jaga flash news

Wednesday, 15 July 2020

வெள்ளை அணுக்கள்

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இவ்வளவு எளிய வழிமுறைகள் இருக்கு…


உடல் எப்போதும் வலிமையோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டியது அவசியம். இதற்கு உணவு மட்டும் போதாது. நம் பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி என அனைத்தும் ஒன்றிணையும் போதுதான் நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றல் அதிகரிக்கும்.

நம் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் (WBC) இருக்கும். இதுதான் நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு மைக்ரோ லிட்டரில் 3500 - 16,000 அளவிலும், பெரியவர்களுக்கு 3500 - 11,000 என்ற அளவிலும் இருக்கும்.

வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்தால், கிருமிகளுக்கு எதிராகப் போராடும் சக்தியை நம் உடல் இழந்துவிடும். ஒருவருக்கு சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகள் திரும்பத் திரும்ப வருகிறது என்றால், அவர் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர் என அர்த்தம்.

நோய் எதிர்ப்பு சக்தி என்பது, நம் உடலின் இயல்பான ஒன்று. உணவு, வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி எனப் பல வழிகளில் நாம் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்று, ஆரோக்கியமாக வாழலாம்.

பிறந்த குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் முதிர்ச்சி அடைந்திருக்காது. எனவே, தாய்ப்பால் வழியாகக் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. அதனால்தான், `குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும். அதன் பிறகு, தாய்ப்பால் புகட்டுவதுடன், வேறு உணவுகளையும் அளிக்கலாம். கட்டாயம் ஓராண்டு வரை தாய்ப்பால் கொடுக்கணும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான காரணங்கள்

பலவீனமான உடல் அமைப்பு

மன அழுத்தம்

ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடிய சூழல்

தூக்கமின்மை

சர்க்கரை மற்றும் புற்றுநோய் பாதிப்பு

உடல் உறுப்புகள் மாற்று அறுவைசிகிச்சை செய்திருப்பது

மது, புகை, போதைப் பழக்கம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழிகள்

வைட்டமின் சி:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதில் மிக முக்கியமானது வைட்டமின் சி. வைட்டமின் சி குறையும்போது, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைய ஆரம்பிக்கும். வைட்டமின் சி உணவுகள் ஜலதோஷத்தைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் நல்ல நிவாரணி என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு, சராசரியாக 500 மி.கி அளவு வைட்டமின் சி உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெரிய நெல்லிக்காய், கொய்யாப்பழம் போன்றவற்றில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது, சளி முதல் புற்றுநோய் வரை நோய் வராமல் பாதுகாக்கும்.

வைட்டமின் ஏ மற்றும் டி:

வைட்டமின் ஏ மற்றும் டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன. வைட்டமின் ஏ பார்வைக் குறைபாடுகளைப் போக்குகிறது, வைட்டமின் டி எலும்பு உறுதித் தன்மைக்கு அவசியமாகிறது.

வைட்டமின் ஏ நிறைந்த அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, சுண்டைக்காய், கேரட், தக்காளி, பொன்னாங்கண்ணிக்கீரை, பசுநெய், வெண்ணெய் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பசலைக்கீரை, அரைக்கீரை, காலிஃப்ளவர், சுண்டை வற்றல், ஆட்டு ஈரல், எள், பால், தயிர், நெல்லிக்காய் போன்றவை ரத்த விருத்திக்கு மிகவும் அவசியம். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காளான் போன்றவை குழந்தைகளுக்கு ஏற்றவை.

வைட்டமின் பி:

பி6 வைட்டமின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு உயிரி ரசாயன விளைவுகளுக்கு (biochemical reactions) உதவுகிறது. சில வகை பி வைட்டமின்கள், ரத்த அணுக்கள் உற்பத்திக் குறைபாட்டை சரிசெய்யப் பயன்படுகின்றன. இவை, ரத்தசோகை மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்பை சீர்செய்யும்.

வைட்டமின் இ:

சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படும். புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. முதுமை அடைதலையும் குறைப்பிரசவத்தையும் தடுக்க உதவுகிறது.

துத்தநாகம்:

நம்முடைய செல்கள் ஃபிட்டாக இருந்தால்தான், நோய்க்கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட முடியும். இதற்கு, துத்தநாகம் அவசியம். வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலை துத்தநாகம் அளிக்கிறது. கடலைப் பருப்பு, உலர்ந்த தேங்காய், எள் போன்றவற்றில் துத்தநாகம் உள்ளது.

மக்னீசியம்:

இது இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி முழுமை பெறாது. உடலில் நடக்கும் 300-க்கும் மேற்பட்ட உயிரி மாற்றங்களுக்கு இது அவசியம். சிறுநீரகம் உள்ளிட்ட ஒவ்வோர் உறுப்பின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கும் இது அவசியம். கீரைகள், கோதுமைப் புல், நட்ஸ், விதைகள் போன்றவற்றில் மக்னீசியம் நிறைவாக உள்ளது.

பிறந்த குழந்தைகளுக்கு

பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பாலே போதுமான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்துவிடும். அதுவே, முதல் ஒரு வருடத்துக்கு சின்ன அம்மை, தட்டம்மை, மணல்வாரி அம்மை உட்பட சில நோய்களில் இருந்து காக்கும் ஆற்றல் உடையது.

பெரிய குழந்தைகளுக்கு

பெரிய குழந்தைகளுக்கு, தயிரையும் யோகர்ட்டையும் கொடுக்கலாம். இதில் உள்ள புரோபயாட்டிக், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

நன்றி
வாழ்க நலமுடன் வளமுடன்

K.A.S.P.N.J. NR

No comments:

Post a Comment