jaga flash news

Saturday, 27 March 2021

கோவிட் தடுப்பூசி பற்றி விளக்கம்...

காலத்தின் அவசியம் கருதி
அத்தியாவசிய விளக்கம்



கோவிட் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்களுக்கும் சில நாட்களில் கோவிட் தொற்று ஏற்படுவதாக செய்திகள் வருகின்றனவே?

இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது
தடுப்பூசிகள் வேலை செய்வதில்லை என்றா?
தடுப்பூசிகளால் இந்த தொற்று ஏற்பட்டதா?

இது குறித்து எனது
அறிவியல் பூர்வமான விளக்கம்




கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு சில நாட்களில் காய்ச்சல் ஏற்பட்டு அதற்குரிய பரிசோதனை செய்தால் கோவிட் பாசிடிவ் என்று சிலருக்கு ஏற்படுகின்றது .

இது குறித்த அறிவியல் பூர்வ விளக்கங்களை அளித்தால் பலரும் புரிந்து கொள்ளக்கூடும்

பொதுமக்களுக்கும் தெளிவாக பல விசயங்கள் சென்று சேரக்கூடும்.

எனது விளக்கத்தை ஆரம்பம் செய்கிறேன்

கோவிட் நோய்க்கு எதிராக தடுப்பூசி பெற்றுக் கொள்பவர்களுக்கு தடுப்பூசியின் எதிர்பார்க்கப்படும் சாதாரண பக்க விளைவுகளான

காய்ச்சல்
உடல் வலி
தலைவலி போன்ற பக்க விளைவுகள் முதல் 24 மணிநேரங்களுக்குள் தோன்றி அதிகபட்சம் 72 மணிநேரங்களுக்கும் சரியாகி விடும்.

எனவே தடுப்பூசி பெற்றவர்கமிக இருப்பினும் தடுப்பூசி பெற்ற பின் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் உடனே உஷாராகி RTPCR பரிசோதனை எடுக்க வேண்டும்.

காய்ச்சலுடன் இருமல் சேர்ந்தால் இருமடங்கு உஷாராகி மருத்துவர் பரிந்துரையில் சி.டி ஸ்கேன் எடுக்கலாம்.

தடுப்பூசியால் ஏற்படும் சாதாரண பக்கவிளைவுகள் அனைத்தும் பெரும்பாலும் 72 மணிநேரங்களுக்குள் ஆரம்பித்து 72 மணிநேரங்களுக்குள் சரியாகிவிடும்.

கோவிட் நோயை தடுக்கத்தானே தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன? பிறகு எப்படி தடுப்பூசி பெற்றவர்களுக்கும் கோவிட் வருகிறது?

இதற்கு மூன்று அறிவியல் விளக்கங்கள் உள்ளன

1️⃣முதல் விளக்கம்
INCUBATION PERIOD குறித்தது

அதாவது ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதில் இருந்து/ உடலுக்குள் வந்ததில் இருந்து அந்த நோய்க்கான அறிகுறிகள் உடலில் தென்படும் வருவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் தான்

"Incubation period" எனப்படும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்குபேசன் பீரியட் சராசரி 5 முதல் 6 நாட்கள் அதிகபட்சம் 14 நாட்கள்.

இதன் காரணமாகத் தான் தொற்று கண்ட நபர் இருக்கும் வீடுகளை 14 நாட்கள் தனிமைப்படுத்துகிறோம். (QUARANTINE)

இந்த இன்குபேசன் பீரியடில் இருப்பதை நோய் அறிகுறி தோன்றும் வரை அந்த நபரே அறிய இயலாது.

ஒருவர் தடுப்பூசியை வெள்ளிக்கிழமை பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்

அவர் அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை
நண்பர்களுடன் ஒரு கெட் டுகெதர் கலந்து கொண்டு அங்கு கொரோனா தொற்றை பெற்று விட்டால் 

அப்போதிருந்து இன்குபேசன் பீரியட் ஆரம்பமாகும். 

அவருக்கு ஆறாவது நாள் கொரோனா தொற்றின் அறிகுறிகள் தோன்ற காத்திருக்கின்றன என்றால் சனிக்கிழமை காய்ச்சல் அடிக்கும். 

ஆனால் அவர் வெள்ளிக்கிழமை தடுப்பூசி பெற்றிருக்கிறார். 

அடுத்த நாளான சனிக்கிழமை தோன்றும் காய்ச்சல் 
தடுப்பூசியின் சாதாரண பக்கவிளைவால் தோன்றியதா? அல்லது கொரோனாவால் தோன்றியதா? என்பதை எப்படி அறிவது?

தடுப்பூசியின் பக்கவிளைவால் தோன்றியதாக இருந்தால் தடுப்பூசி பெற்ற மூன்று நாட்களுக்குள் சரியாகிவிடும் 

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட அறிகுறியாக இருந்தால் காய்ச்சல் மூன்று நாட்கள் கடந்தும் தொடரும் கூடவே இருமல் தோன்றும். உடனே சுதாரிக்க வேண்டும். 

இது தடுப்பூசியால் ஏற்பட்டதன்று.  மாறாக நாம் ஏற்கனவே பெற்ற தொற்றின் அறிகுறி என்று உணர வேண்டும். உடனே பரிசோதனை செய்து சிகிச்சை எடுக்க வேண்டும். 

2️⃣இரண்டாவது விளக்கம் 

 TIME PERIOD TO REACH MAXIMUM EFFICACY 

கோவிட் நோய்க்கு தடுப்பூசி எடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று ஏற்படுகின்றதென்றால் தடுப்பூசிகள் ஏன் நோயைத் தடுக்கவில்லை???

இந்தியாவில் தற்போது வழங்கப்படும் இரண்டு தடுப்பூசிகளான 

கோவேக்சின் 
கோவிஷீல்டு ஆகிய இரண்டில் 

கோவேக்சின் தடுப்பூசி முதல் டோஸ் பெற்று அதற்குப்பிறகு 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது டோஸ் பெற்று அதன் பிறகு 14 நாட்கள் கழித்தே முழு எதிர்ப்பு சக்தியை தரும் நிலையை அடைகின்றது 

கோவிஷீல்டு தடுப்பூசியைப் பொறுத்தவரை 
முதல் டோஸ் பெற்ற 22 நாட்களுக்குப்பிறகு தான் முழு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகின்றது.  இன்னும் இரண்டாவது டோஸ் போடப்பட்டு 14 நாட்கள் கழித்தே ஆய்வுகளில் சிறந்த எதிர்ப்பு சக்தி கிடைப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே தடுப்பூசி போட்ட அடுத்த நாளில் இருந்து எதிர்ப்பு சக்தி கிடைத்து விட்டது என்று நம்பி மாஸ்க் இல்லாமல் கூட்டங்களில் கலந்து கொண்டால் தொற்றைப்பெறும் வாய்ப்பு அதிகம். 

3️⃣மூன்றாவது விளக்கம் 

INTRINSIC EFFICACY VARIABILITY 

இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்று இரண்டு வாரங்கள் - கழித்தும் கூட சில மருத்துவர்களுக்கு அறிகுறிகளுடைய கொரோனா தொற்று வந்துள்ளதே ? அதைப்பற்றி தங்களின் கருத்து 

இதற்கு என்னுடைய விளக்கம் 

கோவிஷீல்டு தடுப்பூசியின் அறிகுறிகளுடைய நோய் தடுக்கும் திறன் 70% 
கோவேக்சின் தடுப்பூசியின் அறிகுறிகளுடைய  நோய் தடுக்கும் திறன் 
 80% 

அதாவது கோவிஷீல்டு போடப்பட்ட நபருக்கு 70% தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைக்கப்படுகின்றது 

கோவேக்சின் போடப்பட்ட நபருக்கு 80% தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைக்கப்படுகின்றது

ஆயினும் எந்த தடுப்பூசியும் 100% நோய் தடுக்கும் திறனுடன் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

கோவிஷீல்டு போடப்பட்டவருக்கும் கூட அறிகுறிகளுடன் தொற்று ஏற்பட 30% வாய்ப்புண்டு 

கோவேக்சின் போடப்பட்டவருக்கும் கூட அறிகுறிகளுடன் தொற்று ஏற்பட 20% வாய்ப்புண்டு 

ஆனால் இதுவரை நடந்த ஆய்வு முடிவில் 
 கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு தீவிர கொரோனா ஏற்படவில்லை என்பது ஆறுதலான செய்தி. 

எனவே தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களுக்கு  
அறிகுறிகளற்ற கொரோனா ஏற்படலாம். 

போட்டுக்கொண்ட சிலருக்கு அறிகுறிகளுடைய கொரோனாவும் ஏற்படலாம். 
இருப்பினும் பெரும்பான்மை சமூகத்தை அதிலும் VULNERABLE மக்கள் தொகையை தீவிர கொரோனா நோயில் இருந்தும் 
மரணங்களில் இருந்தும் காக்கும் தன்மை தற்போதைய தடுப்பூசிகளுக்கு உண்டு என்பது தற்போது வரை கிடைத்துள்ள ஆய்வு முடிவுகளின் மூலம் கிடைக்கும் உண்மை. 

ஆகவே மேற்கண்ட காரணங்களால் தான் தடுப்பூசி பெற்ற மக்களிடையேவும் சாதாரண கோவிட் நோய் ஏற்படுகின்றது. 

4️⃣நான்காவது விளக்கம்

கோவிட் தடுப்பூசிகளால் தொற்று ஏற்படுத்த இயலாது ? ஏன்? 

கோவிஷீல்டு என்பது சிம்பன்சி இனத்தில் ( மனிதக்குரங்கு) சாதாரண சளி இருமலை உருவாக்கும்  அடினோ வைரஸை வாகனமாக உபயோகித்து அதில் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரத மரபணுக்களை உட்புகுத்தி உருவாக்கப்பட்டது. 

இத்தகைய டெக்னாலஜியை ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி மற்றும் ஆஸ்ட்ரா செனிகா இரண்டும் மெர்ஸ் கோவி 2012இல் வளைகுடா நாடுகளில் (middle east respiratory syndrome  - MERS COv)  காலத்திலேயே ஆய்வு செய்து வைத்தது. 

அதன் பயனை தற்போதைய கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தடுப்பூசியாக அறுவடை செய்ய முடிகின்றது. 

அந்த டெக்னாலஜியின் முக்கிய அம்சமே சிம்பன்சி அடினோ வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் பல்கிப்பெருக இயலாது என்பது தான். எனவே கோவிஷீல்டு தடுப்பூசி மூலம் கோவிட் நோய் உருவாக இயலாது. 

கோவேக்சின் தடுப்பூசியைப் பொறுத்தவரை அதன் டெக்னாலஜி- கொரோனா வைரஸ்களை வளர்த்தெடுத்து அவற்றை அதன் அங்கங்கள் சிதையாதவாறு கொன்று
(Inactivating ) அந்த வைரஸ்களின் பிரேதங்களைத் தான் வேக்சினாக செலுத்துகிறோம்.  எனவே கோவேக்சினாலும் கோவிட் நோயை உருவாக்க இயலாது.

TAKE HOME MESSAGES 

💉கோவிஷீல்டு / கோவேக்சின் தடுப்பூசிகளால்  கோவிட் நோயை உருவாக்க இயலாது 

💉 தடுப்பூசி பெற்ற 24 மணிநேரங்கள் முதல் 72 மணிநேரங்களுக்குள் ஏற்படும் காய்ச்சல் தலைவலி போன்றவற்றை தடுப்பூசிகளின் சாதாரண பக்கவிளைவுகள் என்று கொள்ளலாம் 

💉 தடுப்பூசி பெற்று 72 மணிநேரங்களுக்குப் பிறகும் காய்ச்சல் தொடர்ந்தாலோ இருமல் நீடித்தாலோ உடனே RTPCR பரிசோதனை செய்ய வேண்டும். 

💉 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடையேவும் அறிகுறிகளற்ற / அறிகுறிகளுடைய கொரோனா ஏற்படும் வாய்ப்பு உண்டு. 

💉 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தீவிர கொரோனா ஏற்படும் வாய்ப்பு குறைவு ஆயினும் தொற்றுப்பரவலை தடுக்க தடுப்பூசி பெற்றவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 

💉 45+ வயதுக்கு மேல் உள்ள அனைவரும் அச்சமின்றி தடுப்பூசி பெற்றுக்கொண்டு தீவிர கொரோனாவை தடுத்துக்கொள்ள வேண்டும். 

💉 கொரோனா தடுப்பூசி குறித்த இந்த விளக்கம் உங்களுக்கு பயனுள்ளதாய் இருப்பதாகக் கருதினால் அதை இன்னும் பலருக்கு அனுப்பி அவர்களும் தடுப்பூசிகள் குறித்து தெரிந்து கொள்ள உதவுங்கள் 

No comments:

Post a Comment