jaga flash news

Thursday 5 August 2021

துஷ்யந்தன் – சகுந்தலை

துஷ்யந்தன் – சகுந்தலை ........................................ பூருவின் வம்சத்தில் ஒன்பதாவது தலை முறையில் துஷ்யந்தன் பட்டத்துக்கு வந்தான். அவன் ஒரு முறை வேட்டைக்குச் சென்ற போது , வனத்தில் இருந்த கண்வ மகரிஷியின் ஆச்ரமத்தைப் பார்த்தான். கண்வரைத்தனிமையில் சந்திக்க விரும்பிய துஷ்யந்தன், தன்னுடன் வந்தவர்களை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு, கண்வரின் ஆச்ரமத்திற்குத் தனியே சென்றான். அப்போது கண்வர் அங்கே இல்லை. ஒரு பெண் அவனை வரவேற்றாள். அவளை யார் என்று விசாரித்தான் துஷ்யந்தன். அந்தப் பெண் தன் பெயர் சகுந்தலை என்று அறிமுகப் படுத்திக் கொண்டாள். கண்வ மகரிஷி வேறு ஒருவரிடம் சொன்ன விவரங்களை, துஷ்யந்தனிடம் அவள் எடுத்துச் சொன்னாள். விஸ்வாமித்திரரின் தவ வலிமையினால் நடுங்கிக் கொண்டிருந்த இந்திரன், அவர் தவத்திற்கு இடையூறு செய்ய விரும்பி, மேனகையை அனுப்பினான். அந்த வலையில் விழுந்த விஸ்வாமித்திரர் மேனகையுடன் கூடினார். அவர்களுக்குப் பிறந்தவள் சகுந்தலை. மேனகை மேலுலகத்திற்குத் திரும்பிச் செல்வதற்கு முன்பாக , இந்தக் குழந்தையைப் பெற்றெடுத்து ஒரு நதிக் கரையில் விட்டு விட்டுச் சென்று விட்டாள். அந்தக் குழந்தையைப் பறவைகள் சூழ்ந்து கொண்டு காப்பாற்றின( சகுந்தம்” என்றால் ” பறவை” ”லா” என்றால், ஏற்றுக் கொள்ளப் பட்டவள். பறவைகளால் ஏற்கப் பட்டவள். ஆதலின் அவளுக்குச் சகுந்தலா என்றுபெயர் அமைந்தது. தமிழில் சகுந்தலை என்று சொல்கிறோம்) பறவைகளின் மொழியை அறிந்த கண்வர் நடந்ததைத் தெரிந்து கொண்டு, அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தார்- இப்படி கண்வர் முன்பு ஒரு முறை வேறு ஒருவரிடம் சொன்னதை, சகுந்தலை துஷ்யந்தனிடம் கூறினாள். அவளுடைய அழகினால் கவரப் பட்ட துஷ்யந்தன், அவளை மணக்க விருப்பப் பட்டான். சகுந்தலை, ” கண்வர் வந்த பிறகு, அவர் அனுமதியைக் கேட்டு, அவர் சொல்படி செய்வோம். அவர் எனக்குத் தந்தை போன்றவர். குழந்தைப்பருவத்தில் பெண்களைத் தந்தை காப்பாற்றுகிறார், இளமைப் பருவத்தில் கணவன் காப்பாற்றுகிறான், வயதான காலத்தில் மகன் காப்பாற்றுகிறான். ஆதலால் பெண்கள் சுதந்திரமாக இருக்கத் தகுதியற்றவர்கள்” என்று கூறினாள். துஷ்யந்தன் சொன்னான்- எட்டு வகையான திருமணங்கள் இருப்பதாக தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன, மனப் பெண்ணை நன்கு அலங்கரித்து, மணமகன் கையில் கொடுத்து விடுவது பிராம்ம விவாஹம், யாகம் செய்து அதன் முடிவில் யாகத்தை நடத்தியவருக்குக் காணிக்கையாகப் பெண்ணைக் கொடுப்பது தைவ விவாஹம், மண மகனிடம் இரண்டு பசுக்களைப் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது ஆர்ஷ விவாஹம், மணமகளும், மண மகனும் சேர்ந்து தர்மத்தின் வழியில் செல்லட்டும்என்று தீர்மானித்துக் கொண்டு, பெண்ணைக் கொடுப்பது ப்ராஜாபத்ய விவாஹம். பெருமளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, பெண்ணைக் கொடுப்பது அசுர விவாஹம், பெண்ணும் ஆணும் மனமொத்து தாங்களாகவே கலந்து கொள்வது காந்தர்வ விவாஹம், தூக்கத்திலும் குடி மயக்கத்திலும், ஒருவன் ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு போய் மணம் செய்து கொண்டால்,அது பைசாச விவாஹம், சண்டையிட்டுப் பலாத்காரமாக ஒரு பெண்ணைக் கொண்டு போய் கல்யாணம் செய்து கொண்டால் அது ராட்சஸ விவாஹம். இந்த எட்டு வகையான விவாஹங்களில் கடைசி இரண்டைத் தவிர, மற்றவை க்ஷத்ரியர்களுக்குத் தர்மமான விவாஹங்கள் என்றும் கூறப் பட்டிருக்கிறது. ராஜ்ய பரிபாலனம் செய்து வரும் க்ஷத்ரியனுக்கு சில சமயங்களில் ராட்சஸ விவாஹமும் அனுமதிக்கப் படுகிறது. இருவரும் மனம் ஒப்பிச் செய்து கொள்ளும் காந்தர்வ விவாஹம் மூலமாக நாம் மணந்து கொள்வோம்” என்று கூறினான். சகுந்தலைக்குப் பிறக்கும் பிள்ளை தனக்குப் பிறகு பட்டத்துக்கு வருவான் என்று அவன் வாக்களித்து, அவளோடு வாதித்து, அவளை காந்தர்வ விவாஹம் செய்து கொண்டான். அதன் பிறகு, அவன், அவளோடு சேர்ந்தான். உரிய முறையில், ஊர் அறிய, வாத்தியங்கள் முழங்க , அவளை நகரத்துக்கு அழைத்துச் செல்வதாகச் சத்தியம் செய்து விட்டுப் பிரிந்தான் துஷ்யந்தன். கன்வர் திரும்பி வந்த பிறகு நடந்ததைச் சகுந்தலையிடமிருந்து அறிந்து கொண்டார். துஷ்யந்தன் அறவழிச் செல்பவன்” என்று புகழ்ந்து, அவன் முறையாக அவளை அழைத்துச் செல்வான்” என்று அவரும் அவளுக்குத் தைரியம் கொடுத்தார். பல மாதங்கள் கடந்தும் துஷ்யந்தன் திரும்பி வரவில்லை. இதற்குள் ஒரு குழந்தைக்குத் தாயும் ஆனாள் சகுந்தலை. துஷ்யந்தனே வந்து தன்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று சகுந்தலை காத்திருந்தாள். துஷ்யந்தன் மகன் பரதன். சிறு வயதிலேயே வீரனாகத் திகழ்ந்தான். கன்வர், சகுந்தலையை அழைத்து , மகளே! நான் சொல்வதைக்கேள். மனதாலும், சொல்லாலும், செயலாலும் கணவனுக்குப் பணி செய்வதே பதிவிரதையான பெண்களின் கடமை. துஷ்யந்தன் வருவான் என்று நாம் காத்திருந்தாலும், ஏதோ காரணத்தினால் அவன் இன்னமும் வராமல் இருக்கிறான். ஆனால் அதைக் காரணமாகக் கொண்டு நீ இங்கேயே இருப்பது நல்லதல்ல. அவன் வந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்ற பிடிவாதத்தை விடுத்து, நீயாகஇனி அவனிடம் செல்ல வேண்டும்.தேவதைகள், பெரியவர்கள், அரசர்கள் ஆகியோரிடம் நாமே தான் செல்ல வேண்டும். அதே போல் பெண்களும் கணவனிடத்தில் அவர்களாகவே தான் செல்ல வேண்டும்.ஆகையால் உன் மகன் பரதனுடன் புறப் பட்டு, நீ சென்று துஷ்யந்தனைப் பார்ப்பாயாக.பெண்கள் தம்மைச் சார்ந்த உறவினர்களிடம் வெகு காலம் வளரக் கூடாது. அதனால் அவர்களுடைய பெயரும், ஒழுக்கமும், தர்மமும் பாழாகும்” என்று கூறினார். பிறகு சில ரிஷிகளிடம் அவளை ஒப்படைத்து, நகரத்தின் எல்லையில் அவளையும், பரதனையும் விட்டுவிட்டுத் திரும்பி வந்து விடுமாறு அவர் சொல்லி அனுப்பினார். இப்படிக் கொண்டு விடப் பட்ட சகுந்தலை, பரதனையும் அழைத்துக் கொண்டு வாயில் காப்பவர்களின் அனுமதி பெற்று, துஷ்யந்தனின் அரச சபையில் நுழைந்தான். அங்கே துஷ்யந்தன் சிம்மாசனத்தில் வீற்றிருந்தான். என்ன சொல்வது, எப்படி ஆரம்பிப்பது, என்று தெரியாத சகுந்தலை, வெட்கமடைந்து ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு நின்றாள். துஷ்யந்தன், நீ யார்? வந்த காரியம் என்ன? சொல்! நீ விரும்பியதைச் செய்வேன்” என்று கூறினான். சகுந்தலை தன் மகன் பரதனை நோக்கி, ” உன் தந்தையாகிய துஷ்யந்த மஹாராஜாவை நமஸ்கரித்து நில்” என்று கூறிவிட்டு, பிறகு துஷ்யந்தனிடம், ” இவன் நமது மகன் பரதன். நீங்கள் சொன்னபடி இளவரசுப் பட்டத்துக்கு இவன் உரியவனாகிறான். மகரிஷி கண்வருடைய ஆச்ரமத்தில் என்னை காந்தர்வ விவாஹம் செய்து கொண்ட போது சொன்ன வார்த்தைகளை நினைவில் கொள்வீராக! என்றும் கூறினாள். துஷ்யந்தனோ, அப்படி எதுவும் நடந்ததாக நினைவில்லை என்று கூறினான். சகுந்தலைக்கும், தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சொல்லி விட்டான். சகுந்தலை அதிர்ச்சியினால் மயங்கி விழுகிற நிலையை அடைந்தாள். தூணின் மீது சாய்ந்தாள். பிறகு ஒருவாறாக த் தன்னைத்தேற்றிக் கொண்டு, அரசனைப் பார்த்து க்கோபமாகப்பேச ஆரம்பித்தாள். மனம் ஒரு நிலையில் இருக்கும் போது, அதை மறைத்து வேறு விதமாக ஒருவன் தன் மனதை வெளிப் படுத்தினால், அந்தத் திருடன் என்ன பாவம் தான் செய்ய மாட்டான்? என்னோடு தொடர்பு இல்லை என்று நீர் சொன்னது முழுப் பொய் என்பது உமக்கே தெரியும். ஒரு காரியத்தைச் செய்யும் போதோ, அல்லது ஒரு சிந்தனை வரும் போதோ, இதை அறிந்தவர் நீர் ஒருவர் தான் என்று நீர் நினைக்கிறீர். பாவம்! செய்கிறவர்கள் இப்படித் தான் தங்கள் செயலை யாரும் அறியவில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் சூரியன் , சந்திரன், காற்று, அக்னி, ஆகாயம், பூமி, தண்ணீர், தன்னுடைய மனம், பகல், இரவு பகலும் இரவும்- சந்திக்கும் வேளைகள்- ஆகியவை ஒவ்வொரு மனிதனும் ரகசியமாகச் செய்யும் காரியங்களையும் அறிந்தே தீருகின்றன. ஒவ்வொரு மனிதனுடைய செயலையும், கடவுள் பார்த்துக் கொண்டே இருக்கிறார் . நாம் செய்யும் காரியம் நம் மனசாட்சிக்குத் திருப்தி உள்ளதானால், அதில் பாவம் வந்து சேராது. தன் மனசாட்சிக்கு திருப்தி என்று ஒருவன் தன்னை ஏமாற்றிக் கொண்டு ஒரு செயலைச் செய்தால், அந்தப் பாவம் அவனை விடாது. இப்படிக் கூறிய சகுந்தலை மேலும் சொன்னாள், எவள் கணவனை உயிராக நினைக்கிறாளோ, அவளே மனைவி, எவள் கற்புடையவளோ அவளே மனைவி, தனிமையில் தோழியாகவும், தர்ம காரியங்கள் நடத்தும் போது , நல்லதை எடுத்துச் சொல்கிற தந்தையாகவும், கஷ்டப் படும் போது பரிவு காட்டும் தாயாகவும், வழி நடந்து செல்லும் போது உற்ற துணையாகவும் இருப்பவளே மனைவி, மனைவி உள்ளவனே சுற்றத்தார்உள்ளவன், மனைவி உள்ளவனுக்குச் செல்வம் உண்டு . இது மட்டுமல்ல , கணவன் தன் மனைவியின் கர்ப்பத்தில் தானே புகுந்து அவளிடம் அவனே குழந்தையாகப் பிறக்கிறான். ஆகையால், கணவன் தன் மனைவியைத் தாயைப்போலவும் பார்க்க வேண்டும். இதையெல்லாம் நீங்கள் மறந்து விட்டீர்கள். சகுந்தலை தொடர்ந்து சொன்னாள், பதிவிரதைகளைப் போல வேஷமிடும் பெண்கள், தன்னுடைய கணவன் அல்லாத வேறு ஒருவனின் கர்ப்பத்தைத் தாங்குவதால், தன் கணவனின் குலத்தை அழிக்கிறாள். அவளுக்குப் பிறந்த குழந்தையை அந்தக் கணவனின் குழந்தை என்று ஊர் நினைக்கிறது. ஆனால் அம்மாதிரி குழந்தைகள், தந்தையாக நினைக்கப் படும் கணவனுக்கு விரோதிகளே ஆவார்கள். அந்தக் குழந்தைகள் அந்தக் கணவனிடம் விரோதப் படுவார்கள். தந்தையும் ( கணவன்) அவர்களை வெறுப்பான்.ஆனால், தனக்குப் பிறந்த மகன் விஷயத்திலோ இவ்வாறு இல்லை. இந்த பரதன் உங்களுக்குப் பிறந்தவன்.குழந்தைப் பருவத்தில் உள்ள தன் மகனைக் கட்டித் தழுவிக் கொள்வது என்பது, ஒரு அழகிய பெண்ணைக் கட்டிக் கொள்வதைக் காட்டிலும் அதிகமகிழ்ச்சி தரக் கூடியது. மிருகங்களில் உயர்ந்தது. பசு பூஜிக்கத் தக்கவர்களில் உயர்ந்தவர் குரு. மனிதர்களில் சிறந்தவன் கற்றறிந்த பிராமணன் . கட்டித் தழுவுவதற்கு சிறந்தவன். தான் பெற்ற மகன் உம்முடைய மகன் பரதனை ஏற்று அவனை இளவரசனாக அறிவியுங்கள். இதைக்கேட்ட துஷ்யந்தன் சொன்னான், நீ கெட்ட நடத்தை உள்ளவனாக இருக்க வேண்டும். சாதாரணமாகவே உலகத்தில் பெண்கள் அனைவரும் கொடியவர்கள் காமத்தையே முக்கியமாகக் கொண்டவர்கள் பெண்கள். அயல் மனிதருக்கு உட்படுகிறவர்கள். பொய் சொல்லத் தயங்காதவர்கள். வெட்கமில்லாமல் நீ இங்கே பேசும் பேச்சுக்களை யாரும் நம்பப்போவதில்லை. செல்வம் வேண்டும் என்றால் அதைக் கொடுக்கிறேன். பெற்றுச் செல். சகுந்தலை கோபமுற்று ப் பதில் சொன்னாள், என்னை அவதூறாகப்பேசுவதில் உமக்குப் பெருமை இல்லை. பிறரைத் தூஷிப்பதில் இன்புறுகிறவன் அயோக்கியன்.யோக்கியனாக இருப்பவன் பிறர் தூஷிக்கப் படுவது கண்டாலே வருத்தப் படுவான். நான் பேசும் சத்தியமான வார்த்தைகளை நீங்கள் ஒதுக்கித் தள்ளுவது நல்லதல்ல. சத்தியத்தை விட சிறந்தது எதுவும் கிடையாது. நூறு கிணறுகளைக் காட்டிலும், ஒரு குளம் உயர்ந்தது. நூறு குளங்களைக் காட்டிலும், ஒரு யாகம் உயர்ந்தது. நூறு யாகங்களைக் காட்டிலும் ஒரு மகன் உயர்ந்தவன். நூறு மகன்களைக் காட்டிலும் சத்தியம் உயர்ந்தது. அது மட்டுமல்ல. ஆயிரம் அஸ்வமேத யாகங்களைக் காட்டிலும் சத்தியமே உயர்ந்தது. வேதங்கள் எல்லாவற்றையும் ஓதினாலும் சரி, எல்லாப் புண்ணியதீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்து வந்தாலும் சரி, அவையெல்லாம் சத்தியத்தின் ஒரு பங்குக்கு ஈடாகாது. சத்தியத்திற்குச் சமமான புண்ணியம் வேறு எதுவும் இல்லை. அசத்தியத்திற்கு ச் சமமான கொடிய பாவமும் வேறு ஒன்றும் இல்லை. வாக்குறுதி என்பது தான் சத்தியத்துக்கு ஈடாக முக்கியமானது. கொடுத்த வாக்கை மறப்பது கொடிய பாவம். இப்படிப்பேசிய சகுந்தலை திரும்பிச் செல்வதற்காகப் புறப் பட்டாள். அவளுக்கு ஏற்பட்ட நியாயமான கோபத்தினால் உண்டான உஷ்ணத்தின் காரணமாக, அவள் தலைக்கு மேல் அக்னி ஜ்வாலை தெரிந்தது. அவளுக்குச் சாட்சியங்கள் இல்லை. தேவதைகள்எனக்குச் சாட்சிகள். ஆனால் அவர்களோ கண்ணுக்குப் புலப் படாத வர்களாக இருக்கிறார்கள். நான் போகிறேன்” என்று கூறிப் புறப் பட்டாள் சகுந்தலை. அப்போது அசரீரியின் வாக்கு ஒலித்தது. சகுந்தலை சொல்வதெல்லாம் உண்மை. இந்தச் சிறுவன் உன்னுடையமகன். சகுந்தலையை நிராகரிக்காதே! அவள் பேசுவது சத்தியம். அவளையும் ஏற்றுக் கொண்டு, உன்னுடைய மகனை இளவரசனாக்குவாயாக! அவனுக்கு பரதன்” என்று பெயர் வை! இவனால் உன்னுடைய குலத்திற்கே பரத குலம் என்று பெயர் வரும். இவனுக்கு முந்தியவர்களும், பிந்தியவர்களும் பாரதர்களே ஆவார்கள். இவ்வாறு அசரீரி ஒலித்த பிறகு, தேவர்கள் பூமாரி பொழிந்தனர். துஷ்யந்தன், சபையில்உள்ளோர்களைப் பார்த்து, அசரீரி சொன்னதை எல்லோரும் கேட்டீர்கள். தேவர்கள் பூமாரி பொழிந்ததைப் பார்த்தீர்கள். சகுந்தலையின் சொல்லை மட்டும் கேட்டு, பரதனையும் என் மகன் என்று நான் ஏற்றுக் கொண்டால், பிற்காலத்தில் மக்களுக்கு இவ்விஷயத்தில் சந்தேகம் வரலாம். அதனால் தான் நான் இப்படி நடந்து கொண்டேன். இனி யாருக்கும் சந்தேகம் வருவதற்கு நியாயம் இல்லை. சபையின் முன்னிலையில் இவளை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று அறிவித்தான் துஷ்யந்தன். பிறகு சகுந்தலையிடமும் அவன் விளக்கினான். ” நான் உன்னிடம் பேசிய வார்த்தைகள் மனதைப் புண்படுத்தக் கூடியவை. ஆனால், நான் உன்னை ஏற்பதும், பரதனை ஏற்பதும் நியாயமான காரியங்களாக உலகிற்குத் தெரிய வேண்டும். அதற்காகத்தான் நான் அவ்வாறு நடந்து கொண்டேன். ஆகையால் நான்பேசிய கடுமையான சொற்களை நீ பொறுத்துக் கொள், நான் பிழையே செய்திருந்தாலும் கூட, கணவன் செய்த பிழையைப் பொறுத்து பதிவிரதையின் தர்மமாகும் என்பதால் பொறுத்துக் கொள்வாயாக” என்று கூறினான். சகுந்தலை பட்டமகிஷியானாள். பரதன் இளவரசனானான். (( இங்கு துஷ்யந்தன் நடந்து கொண்டதற்கு, ஒரு முன்னுதாரணம் இருப்பதாகவே எனக்குத்தோன்றுகிறது. ராவணனிடமிருந்து சீதையை ராமன் மீட்ட பிறகு, அவளை ஏற்க அவர் மறுக்கும் நிகழ்ச்சி, வால்மீகி ராமாயணத்தில் வருகிறது. இங்கே துஷ்யந்தன் பேசியதை விட கடுமையான சொற்களை, அங்கே சீதையைப் பார்த்து ராமர் பேசுகிறார். பிறகு சீதை அக்னிப் பிரவேசம் செய்து, அக்னியினாலேயே பரிசுத்தமானவள் என்று அறிவிக்கப் பட்டு வெளி வருகிறாள். தேவர்கள் அவளை தூயவள்” என்று போற்றுகிறார்கள். சீதை மீதுள்ள ஆசையினால் ராமன் அவளை மீண்டும் ஏற்றுக் கொண்டு விட்டான் என்று நாளை உலகம் சொல்லக் கூடாது. சீதையின் தூய்மையை உலகம் அறிய வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்தேன்” என்று ராமர் விளக்குகிறார். இங்கே துஷ்யந்தனுத் இப்படித் தான் நடந்து கொண்டிருக்கிறான். பட்டமகிஷி மீது,மக்களுக்கு எந்த வித சந்தேகமும் வர இடமிருக்கக் கூடாது என்பதில் புகழ் வாய்ந்த மன்னர்களுக்கு, அப்பொழுது அவ்வளவு அக்கறை இருந்தது என்று தான் இதைக் கொள்ள வேண்டும்) பிறகு சில காலம் கழித்து பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து விட்டு, ராஜரிஷியாக வனத்தில் தவம் செய்தான் துஷ்யந்தன். பரதனின் காலத்தில் அவனுடைய வம்சத்திற்கே மிகப் பெரிய கீர்த்தி உண்டாயிற்று. பல ராஜ்யங்களை வென்று, பெரும் நிலப் பரப்பை நீதி தவறாமல் ஆண்டு, ” சார்வ பௌமன்”( சகல பூமியையும் ஆள்பவன்) என்று புகழ் பெற்றான் பரதன். பல பிள்ளைகள் பிறந்தும் அவர்கள் ஆட்சி செய்ய அருகதை அற்றவர்கள் என்று பரதன் எண்ணினான். அதன் பிறகு பெரும் யாகத்தைச் செய்து, புமன்யு என்ற புத்திரனைப் பெற்றான். அவனுக்கே பட்டாபிஷேகமும் செய்வித்தான். பரதனுக்குப் பின் அந்த வம்சத்திற்கே பரத வம்சம் என்று பெயர் உண்டாயிற்று. அவர்கள் ஆளுகின்ற ராஜ்யமும் பாரதம் என்று ஆயிற்று.

No comments:

Post a Comment