jaga flash news

Saturday, 14 May 2016

'பட்டினத்தார்', தாயாருக்குத் தகனக்கிரியை செய்யும்போது பாடியவை:



'பட்டினத்தார்', தாயாருக்குத் தகனக்கிரியை செய்யும்போது பாடியவை:

1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?
2. முந்தித்தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும்
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் – தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்?
3. வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து – முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டுவேன்?
4. நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே – அந்தி பகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ மெய்யிலே தீமூட்டுவேன்?
5. அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் – ''உருகியுள்ள
தேனே! அமிர்தமே! செல்வத் திரவியப்பூ
மானே...!'' என அழைத்த வாய்க்கு?
6. அள்ளி இடுவது அரிசியோ? தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ? கூசாமல் - மெள்ள
முகம்மேல் முகம்வைத்து முத்தாடி “என்றன்
மகனே...!'' என அழைத்த வாய்க்கு?
7. முன்னை இட்ட தீ முப்புரத்திலே;
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்;
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே;
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே.... frown emoticon
8. வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ – மாசுக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை...
9. வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ – சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து, வரம் கிடந்துஎன்
தன்னையே ஈன்றெடுத்த தாய் ?
10. வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் – பால்தெளிக்க எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல் எல்லாம் 'சிவமயமே' யாம்!
(பட்டினத்தார் துறவு மேற்கொண்டு ஊர் ஊராய் சென்று கொண்டிருக்க, காவிரிப்பூம்பட்டிணத்தில் இருந்த அவரது தாய் இறந்து விடுகிறார்.
தன் தாய் இறந்த நிகழ்வை தானாகவே உணர்ந்து தன் சொந்த ஊர் வருகின்றார் பட்டினத்தார்.
இறந்த தாயின் உடலை தகனம் செய்வதற்காக ஊரார் ஏற்கனவே இடுகாட்டில் கூடியிருக்கின்றனர்.
'பட்டினத்தார் வருவாரா? மாட்டாரா?' என எல்லாரும் கேட்டுக்கொண்டிருக்க, அங்கே வந்து சேர்கின்றார் பட்டினத்தார்.
தாயின் உடலைத் தகனம் செய்யுமாறு அவரின் கைகளில் கொள்ளியைக் கொடுக்கின்றனர். அந்த நேரத்தில் அவர் குரலெழுப்பி பாடிய பாடலே இது.)

2 comments:

  1. அய்யா..வெ. சாமி அவர்கள், பட்டினத்தார், தாயாருக்குத் தகனகிரியை செய்யும்போது, பாடிய பாடல்களை மட்டும் கொடுத்துள்ளீர்கள். அருமை. இன்னும் அவரைப் பற்றி, நாவில் தேன் ஊற, விளக்கம் கூறியிருக்கலாமோ? என என்னை நினைக்க வைத்தது.

    ReplyDelete
  2. பட்டினத்தார், பதினெண் சித்தர்களில் ஒருவர். காவிரிப்பூம்பட்டினம் வணிகர்கள் நிறைந்த நகரம். கி.பி.பதினோராம் நூற்றாண்டில், சிவனேசர்,ஞானகலை தம்பதியினருக்கு, மகனாக, பிறந்தார். சிவனேசர், திருவெண்காட்டு ஈசனிடம், மிகுந்த பக்தி உள்ளவராகையால், அந்த ஈசனின் பெயரான, சுவேதனப் பெருமாள் என்ற பெயரையே, தன் பிள்ளைக்கு வைத்தார்.இவரை திருவெண்காடர் என்றும் அழைப்பர். சிவனேசர், ஆடம்பரமாளிகையில் வாழ்ந்தவராகை
    யால், அவ்வாறே திருவெண்காடரும், வசதியாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து பெரியவரானார்.

    திருவெண்காடருக்கு *சிவகலை* என்னும் பெண்ணை மணமுடித்தனர்.
    அவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லை. ஆதலால், திருவிடைமருதூர் சென்று, ஈசனை வணங்கி, விரதம் இருந்து, ஈசன் அருளால், சிவசருமன், சுசீலா தம்பதியின் பிள்ளையை தத்தெடுத்து, *மருதவாணர்*
    என்று பெயரிட்டு வளர்த்தனர். மருதவாணராகத் தம்மிடம் வந்து வளர்வது *இறைவனே* என்ற உண்மை பட்டினத்தாருக்கு தெரியவில்லை. பையன் வளர்ந்தான். வணிகம் செய்ய வெளிநாடுகளுக்கு அனுப்பினார். அதுபோல், வணிகம் முடிந்து திரும்பி வந்த மருதவாணன், கப்பல் நிறைய பொருட்களைக் கொண்டுவருவதற்குப் பதிலாக, ஒரு *ஓலைத் துணுக்கும், காதற்ற ஊசி ஒன்றும் தான்*.

    பட்டினத்தாருக்குத் தூக்கிவாரிப்போட்டது.
    அந்த ஓலையைப் பிரித்து படிக்கையில்,
    *காதற்ற ஊசியும் வாராது காண்
    கடைவழிக்கே! என அதில் எழுதப்பட்டிருந்ததைப் படித்தார். இந்த ஒரு வரியைப் படித்தவுடன், உடனடியாக கோவணத்துணியுடன், வீதியில் இறங்கிவிட்டார். அறிவுள்ளவனுக்கு, ஒருவரி போதும். பட்டினத்தாருக்கு மனைவி இருந்தாள், அழகான பிள்ளை இருந்தான், கடன் தரும் அளவு செல்வம் இருந்தது. அத்தனையையும், அந்த ஒரு வரி மாற்றிப் போட்டுவிட்டது. என்னோடு வராத செல்வத்தை, நான் ஏன் வாழ்நாள் எல்லாம் தேடிக்கொண்டிருக்கிறேன். இவ்வளவையும் சேர்த்து வைத்து என்ன செய்ய? கொண்டுபோகவும் முடியாது, அனுபவிக்கவும் முடியாது, பின் எதற்கு என நினைத்தார், வீதியில் இறங்கிவிட்டார். அப்போதே அவர் துறவு மேற்கொண்டார். ஒருவரி போதும் ஞானம் பெற.

    தன் அன்னையிடம் அவர், இறக்கும் தருவாயில், எங்கிருந்தாலும், தான் வந்து எரியூட்டுவதாய் கூறியதன்படி, அவர் அன்னையார் இறந்துவிடப் பட்டினத்தார் சரியான நேரத்தில் வந்து, அங்கு, ஏற்கனவே, அடுக்கியிருந்த, காய்ந்த கட்டைகளை அகற்றிவிட்டு, தன் கையால், பச்சை வாழைமட்டைகளையும், வாழை இலைகளையும் அடுக்கி, மேற்கண்ட பாடலை (அய்யா ! வெ. சாமி அவர்கள் எடுத்துரைத்ததை) பாடி, அன்னையின் மரணத்திற்கு தன் துயரத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார்.

    ReplyDelete