jaga flash news

Thursday, 24 March 2016

கலசத்தை பூஜிப்பது ஏன் ................

கலசத்தை பூஜிப்பது ஏன் ................

கலசம் என்பது என்ன? 

மண் அல்லது செம்பு, பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நீர் நிறைந்த ஒரு பாத்திரம் - செம்பு - சிறுபானைதான் கலசம் எனப்படுகிறது. இந்தக் கலசத்தில் மாவிலைகள் செருகப்பட்டு, அவற்றின் நடுவில் ஒரு தேங்காய் வைக்கப்படும். வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல்கள் பானையின் கழுத்திலிருந்து முழுமையாக டயமண்ட் வடிவத்தை உரு வாக்கும் வகையில் நுணுக்கமாகக் கட்டப்படுகிறது. பானையின் மேல் அழகான வடிவங்கள் வரையப்படுவதும் உண்டு. இந்தப் பானை கலசம் என்றழைக்கப்படுகிறது. இது நீரினாலோ அல்லது அரிசியினாலோ நிரப்பப்படும். இது பூர்ண கும்பம் என்றழைக்கப்படுகிறது.

இது போன்றே ஜடப்பொருளான நமது உடல் தெய்வீகமான சக்தியால் உயிர்பெறும் பொழுது அற்புதமான, போற்றத்தக்க செயல்களை செய்யக்கூடியதாக மாறுகிறது
மரபுப்படி நடத்தப் பெறும் கிருகப் பிரவேசம், திருமணம், தினசரி பூஜைகள் போன்ற சமயங்களில் இத்தகைய கலசம் வைக்கப்படுகிறது. மேலும், விழா நடத்தப்படும் இடத்தின் நுழைவாயிலில், வருவோரை வரவேற்கும் வகையில் இக்கலசத்தை வைக்கிறார்கள். பெரியோர்களையும் முக்கியப் பிரமுகர்களையும் பூரண கும்பம் கொடுத்து வரவேற்பது மரபு.


பூஜிப்பது ஏன்? 

உலகைப் படைக்கும் முன் பகவான் விஷ்ணு, பாற்கடலில் பாம்பணையின் மேல் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார். அவருடைய நாபிக் கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டது. அந்த மலரிலிருந்து படைப்புக் கடவுளான பிரம்மா தோன்றினார். பிரம்மாவே உலகத்தை சிருஷ்டித்தார். கலசத்தில் உள்ள நீரானது, எந்த நீரிலிருந்து படைப்பில் உள்ள அனைத்தும் தோன்றியதோ, அந்த நீரைக் குறிக்கிறது. அந்தப் புனித நீர்தான் அனைத்திற்கும் உயிர் அளிக்கும் சக்தி படைத்தது. இந்த நீர் எண்ணிலடங்கா உருவங்களையும் வடிவங்களையும் உயிர்த் துடிப்பும் உணர்வும் உள்ள பொருள்கள் மற்றும் ஜடப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் படைக்கும் சக்தியைத் தன்னுள் அடக்கியுள்ளது. 

மேலும், உலகில் உள்ள மங்களகரமான அனைத்தையும் படைக்கும் சக்தியையும் பெற்றது, இது. கலசத்தில் உள்ள இலைகளும் தேங்காயும் சிருஷ்டியைக் குறிக்கின்றன. கலசத்தைச் சுற்றியுள்ள நூல் படைப்பில் உள்ள அனைத்தையும் ஒன்றாகப் பிணைக்கும் அன்பைக் குறிக்கிறது. ஆகவேதான் கலசம் புனிதமாகக் கருதப்பட்டு பூஜிக்கப்படுகிறது. புனிதமான நதிகளின் நீர், அனைத்து வேதங்களின் சாரம் மற்றும் அனைத்து தேவதைகளின் ஆசி ஆகியவை கலசத்தில் உள்ள நீரில் வந்து சேரவேண்டுமென்று பிரார்த்திக்கப்படுகிறது. பின்னர், கலச நீர் அபிஷேகத்திற்கும் மற்ற சடங்குகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஆலய கும்பாபிஷேகத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலசத்தில் உள்ள புனித நீர் ஆலய கோபுரக் கலசங்களின் மேல் ஊற்றப்படுகிறது. அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அமுத கலசத்தை ஏந்தியவாறு இறைவன் தோன்றினார். இவ்வமுதம் அனைவருக்கும் இறவாவரத்தை அருளியது. எனவே, கலசமும் இறவாத் தன்மையைக் குறிக்கிறது. ஞானியர் என்போர் நிறை மனிதர்கள். இதற்குக் காரணம் அவர்கள் தங்களுடைய உண்மை சொரூபம், பூர்ணமான - எங்கும் நிறைந்த - பேருண்மையேயன்றி வேறில்லை என்பதை நன்கு உணர்ந்தவர்கள். 

அவர்கள் என்றும் குறைவற்ற மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்து விளங்குகின்றனர். உலகில் உள்ள மங்களகரமான அனைத்தையும் குறிப்பவர்களாக அவர்கள் விளங்குகின்றனர். அந்த நிறை மனிதர்களின் பெருமையைப் போற்றும் வகையில் பூர்ணகும்பத்துடன் அவர்கள் வரவேற்கப்பட்டனர். இது அவர்களிடத்து நமக்கு உள்ள பக்தி நிறைந்த மரியாதையை நாம் முழுமனதுடன் வெளிப்படுத்துவதன் அடையாளமாகும்.

1 comment:

  1. கலசத்திற்குரிய பெருமையை அழகாக
    கூறியுள்ளீர்கள்.

    ReplyDelete