jaga flash news

Thursday 26 August 2021

அப்படி இந்த 'நாலு' க்கு என்னதாங்க ஸ்பெஷல்?????

அப்படி இந்த 'நாலு' க்கு  என்னதாங்க ஸ்பெஷல்?????

1. 'நாலு' பேரு 'நாலு' விதமா பேசுவாங்க.

2. 'நாலு' பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல. 

3. 'நாலு' காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல??

4. 'நாலு' ஊரு சுற்றினாதான் உலகம் புரியும் 

5. அவரு 'நாலு'ம் தெரிஞ்சவரு,  'நாலு'ம் புரிஞ்சவரு. 

6. 'நாலு' வார்த்த நறுக்குன்னு நல்லா கேக்கணும்.

ஏன் இந்த 'நாலு' மட்டும் இவ்ளோ ஸ்பெஷல்...

சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில்,பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு,நாற்பது மற்றும் எட்டுத்தொகையில் நானூறு,பிரபந்தத்தில் நாலாயிரம்  என  நான்கு வரும்.
நாலடியார், நான்மணிக்கடிகை,இன்னா நாற்பது,இனியவை நாற்பது
அக நானூறு,புற நானூறு,நாலாயிர திவ்ய பிரபந்தம் ...

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்"
ஔவையின் நால்வழி நீதி நூலில் கடவுள் வாழ்த்து பாடல்.

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி...இதில் நாலு என்பது.. நாலடியார்..

"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
"வேதம் நான்கினும்" மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே"

நான்மறை...என்பது வேதங்கள் நான்கு.

சைவ நெறியைப் பரப்பிய நாயன்மார்களில் முதன்மையானவர்கள் நான்கு பேர்.
அப்பர்,சம்பந்தர்,சுந்தரர்,மாணிக்க வாசகர்.இவர்களை நால்வர் என அழைக்கிறோம்.

வேதங்களை நான்காகப் பகுத்த வேத வியாசர் ,அவற்றை  நாலு ரிஷிக்களிடம்  பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார்.அவர்கள்
ருக் – பைலர், யஜூர் — ஜைமினி, சாம — வைசம்பாயன, — அதர்வண — சுமந்து.

தசரதனுக்கு நான்கு பிள்ளைகள்.

நான்கு புருஷார்த்தங்கள்..அவை
தர்ம, அர்த்த, காம, மோட்சம்.

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை
கடக்க வேண்டிய நிலைகளும் நான்கு.
பிரம்மசர்யம் , கிருஹஸ்தாச்ரமம்  வானப்ரஸ்தம், சந்யாசம் 

பிரம்மாவின் மானஸ புத்திரர்கள் நான்கு பேர்.சநகர், சநாதனர், சநந்தனர், சனத் குமாரர்.

நான்கு வர்ணங்கள்..பிராமண, ஷத்ரிய, வைஸ்ய, சூத்ர

பிரம்மாவுக்கு நான்கு தலைகள்.சதுர்முகன் என்ற பெயர் பிரம்மாவுக்கு.

ஆதிசங்கரர் பாரத நாட்டின் நான்கு மூலைகளிலும் நான்கு மடங்கள் நிறுவி,நான்கு சீடர்களை நியமித்தார்.

அக்னிக்கு கம்பீரா,யமலா,மஹதி,பஞ்சமி என நான்கு வடிவங்கள்.

திசைகள் நான்கு

ஹரித்வார், அலஹாபாத் (பிரயாகை, த்ரிவேணி சங்கமம்), நாசிக், உஜ்ஜையினி என நான்கு இடங்களில் கும்ப மேளா நடைபெறும்.

ரத, கஜ, துரக, பதாதி (தேர், யானை, குதிரை, காலாட் படைகள்..என நால் வகைப் படைகள்.

அஹம் பிரம்மாஸ்மி, தத்வம் அஸி, பிரக்ஞானம் பிரம்ம, அயமாத்ம ப்ரம்ம..உபநிஷத்தில் கூறப்படும் நாலு மஹா வாக்யங்கள்.

வெல்ல முடியாத நாலு..
நித்ரா..ஸ்வப்ன..ஸ்த்ரீ..காம
அக்னி..இந்தன..கரா..பாண

கனவு காண்பது தூக்கத்தை நிறைவு செய்யாது
பெண்களுக்கு ஆசை நிறைவு செய்யாது
தீயை விறகு நிறைவு செய்யாது
குடிகாரனை குடி நிறைவு செய்யாது

ந ஸ்வப்னேன ஜயேத் நித்ராம் ந காமேன ஜயேத்ஸ்திரியஹ
ந இந்தனேன ஜயேதக்னீம் ந பானேன கராம் ஜயேத்..விதுர நீதி

இதையே ஹிதோபதேசம்
அக்னியை விறகு அணைக்காது
சமுத்திரத்தை ஆறுகள் நிறைக்காது
யமனை எல்லா உயிர்களும் சேர்ந்தாலும் வெல்ல முடியாது


யுகங்களும்..கிரதம், திரேதம், துவாபரம், கலி என நான்கு

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு..பெண்டிரின் நால்வகை குணங்கள்

சிவராத்ரியில் நாலு கால பூஜை நடக்கும்

நான்கு வேதங்களும் கற்றவர்களை சதுர்வேதி என்பார்கள்.

நான்கு என்ற எண் சிறப்புக்கள் கொண்டிருந்தாலும்.. , 

"நாலு பேரை போல வாழ்வில் நல்லா இருக்கனும்.."

" செத்தாலும், 
நல்லதுக்கும்,
கெட்டதுக்கும் நான்கு பேர் வேண்டும்" 

என்ற கருத்தாக்கத்தையும் கொண்டுள்ளது.

நாலு பத்தி எழுதினத ஒரு நாலு பேராவது படிச்சா சரி...படிப்பீங்களா?😂

No comments:

Post a Comment