jaga flash news

Friday, 24 May 2019

ஏக ராசி

பெற்றோர்கள், தங்களுடைய மகள் அல்லது மகனுக்குத் திருமணம் செய்ய எண்ணும்போது அவர்களின் மனதில் சில சந்தேகங்கள் தோன்றுகின்றன. அதாவது, எந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாம்? எந்த எந்த நட்சத்திரம் திருமணத்துக்கு உகந்தது அல்ல,எந்த நட்சத்திரம் தம் பிள்ளைக்குப் பொருந்தும்? என்றெல்லாம் சந்தேகம் எழுவது இயற்கை.அந்த வரிசையில், அனைவருக்கும் காலம் காலமாகத் தோன்றும் சந்தேகம் ஏக நட்சத்திரம் மற்றும் ஏக ராசியில் திருமணம் செய்யலாமா என்பதுதான். ஏக நட்சத்திரம் என்றால் என்ன? அல்லது ஏக ராசி என்றால் என்ன? என்பதைப் பார்ப்போம், ஏகம் என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில்
 'ஒன்று' எனப் பொருள்படும். ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களை இணைக்கலாமா என்ற எண்ணம் அனைவருக்கும் தொன்றுதொட்டு  இருந்து வருகிறது. 
பொதுவாக ஜோதிட சாஸ்திரப்படி, சில நட்சத்திரங்கள் ஒரே நட்சத்திரமாக இருந்தால், திருமணம் செய்யலாம் என்றும் சில நட்சத்திரங்கள் திருமணம் செய்யக்கூடாது என்றும் 'காலபிரகாசிகா' என்ற ஜோதிட நூல் விளக்குகிறது. 
இணைக்கக் கூடாத ஒரே நட்சத்திரங்கள்:
பரணி, ஆயில்யம், ஸ்வாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி  ஆகிய  நட்சத்திரங்கள், மணமகள் மணமகன் நட்சத்திரங்களாக வந்தால், திருமணம் செய்யக்கூடாது. சிறிதுகூட பொருத்தம் இல்லை. இந்த நட்சத்திரக்காரர்களை இணைக்கக்கூடாது. 
இணைக்கக்கூடிய ஒரே நட்சத்திரங்கள்:
ரோகிணி, திருவாதிரை,,மகம், அஸ்தம், விசாகம்,,திருவோணம்,உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மணமகன்,  மணமகளுக்கு ஒரே நட்சத்திரமாக வந்தால், திருமணம் செய்யலாம். இவை நல்ல பலன்களை கொடுக்கும். தசா சந்திப்பு தோஷம் உண்டாகாது.
மத்திம பலன்களை தரும் வகையில் இணைக்கக் கூடிய ஒரே நட்சத்திரங்கள்: அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம்  ஆகிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்று நட்சத்திரமாக வந்தால், திருமணம் செய்யலாம். ஆனால், மத்திமமான பொருத்தம்தான். மொத்தத்தில் திருமணம் செய்யலாம், பாதகம் இல்லை.
பொருத்தமுள்ள ஒரே நட்சத்திரத்தை, சேர்ந்த மணமகள் மணமகன்களுக்கு திருமணம் செய்யும்போது நட்சத்திரத்தின் முந்தைய பாதம் ஆணுக்கும்  அடுத்த பாதம் பெண்ணுக்கும் இருந்தால், திருமணம் செய்யலாம். 
உதாரணமாக, ரோகிணி நட்சத்திரம் என்றால், நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆணுக்கும் இரண்டு மூன்று நான்கு ஆகியவற்றில் ஏதாவதொரு பாதம் பெண்ணுக்கு இருப்பது நற்பலன்கள் கொடுக்கும்.
பெண் நட்சத்திரப் பாதம் முதலிலும் ஆண் நட்சத்திரப் பாதம் பிந்தியதாகவும் இருந்தால், திருமணம் செய்வது சிறப்பான பலன் இல்லை. உதாரணமாக, திருவாதிரை நட்சத்திரம் என்றால், திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் பாதம் பெண்ணுக்கும் இரண்டு மூன்று நான்கு பாதங்களில் ஏதாவதொரு பாதம் ஆணுக்கும் இருப்பது நற்பலன்களைக் கொடுக்காது.
27  வது நட்சத்திரம் திருமணம் செய்யலாமா?
பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரம் கணக்கிடும் போது 27 வது நட்சத்திரமாக வந்தால், பெண்ணின் நட்சத்திரம் ஆணின் நட்சத்திரமும் ஒரே ராசியில், இருந்தாலும் திருமணப் பொருத்தம் உண்டு. திருமணம் செய்யலாம் உத்தம பலன்கள் உண்டாகும்.
 அப்படி அல்லாமல், இருவர் ராசியும் வெவ்வேறாக இருந்தால் திருமணம் செய்யக்கூடாது. இதற்கு தினப்பொருத்தம் இல்லை. நற்பலனும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக, இருவரும்  ஒரே நட்சத்திரமாக இருந்தாலும் சரி, ஒரே ராசியாக இருந்தாலும் சரி, மணமகன் மற்றும் மணமகள் இருவரையும் இணைப்பதைத் தவிர்ப்பது நல்லது. காரணம் என்னவென்றால், இவர்கள் இருவருக்கும் ஆயுளில் பாதகம் ஏற்படாது. பரஸ்பரம் அன்பு அதிகமாகவே இருக்கும். ஆனால், மற்ற மற்ற சௌகரியங்கள் குறையுடன் இருப்பதைக் காணலாம். 
ஒரே ராசியாகவோ ஒரே நட்சத்திரமாகவோ உள்ள தம்பதிக்கு, ஏழரைச் சனி, கண்டகச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி வரும்போது இருவருக்கும் ஒன்றாகவே துன்பம் தரும். இதே போல குரு பகவானும் ஜென்ம குருவாகவும், அஷ்டம குருவாகவும் வரும்போதும் துன்பங்களையே தருவார்.
ஜாதகத்தில் நல்ல தசாபுக்தி நடைபெற்றால் பரவாயில்லை, மாறாக தசா புக்தியும் பாதகமாக வந்தால், அவர்களின் நிலை என்னவாகும் என்பதுதான் கேள்வி. ஆதலால், இருவரும் வேறு வேறு ராசிகளில் பிறந்திருந்தால் அவர்களை இணைத்தோமேயானால் அவர்களில் யாராவது ஒருவருக்கு ஏழரைச் சனி நடந்து  மற்றவருக்கு ஏழரைச்சனி இல்லாமல் இருந்தால் நன்மையைத் தரும்.
அதாவது ஒருவருக்கு துன்பம் ஏற்பட்டு இருக்கும்போது மற்றவருக்கு இன்பம் இருக்குமாயின் துன்பம் ஏற்பட்டவருக்கு உறுதுணையாக உடன் இருந்து உதவிபுரிய உதவுகிறது. 
அப்படி இல்லாமல் இருவருக்கும் துன்பம் ஏற்பட்டு இருக்குமாயின் யார் யாருக்கு உதவ முடியும். மீண்டும் சோகத்தையே அந்த தம்பதி தழுவவேண்டியதுதான். 

No comments:

Post a Comment