jaga flash news

Wednesday 5 August 2015

யோக வாசிஷ்டம் (மகாராமாயணம்) பிறந்த கதை:

யோக வாசிஷ்டம் (மகாராமாயணம்) பிறந்த கதை:
----------------------------------------------
தந்தையின் ஆணையை ஏற்று வனவாசம் மேற்கொண்டான் தசரத மைந்தனான ஸ்ரீ ராமன். "ராமனோ ராஜகுலத்தில் உதித்தவன், சிறு வயதுமுதல் துன்பம் ஏதும் அறியாத யுவராஜன். ஆனால் இப்பொழுது நாட்டை துறந்து காடு செல்வது இராமனுக்கு மிகவும் வருத்தத்தையும், மன சஞ்சலத்தையும், துன்பத்தையும் கொடுக்கும். ஆகையால் ஞான உபதேசம் செய்து ராமனது மன வருத்தத்தை போக்குவோம்" என்ற நல்எண்ணத்துடன் பரத்வாஜ மாமுனிவர் தன ஆஸ்ரமத்தில் இராமனுக்காக எதிர்நோக்கி இருந்தார். ராமன் தன ஆஸ்ரமம் வரும் செய்தி அறிந்து, வாயிலில் பாரத சீதா சமேதனான ராமனை வரவேற்க காத்திருந்தார் மாமுனி. ஆனால் என்னே ஆச்சர்யம்! ராமனை கண்டகணம், சஞ்சலமாக இருந்த பரத்வாஜரின் மனம் சட்டென அடங்கி, மகா மௌனமும் சாந்தமுமாக ஆயிற்று. ராமனது சந்நிதியில் பல ஆண்டு தவம் செய்தும் கிடைக்காத எண்ணங்கள் அற்ற சமாதி நிலை, எந்த பிரயத்தனமும் இன்றி எதேர்ச்சையாக சித்தித்தது. மாமுனி ராமனது முகத்தை உற்று நோக்குகையில், ராமனது மனமானது ஆழ்கடலைப்போல எந்த சஞ்சலமுள் இல்லாமல் மௌனமாய் இருப்பது அவரால் உணர முடிந்தது. ராமன் பாரத்வாஜ மாமுநியிடம் விடைபெற்று அவ்விடம் நீங்கியவுடன் மீண்டும் மாமுனிவரது மனம் சஞ்சலத்திற்கு உட்பட்டது. ஒன்றும் புரியாமல், இதற்க்கு விடை தேடி ராமனைப்பற்றி நன்கு அறிந்தவரும், ராமனது பிறப்பிற்கு முன்னமே அவனது வரலாற்றை வரைந்தவருமான வால்மீகி மகரிஷியிடம் சென்றார் பரத்வாஜர். நடந்தவைகளை விளக்கி, "பல்லாயிரம் ஆண்டுகள் தவம் செய்தும் அடைய அரிதான மனதற்ற சமாதி நிலையை ராமன் எங்கனம் அடைந்தான். மனதில் வீண் கற்பனைகள் எழாத நிலையே முக்தி நிலை என்பதை நான் அறிவேன். ஆனால் அது கடும் தவம் புரியும் தவிசிகளாலும் அடைய இயலாதபோழ்து ராமன் எவ்வாறு அந்த மௌனநிலையை அடைந்து ஜீவன் முக்தனாக விளங்கக்கூடும்? சர்வ போகங்களையும் தியாகம் செய்தவருக்கும் கிடைக்காத அந்த ஆனந்த நிலை போகங்களுக்கு அதிபதியான ராஜகுமாரனுக்கு கிடைத்தது எங்கனம்? என் சந்தேகங்களை தாங்களே நிவர்த்தி செய்ய வேண்டும்" என பரத்வாஜர் பணிய, "முன்னொரு காலம் இராமனுக்கு பெரும் மனக்குழப்பம் மேலிட்டது. ஜீவன் என்றால் என்ன? ப்ரஹ்மம் என்றால் என்ன? ஜீவன் முக்த நிலை யாது? பிறப்பு இறப்பு இவைகள் எவை? ஜீவர்களுக்கு துன்பம் எதனால்?......" என பல குழப்பத்தில் ஆழ்ந்திருந்த இராமனுக்கு அவனது குலகுருவான வசிஷ்ட மகரிஷி ஞானோபதேசம் செய்தார். அதை சிரத்தையுடன் கேட்ட பலனாக ராமன் ஜீவன் முக்தனானான். அந்த ராம வசிஷ்ட சம்வாதமான "மகா ராமாயணம்" என்று போற்றப்படும் "யோக வாசிஷ்ட" உபதேசத்தை உங்களுக்கு உபதேசிக்கிறேன். இந்த யோகவாசிஷ்டத்தை ஒரு தடவையேனும் சிரத்தையுடனும், முக்திக்கு வேண்டி தீவிர முயற்சியுடனும் எவன் ஒருவன் கேட்பானானால், அவன் மோக்ஷ சாம்ராஜ்யத்தை கைப்பற்றுவான் என்பதில் சந்தேகமில்லை. இந்த யோக வாசிஷ்டம் உபதேசிக்கப்ட்டது அனைத்தும் அறிந்த ஞானிகளுக்கும் அல்ல. ஒன்றுமே அறியாத அக்ஞானிகளுக்கும் அல்ல. ஞானிகள் மோக்ஷம் என்னும் மனதற்ற நிலையை அடைந்தவர்கள். அவர்களுக்கு எந்த உபதேசமும் தேவையில்லை. அக்ஞானிகள் தாங்கள் மனதின் பிடியில் இருக்கிறோம் என்றே அறியமாட்டார்கள். அவர்களுக்கும் உபதேசிப்பது வீணாகும். ஆனால் தான் மனம் என்னும் பந்தத்திற்கு உட்பாடுள்ளோம். அதிலிருந்து எப்படியேனும் விடுபட வேண்டும் என்னும் தீவிர இச்சை கொண்டோருக்கே இந்த யோக வாசிஷ்ட மகா உபதேசம் செயப்பட்டுள்ளது. நீங்களும் இதை அனுசரித்து ஜீவன் முக்தனாக வாழ்வீராக" என்று வால்மீகி, பாரத்வஜருக்கு அனுக்கிரகம் புரிந்தார்.

No comments:

Post a Comment