jaga flash news

Wednesday, 16 March 2016

கலியுகம் எப்படி இருக்கும்?

கலியுகம் எப்படி இருக்கும்?
🌼ஒருமுறை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பாண்டவர்களில் பீமன், அர்ஜுனன்,நகுலன் சகாதேவன் ஆகிய நால்வரும் கலியுகம் எப்படி இருக்கும் என்று தங்கள் சந்தேகத்தை கேட்டனர். அதற்கு மாதவன், சொல்வதென்ன எப்படி இருக்கும் என்று காண்பிக்கிறேன் என்று கூறி நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தினார். அவற்றை கொண்டு வருமாறு நான்கு பாண்டவர்களிடமும் ஆணையிட்டார். கோவிந்தனின் ஆணைப்படியே நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.
🌼முதலில் பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியை கண்டான். அங்கு ஐந்து கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு அதை சுற்றி நான்கு கிணறுகள். சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணறில் மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.
🌼அர்ஜுனன், அம்பை எடுத்த இடத்தில் இன்னும் ஒரு குயிலின் அற்புதமான பாடலை கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பி பார்த்த அர்ஜுனன் ஒரு கோரமான காட்சியை பார்த்தான். அங்கு அந்த குயில் ஒரு வென்முயலை கொத்தி தின்றுகொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்து கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதை எண்ணி குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.
🌼நகுலன், கிருஷ்ணரின் அம்பை எடுத்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சியை கண்டான். பசு ஒன்று அழகிய கன்றுக்குட்டியை ஈன்றெடுத்தது. ஈன்ற கன்றை தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய் பசு வருடுவதை நிறுத்தவில்லை. சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அதற்குள் கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது. தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும் என்று குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.
🌼சகாதேவன்,கிருஷ்ணரின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதை கண்டு எடுத்துக்கொண்டு திரும்பினான். மலைமேல் இருந்து,பெரிய பாறை ஒன்று கீழே உருண்டது வந்தது. வழியில் இருக்கும் அணைத்து மரங்களையும்,தடைகளையும் இடித்து தள்ளி,வேகமாய் உருண்டு வந்தது. வேகமாக வந்த அந்த பாறை, ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது. ஆச்சரியத்தோடு அதை கண்ட சகாதேவன், தெளிவுபெற பகவானை நோக்கி புறப்பட்டான்,
🌼இவ்வாறு நான்கு பாண்டவர்களும், ஸ்ரீ கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர். அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும், மனதில் உள்ள குழப்பத்தையும், ஞான கடலிடம் கேட்டனர். கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்....
🌼பீமா, “கலியுகத்தில் ஏழைகள் செல்வந்தர்களிடையே வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள். ஆனால் ஏழைகளுக்கு கொடுத்து உதவ மாட்டார்கள். தங்களிடம் மேலும் மேலும் செல்வம் சேரவேண்டும் என்று நினைத்து பல தவறான வழியில் செல்வதை ஈட்டி சேமித்து வைப்பார்கள்.(நிரம்பி வழியும் கிணறுகளை போல). ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள்.”
🌼அர்ஜுனா, “கலியுகத்தில் இறை தொண்டு செய்யும் பல ஆசாரியர்கள்,இறை சேவகர்கள், என பலர் ஆழ்ந்த அறிவும், இனிமையான குரலும்,கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் பக்தர்களை இவர்கள் பொய், ஏமாற்று வேலை கொண்டு மிகவும் துன்புறுத்துவார்கள். இதனால் மக்கள் மேலும் துன்பம் அடைவார்கள் என்றார்.(குயிலினை போல).
🌼நகுலா, “கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது மிகுந்த பாசத்தோடு இருப்பார்கள். பிள்ளைகளின் மீது உள்ள பாசத்தால் அவர்கள் தவறு செய்தலும் அதை பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாவார்கள். இதனால் வாழ்வில் துன்பம் அடைய போவது தன் பிள்ளைகள்தான் என்பதை மறப்பார்கள். பிள்ளைகளும் ஊழ்வினையால் துன்பம் அனுபவிப்பார்கள். பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவர்கள்.(பசுவை போல).
🌼அருமை சகாதேவா, “கலியுகத்தில் மக்கள் தங்களின் நற்குணங்களையும்,நல்ல சுபாவங்களையும், உருண்டு வரும் பாறையை போல் வேகமாக இழப்பார்கள். யார் எடுத்து கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுத்தமாட்டர்கள். இறுதியில் இறைவன் ஒருவனே இருட்டில் ஒளிரும் சிறிய வெளிச்சமாக அவர்களை அறியாமை என்னும் இருளில் இருந்து காப்பாற்றுவார்.” (பாறையை தடுத்த செடியை போல).
🌼இவைகளே கலியுகத்தின் அம்சங்கள் என்று கூறி முடித்தார்

1 comment:

  1. மிகவும் அருமை. தற்போது உலக நடப்பு, இந்த கலியுலகம், தாங்கள் கூறியதுபோன்றே இருக்கிறது.

    ReplyDelete