jaga flash news

Wednesday, 15 November 2023

சிறு கதை:ஆக்ஸிடென்ட்...!



ஆக்ஸிடென்ட்...!
ஆக்ஸிடென்ட்...!                                                  

‘ஹலோ... நாங்க ஜி.ஹெச்.லேர்ந்து பேசறோம்ங்க... ரோடுல அடிபட்ட ஒருத்தரை இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்காங்க... அவர்கிட்ட இந்த போன் இருந்துச்சு... கடைசியா இந்த  நம்பர்லதான் அவர் பேசியிருக்கார். அதான் உங்களைக் கூப்பிட்டோம்... நீங்க யாரு... இவர் பேர் என்ன...‘ 

ஆடிப்போனாள் விஜயா. மூன்று மாதங்களுக்கு முன்னால்தான் ரிடையர் ஆனார் ராமன், அவளது மாமனார்.  கடைவீதிக்குப் போய்விட்டு வருகிறேன் என்று போயிருந்தார். இப்போது திடீரென்று இப்படி.

எதிர்முனையில், ‘ஹலோ ஹலோ’ என்று கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்கள்.  சட்டென சுயநினைவுக்கு வந்தவள், ‘ஸாரிங்க... பதட்டத்துல பேச முடியலை... அவர் பேரு ராமன்... எந்த ஆஸ்பிடல்னு சொன்னீங்க...’ என்றாள்.

‘ஜி ஹெச் மா... கலெக்டர் ஆபீஸ் பக்கத்துலே இருக்கில்லே... அதான்.. சீக்கிரம் வந்துடுங்கம்மா... ’ என்றுவிட்டு போனை வைத்துவிட்டார் பேசியவர்.

‘ச்ச்சே... இவரை யார் வெளியே போய் அலைலயச் சொன்னது... சாப்பிட்டு அக்கடா படுத்துக் கிடக்க வேண்டாமா... இந்த லட்சணத்துல மத்தியானத்துக்கு சாம்பார் வைக்க காய் ஏதும் வேணுமாம்மா போன் வேற... நானும் வெண்டைக்காய் இருந்தா கால்கிலோ வாங்கிட்டு வாங்கா மாம்மானு சொன்னேன்... இப்போ இப்படி... எங்கே அடிபட்டாரோ... காரோ, பஸ்ஸோ, ஆட்டோவோ... கடவுளே...’  புலம்பியபடி அவசர அவசரமாய் ரவிக்கு போனைப் போட்டு விஷயத்தைச் சொன்னாள்.

‘விஜி... நான் ஒரு கான்பாரன்ஸ்ல இருக்கேன். ஆன்லைன்ல மீட்டிங் போயிட்டிருக்கு. இடையில கட் பண்ணிட்டு வரமுடியாது. கொஞ்ச நேரம் ஆகும். அப்படியே கிளம்பினாலும்  அங்கே போய்ச் சேர டைம் ஆகும். அதுக்குள்ளே நீ ஒரு ஆட்டோ பிடிச்சி அங்கே போயிடு. முதலுதவி சிகிச்சைக் கொடுத்துட்டாங்கன்னா அப்புறமா நாம பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு  மாத்திக்கலாம். நீ உடனே கிளம்பு. நான் வந்து சேர்ந்துடறேன்...’ என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணிவிட்டான் ரவி.

‘ச்சே... இப்போ, தேவை இல்லாத செலவு. இவர் பேசாம ரிடையர் ஆனோமா, ஈஸி சேர்ல உட்கார்ந்து கிடந்தோமானு இல்லாம... கடவுளே...’ புலம்பியவாறே போட்டது போட்டபடி கிடக்க, புடவையை மாற்றிக்கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்பிவிட்டாள். முன்னெச்சரிக்கையாக கையில் இருந்த பணத்தை எடுத்துக் கைப்பைக்குள் வைத்துக்கொண்டிருந்தாள்.

ஆட்டோ பிடித்து ஆஸ்பத்திரிக்கு போய்ச் சேர இருபது நிமிடங்கள் ஆகிவிட்டன. வழியில் டிராஃபிக் ஜாம் வேறு. பதற்றத்துடன் முன்னால் இருந்த கவுண்டரில் விசாரித்தாள்.

‘பேர் என்ன சொன்னீங்க...’

‘ராமன்...‘

ரிஜிஸ்டரைப் பார்த்துவிட்டு, ’அப்படி யாரும் இல்லையே...  என்றார்கள்.

‘எனக்கு போன் வந்துச்சுங்க... ஒரு ஜென்ட்ஸ்தான் பேசினாங்க... பேர் கேட்கலை... ஆக்ஸிடென்ட்னு சொன்னங்க’ என்றாள்.

‘ஓ... அப்போ எமெர்ஜென்சி வார்டுல போயி பாருங்க... ’ என்று பதில் வந்தது.

எமெர்ஜென்சி வார்டை நோக்கி ஓட, எதிர்பட்ட நர்ஸிடம் கேட்டாள் விஜயா.

‘ஆமாம்மா...  ஆக்ஸிடென்ட் ஆனவர்தானே. டிரெஸ்சிங் பண்ணிட்டிருக்காங்க. இப்போ நீங்க உள்ளே போகக்கூடாது. தோ டாக்டர் இப்போ வந்துடுவாரு. அவர்கிட்டே பேசிக்கங்க...’  

அந்த நர்ஸ் சொல்லிவிட்டு நகர, அதேசமயம் போனில் பேசிக்கொண்டே வெளியே வந்தார் ஒருவர். பார்க்க டாக்டர் மாதிரிதான் தெரிந்தது.

‘அப்படியா... எந்த ஸ்டேஷன்... ஓ... ஆமா... ஆட்டோல அடிப்பட்டுட்டார்னு ஒருத்தரைக் கொண்டு வந்து அட்மிட் பண்ணினாங்க. இப்போத்தான் டிரெஸ்சிங் பண்ணி இன்ஜெக்ஷன் கொடுத்துட்டு வெளியே வர்றேன். ஆமா... நான் டாக்டர் ராஜமாணிக்கம்... சரி ஸார்... சொல்லிடறேன்...’  அவர் பேசிக்கொண்டே போய்விட்டார்.

இவள் யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அடுத்த நிமிடம் அவளது மொபைல் அலறியது.

‘ஹலோ...யாருங்க...’

‘அம்மா நாங்க ஜி.ஹெச்.லேர்ந்து பேசறோம்...’

குறுக்கிட்டு, ‘நான் இங்கதாங்க இருக்கேன்... நீங்க யார் பேசறீங்க...’

‘அம்மா நான் டாக்டர்மா. என் பேரு ராஜமாணிக்கம்...’

சட்டென நினைவு வந்தது. பேசிக்கொண்டே போனாரே அதே டாக்டர்.

‘என்னங்க ஆச்சு அவருக்கு...’  என்று இவள் குறுக்கே கேட்டாள். அப்படியே எழுந்து அவரது அறை எங்கே இருக்கும் என்று தேடிக்கொண்டே போனைக் காதில் வைத்தபடியே நடந்தாள்.

‘என்னைக் கொஞ்சம் பேச விடுங்கம்மா.. இப்போதான் பி டூ ஸ்டேஷன்லேர்ந்து போன் வந்தது. இந்த போன் ராமன்ங்கறவரோடதாம். அவர்  ரோடுல போயிட்டிருக்கும் போது யாரோ அவரோட மொபைலை பிடுங்கிகிட்டு ஒடியிருக்காங்க. அப்படி ஓடினவர் ஆட்டோல அடிபட்டு விழுந்திருக்கார். அவரை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்காங்க... மொபைலை பறிகொடுத்தவர் போலீஸ்ல புகார் கொடுத்திருக்கார். அவங்க மொபைலை டிராக் பண்ணறதுக்காக போன் பண்ணியிருக்காங்க... நர்ஸ் எடுத்து என்கிட்டே கொடுத்துட்டாங்க... கடைசி நம்பர் உங்க நம்பரா பதிவாகியிருக்கவும் உங்களுக்கு தகவல் சொல்லலாம்னு உங்களைக் கூப்பிட்டேன்...’ 

அதற்குள் யாரோ ஒருவர் அவளது தோளைத் தொட பதறிப்போய் திரும்பினால், ரவி பரபரப்புடன் நின்றான். பின்னாலேயே ஒரு போலீஸ்காரரும் ராமனும் வந்து சேர மாமனாரைப் பார்த்த விஜயாவுக்கு அழுகை வெடித்தது.




No comments:

Post a Comment