாறே வளர்ந்த மனிதனுக்கு விஞ்ஞான விஷயங்களை சொன்னால் புரிவது கடினம் என்பதால்தான் மனிதனின் முன்னேற்றத்திற்கு தேவையானவற்றை மெஞ்ஞான ரீதியாக பல விஷயங்களை சொன்னார்கள். கொடிமரத்தின் நிழலை மிதிக்கக்கூடாது! உதாரணமாக ஆலயத்தில் உள்ள பிரகாரத்தில் கால் நீட்டி விழுந்து வணங்கக்  கூடாது என்கிறது சாஸ்திரம். எதனால் என்றால், பிரகாரங்களில் “அதிதேவதைகள்” தவம் செய்கிறார்கள். விழுந்து வணங்கக்கூடிய இடமாக கொடிமரம் அமைந்த இடத்தை குறிப்பிட்டார்கள். காரணம், கொடிமர அமைப்பு, சாஸ்திர வேலைபாடுகளுடன் அமைக்கப்படுகிறது. அது, அந்த ஆலயத்தின் தெய்வீக தன்மையை மேம்படுத்தி தன்னுள் கிரகித்து வைக்கிறது. அதன் நிழல் கூட மகிமையாகிறது. இதனால்தான் கொடிமரத்தின் நிழலை மிதிக்கக்கூடாது என்றார்கள். அங்கே நம் உடல், பூமியில் நன்கு பதியும்படி விழுந்து வணங்கும்போது நமக்கு புத்துணர்வு கிடைக்கிறது. இத்தனை நாள் வாட்டி வதைத்த நோயையும் கிரகித்துக்கொள்கிறது கொடிமரம் அமைந்த பூமி. அதனால் கொடிமரம் அமைந்த பகுதியில் விழுந்து வணங்க வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. தூசியும், ஒட்டடையும்… கட்டடகலை சாஸ்திரம் என்கிற வாஸ்துகலையில் எண்ணற்ற விஷயங்கள் அடங்கி இருக்கிறது. அதில் ஒவ்வொன்றும் பயன்தரக்கூடியது. அனுசரிப்பதற்கு எளிதானது. முக்கியமாக, தடையற்ற பண வரவு பெற, கட்டட சாஸ்திரத்தில் நிறைய விதிமுறைகள் உண்டு. அதில் முக்கியமானது, வீட்டில் தூசியும், ஒட்டடையும் அதிக அளவில் சேரவிடக்கூடாது. இன்னும் சொல்லப்போனால், முற்றிலுமாக தூசியும், ஒட்டடையும் வீட்டில் இல்லாமல் இருந்தால் அந்த இல்லத்தில் திருமகள் வாசம் செய்கிறாள். என் அனுபவத்தில் நான் பார்த்த பல வீடுகளில், தூசியும், ஒட்டடையும் இல்லாத வீடுகளில் வசிப்பவர்கள் பணத்திற்கு பஞ்சம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக, சென்னையில் வசிக்கும் வடஇந்திய பணக்காரர்களின் வீடுகளில் இதனை நான் கவனித்து இருக்கிறேன். அதுபோல, நம்மவர்களில் பணக்காரர்களின் வீடுகளிலும் தூசியும், ஒட்டடையும் இருப்பதில்லை. அதிக அளவில் தூசியும் ஒட்டடையும் சேர்ந்த வீடுகளில் வசிப்பவர்கள், திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். முன்னேற்றம் குறைந்து காணப்படுகிறது. சிலரின் வீடுகளில் ஒட்டடைதான் மேற்கூறையை தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறதோ என எண்ணும்படியாக ஒட்டடை அதிகளவில் இருக்கிறது. அப்படி இருப்பது நல்லதல்ல. அதனால், நல்ல வாஸ்து தன்மை உள்ள வீட்டுக்கு முக்கியமானது, வீட்டை தூய்மையாக வைத்திருப்பதும், தூசியும், ஒட்டடையும் சேர விடாமல் பார்த்துக்கொள்வதும் ஆகும். வீட்டில் கண்ட இடத்தில் ஆணி அடிப்பது நல்லதா? அதுபோல, சொந்த வீடாக இருந்தாலும், வாடகை வீடாக இருந்தாலும் வாஸ்து விதிக்கு முரணாக அந்த வீடு அமைந்திருந்தாலும், நாம் வசிக்கும் அந்த வீட்டை பராமரித்து வரும் தன்மைக்கு ஏற்ப வாஸ்து பலன் அமையும். வீட்டை கண்ணை போல் காத்து, அழகாகவும், சுத்தமாகவும் பராமரித்து வந்தால் வாஸ்து தோஷம் கூட அடங்கி இருக்கும். முன்னேற்த்திற்கு அது முட்டுக்கட்டையாக இருக்காது. சிலர் வீட்டில் கண்ட இடத்தில் ஆணி அடித்திருப்பார்கள். அது பெரிய தோஷமாகும். கட்ட்டம் என்பது செங்கல்-மணல்-ஜல்லியின் கலவையால் எழும்பிய ஜடபொருள் அல்ல. எந்த ஜீவ இராசியும், கருவாகி உயிர் பெறுவதுபோல, ஒரு கட்டடம் கட்ட ஆரம்பிக்கும்போது கருவைபோல வளர்ந்து, கட்டட பணி முழுமை அடைந்த பிறகு முழுவதுமாக உயிர் பெற்று திகழ்கிறது. துணிமணிகளும் தலைமுடியும்… அதனால், நாம் ஆணி அடிப்பது சுவரில் அல்ல. நம்மை பாதுகாக்கின்ற தாயின் வயிற்றில். ஒரு உயிரில். அதனால் அதிகளவில் வீட்டில் ஆணி அடிப்பது நல்லதல்ல. வாடகை வீட்டுக்கு வாஸ்து பலன் தராது என எண்ணக்கூடாது. வீட்டில் சமைத்து சாப்பிட்டாலும், ஓட்டலில் சாப்பிட்டாலும் எங்கும் சுகாதாரமான சமையல் அவசியம். அதுபோல, வீட்டில் துணிமணிகளை மூலை மூலைக்கு போடக்கூடாது. வீட்டில் கண்ட இடத்தில் துணிமணிகள் அலைந்தால், அந்த வீட்டில் இருப்பவர்களின் கௌரவம் குறையும். அதுபோலவே, தலைமுடி அலைந்தால் தேவையில்லாத பிரச்னைகள் தேடி வரும். அதனால்தான் அந்த காலத்தில் தலைவாரும்போது வீட்டின் வெளிப்புறத்தில் தலைவாருவார்கள் உதிரும் முடியை உருண்டையாக சுற்றி வெளியே வீசுவார்கள். அத்துடன், வீட்டை பெருக்கும்போது வீட்டின் மூலைமுடுக்குகளிலும் சுத்தமாக பெருக்க வேண்டும். வீட்டின் மூலையில் குப்பைகளை கொட்டி வைத்தாலோ, அசுத்தமாக இருந்தாலோ அந்த வீட்டில் நடக்கும் விசேஷங்களில் அந்த இல்லத்தில் வசிக்கும் பெண்களால் கலந்துக்கொள்ள முடியாத அளவிற்கு உடல்நிலையில் பிரச்னை வரலாம். பூஜையறையில் தீபம்! காலையிலும், மாலையிலும் கண்டிப்பாக பூஜையறையில் தீபம் ஏற்ற வேண்டும். நெருப்பை கீழ் நோக்கி பிடித்தாலும் அது, மேல் நோக்கி எரிவதுபோல், கிரக கோளாறு ஏற்படும்போது, அந்த வீட்டில் இருப்பவர்களின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படாமலும், அவர்களின் வாழ்க்கைக்கு நல்ல எதிர்காலமும் அமைத்து தரும் ஆற்றல் பூஜையறையில் அமைந்த தீபத்திற்கு உண்டு. ஈசானிய மூலை எனப்படும் வீட்டின் வடகிழக்கு மூலையில் துடைப்பம் வைக்கக்கூடாது. தரித்திரம் தரும். ஆண்களுக்கு நல்லதல்ல. காலையில் சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் விழ வேண்டும். இன்றைய அடுக்குமாடி குடியிருப்பு கலாசாரத்தில் அது சாத்தியமில்லாமல் ஆகிவிட்டது. இப்படி இன்னும் இன்னும் எத்தனையோ கட்டட சாஸ்திரம் என்கிற வாஸ்து சாஸ்திரத்தில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான இரகசியங்கள் நிறைய உள்ளது. பொதுவாக, வீட்டை முடிந்த அளவில் சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருந்தால், அந்த இல்லம் குடிசையானாலும் ஒருநாள் நிச்சயம் மாளிகையாகும்!

No comments:

Post a Comment