jaga flash news

Monday, 12 June 2017

!!*சருகினாலும் உண்டு பயன்*!!

!!*சருகினாலும் உண்டு பயன்*!!
குருகுல வாசம் முடித்துப் புறப்பட்ட சீடர்கள் சிலர், தங்கள் குருநாதரை வணங்கி, ''குருதேவா! தங்களுக்குக் குருதட்சிணை தர விரும்புகிறோம். என்ன வேண்டுமோ கேளுங்கள்! எங்களால் இயலாதது எதுவும் இல்லை'' என்றனர் பெருமிதத்துடன்.
தன் சீடர்கள் மேலும் பக்குவம் பெற வேண்டும் என்று நினைத்த குரு, ''சீடர்களே! நமது குருகுலத்தை ஒட்டியுள்ள காட்டிலிருந்து எதற்கும் பயனற்ற பொருட்கள் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்!’’ என்றார்.
காட்டுக்குச் சென்ற சீடர்கள், அங்குள்ள காய்ந்த சருகுகளை, ‘பயனற்ற பொருள்’ என்று கருதினர். எனவே, தங்களது கூடையில் ஒரு மரத்தடியில் குவிந்திருந்த சருகுகளை அள்ளிப் போடத் தொடங்கினர்.
அப்போது அங்கு வந்த ஒருவன், ''இந்தச் சருகு கள் என்னால் சேகரிக்கப்பட்டவை. இதைச் சாம்பலாக்கி எனது நிலத்துக்கு உரமாகப் போடுவேன். அதனால் பயிர்கள் செழிப்பாக வளரும்!’’ என்றான். ‘சருகுகளுக்கு இப்படி ஒரு பயனா!’ என்று திகைத்த சீடர்கள், அதை அப்படியே போட்டுவிட்டு மேலும் காட்டுக்குள் சென்றனர்.
ஓரிடத்தில் மூன்று பெண் கள் உலர்ந்த சருகுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் சீடர்கள், ''எதற்காக இவற்றைப் பொறுக் குகிறீர்கள்?’’ என்று கேட்டனர். முதலாமவள், ‘‘இவற்றை எரித்து, நான் உணவு சமைப்பேன்!’’ என்றாள்.
இரண்டாமவள், ‘‘சருகு களை இணைத்துப் பெரிய இலையாகத் தைத்து விற்பேன்!’’ என்றாள். மூன்றாமவள், ''குறிப்பிட்ட ஒரு மரத்தின் மருத்துவ குணம் நிறைந்த சருகுகளைச் சேகரித்து நான் மருந்து தயாரிக்கிறேன்!’’ என்றாள்.
இதையெல்லாம் கேட்ட சீடர்கள் வியந்தனர். பின், மேலும் காட்டுக்குள் முன்னேறினர். அங்கு சருகுகள் கிடப்பதைப் பார்த்து அவற்றை ஆர்வ முடன் சேகரிக்க முயன்றனர்.
அப்போது, விர்ரெனப் பறந்து வந்த பறவை ஒன்று, ஒரே ஒரு சருகை எடுத்துக் கொண்டு விரைந்தது.
‘ஓ! இந்தச் சருகுகள் கூடுகட்டுவதற்குப் பயன் படுகிறது!’ என்று நினைத்த சீடர்கள், ‘பயனற்ற சருகே கிடைக்காது!’ என்று ஏமாற்றத்துடன் வந்த வழியே திரும்பினர்.
வழியில் ஒரு குளத்தில் சருகு ஒன்று மிதந்து கொண்டிருந்தது. ‘இதையாவது எடுத்துச் சென்று குருவிடம் கொடுப்போம்’ என்ற எண்ணத்துடன் அதை எடுப்பதற்காகக் குனிந்தான் சீடன் ஒருவன்.
அந்தச் சருகில் இரண்டு எறும்புகள் ஓடிக் கொண்டிருந்தன. ‘எறும்புகள் நீரில் மூழ்கிச் சாகாமல் இந்தச் சருகு பாதுகாக்கிறது!’ என்று கருதி அதையும் எடுக்காமல், குரு குலத்துக்குத் திரும்பினர்.
சீடர்களின் முகத்தைக் கவனித்த குரு தனக்குள் புன்னகைத்துக் கொண்டார்.
‘‘வாருங்கள் என் அபி மான சீடர்களே... பயனற்ற பொருளைக் கொண்டு வந்துவிட்டீர்களா?’’ என்றார் ஆர்வமாக.
‘‘குருவே, பயனற்ற பொருள் என்று உலர்ந்த சருகு களைச் சேகரிக்க எண்ணினோம். ஆனால், அவை பல வழிகளில், பலருக்கும் பயன்படுகின்றன.
பயனற்ற ஒரு சருகைக்கூட இந்தக் காட்டில் எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை!’’ என்றார்கள் வருத்தமாக.
அவர்களிடம் குரு, ''உலர்ந்த சருகே பல வழிகளில் இவ்வாறு பயன்படுமானால், பகுத்தறிவுள்ள மனிதன் உல கத்துக்கு எவ்வளவு பயன் படவேண்டும்?! பிறருக்கு இன்பம் பயக்கும் எவ்வளவு செயல்களைச் செய்ய வேண்டும்?! யோசித்துப் பாருங்கள்’’ என்றார்.
சீடர்கள் அவர் சொன்னதன் பொருளை உணர்ந்தனர்.
எனவே, ‘‘குருவே, உலர்ந்த சருகினால் நல்ல பாடம் கற்றுக் கொண்டோம். இனி நாங்கள் பிறருக் காகவே வாழ்வோம். அதுதான் உங்களுக்குத் தரும் உண்மையான குருதட்சிணை!’’ என்று கூறினர்.
குருவும் மகிழ்வுடன் அவர்களை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்!

1 comment: