jaga flash news

Tuesday, 25 August 2020

பழங்கள் உணவுக்கு முன்பா? பின்பா?



பழங்கள் உணவுக்கு முன்பா? பின்பா?

உணவுக்குப் பிறகு பழங்கள் சாப்பிடுவதையோ, ஜூஸ் குடிப்பதையோ வழக்கமாக வைத்திருக்கிறேன். ஆனால், 'உணவுக்கு முன் பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது’ என்று சிலர் சொல்லும்போது, எனக்குக் குழப்பமாக இருக்கிறது. பழங்களை எப்போது, எப்படிச் சாப்பிடுவது நல்லது?''

செல்வராணி, நியூட்ரிஷியன், மதுரை.

''பழங்களே சிறந்த உணவுதான். எளிதில் ஜீரணமாகி உடலுக்குத் தேவையான சக்தியையும் மூளைக்குத் தேவையான குளுக்கோஸையும் அளிப்பதில் பழங்களுக்கு இணையே இல்லை. ஆகையால், பழங்களை உணவுக்கு முன் அல்லது பின் என்று சாப்பிடுவதைக் காட்டிலும் தனித்து- அதையே உணவாகக் கருதிச் சாப்பிடுவதே சிறந்த முறை.

அப்போதுதான் அதில் உள்ள சத்துகள் சிதையாமல் அப்படியே நம் உடலுக்குக் கிடைக்கும். ஒரு சின்ன உதாரணம்... பழங்களில் உள்ள நார்ச் சத்து. பழங்களை அரைத்து, வடிகட்டி சாறை மட்டும் குடிக்கும்போது, பெரும்பான்மை நார்ச் சத்தை அது இழந்திருக்கும். நார்ச் சத்து இருந்தால், மலச் சிக்கலை அது களைந்துவிடும். மலச் சிக்கல் அகன்றால், செரிமானக் கோளாறு ஏற்படாது. இப்படி ஒவ்வொரு சத்தின் பயன்களையும் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். தவிர, பழங்களைச் சாறாக்கி, பால், சர்க்கரை சேர்த்துக் குடிக்கும் போது, அதில் சேர்க்கப்படும் சர்க்கரையும் பாலும், பழச்சாறின் இயல்பையே குலைத்துவிடும். செரிமானக் கோளாறையும் உருவாக்கக்கூடும்.

அதேபோல, உணவுக்குப் பிறகு பழங்களைச் சாப்பிட்டால், அது ஏற்கெனவே வயிற்றில் இருக்கும் உணவு செரிமானம் ஆவதற்காகக் காத்திருக்காமல், (ஓவர்டேக் செய்து) முன்கூட்டியே ஜீரணமாகிவிடும். அதன் தொடர்ச்சியாக சத்துக்களும் கிரகிக்கப்பட்டுவிடும். இதனால், சிலருக்கு ஏப்பம் போன்ற தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, பழங்களைத் தனித்துச் சாப்பிடுவதையே வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். சாப்பிட்ட பிறகுதான் பழம் சாப்பிட வேண்டும் என்று விரும்பினால், சாப்பாட்டுக்கு முன்போ, பின்போ இரண்டு மணி நேர இடைவெளியில் பழங்களைச் சாப்பிடலாம்.''

No comments:

Post a Comment