jaga flash news

Friday, 14 July 2017

அம்போபாக்கியானம்(சிகண்டி கதை)

புத்திரப் பேறு வேண்டி சிவனைக் குறித்துக் கானகத்தில் கடும் தவம் செய்து கொண்டிருந்தான் மன்னன் துருபதன். தன் கணவனுக்கு சிவன் அருளப்போகும் வரம், தனக்கும் பேறுவகை அளிப்பதாக அமைய வேண்டும் என்று அதே காலத்தில் அரண்மனையில் பூஜையறையிலேயே பழியாய்க் கிடந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள் துருபதனின் பட்டமகிஷி. இருவரது வேண்டுதல்களாலும் திருப்தியடைந்த சிவன் தனித்தனியே அவர்கள் முன் தோன்றினார். அவர்களுக்கு பீஷ்மரைக் கொல்லக் கூடிய வலிமை படைத்த குழந்தை பிறக்குமென்றும் தொடக்கத்தில் பெண்ணாக இருக்கும் குழந்தை பின்னர் ஆணாக மாறுமென்றும் வரமருளி மறைந்தார்.
கானகத்திலிருந்து தவம் முடிந்து திரும்பிய கணவனை சற்றே கவலையோடு வரவேற்றாள் பட்டமகிஷி. சிவனருளால் பிறக்கவிருக்கும் குழந்தையை எப்படி வளர்ப்பது ? பெண்ணாகவா ? ஆணாகவா ? பெண் குழந்தையென்றே சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தி வளர்த்தால் ஒரு காலத்தில் குழந்தை ஆணாக மாறும்போது சமுதாயம் நகைக்காதா ? இதில் மேலும் ஒரு சிக்கல், குழந்தை எந்த வயதில் ஆணாக மாறும் என்பதைச் சிவன் தெரிவிக்கவுமில்லை. சிந்தனையோடு அவர்கள் இருவரும் காத்திருந்தார்கள். பத்து மாதத்தில் மகாராணி ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள். குழந்தை பெண் என்பதை அவர்கள் ரகசியமாக வைக்க முடிவு செய்தார்கள்.
குழந்தையை ஆண் என்றே அறிவித்தார்கள். ஆண் உடை உடுத்தி சிகண்டி எனப் பெயர் சூட்டி, ஆணாகவே வளர்த்தார்கள். தவமிருந்து பெற்ற குழந்தையாதலால், தாங்களே மிகுந்த கவனிப்போடு வளர்க்க விரும்புவதாகச் சொல்லி, பணிப்பெண்களைத் தவிர்த்தார்கள். குழந்தையை நீராட்டுதல் போன்ற விஷயங்களைத் தனிமையில் நிகழ்த்தி, அது பெண் குழந்தை என்று யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். சிகண்டி ஆண் அல்ல என்ற ரகசியம் சிகண்டிக்கும் பெற்றோருக்கும் மட்டுமே தெரியும். உலகம் சிகண்டியை ஆண் என்றே அறிந்தது.
சிகண்டி ஆணுக்குரிய அத்தனை போர்க் கஸ்லகளையும் கற்று மாபெரும் வீரனாக வளர்ந்தாள். வாலிப வயதில் அந்த அழகி பெரும் அழகனாகத் தோற்றமளித்தாள். சிகண்டியின் அழகு பல இடங்களில் வியந்து பேசப்பட்டது.
சிவகடாட்சத்தால் பிறந்த குழந்தை பேரழகோடு திகழ்வதில் என்ன வியப்பு ?
சிவனின் தலையில் இருந்த இளம்பிறை வளர்ந்து முழுமதியாகி சிகண்டியின் முகமாய் மாறியதுபோல் தோன்றியது. சிகண்டி வீதியுலா வந்தபோது, வெண்ணிலவைப் பழிக்கும் சிகண்டியின் முகத்தைப் பார்ப்பதற்காக மக்கள் பெருங்கூட்டமாகக் கூடினார்கள். மன்மதனையும் பழிக்கும் சிகண்டியின் அழகு பல
இடங்களிலும் பேசப்படலாயிற்று.
இதனால் ஒரு விபரீதம் உருவாயிற்று. சிகண்டியின் பேரெழிலைப் பற்றிக் கேள்விப்பட்டு, தாசார்ணக மன்னன் இரண்யவர்மனின் புதல்வி, சிகண்டியைத் தான் மணப்பேன் என்று ஒற்றைக் காலில் நின்றாள்.
கடவுளே! இப்போது என்னதான் செய்வது ? துருபதன் மனம் அனலில் பட்ட புழுவாய்த் துடித்தது. இரண்யவர்மனைப் பகைத்துக் கொள்ள இயலாது, அவன் பெரும் படைபலம் நிரம்பியவன். ரகசியத்தை வெளியிடவும் இயலாது. அது பெருத்த அவமானம்.
துருபதன் சிகண்டியை அழைத்தான். ‘‘வேறு வழியில்லை. நீ அவளை மணந்துகொள். ஆறு மாத காலம் சிவபெருமான் குறித்து விரதமிருப்பதாகச் சொல்லி, அவள் உன்னை நெருங்காமல் பார்த்துக் கொள்.
இப்போது மணம் நடந்தாலும் உன் சிவ விரதம் முடிந்தபிறகே அவளை நாம் நம் இல்லத்திற்கு மருமகளாக அழைத்துக் கொள்வோம் என்று சொல்லிவிடுவோம். ஆறுமாத காலம் உண்மையிலேயே நீ சிவனை மனமுருகிப் பிரார்த்தனை செய்து ஆண் தன்மை பெற்றுவிட்டால் பின் எந்தச் சிக்கலும் இராது !’’ என்றான்.
இந்த ஒப்பந்தத்தின் பேரில் திருமணம் விமர்சையாக நடைபெற்றது. ஆனால், என்ன இருந்தாலும், கல்யாணமான புது மாப்பிள்ளை மாமனார் இல்லத்திற்கு நான்கு நாட்களேனும் வந்து திரும்ப வேண்டாமா ?
தங்கள் நாட்டு மக்கள் மாப்பிள்ளையைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டாமா ?
இரண்யவர்மன் இப்படியொரு வேண்டுகோள் வைத்தபோது துருபதனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வேறு வழியில்லாததால், சிகண்டியை எச்சரிக்கை செய்து மாமனார் தேசத்திற்கு நான்கே நான்கு நாட்கள் சென்றுவர அனுமதித்தான்.
உண்மையை எத்தனை நாள் மறைக்க முடியும் ?
சிகண்டி குளியலறையில் நீராடிய போது, கணவனின் முழுமையான அழகை ரசிக்க நினைத்த புது மனைவி சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்தாள். அதுவரை மறைக்கப்பட்டிருந்த ரகசியத்தை அறிந்துவிட்டாள். தந்தையிடம் ஓடோடிச் சென்று தாங்கள் ஏமாற்றப்பட்ட விவரத்தைக் கூறி ஓவென்று ஓலமிட்டு அழுதாள். இரண்யவர்மன் கடும் சீற்றமடைந்தான். வழக்கம்போல் ஆணுடை தரித்து வெளியே வந்த சிகண்டி, தன்னைப் பற்றிய ரகசியம் வெளிப்பட்ட விவரமறிந்து திகைப்படைந்தாள். ஆனால் சாமர்த்தியமாக ஒரு நாடகமாட முடிவு செய்தாள். மன்னன் இரண்யவர்மன் முன் வந்த சிகண்டி, உரத்த குரலெடுத்து கர்ஜித்தாள்:
‘‘மன்னா! உன் பெண் யாரையோ காதலிக்கிறாள் போலிருக்கிறது. நீங்கள் வற்புறுத்தி என்னை அவளுக்குத் திருமணம் முடித்து வைத்திருக்கிறீர்கள் என்று சந்தேகிக்கிறேன். என்னைத் தவிர்க்கவே இப்படியோர் அபாண்டப் பழியை என்மேல் சுமத்துகிறாள். எதிர்காலத்தில் கணவனை விரும்பாத பெண்களெல்லாம் கணவன் ஆண்மையற்றவன் என்று சுலபமாகப் பொய் சொல்லி வழக்குமன்றம் சென்று தங்கள் மணத்தை ரத்து செய்து கொள்ளப் போகிறார்கள். இப்படியொரு பொய்யை மனைவியே சொன்னால் யார்தான் மறுக்க இயலும் !
எதிர்கால நிகழ்வுகளுக்கான பிள்ளையார் சுழியை இதோ இப்போது இவள் ஆரம்பித்து வைத்திருக்கிறாள். நல்லது. நான் வருகிறேன்!’’
இப்படிச் சொல்லிவிட்டு, கம்பீரமாகத் தன் தேரிலேறிய சிகண்டி, குதிரைகளின் கடிவாளத்தைப் பிடித்துச் சொடுக்கினாள். குதிரைகள் அவள் தேசத்தை நோக்கிக் காற்றாய்ப் பறந்தன. சிகண்டி அப்போதைக்கு அந்தச் சிக்கலிலிருந்து தப்பித்து விட்டாள். ஆனால், தன் மகள் கூற்றையே பெரிதும் நம்பிய இரண்யவர்மன், இதில் ஏதோ சூது இருப்பதை உணர்ந்தான். வஞ்சினத்தோடு, அவனுடைய படைகள் துருபதன் நாட்டை நோக்கிப் பாய்ந்து வந்துகொண்டிருக்கும் விவரத்தைச் சிகண்டி அப்போது அறியவில்லை. தன் நாடு சென்ற சிகண்டி நேரே அரண்மனைக்குச் செல்லாமல் கானகம் சென்றாள். இனி இந்த அவமானத்தோடு உயிர்வாழ்வதில் அர்த்தமில்லை.
பிராயோபவேசம் என்னும் முறையில் உண்ணாநோன்பு இருந்து உயிரை விட்டுவிட வேண்டியது தான். உரிய நேரத்தில் கிட்டாத சிவனருளால் இனியென்ன பயன் ?
கானகத்தில் ஒரு குகையின் முன்னே இருந்த பெரிய ஆலமரத்தின் அடியில் இரவு பகலாக ஒரே நிலையில் அமர்ந்து உண்ணா நோன்பிருக்கலானாள் சிகண்டி. அந்தக் குகையில் குபேரனுக்கு வேண்டியவனான ஸ்தூணாகர்ணன் என்ற யட்சன் வாழ்ந்து வந்தான்.
கருணையுள்ளம் கொண்ட அவன் சிகண்டியிடம் வந்து பரிவோடு விசாரித்தான். சிகண்டி அவன் அன்புக்கு மரியாதை கொடுத்து, தன் வரலாறு முழுவதையும் சொன்னாள்.
‘‘இவ்வளவுதானே ?’’ என்று ஆறுதலாகக் கேட்டான் அவன். ‘‘சிகண்டி, வருந்தாதே!
நான் குபேரனுக்கு வேண்டியவன். அவன் மூலம் வரமருளும் ஆற்றல் பெற்றிருக்கிறேன். என்னால் உன் பெண்மையை நான் வாங்கிக் கொண்டு என் ஆண்மையை உனக்குத் தர முடியும்.
ஓராண்டுக்குள் நீ மறுபடி வந்து என் ஆண்மையை எனக்கே திருப்பித் தருவதாக வாக்களித்தால் அந்தக் குறுகிய காலத்திற்கு நான் உன்னை ஆணாக்குகிறேன் !’’ என்றான். சிகண்டி மிகுந்த மகிழ்ச்சியடைந்தாள். ஓராண்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். திருமணமான இந்தத் தருணத்தில் ஆண்மை கிட்டுவதல்லவா மிக முக்கியம். அந்த யட்சனைத் தன்னைக் காக்க வந்த சிவனாகவே கருதி வணங்கினாள். அவனை ஓராண்டில் மீண்டும் சந்திப்பதாக வாக்குறுதி கொடுத்தாள்.
யட்சன் அவள் தலையில் கைவைத்து மந்திரஜபம் செய்தான். சில கணங்களில், என்ன ஆச்சரியம் ! சிகண்டி ஆணானாள். அவன் பெண்ணானான். இப்போது சிகண்டி அவளல்ல. அவன் ! சிகண்டி ஓடோடித் தன் நாட்டுக்கு வந்து சேர்ந்தான். நாட்டைப் படைகள் சூழ்ந்திருப்பதையும் தன் மாமனார் கடும் சீற்றத்தோடிருப்பதையும் அறிந்தான். தன் பெற்றோர் முன்னிலையிலும் தன் நாட்டு மக்கள் முன்னிலையிலும் தன் மாமனாரான இரண்யவர்மனை அறைகூவி அழைத்தான்:
‘‘இரண்யவர்மரே! மாமனார் என்றால் தந்தை ஸ்தானம் அல்லவா ? அப்படியிருக்க உங்கள் மாப்பிள்ளை மேல் இப்படி அபாண்டப் பழி சுமத்தலாமா ? என் தேச மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் ?
உங்கள் பெண்ணிடம் தான் ஏதோ மனக்கோளாறு இருக்கிறதே தவிர என்னிடம் எந்த உடல் கோளாறும் இல்லை. அவசரப்பட்டுப் படையெடுத்து வந்திருக்கிறீர்களே ? ஏன் என்னை நீங்கள் மருத்துவக் குழுவை வைத்துப் பரிசோதிக்கக் கூடாது ? எங்கள் நாட்டு மருத்துவர்கள் தேவையில்லை. உங்கள் நாட்டிலிருந்தே மருத்துவர்கள் சிலரை அழைத்து வாருங்கள். நான் சோதனைக்கு உட்படத் தயார் !''
சிகண்டியின் கம்பீரமான அறைகூவல் இரண்யவர்மனைத் திகைக்க வைத்தது. அவன் உடனடியாகத் தன் தேச மருத்துவர்கள் சிலரை வரவழைத்தான். அவர்கள் அந்தரங்கமாக சிகண்டியைப் பரிசோதித்தார்கள். பின்னர் இரண்யவர்மனிடம் பொதுமக்கள் முன்னிலையில் அந்த மருத்துவர்கள் ஏகோபித்த அபிப்ராயத்தைத் தெரிவித்தார்கள்:
‘‘மன்னா! ஆணழகரான சிகண்டியிடம் எந்த உடல் கோளாறும் இல்லை. அவர் முழுமையான ஆண்மகன் தான். எங்களுக்கொரு சந்தேகம். நம்நாட்டு ராஜகுமாரியை நல்ல மனநல மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது !’’ இந்த விளக்கத்தைக் கேட்டு இரண்யவர்மன் அவமானம் அடைந்தான். தன் மாப்பிள்ளையிடமும் அவனது பெற்றோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். தன் மகளை அழைத்துவந்து சபை முன் அவளைத் தாறுமாறாக ஏசலானான்.
அப்போது குறுக்கிட்டான் சிகண்டி. ‘‘இரண்யவர்மரே! நடந்தது நடந்துவிட்டது. இனிப் பழையவற்றைப் பேசுவதால் லாபமென்ன? உங்கள் மகளை என் முன்னிலையில் நீங்கள் ஏசக் கூடாது. ஏனென்றால் இப்போது அவள் உங்கள் மகள் மாத்திரமல்ல என் மனைவியும் கூட. என் அன்பான மனைவி மீது யார் கடும்சொல் கூறினாலும் அதை என்னால் அனுமதிக்க இயலாது!’’
தன் மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான் சிகண்டி! அவள் அவன் மார்பில் தலைவைத்து விம்மினாள். இரண்யவர்மன் தன் மகளை சரியான இடத்தில் தான் ஒப்படைத்திருக்கிறோம் என்ற நிம்மதியோடு விடைபெற்றான். ஆனால், சிகண்டியின் மனைவிக்குத்தான் தன் கண் தன்னை எப்படி ஏமாற்றியது என்று கடைசிவரை தெரியவில்லை! குளியலறைச் சாளரம் பொய் சொன்னதோ ! ஓராண்டு என்பது, முந்நூற்று அறுபத்தைந்தே நாட்களில் உருண்டு ஓடியே போய்விட்டது. சிவனை வணங்கிய சிகண்டி, யாருமறியாமல் கானகம் சென்றான். தனக்கு ஆண்மையை வழங்கிய ஸ்தூணாகர்ணன் என்ற அந்த யட்சனை மறுபடி சந்தித்தான். தன் ஆண்மையை ஏற்று மீண்டும் தனக்குப் பெண்மையை வழங்குமாறு நன்றியுடன் வேண்டினான்.
ஆனால், ஸ்தூணாகர்ணனோ கலகலவென்று சிரித்தான். பின் சொல்லலானான்: ‘‘அன்பனே சிகண்டி! என் இரக்கத்தின் காரணமாகத்தான் நான் உனக்கு என் ஆண் தன்மையை வழங்கினேன். நான் பெண்ணானேன். நீ விடைபெற்றுச் சென்ற சில நாட்களில் என் தலைவன் குபேரன் இங்கே வந்திருந்தார். என் நிலைகண்டு சீற்றமடைந்தார். இரக்கப்படுவதற்கு ஓர் அளவில்லையா, இனி நீ பெண்ணாகவே தான் இருப்பாய் என்று சபித்துவிட்டார். நல்ல நோக்கத்தோடு செய்த செயலுக்கு இப்படியொரு சாபமா என்று கதறினேன். அவர் மனமிரங்கினார். நீ யாருக்கு ஆண் தன்மையை வழங்கினாயோ அவர் காலமான பின் நீ மீண்டும் ஆணாவாய் என்று சாப விமோசனம் அருளினார்.
நீ நெடுநாள் வாழவேண்டும் என்பதே என் பிரார்த்தனை. ஏனென்றால் நான் பெண்ணானதில் எனக்கு இப்போது வருத்தமெதுவும் இல்லை. ஒருபெண் அடையக் கூடிய சுகதுக்கங்களை அனுபவபூர்வமாக அறிய இது ஒரு வாய்ப்பு என்றே என் மனம் நினைக்கிறது. வாழ்க்கைச் சம்பவங்கள் விசித்திரமானவை. நீயும் நானும் ஆணாகவும் பெண்ணாகவும் இருந்து இருவேறு நிலைமைகள் குறித்தும் அறிந்துகொண்டோம். இது கடவுள் தந்த பேறு!’’ யட்சனின் அன்பான பேச்சைக் கேட்ட சிகண்டியின் கண்கள் கலங்கின. யட்சனை வணங்கி ஆசிபெற்ற சிகண்டி தன் அரண்மனைக்குத் திரும்பினான். தன் தாய், தந்தையரிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் விளக்கினான்.
துருபதனும் அவன் மனைவியும் சிவபெருமான் அல்லவோ யட்சனின் மனத்திற்குள் புகுந்து இத்தகைய திருவிளையாடலை நிகழ்த்தியிருக்கிறார் என்று வியந்தார்கள். அவர்கள் சிகண்டியோடு பூஜையறைக்குச் சென்று தரையில் விழுந்து சிவலிங்கத்தை வணங்கினார்கள். அந்தக் காட்சியைப் பார்த்த சிகண்டியின் மனைவி, ஏன் இவர்கள் திடீரென்று பூஜையறைக்குச் சென்று சிவனை வணங்குகிறார்கள் என்றறியாமல் திகைத்தாள். ஆண்மை நிறைந்த தன் கணவனின் சிவபக்தியை நினைத்து அவள் உள்ளம் மகிழ்ந்தது.
(மகாபாரத இதிகாசத்தில் அம்போபாக்கியானம் என்ற பகுதியில் வரும் இந்தக் கிளைக் கதை, வாக்குத் தவறாமையின் மகத்துவத்தையும் இறைவன் நினைத்தால் எதுவும் நடக்கும் என்பதையும் விவரிக்கிறது.)

7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete