திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம்
கோளறு பதிகம் விளக்கம்
திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம்
நவ கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி மனதில் நினைத்த நல்லன எல்லாம் நிறைவேற தினமும் ஓத வேண்டிய அற்புதமான தேவார பதிகம்:
1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!
2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடாறும் உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!
3. உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
4. மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய் களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
5. நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
6. வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
7. செப்பிள முலைநன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
8. வேள்பட விழி செய்தன்று விடைமேலிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
Ezoic
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்றனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
9. பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
10. கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியு(ம்)நாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
11. தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
கோளறு பதிகம் விளக்கம்
1. (எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன். ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன். இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்) களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும் ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்!
2. திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி அணிந்து நிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி, பொன்போலொளிரும் ஊமத்தை மலர்களாலான மாலை தரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால், விண்மீனாய் வரும் ஆயில்யம்; ஒன்பதோடு ஒன்று – பத்தாவது விண்மீனான மகம்; ஒன்பதொடு ஏழு – பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை; ஆறாவது விண்மீனான திருவாதிரை; முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்!
3. பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளிபொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து சிவபெருமான், உமையம்மையாரோடு வெள்ளை எருதின் மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், வெற்றித் தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக நல்லதையே செய்வர்.
4. பிறைபோன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின்கீழ் இருந்து (வடம் – ஆலமரம்) வேதங்களை அருளிய எங்கள் பரமன், கங்கை நதியையும் கொன்றை மாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஆத்திரமுடையதான காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையன ஆகி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.
5. விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு இடபத்தின் மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னிமலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொடிய சினத்தை உடைய அசுரர்கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்ச பூதங்கள் முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
6. ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும் (வாள் -வரி – அதள் – அது -ஆடை; அதள் -புலித்தோல்), வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த மலர்கள், வன்னி இலை, கொன்றைப்பூ, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடி, உமையம்மையாரோடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொல்லும் வலிய புலி (கோளரி உழுவை), கொலையானை, பன்றி (கேழல்), கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியன நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
7. செம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடபத்தின் மேல் ஏறிவரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல் (சுரம்), குளிர்காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம் , அவற்றால் வருவன முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையா. அப்படி அவை நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.
8. அன்று மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான், இடபத்தின் மேல் உமையம்மையாரோடு உடனாய் இருந்து, தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் ஆன இராவணன் (பிறன்மனை நாடியதாலேற்பட்டது) போன்ற இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.
9. பல்வேறு கோலங்கள் கொள்கிற பரம்பொருள் ஆகிறவனும், மாதொருபாகனும், எருதின் மேல் ஏறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபெருமான், தன் முடிமேல் கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், தாமரைமலர் மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள், தேவர்கள் ஆகியோரும், எதிர்காலம், அலையுடைய கடல், மேரு முதலான மலைகள் ஆகியவையும் நமக்கு நல்லனவே செய்வர். அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லனவே செய்யும்.
10. கூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேட வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள்புரிந்த தன்மை கொண்ட சிவபெருமான், தன் முடி மேல் ஊமத்தை மலர், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், புத்தர்களையும் சமணர்களையும் ஈசனின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். அதன் பெருமை நிச்சயமே. எல்லாம் அப்படிச் சிறந்த நல்லனவற்றையே செய்யும். அவை மிகவும் நல்லனவே செய்யும்.
11. தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும், கரும்பும் (ஆலை), விளைகிற செந்நெல்லும் நிறைந்துள்ளதும், பொன் போல் ஒளிர்வதும், நான்முகன் (வழிபட்ட) காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய யான், தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம், போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.
…திருச்சிற்றம்பலம்…
Very nice ayya V Samy Avl
ReplyDeletevery nice
ReplyDeleteSon.22, Mar.2026 at 6.20 pm.
ReplyDeleteபொது : கோளறு பதிகம் :
பண் : பியந்தைக் காந்தாரம்
பதிகக் குறிப்பு :
திருக்கதவம் திறப்பித்தும் பின்னர் அடைத்தும் திருவருட் செயலைத் திருமறைக்காட்டில், திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் நிகழ்த்தினர்.
இரு பெரும் சமயக் குரவர்களும் அத் திருத்தலத்தில் பாண்டிய மன்னன் சைவத்தை விட்டு அகன்று சித்தம் செல்லாமையைக் கண்டு பாண்டிமா தேவியாரும், அரசனின் அமைச்சராகிய குலச்சிறையாரும் தூதுவர் வாயிலாகச் செய்தியினை விண்ணப்பித்துத் திருஞானசம்பந்தரைப் பாண்டிய நாட்டிற்கு வருகை புரியுமாறு அழைப்பு விடுத்தனர்.
அஞ்ஞான்று நாளும் கோழும் பொருந்தாத நிலை கண்டு நாவரசர் எடுத்துரைக்கப் புகலி வேந்தர்... பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுதணையாது' எனப் பகர்ந்து இத் திருப்பதிகத்தை அருளிச் செய்துள்ளார்.
இப்பாடலில் உள்ள சுருக்கம் :
ஈசனை நெஞ்சில் நினைக்கும் அன்பர்களுக்குக் கோள்களாகிய கிரகங்கள் நல்லது செய்யும் என்பதும், அடியவர்களுக்கு மிக நல்லதே செய்யும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதாவது நாளும் கோளும் இறைவனுக்கு கட்டுப்பட்டது என்பதே.
இதைத்தான் அருணகிரிநாதர் கந்நர் அலங்காரத்தில்...
நாளென் செயும் வினைதான்என் செயும் எனை நாடிவந்த
கோள்என் செயும் கொடும் கூற்றுஎன் செயும்கும ரேசர்இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே என இதன் வாயிலாக உணர்த்துகிறார்.
"நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை" என்னும் வாசகத்திற்கு இணங்க, பாண்டிமாதேவியும், குலச்சிறைரும் மனம் நலிவுற்ற நிலையில் இருந்த தன்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
நவக்கிரகங்கள் : சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவற்றால் உண்டாகும் தீமைகள்... மாசில்லாத சந்திரனும் கங்கையும் முடியின் மீது அணிந்து, எனது உள்ளத்தில் புகுந்துள்ளான் என்பதால் அவை இல்லை. குற்றமற்ற நல்ல பயன்களைத் தரவல்லன. ஈசனின் அடியவர்களுக்கு அவை மிகுதியாக விளங்கும் நல்லவையே தரக் கூடியவை ஆகும் என்பதே முதல் பாடலின் சிறந்த கருத்து.
மீண்டும் தொடர்கிறேன்....அடுத்த பதிவில்
Sivajansikannan40@gmail.com
Mon. 23, Mar. 2026 at 12.13 pm.
ReplyDelete*Translation :*
*THIRU-CH-CHIRAMBALAM*
*KOLARU - THIRU - P- PATHIGAM :*
*(Pann: Piyanthai Kaanthaaram:)*
Our Lord Chivan has embeded His consort Uma Devi on the left side of His body . Her shoulders are smooth as the bamboo stems in between the two joints (node). He imbibed the poison and kept it in His larynx. He retains the moon and supports the river Ganges - both adorning His head . In this posture happily playing music on His Veena, He has entered my mind and stays there.
Because of His stay in my mind the 9 planets (such as sun, moon, chevvai, budhan, guru, sukkiran, sani, raghu and Kethu) will do all good without any evil. They will always do only good deeds to Civa's devotees.
Meet again....
Sivajansikannan40@gmail.com