jaga flash news

Monday, 13 April 2020

கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?

கோவிட்-19 வைரஸ் தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (Sars-CoV-2) என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக மேசைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்வது, பேருந்துகளில் கைபிடியைப் பிடிக்காமல் பயணிப்பது உள்ளிட்டவற்றை உலகெங்கும் உள்ள மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

அவற்றின் மேற்பரப்பில் ஒருவேளை கொரோனா வைரஸ் கிருமி இருந்தால் அதை தொற்றிக்கொள்ளாமல் இருக்க இவ்வாறு செய்கின்றனர். ஆனால், எந்தெந்த பொருட்கள் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும்?

காற்றில் உயிர்வாழும் நேரம்

இருமல் மற்றும் தும்மலின்போது மூக்கு மற்றும் வாய் வழியாக, மிகச்சிறிய, சுமார் 3,000 எண்ணிக்கை அளவிலான உமிழ்நீர்த் துளிகள் வெளிவரும்.

இந்தத் துளிகளின் அளவு 1-5 மைக்ரோ மீட்டர் மட்டுமே. அதாவது மனிதர்களின் சராசரி மயிரிழை ஒன்றின் அகலத்தில் 30இல் ஒரு பங்கு.


ஆடைகள், பொருட்கள் மீது மட்டும் படியாமல் காற்றிலும் கலக்கும் இந்தத் துகள்கள், காற்றில் மூன்று மணிநேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும்.

ஒரு துளியில் எத்தனை வைரஸ்கள் இருக்கும் என்பது குறித்த சரியான தரவுகள் இல்லை.

இன்ஃபுளூயென்சா வைரஸ்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பாதிக்கப்பட்டவரின் தும்மலில் வெளியாகும் ஒரு சிறு துளியில் பல பத்தாயிரம் வைரஸ் கிருமிகள் இருப்பது தெரிந்தது.

இந்த அளவு ஒவ்வொரு வகை வைரஸுக்கும் வேறுபடலாம்.


கொரோனா வைரஸ் மலத்தில் எவ்வளவு நேரம் உயிர்வாழும்?

மனித மலத்தின் மீதும் நீண்ட நேரம் இந்த வைரஸ் உயிர்வாழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பான நேர அளவு எதுவும் இல்லை.

இந்த கொரோனா வைரஸ் பரவியுள்ள கழிவறையை பயன்படுத்திய ஒருவர், முழுமையாக கைகளை சுத்தம் செய்யாமல் எந்தப் பொருட்களைத் தொட்டாலும் அவற்றின்மீது இந்த வைரஸை பரவச் செய்ய முடியும்.

அதைவிட முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியது, வைரஸ் தொற்றியுள்ள இடத்தை தொட்டுவிட்டு முகத்தை தொடுவதுதான் மனித உடலுக்குள் இந்த Sars-CoV-2 கொரோனா வைரஸ் செல்வதற்கான முக்கியமான வழியாக உள்ளது என்பது.


கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு வைரஸ்களும், முறையாக சுத்தம் செய்ய்யப்படாத உலோகங்கள், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி ஆகியவற்றின் மீது ஒன்பது நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்று முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.

குளிர்ச்சியான சூழல்களில் அவை 28 நாட்கள் வரைகூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்புண்டு.

அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் தற்போது பரவி வரும் Sars-CoV-2 வகை கொரோனா வைரஸ் உலோகம், பிளாஸ்டிக் ஆகியவற்றின் மேற்பரப்பில் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை உயிர்ப்புடன் இருப்பது தெரியவந்துள்ளது.

எனினும், தாமிர உலோகத்தால் ஆன பொருட்களின் மேற்பரப்பில் நான்கு மணி நேரம் மட்டுமே இவை தாக்குப்பிடிக்கின்றன.


கொரோனா வைரஸ் ஆடைகள் மீது எவ்ளவு நேரம் இருக்கும்?

துணிகள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றின் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிர்ப்புடன் இருக்கும் என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

எனினும், ஈரத்தை உறிஞ்சிக்கொண்டு விரைவில் காய்ந்துவிடும் தன்மையுடைய கார்டுபோர்டு அட்டைகளின் மேற்பரப்பில் பிளாஸ்டிக், உலோகம் ஆகிவற்றைவிட குறைவான நேரமே இந்த கொரோனா வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும்.

சுற்றியுள்ள காற்றின் ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவற்றில் உண்டாகும் மாற்றம் இந்த நேர அளவின் மீது தாக்கம் செலுத்தும்.

Sars-CoV-2 கொரோனா வைரஸை பொருட்கள் மீது அழிப்பது எப்படி?

தற்போது பரவி வரும் Sars-CoV-2 கொரோனா வைரஸ் 62-71% ஆல்கஹால் அளவுள்ள கிருமி நாசினி அல்லது 0.5% ஹைட்ரஜன் பெராக்ஸைடு பிளீச்சிங் பவுடர் அல்லது 0.1% சோடியம் ஹைட்ரோகுளோரைட் உள்ள வீட்டுப் பயன்பாட்டுக்கான பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்து ஒரு நிமிடத்துக்கும் குறைவான காலத்தில் ஒழித்து விடலாம்.

No comments:

Post a Comment