jaga flash news

Sunday, 19 July 2020

ஆடி அமாவாசை

திங்கட்கிழமை வரும் ஆடி அமாவாசை:

ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம் :
இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஜூலை 20ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. ஜூலை 19ம் தேதி இரவு 12.17 மணிக்கு தொடங்கும் ஆடி அமாவாசை, ஜூலை 20ம் தேதி இரவு 11.35 மணி வரை உள்ளது.
அதனால் ஜூலை 20ம் தேதி காலை சூரிய உதயத்திற்குப் பின் மாலை வரை தர்ப்பணம் கொடுக்க மிக சிறப்பான நேரம்.

அமாவாசையும் அரச மரமும் :-

அமாவாசை திதியும், திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் தினத்தை ‘அமாசோமவாரம்’ என்பார்கள். அந்த நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் சிறப்பு. இதனை ‘அஸ்வத்த பிரதம்சணம்’ என்பர். ‘அஸ்வத்தம்’ என்பதற்கு ‘அரச மரம்’ என்று பொருள். மும்மூர்த்திகளின் வடிவமே அரச மரம். அரச மரத்தை வணங்குபவர்களின் பாவம், நோய்கள் நீங்கும். அரச மரத்தை மூன்று முறை வலம் வந்தால் இஷ்ட சித்திகளும், ஐந்து முறை வலம் வந்தால் வெற்றியும், ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியமும், பதினொரு முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும், நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் நடத்திய பலனும் கிடைக்கும்.

சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திரனுக்குரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில், அதிகாலையில் அரச மரத்தை நாராயணராக பாவித்து, ‘மூலதோ பிரம்ஹரூபாய, மத்யதோ விஷ்ணு ரூபிணே அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜய தே நமோ நம’ என்ற சுலோகத்தை சொல்லியபடி 108 முறை வலம் வரவேண்டும். இதனால் எல்லா வித நன்மைகளும் வந்தடையும்.

முன்னோர்களின் ஆசீர்வாதங்களை அள்ளித்தரும் ஆடி அமாவாசை :-

எல்லா நாள்களும் இறைவனையும் நம் முன்னோர்களையும் வழிபட உகந்தநாள்களே. ஆனபோதும், சில நாள்களில் நிச்சயம் இந்த வழிபாடுகளை முறைப்படி மேற்கொள்ள வேண்டும் என்று வகுத்துள்ளனர் பெரியோர்கள். பொதுவாக, பித்ரு லோகத்தில் வாழும் முன்னோர்கள், ஆடி அமாவாசை அன்றே தங்கள் சந்ததியினரைப் பார்க்க பூமிக்கு வரத் தொடங்குவார்கள். புரட்டாசி மாத அமாவாசையன்று பூமிக்கு வந்து சேர்வார்கள்.
பின்பு தை அமாவாசை அன்று மீண்டும் பித்ரு லோகத்துக்குத் திரும்புவார்கள் என்பது ஐதிகம். எனவே, இந்த மூன்று அமாவாசைகளையும் பித்ரு வழிபாட்டுக்கு நிச்சயம் அனுசரிக்க வேண்டும். இதன் மூலம் முன்னோர்களின் ஆசிகளை நிச்சயம் பெறலாம் என்கின்றன சாஸ்திரங்கள்.
இந்து தர்மத்தைப் பின்பற்றும் ஒவ்வொருவருக்கும் சில கடமைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. சாஸ்திரங்கள் அறிவுறுத்தியிருக்கும் அந்தக் கடமைகள் `சம்ஸ்காரங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. நாற்பது சம்ஸ்காரங்களில் `சோடஷ சம்ஸ்காரம்' என்று சொல்லப்படும் பதினாறு கர்மாக்களைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். அந்தப் பதினாறு கர்மாக்கள், பிறப்புக்குக் காரணமான கர்ப்பாதானம் என்னும் சாந்திமுகூர்த்தம், பும்சவனம், சீமந்தம், ஜாதகர்மம், நாமகரணம், உபநிஷ்கர்மணம், அன்னபிராசனம், சௌளம், உபநயனம், கோதார விரதம், உபநிஷத விரதம், சுக்ரியம், கோதான விரதம், சமாவர்த்தனம், கல்யாணம், அக்னியாதானம் என்று விதிக்கப் பட்டிருக்கின்றன.
அதேபோல் ஒருவர் மறைந்த பிறகு நாம் செய்யவேண்டிய கர்மாக்களும் பதினாறு. அவை மந்த்ர சம்ஸ்காரம், தண்ணீர் கொடுத்தல், மூன்று முதல் பன்னிரண்டு வரை என்பது பத்து நாள்களில் நாம் கொடுக்கின்ற பிண்டம், அஸ்தி சஞ்சயனம், பதினொன்றாவது நாள் ஏகாதச பிண்டம், பன்னிரண்டாவது நாள் சபிண்டீகரணம், பிறகு ஆப்திகம் போன்ற பதினாறு காரியங்கள் இறந்த பிறகு செய்ய வேண்டும்.

சிராத்தம் அல்லது திதி கொடுத்தல் என்பது, ஐந்து வகைகளாக உள்ளது. அன்ன சிராத்தம், ஹிரண்ய சிராத்தம், ஆம சிராத்தம், பார்வன சிராத்தம், சபிண்டீகரண சிராத்தம் என்று ஐந்து விதமான சிராத்தங்கள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. சிரத்தை என்றால், மறைந்த நம் பெற்றோர்களுக்கு எந்த தோஷமும் இல்லாமல் செய்யக்கூடிய கர்மாக்களையே சிராத்தம் என்று கூறுவார்கள்.
சுகமாக வாழ வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். இதற்குக் கண்டிப்பாக பித்ருக்களின் ஆசிகள் நமக்குத் தேவை. எனவே, சிவராத்திரியன்று சிவராத்திரி விரதம், அன்று பலிதர்ப்பணம், திலஹோமம், ஆடி அமாவாசையன்று திலஹோமம், பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் பித்ரு தோஷம் ஏற்படாது.

பித்ரு தர்ப்பணம் செய்வதற்காக பிரத்தியேகமாக ஆறுநாள்கள் உள்ளன. அவை உத்தராயன புண்ணிய காலம் என்று சொல்லும் காலத்தின் தொடக்கமான தை மாதம் முதல்நாள், சிவராத்திரி, தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தின் முதல் நாள், ஆடி அமாவாசை, சித்திரை மாதம் முதல் நாள், அட்சய திருதியை ஆகிய நாள்கள் சிராத்தம் கொடுப்பதற்குப் பிரத்தியேகமான நாள்களாகும். அட்சயதிருதியை என்பது தங்கம் வாங்குவதற்கான நாள் என்று சொல்வார்கள். ஆனால், அன்று பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு உகந்த ஒரு நாளாகும். நாம் செய்யக் கூடியதான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாகச் செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என்பது எல்லோருக்கும் தெரியும்.
தேவகணங்களுக்கு அதிக பிராதான்யம் உள்ள நாள்களாக உத்தராயனமும், பித்ருக்களுக்கு அதிக பிராதான்யம் உள்ள நாள்களாக தட்சிணாயனம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும்.

நாளை ஆடி அமாவாசை. இந்த நாளில் பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள். `திலம்' என்றால் `விஷ்ணோர் அம்ச சமுத்பவ:' என்று பொருள். விஷ்ணுவிலிருந்து விஷ்ணு பகவானின் அம்சமாக தோன்றியது எள்.
எனவே, `திலதானாது அசக்யம் மே பாபம் நாசய கேசவ' என்று கூறுவார்கள். திலம் என்று சொல்லப்படும் எள்ளை தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடுமாம். இந்த எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, அன்றைய தினம் பித்ருக்களை - மறைந்துவிட்ட நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும்.
யாருக்கெல்லாம் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது பற்றிப் பலருக்கும் சந்தேகம் ஏற்படுவது இயல்பு. தன் தகப்பனார், தன் தாத்தா, கொள்ளுத் தாத்தா, தன் அம்மா, தன் பாட்டி, தன் கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மேலும், யாருமில்லாத ஆதரவற்று இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

இயற்கையாக இறந்தவர்களின் ஆன்மாவிற்கு எளிதில் முக்தி கிடைத்துவிடும். மன வேதனை அடைந்து துர்மரணம் அடைந்தாலோ, கொடூரமான நோய் தாக்கத்தால் இறந்தாலோ, அவர்களின் ஆன்மா எளிதில் முக்தி அடைவதில்லை.

இயற்கையாக மரணித்து, முக்தி அடைந்தவரின் வீட்டில் சுப நிகழ்வு நடந்து கொண்டே இருக்கும். அகால மரணமடைந்த ஆத்மா முக்தி அடையும் வரை, சில மன வருத்தம் தரும் நிகழ்வு கள் குடும்பத்தில் நடைபெறக்கூடும். இதற்கு காரணம், அந்த ஆத்மா சாந்தியடைய அவர்களின் சந்ததியினர் வழிபாடு முறைகளை சரியாக செய்யாதது தான்.

இறந்த பிறகு ஆன்மாக்களுக்கு பிறவி குணம் இருக்காது. சாத்வீக குணம் வந்துவிடும். முறையான திதி, தர்ப்பணம் கிடைக்கப் பெறும் ஒவ்வொரு ஆத்மாவும் நற்சக்தி உடையது தான். அவர்களை முறையாக வழிபாடு செய்தால், தங்களின் அனைத்து சக்திகளையும் தன் சந்ததியினரின் முன்னேற்றத்திற்கு ஆசீர்வாதமாக வழங்குவார்கள்.

முன்னோர்களின் ஆன்மாக்களை யாரும் பார்க்க முடியாது, ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கவும் முடியாது. எனவே பஞ்ச பூதங்களையும், நவக்கிரகங்களையும் முன் நிறுத்தி உரிய மந்திரங்களோடு செய்யப்படும் ‘தில ஹோமம்’, எத்தகைய துர்மரணமடைந்த ஆத்மாவையும் சாந்தியடைய செய்துவிடும். ஹோமம் செய்ய முடியாதவர்களுக்கு அமாவாசை வழிபாடு நல்ல பலன் தரும்.

முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்யாதவனுக்கு ‘பித்ரு தோஷம்’ ஏற்படும். ஒரு வேளை அதிகமான புண்ணிய பலத்தால், ஒருவன் தன் வாழ்நாளில் பித்ரு தோஷத்தை அனுபவிக்காமல் போகலாம். ஆனால் அந்த பித்ரு தோஷம் அவனது வம்சத்தினரை பாதிக்கும். ஒருவர் தன் தலைமுறைக்கு சொத்து சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை, பித்ரு தோஷத்தை விட்டுச் செல்லக்கூடாது.

அமாவாசை அன்று முன்னோர்கள் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு, வலது ஆள் காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக நீரை வார்த்து தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். 
அமாவாசை விரதம் முறைகள்:-

முதலில் அமாவாசை தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விடவேண்டும். பின்பு வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகள் விலக உப்பு கலந்த நீரால் வீடு முழுவதையும் கழுவி தூய்மைப்படுத்த வேண்டும். பின்பு வீட்டிலுள்ள பூஜையறையில் காலையிலும், மாலையிலும்   விநாயகர் படத்திற்கு முன்பு தீபம் ஏற்ற வேண்டும்.
 
அமாவாசை தினத்தில் புலால் உணவுகள், பூண்டு, வெங்காயம் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்து சாத்விக உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தால் அன்றைய தினம் முழுவதும் பால் பழங்களை உண்ணலாம் அதோடு உங்களுக்கு விருப்பமான கோவிலுக்கு சென்று வழிபட்டு   வரலாம்.
அமாவாசை பூஜை பெரும்பாலான நாட்கள் பூஜையை தொடங்குவதற்கு முன்னர், பூஜை அறை மற்றும் மற்ற இடங்களில் கோலம் இடுவது வழக்கம். ஆனால் அமாவாசை தினத்தில் பூஜை செய்வதற்கு முன் கோலமிடுதல் கூடாது.

சுவாமி படங்களுக்கு மலர்களை சூட வேண்டும்.
வீட்டில் பூஜை அறையில் ஒற்றை விளக்கு ஏற்றக் கூடாது என்பதால், இரண்டு விளக்குகள் ஏற்றுவது நலன். அதனால் இரண்டு விளக்குகள் ஏற்றவும்.
முன்னோர்களுக்கு அமாவாசை தர்ப்பணம் கொடுக்க விரும்புபவர்கள் சுவாமியை கும்பிட்டு தர்ப்பணம் கொடுத்துவிட்டு, அவர்களுக்கு படையல் இடலாம்.
தேவையான பொருட்கள் :
பூக்கள்
வாழைப்பழம்
வெற்றிலை
பாக்கு
இனிப்பு (வெல்லம் வைக்கலாம்)

படையல் இடுவது எப்படி?
பச்சரியால் செய்யப்பட்ட சாதத்தில், புதிதாக வாங்கப்பட்ட தயிர் கலக்கவும்.
வெங்காயம் போடப்படாத வாழைக்காயால் செய்யப்பட்ட ஒரு உணவு வைக்கலாம்.
துளசி இலையை வைக்கவும்.
இதனுடன் அச்சு வெல்லம் சேர்க்கவும்.
இதில் அன்ன சுத்தி செய்யக்கூடிய நெய் மிகச் சிறிதளவு இடவும்.
வாழைப் பழங்களை பூஜைக்கு வைக்கும் போது கிள்ளி விட்டு வைக்கவும்.
வீட்டில் கர்ப்பிணி பெண்கள் இருந்தால் தேங்காய் உடைக்க வேண்டாம்.
படையலிட்ட பின்னர் சுவாமிக்கும், படையலிட்ட உணவுகளுக்கும் பூஜை செய்து முன்னோர்களுக்கு சமர்ப்பிக்கலாம்.

இதே மாதிரி உங்கள் வீட்டில் எளிமையாக அமாவாசை பூஜை படையல் செய்து வழிபடலாம்.

அமாவாசை திதியும், திங்கட்கிழமையும்  சேர்ந்து வரும் தினத்தை ‘அமாசோமவாரம்’ என்பார்கள். அந்த நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் சிறப்பு. சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திரனுக்குரிய  திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில், அதிகாலையில் அரச மரத்தை நாராயணராக பாவித்து,

‘மூலதோ பிரம்ஹரூபாய,
மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ
ராஜய தே நமோ நம’

என்ற சுலோகத்தை சொல்லியபடி 108 முறை வலம் வரவேண்டும். இதனால் எல்லா வித நன்மைகளும் வந்தடையும்.
-சங்கரன்

No comments:

Post a Comment